உள்ளடக்கத்துக்குச் செல்

மங்கலங்கிழார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மங்கலங்கிழார்
பிறப்புகுப்பன்
1895 (1895)
புளியமங்கலம்,
வட ஆற்காடு மாவட்டம்,
மதராசு தலைமாகாணம், பிரித்தானிய இந்தியா (தற்போது இராணிப்பேட்டை மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா)
இறப்பு (அகவை 57-58)
புனைபெயர்
  • வடவெல்லைத் தமிழ் முனிவர்
  • தமிழ்ப் பெரியார்
தொழில்
  • தமிழறிஞர்
  • ஆசிரியர்
  • நாடகாசிரியர்
  • சமூகச் செயல்பாட்டாளர்
துணைவர்
கமலம்மாள் (தி. 1922)
பெற்றோர்
  • பொன்னுரங்கம்மாள் (தாய்)
  • ஐயாசாமி (தந்தை)

ஐயாசாமி குப்பன் எனும் இயற்பெயர் கொண்ட மங்கலங்கிழார் (1895 - 31 ஆகத்து 1953) ஒரு தமிழ்நாட்டுத் தமிழறிஞர் ஆவார். "வடவெல்லைத் தமிழ் முனிவர்" என்றும் "தமிழ்ப் பெரியார்" என்றும் போற்றப்படுபவர்.

தொடக்க வாழ்க்கை

[தொகு]

தமிழ்நாட்டின் இன்றைய இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தை அடுத்த புளியமங்கலம் எனும் சிற்றூரில் 1895-இல் பொன்னுரங்கம்மாள் - ஐயாசாமி இணையருக்கு மகவாய்ப் பிறந்தார் மங்கலங்கிழார். இவர் இயற்பெயர் குப்பன். பின்னாளில் குப்புசாமி என்றே அழைக்கப்பட்டார். புளியமங்கலத்தில் உள்ள தொடக்கப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை படித்தார். பின்னர் தனது சகோதரியுடன் சென்னை மாநகரின் பெரம்பூர் பகுதியில் தங்கி பச்சையப்பன் உயர்நிலைப் பள்ளியில் கல்வி பயின்றார். குடும்பச் சூழலின் காரணமாக கல்வியைக் கைவிட்டார் .

சென்னையில் டி. என். சேஷாசலம் ஐயர் என்ற வழக்கறிஞர் தமிழ் மொழியின்பால் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டு தமிழ் மொழியின் இலக்கண - இலக்கியங்களைப் பாமரர்க்கும் மாணவர்க்கும் போதித்து வந்தார். இச்செய்தியை அறிந்து மங்கலங்கிழாரும் அவரிடம் மாணவராய்ச் சேர்ந்தார். இருவரும் சென்னையில் இரவுப்பள்ளி ஒன்றை அமைத்து அதன் மூலம் தமிழ் மொழியைப் பரப்பி வந்தனர்.

பங்களிப்பு

[தொகு]

மங்கலங்கிழாரின் மேற்பார்வையில் கலா நிலையம் என்ற இலக்கிய இதழ் உருவானது. தொடர்ந்து இதழ் வெளிவர தடை ஏற்பட்டதால், இந்நிலையைப் போக்க கலா நிலையம் குழுவினர் சென்னை, மதுரை, திருச்சிராப்பள்ளி, சிதம்பரம் முதலிய நகரங்களில் நாடகங்கள் நடத்திப் பொருளீட்டினர். அவ்வாறு நடந்த நாடகங்களில் மங்கலங்கிழார் பெண் வேடமிட்டு நடித்தார். தொடர்ந்து இதழை வெளியிட முடியாத சூழ்நிலை உருவானது என்றாலும் அவரது இலக்கியப்பணி நின்றுவிடவில்லை. பள்ளி இளைஞர்கள் பலரை ஒன்று சேர்த்துத் தமிழ்ப் பண்டிதர்களாக உருவாக்கினார். "இலக்கணப்புலி" என்றழைக்கப்பட்ட கா. ர. கோவிந்தராச முதலியாரிடம் இலக்கண - இலக்கியங்களைக் கற்றுத் தேர்ந்தார்.

