உள்ளடக்கத்துக்குச் செல்

மசாச்சியோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மசாச்சியோ
சென் பீட்டர் தியோபிலசின் மகனை உயர்த்துதல், சென் பீட்டர் முதல் ஆயராக அரியணை ஏறுதல் ஆகிய விபரங்கள், பிராங்காச்சி சிற்றாலயம், சென் மரியா டெல் கார்மினே, புளோரன்சு
பிறப்புதொம்மாசோ டி சேர் யோவன்னி டி மோனி (சிமோனி) காசை
டிசம்பர் 21, 1401
சான் யொவன்னி வல்தார்னோ, புளோரன்சுக் குடியரசு
இறப்பு1428 (age 26)
உரோம், பாப்பிய நாடுகள்
தேசியம்இத்தாலியர்
அறியப்படுவதுஓவியம், சுவரோவியம்
குறிப்பிடத்தக்க படைப்புகள்பிராங்காச்சி சிற்றாலயம் (ஏடன் பூங்காவில் இருந்து வெளியேற்றம், கப்பப் பணம்) c. 1425
பிசா பலிபீடத் துண்டு 1426
புனித திரித்துவம் c. 1427
அரசியல் இயக்கம்தொடக்க மறுமலர்ச்சி
Patron(s)பெலிசே டி மைக்கேல் பிராங்காச்சி
செர் யூலியானோ டிகொலினோடெக்லி இசுக்கர்சிட சன் கியுசிட்டோ

மசாச்சியோ (Masaccio) புளொரன்சைச் சேர்ந்த ஒரு ஓவியர். இவரது இயற்பெயர் தொம்மாசோ டி செர் யோவன்னி சி சிமோனி. இத்தாலிய மறுமலர்ச்சியில் குவாட்ரோசென்டோ காலத்தில் முதல் பெரும் இத்தாலிய ஓவியராக இவர் மதிக்கப்படுகின்றார். வாசரியின் கூற்றுப்படி, இயற்கையை உள்ளபடியே வரையும் திறமையும், உருவங்களை உயிருடன் இருப்பது போன்றே வரைவதும், ஏற்கக்கூடிய வகையில் முப்பரிமாண உணர்வைக் கொண்டு வருவதாலும், மசாச்சியோவே அவரது தலைமுறையின் மிகச் சிறந்த ஓவியர் ஆவார்.[1] இவர் 23 வயதில் இறந்தார். அவரது இறப்பின் சூழல் குறித்து அதிகம் எதுவும் தெரியவரவில்லை.[2]

இவரது குறுகிய வாழ்க்கைக் காலத்தில் மற்ர ஓவியர்கள் மீது குறிப்பிடத்தக்க செல்வாக்கை இவர் கொண்டிருந்தார். ஒருங்கு புள்ளி போன்ற நுட்பங்களைப் பயன்படுத்திப் பார்வைத் தோற்றத்தை ஓவியத்தில் முதன் முதலாகக் கொண்டு வந்தவர் இவரே. இவர் பன்னாட்டு கோதிக் பாணியில் இருந்தும், யென்டை டா பப்ரியானோ போன்ற ஓவியர்களின் நுணுக்கமான அலங்காரங்களைத் தவிர்த்தும் பார்வைத் தோற்ற நுட்பம், தூரத்தை உணர்த்தும் நுட்பங்கள் போன்றவற்றைப் பயன்படுத்தி இயல்பான தன்மையை ஓவியங்களிற் கொண்டுவர முயற்சித்தார்.

