மங்கோலியர்களின் இந்திய படையெடுப்பு (1303)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தில்லி முற்றுகை
மங்கோலியர்களின் இந்திய படையெடுப்புகள் பகுதி
நாள் 1303
இடம் தில்லி
28°39′16″N 77°13′51″E / 28.6545622°N 77.2308955°E / 28.6545622; 77.2308955ஆள்கூறுகள்: 28°39′16″N 77°13′51″E / 28.6545622°N 77.2308955°E / 28.6545622; 77.2308955
மங்கோலிய பின்வாங்கல்
பிரிவினர்
சகதை கானேடு தில்லி சுல்தானகம்
தளபதிகள், தலைவர்கள்
தரகை அலாவுதீன் கல்ஜி
பலம்
20,000-30,000
Lua error in Module:Location_map at line 380: The value "{{{longitude}}}" provided for longitude is not valid.

1303 இல் தில்லி ராணுவத்தின் இரண்டு முக்கிய பிரிவுகள் நகரத்தில் இருந்து தொலைவில் இருந்த போது அதை சகதை கானேட்டிலிருந்து வந்த ஒரு மங்கோலிய ராணுவம் தில்லி சுல்தானகத்தின் மீது தாக்குதல் நடத்தியது. தொலைவில் ராஜஸ்தானின் சித்தூரில் இருந்த தில்லி சுல்தான் அலாவுதீன் கல்ஜி மங்கோலியர்கள் அவர்களது அணிவகுப்பை தொடங்கியபோது டெல்லிக்கு அவசரமாக விரைந்தார். எனினும் அவரால் போதிய போர் தயார்நிலை நடவடிக்கைகளை எடுக்க முடியவில்லை. அப்போது கட்டப்பட்டுக் கொண்டிருந்த சிரி கோட்டையில் நல்ல பாதுகாப்புடன் கூடிய முகாமில் அவர் தங்க முடிவெடுத்தார். தரகையின் தலைமையில் வந்த மங்கோலியர்கள் தில்லியை 2 மாதங்களுக்கும் மேலாக முற்றுகையிட்டனர். அதன் புறநகர் பகுதிகளை சூறையாடினர். இறுதியாக அலாவுதீனின் முகாமுக்குள் நுழைய முடியாததால் அவர்கள் பின்வாங்க முடிவெடுத்தனர்.

இந்தியா மீது நடத்தப்பட்ட மங்கோலிய தாக்குதல்களில் இது மிக முக்கியமான ஒன்றாகும். மீண்டும் இதுபோன்ற ஒரு தாக்குதல் நடக்காமல் தடுக்க அலாவுதீன் பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க இந்த தாக்குதல் காரணமாக இருந்தது. மங்கோலியர்கள் இந்தியாவுக்கு வரும் பாதைகளில் உள்ள இராணுவ அமைப்புகளை அலாவுதீன் வலிமை ஆக்கினார். ஒரு வலிமையான ராணுவத்தை பராமரிக்க போதுமான வருமானத்தை உறுதி செய்ய அலாவுதீன் பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொண்டார்.

பின்புலம்[தொகு]

தில்லி சுல்தானகத்தின் ஆட்சியாளரான அலாவுதீன் கல்ஜி, சகதை கானேடு மற்றும் அதன் அண்டை நாடுகளிலிருந்து வந்த மங்கோலிய (முகலாய) தாக்குதல்களை 1297-98, 1298-99 மற்றும் 1299 ஆகிய ஆண்டுகளில் முறியடித்திருந்தார். 1302-1303 ஆம் ஆண்டின் குளிர்காலத்தில் வாராங்கலைச் சூறையாட அலாவுதீன் ஒரு ராணுவத்தை அனுப்பினார். ராஜஸ்தானின் சித்தூரை கைப்பற்ற தானே மற்றொரு ராணுவத்தை தலைமை தாங்கி வழிநடத்தினார்.[1] ஏகாதிபத்திய ராணுவத்தின் இரண்டு பெரிய பிரிவுகள் தில்லியில் இல்லை என்று அறிந்த மங்கோலியர்கள் தில்லியை கைப்பற்ற முடிவு செய்தனர்.[2] மங்கோலிய இராணுவமானது தரகையால் தலைமைதாங்கப்பட்டது.[3] 1299 இல் குத்லுக் கவாஜாவால் தலைமை தாங்கப்பட்ட படையெடுப்பில் தரகை ஒரு தளபதியாக பணியாற்றியிருந்தார்.[4]