1922-ல், திருவள்ளூர் நகரைச் சேர்ந்த அங்கம்மாள்-ஐயாசாமி இணையர் மகளான கமலம்மாளை மணந்தார். அதன் பின்னர் தச்சுத் தொழில் செய்துகொண்டே விடுமுறை நாள்களிலும், இரவு நேரங்களிலும் பாடங்களைப் படித்தல், கேட்டல், பிறருக்குக் கற்பித்தல் ஆகியவற்றில் ஈடுபட்டார். கோவிந்தராச முதலியார் முயற்சியால் பெரம்பூர் கலவல கண்ணன் செட்டியார் உயர்நிலைப்பள்ளியில் தமிழாசிரியர் பணி பெற்று 15 ஆண்டுகள் பணியாற்றினார். பிறகு உடல்நிலை காரணமாக ஆசிரியர் பணியைத் துறந்தார். வ. உ. சிதம்பரனாரின் நட்பால் திருக்குறளில் நன்கு தேர்ச்சி பெற்றார். அதன்பின் சைவ, வைணவ நூல்களை ஆராய்ந்து தெளிவு பெற்றார்.

வேதாந்தத்தில் சிறந்து விளங்கிய வடிவேல் செட்டியாரிடம் வேதாந்தம் கற்றுத் தெளிந்தார். அதன்பிறகு புளியமங்கலத்தில் தனது குடும்பத்தார் வழிவழியாகச் செய்து வந்த மணியக்காரர் பணியை ஏற்று நடத்தி வந்தார். புளியமங்கலத்தில் ஓர் இரவு பள்ளியைத் துவக்கி, இளைஞர்களுக்கு தமிழ்ப் பாடமும், முதியவர்களுக்கு வேதாந்த பாடமும் நடத்தி வந்தார். வேதாந்தம் கற்ற அறிவினால் உலகின் நிலையாமையை எண்ணி துறவுக் கோலம் பூண்டு பல ஊர்களில் சுற்றித்திரிந்து கொண்டிருந்த காலத்தில் மங்கலங்கிழாருக்கு சுவாமி சின்மயானந்தரின் நட்பு கிடைத்தது. சின்மயானந்தரின் ஞான உபதேசத்தால் மீண்டும் புளியமங்கலத்திற்கே வந்து சேர்ந்தார்.

"ஏழைக்கு எழுத்தறிவித்தல் எல்லாவற்றையும் விட மிகச் சிறந்த அறம்" என்பதை உணர்ந்து அதைத் தன் வாழ்வில் நிகழ்த்திக் காட்ட முடிவு செய்தார். இன்றைய இராணிப்பேட்டை மாவட்டத்தின் வடக்கு எல்லையில் அமைந்துள்ள குருவராயப்பேட்டை என்ற ஊரின் மக்களுக்குத் தமிழ்ப்பாடம் நடத்தி வந்தார். பிறகு ஊர்தோறும் சென்று மாணவர்களுக்குப் பாடம் நடத்தினார். 1941-இல் குருவராயப்பேட்டையைத் தலைமையிடமாகக் கொண்டு "அறநெறித் தமிழ்க் கழகம்" என்ற அமைப்பை ஏற்படுத்தி அதன் தலைவராகச் செயல்பட்டார். அவ்வமைப்பு 16 ஊர்களில் தனது கிளைகளைக் கொண்டு இயங்கியது. இவ்வமைப்பில் மாணவர்கள் இலவசமாக சேர்க்கப்பட்டனர். இக்கழகத்தின் முதல் மாநாடு 1946-இல் குருவராயப்பேட்டையில் தெ. பொ. மீனாட்சிசுந்தரம் தலைமையிலும், அடுத்த மாநாடு மு. வரதராசன் தலைமையிலும் நிகழ்த்தப்பட்டது. வசதியும், தேர்ச்சியும் உள்ள மாணவர்களைப், புலவர் தேர்வுக்கு அனுப்பி வைத்தார் மங்கலங்கிழார். அதன் பயனாய் 25 பேர் புலவர் பட்டம் பெற்று அரசு வேலையில் சேர்ந்தனர். நூற்றுக் கணக்கானோருக்கு ஆசிரியர் பணியும் கிடைத்தது. ஏ.ச.சுப்பிரமணியம், ஏ. ச. தியாகராசன் உதவியுடன் தனியார் ஆசிரியப் பயிற்சிப்பள்ளியைத் திறந்து வைத்தார். அதன் பயனாய் ஆசிரியர்கள் பலர் உருவாயினர்.