இளமைக் காலம்

[தொகு]

இவர், யோவன்னி டி சிமோனி கசாய் என்பவருக்கும், சக்கோட்டா டி மார்ட்டினோகோ என்பவருக்கும் காஸ்டெல் சான் யோவன்னி டி அல்தூராவில் பிறந்தார்.[3] மசாச்சியோவின் தந்தை ஒரு ஆவண எழுத்துப் பதிவர் (notary). தாயார்புளோரன்சில் இருந்து சில மைல்கள் தொலைவில் இருந்த பார்பரீனோ டி முகல்லோ என்னும் நகரத்தில் உணவுச் சாலை ஒன்றை நடத்தியவரின் மகள். மசாச்சியோவின் குடும்பப் பெயர் அவரது தந்தை வழிப் பாட்டனாரின் தொழில் குறித்து உருவானது. அவர் தச்சுவேலை, பெட்டகங்களைச் செய்தல் போன்ற தொழில்களில் ஈடுபட்டிருந்தார். மசாச்சியோவின் தந்தை 1406 ஆம் ஆண்டில் இறந்தார். அப்போது இவருக்கு ஐந்து வயது. அதே ஆண்டில் இவருக்கு ஒரு தம்பி பிறந்த போது இறந்த தந்தையின் பெயரான யோவன்னி என்பதையே அவருக்கும் இட்டனர். பிற்காலத்தில் அவரும் லோ செகியா என அழைக்கப்பட்ட ஒரு ஓவியர் ஆனார்.[4] 1412 இல், மொன்னா ஜக்கோப்பா வயது முதிர்ந்த மருந்தாளர் ஒருவரை மணந்துகொண்டார். அவருக்கும் பல மகள்கள் இருந்தனர். அவர்களில் ஒருவர் காஸ்டல் சான் யோவன்னியைச் சேர்ந்ததாக அறியப்பட்ட இன்னொரு ஓவியரான மரியோட்டோ டி கிறிஸ்தோபானோ (1393–1457) என்பவரை மணம்புரிந்தார்.

மசாச்சியோவின் ஓவியப் பயிற்சி குறித்துத் தகவல்கள் இல்லை. ஆனால், மறுமலர்ச்சிக்கால ஓவியர்கள் தமது 12 ஆவது வயதில் தொடங்கி, மரபு வழியாக ஒரு குருவிடம் தொழிற் பயிற்சி பெறுவர். இப்பயிற்சிக்காக மசாச்சியோ புளோரன்சுக்குச் சென்றிருக்கக்கூடும்.

முதல் படைப்புக்கள்

[தொகு]

மசாச்சியோவினால் வரையப்பட்டதாகக் கருதப்படும் முதல் படைப்பு "சான் யொவெனாலே டிரிப்டிக்" (San Giovenale Triptych) (1422) என்னும் ஓவியம் ஆகும். இது தற்போது புளோரன்சு நகருக்கு மிக அண்மையில் உள்ள காஸ்சா டி ரெச்செல்லோ (Cascia di Reggello) அருங்காட்சியகத்தில் உள்ளது.உஃப்பிசியில் உள்ள செயின்ட் ஆனுடன் கன்னியும் குழந்தையும் (1424) என்னும் ஓவியமும் இவ்வாறான முதல் ஓயங்களுள் ஒன்று.

1961 இல் மசாச்சியோவின் சொந்த நகரத்துக்கு மிக அண்மையில் உள்ள கசியா டி ரெச்செல்லோ என்னும் இடத்தில் உள்ள சான் யொவெனாலே தேவாலயத்தில் இருந்து சான் யொவனாலே ஓவியம் கண்டுபிடிக்கப்பட்டது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Giorgio Vasari, Le Vite de' piu eccellenti pittori, scultori ed architettori, ed. Gaetano Milanesi, Florence, 1906, II, 287-288.
  2. The Guardian, Masaccio, the old master who died young
  3. John T. Spike, Masaccio, New York: 1996, 21-64, and Diane Cole Ahl, The Cambridge Companion to Masaccio, Cambridge, 2002, 3-5.
  4. On Giovanni's career, see Luciano Bellosi and Margaret Haines, Lo Scheggia, Florence, 1999.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மசாச்சியோ&oldid=2716460" இலிருந்து மீள்விக்கப்பட்டது