14 ஆம் நூற்றாண்டு காலவரிசையாளர் ஜியாவுதீன் பரணியின் கூற்றுப்படி மங்கோலிய இராணுவமானது "30,000 அல்லது 40,000" குதிரைப் படை வீரர்களை கொண்டிருந்தது. பரணியின் நூல்களின் சில கையெழுத்துப் பிரதிகள் இந்த எண்ணிக்கை "20,000 அல்லது 30,000" என்று குறிப்பிடுகின்றன.[2] மங்கோலியர்கள் பஞ்சாப் பகுதி வழியாக எந்தவித பெரிய எதிர்ப்புமின்றி அணிவகுத்தனர். முல்தான், திபல்பூர் மற்றும் சமனா ஆகிய பகுதிகளில் இருந்த தில்லி சுல்தானாக படைகளானவை மங்கோலிய முன்னேற்றத்தை தடுக்கவோ அல்லது தில்லிக்குச் சென்று அலாவுதீனுக்கு உதவும் அளவுக்கோ வலிமையானவையாக இல்லை.[5]

அதே நேரத்தில் 1303 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சித்தூரை அலாவுதீன் கைப்பற்றினார். தனது ஆளுநரை அங்கு நியமித்தார். சித்தூரை வென்று ஏழு நாட்களுக்குப் பிறகு அங்கிருந்து அலாவுதீன் புறப்பட்டார். மங்கோலிய திட்டங்களை அறிந்த பிறகே அவர் இவ்வாறு புறப்பட்டிருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது.[6]

அலாவுதீன் தயாராகுதல்[தொகு]

மங்கோலியர் வருவதற்கு ஒரு மாதத்திற்கு முன்னரே அலாவுதீன் தில்லியை அடைந்தார். ஆனால் வரவிருக்கும் யுத்தத்திற்கு போதிய ஏற்பாடுகளைச் செய்ய அவரால் முடியவில்லை. சித்தூர் முற்றுகையின் போது மழைக்காலத்தில் அலாவுதீனின் ராணுவத்தின் ஆயுதங்கள் சேதம் அடைந்திருந்தன.[5] மேலும் சித்தூரில் அவர் ராணுவம் இழந்த குதிரைகள் மற்றும் பொருட்களை புதுப்பிக்க அவரால் இயலவில்லை.[7]

தனது மாகாண ஆளுநர்களுக்கு அலாவுதீன் செய்திகள் அனுப்பினார். தில்லிக்கு வலுவூட்டல் படைகளை அனுப்புமாறு அவர்களுக்கு ஆணையிட்டார்.[8] ஆனால் தில்லியை நோக்கி வந்த அனைத்து சாலைகளிலும் மங்கோலியர்கள் தடுப்புகளை ஏற்படுத்தினர்.[9] தில்லிக்கு சென்ற வணிகர்களின் வாகனங்களும் தடுத்து நிறுத்தப்பட்டன. இதன் காரணமாக தில்லியில் பொருட்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டது.[5]

வாராங்கலை கைப்பற்ற அலாவுதீன் அனுப்பிய ராணுவமானது அதன் குறிக்கோளை அப்படியே விட்டுவிட்டு திரும்பியது. நீண்ட பயணத்திற்குப் பிறகு தில்லிக்கு அருகே வந்தது. ஆனால் வரும் வழியில் அந்த ராணுவமானது அதன் பெரும்பாலான வீரர்கள் மற்றும் உபகரணங்களை இழந்தது.[1] மேலும் அந்த ராணுவத்தால் தில்லிக்குள் நுழைய முடியவில்லை. ஏனெனில் அந்த நேரத்தில் மங்கோலியர்கள் யமுனை ஆற்றின் பெரும்பாலான வழிகளை கைப்பற்றியிருந்தனர். தில்லிக்கு வருமாறு அந்த ராணுவத்திற்கு அலாவுதீன் ஆணையிட்ட போதும் தில்லியின் தென்கிழக்கில் உள்ள அலிகார் மற்றும் புலந்த்சாகர் ஆகிய இடங்களில் நிற்கும் நிலைக்கு அந்த ராணுவம் தள்ளப்பட்டது.[5][10]

இத்தகைய கடினமான சூழ்நிலைகள் காரணமாக மங்கோலியர்களுடன் நேரடியான சண்டை ஏற்படுவதை தவிர்க்க அலாவுதீன் முடிவெடுத்தார். மதில் சுவர்கள் கொண்ட தில்லி நகரத்தில் இருந்து வெளியேறி அலாவுதீன் தனது அரசவை முகாமை அப்போது கட்டப்பட்டுக் கொண்டிருந்த சிரி கோட்டையில் அமைத்தார்.[5] சிரி கோட்டையானது மூன்று பக்கங்களிலும் யமுனை ஆறு, அடர்ந்த காடு மற்றும் தில்லியின் பழையகோட்டை ஆகியவற்றால் சூழப்பட்டிருந்தது. சிரி கோட்டையின் வடக்குப் பகுதி மட்டுமே பாதுகாப்பின்றி இருந்தது.[8] தனது சிரி முகாமைச் சுற்றி ஒரு அகழி வெட்ட அலாவுதீன் ஆணையிட்டார். அந்த அகழியானது தில்லியில் இருந்த வீடுகளின் கதவுகளிலிருந்து உருவாக்கப்பட்ட மரத்தாலான பாதுகாப்பு அரண்களால் காக்கப்பட்டது. இந்த தற்காலிக குடியிருப்பானது ராணுவ வீரர்களைக் கொண்ட பல்வேறு பிரிவுகளால் பாதுகாக்கப்பட்டது. ஒவ்வொரு பிரிவும் அதன் முன் பகுதியில் 5 முழுவதும் ஆயுதம் தாங்கப்பட்ட யானைகளை கொண்டிருந்தது.[5]

தில்லி மீது மங்கோலிய படையெடுப்பு[தொகு]

மங்கோலியர்கள் தில்லி ராணுவத்தின் முன்வரிசை படையை இரண்டு அல்லது மூன்றுமுறை சந்தித்தனர். இந்த சண்டைகள் இருபுறத்திற்கும் தீர்க்கமான வெற்றியின்றி முடிந்தன. மங்கோலியர்களால் அலாவுதீனின் சிரி முகாமுக்குள் நுழைய முடியவில்லை.[5]

சிரியில் இருந்து வெளியேற்றப்பட்ட போதிலும் மங்கோலியர்கள் தற்கால தில்லியின் பிற பகுதிகளுக்குள் முன்னேறினர். வரலாற்றாளர் பரணி இந்தப் பகுதிகளை சவுதரா-இ-சுபானி, மோரி, ஹுதுதி மற்றும் அரச தொட்டி (ஹவுஸ்-இ-சுல்தானி) என்று பெயரிடுகிறார். எனினும் இப்பெயர்கள் நவீனகால இடங்களுடன் பொருந்தவில்லை. ஹவுஸ்-இ-சுல்தானி என்ற இடம் ஒருவேளை தற்போதைய ஹவுஸ்-இ-சம்சி என்ற இடமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. அரசாங்கத்துக்குச் சொந்தமான கடைகளை மங்கோலியர்கள் சூறையாடினர். சோளம் மற்றும் பிற பொருட்களை அங்கிருந்து எடுத்து மக்களுக்கு குறைந்த விலையில் விற்றனர்.[5]

மங்கோலியர்கள் தில்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இரண்டு மாதங்களுக்கு இருந்தனர். ஆனால் அலாவுதீனின் சிரி முகாமுக்குள் அவர்களால் நுழைய முடியவில்லை. ஒரு எதிரி பகுதிக்குள் மேலும் சில காலத்திற்கு இருப்பது என்பது தன்னுடைய ராணுவத்திற்கு நிலையற்ற தன்மையை ஏற்படுத்தும் என்பதை தரகை உணர்ந்தார். எனவே அந்நேரம் வரை சூறையாடிய பொருட்களை எடுத்துக் கொண்டு திரும்புவது என முடிவெடுத்தார்.[11] துவா மற்றும் சபர் இடையில் தரகையின் தாயகத்தில் நடைபெற்ற சண்டையும் தரகை திரும்புவதற்கு ஒரு முக்கியமான காரணியாக இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.[10] ஆனால் பிற்கால புனைகதைகளில் சுபி துறவியான நிஜாமுதீன் அவுலியாவின் பிரார்த்தனை தான் தரகையை பின்வாங்க வைத்தது என்று கூறப்பட்டது.[11]

அந்நேரத்தில் தில்லியில் வாழ்ந்த வரலாற்று ஆய்வாளரான ஜியாவுதீன் பரணி பிற்காலத்தில் எழுதியதன் படி தில்லி நகரமானது எக்காலத்திலும் அதுபோன்ற ஒரு மங்கோலிய பயத்தில் இருந்ததில்லை. அவரது கூற்றுப்படி தரகை மேலும் ஒரு மாதத்திற்கு தில்லியில் தங்கியிருந்திருந்தால் தில்லி நகரமானது தரகையிடம் வீழ்ந்திருக்கும்.[5]

பின்விளைவுகள்[தொகு]

1303 ஆம் ஆண்டின் மங்கோலிய படையெடுப்புக்கு முன்னர் அலாவுதீன் தானே பல தாக்குதல்கள் மற்றும் முற்றுகைகளுக்கு தலைமை தாங்கினார். ஆனால் கிட்டத்தட்ட தில்லியை கைப்பற்றும் நிலைக்கு வந்த தரகையின் படையெடுப்பு அலாவுதீனை கவனமாக இருக்க வைத்தது. இறுதியாக அலாவுதீனின் கிட்டத்தட்ட அனைத்து தாக்குதல்களும் (சிவனா தாக்குதல் தவிர) அவரது தளபதிகளால் (உதாரணமாக மாலிக் கபூர்) மட்டுமே தலைமை தாங்கப்பட்டன. அலாவுதீன் சிரி முகாமிலேயே தங்கினார். அங்கு ஒரு அரண்மனையை கட்டினார். இவ்வாறாக ஒரு காலத்தில் தில்லி நகரத்தின் மதில் சுவர்களுக்கு வெளியில் ஒரு பட்டணமாக இருந்த சிரி, தில்லி சுல்தானகத்தின் தலைநகரமானது. சிரி நகரத்தின் மக்கள் தொகை வேகமாக அதிகரித்தது. தில்லியின் பழைய கோட்டை மதில் சுவர்களையும் அலாவுதீன் புனரமைத்தார்.[12]

மங்கோலிய அச்சுறுத்தலை பலவீனப்படுத்த மங்கோலியர்கள் இந்தியாவுக்கு வரக்கூடிய வழியில் ராணுவ செயல்பாட்டை அலாவுதீன் வலிமைப்படுத்தினார். அவ்வழியில் இருந்த பல்வேறு பழைய கோட்டைகளை புனரமைத்த அலாவுதீன் புதிய கோட்டைகளையும் கட்டினார். சக்தி வாய்ந்த கொத்தவால்கள் (கோட்டை தளபதிகள்) மற்றும் அதிகப்படியான எண்ணிக்கையிலான வீரர்கள் இந்த கோட்டைகளில் பணியமர்த்தப்பட்டனர். இந்தக் கோட்டைகளின் ஆயுதக் கிடங்குகள் மற்றும் பொருள் கிடங்குகள் மீண்டும் நிரப்பப்பட்டன. திபல்பூர் மற்றும் சமனா ஆகிய இடங்களில் ஒரு பெரிய இராணுவமானது நிறுத்தப்பட்டது. இது தவிர மங்கோலிய எல்லைப்புறங்களில் இருந்த பகுதிகளில் திறமைவாய்ந்த மற்றும் அனுபவம் வாய்ந்த உயர்குடியினர் மற்றும் ராணுவ அதிகாரிகள் இக்தாக்கள் எனப்படும் வரி வசூலிப்பார்களாக பணியமர்த்தப்பட்டனர்.[12]

ஒரு தொடர்ச்சியான பொருளாதார சீர்திருத்தங்களை அலாவுதீன் செய்தார். பரணியின் கூற்றுப்படி இந்த சீர்திருத்தங்களின் முக்கிய நோக்கமானது மங்கோலிய அச்சுறுத்தலை சரி செய்வதற்காக ஒரு வலிமையான ராணுவத்தை பராமரிப்பதற்கான போதுமான வருவாயை ஈட்டுவதாகும்.[13]

இத்தகைய சீர்திருத்தங்கள் இந்தியா மீது படையெடுப்பதிலிருந்து மங்கோலியர்களை தடுக்கவில்லை. ஆனால் அலாவுதீனின் பகுதிகள் மீது தாக்குதல் நடத்தும் முயற்சிகளின் போது மங்கோலியர்கள் தீர்க்கமாக தோற்கடிக்கப்படுவதை உறுதி செய்தன.[14]

உசாத்துணை[தொகு]

 1. 1.0 1.1 Banarsi Prasad Saksena 1992, பக். 366.
 2. 2.0 2.1 Banarsi Prasad Saksena 1992, பக். 368.
 3. René Grousset 1970, பக். 339.
 4. Banarsi Prasad Saksena 1992, பக். 340.
 5. 5.0 5.1 5.2 5.3 5.4 5.5 5.6 5.7 5.8 Banarsi Prasad Saksena 1992, பக். 369.
 6. Kishori Saran Lal 1950, பக். 120.
 7. Mohammad Habib 1981, பக். 267.
 8. 8.0 8.1 Kishori Saran Lal 1950, பக். 164.
 9. Kishori Saran Lal 1950, பக். 165.
 10. 10.0 10.1 Peter Jackson 2003, பக். 223-224.
 11. 11.0 11.1 Banarsi Prasad Saksena 1992, பக். 370.
 12. 12.0 12.1 Banarsi Prasad Saksena 1992, பக். 372.
 13. Banarsi Prasad Saksena 1992, பக். 373.
 14. Kishori Saran Lal 1950, பக். 167.