அன்றைய மதராசு மாகாண முதலமைச்சர் ஓமந்தூர் ராமசாமி அமைச்சரவையில் (1947-49) பொதுப்பணி மற்றும் திட்டத்துறை அமைச்சராக இருந்த மு. பக்தவத்சலம் தலைமையில் தமிழர் மாநாடு ஒன்றை திருத்தணியில் நடத்தினார் மங்கலங்கிழார். அதன்பின் ம. பொ. சிவஞானம் தலைமையில் ஒரு மாநாட்டையும் நிகழ்த்தினார்.

இன்றைய ஆந்திரப் பிரதேசத்தின் சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ்ப் பகுதிகள் தமிழ்நாட்டுடன் இணைக்கப்பட வேண்டி காந்திய வழியில் அறப்போராட்டம் நிகழ்த்தி சிறை சென்றார்.

நூல்கள்

[தொகு]
  • தவளமலைச் சுரங்கம்
  • தமிழ்ப் பொழில்
  • சிறுவர் சிறுகதைகள்
  • வடவெல்லை
  • தமிழ்நாடும் வடவெல்லையும்
  • சகலகலாவல்லிமாலை - விளக்க உரை
  • நளவெண்பா - விளக்க உரை
  • இலக்கண விளக்கம்
  • இலக்கண வினா - விடை
  • நன்னூல் உரை
  • தனிக் கட்டுரைகள்

மறைவு

[தொகு]

31 ஆகத்து 1953 அன்று காலமானார் மங்கலங்கிழார்.

புகழ்

[தொகு]

புகழுரைகள்

[தொகு]
  • "யான் நூல்கள் யாத்தலிலும் மேடையில் பேசுவதிலுமே என் அறிவைச் செலவிட்டேன். ஆனால் கிழாரவர்கள் பல மணிமணியான புலவர்களைத் தயாரித்திருக்கிறார். அவர்கள் ஒவ்வொருவர் மூலமும் அவர்தம் பாரம்பரியம் நூற்றுக்கணக்கில் பல்கும் என்பதில் ஜயமில்லை. என் தொண்டினைவிடக் கிழாரின் தொண்டு சிறந்தது" - திரு. வி. கலியாணசுந்தரனார்.
  • "வடக்கெல்லைப் படையெடுப்பில் எனது மெய்க்காவலராக இருந்தார் ஆசிரியர் மங்கலங்கிழார். அவரைப் போன்று தாய்மொழிப் பற்றும், தமிழின உணர்ச்சியும் உடையவர்கள் தமிழினத்தாரில் வெகு சிலரே இருக்க முடியும்" - ம. பொ. சிவஞானம்
  • "தமிழ்ப் பெருந்தொண்டர் மங்கலங்கிழார் அவர்களின் தன்னலங் கருதாது பணிபல புரிந்து தமிழுக்கும் தமிழர்க்கும் பாடுபட்டு உழைத்த சான்றோர், அவர்தம் நினைவைப் போற்றுதல் தமிழர்க்குக் கடமையாகும்" - மு. வரதராசன்

பெயர் தாங்கிய இடங்கள்

[தொகு]

எட்டுக்கும் மேற்பட்ட ஊர்களில் மங்கலங்கிழார் பெயரில் தொடக்கப்பள்ளி, தெரு, இலக்கிய மன்றம், நூல் நிலையம், உருவச்சிலை, அறக்கட்டளை, நற்பணி மன்றம், பூங்கா, மாளிகை போன்றவை அமைக்கப்பட்டிருக்கின்றன.

  • மங்கலங்கிழார் அரசு (ஆண்கள்) மேல்நிலைப் பள்ளி, குருவராயப்பேட்டை
  • மங்கலங்கிழார் நூல் நிலையம், குருவராயப்பேட்டை
  • மங்கலங்கிழார் தெரு. அசோக் நகர், அரக்கோணம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. தினமணி (2015-11-02). "மங்கலக்கிழார், கணேசனார் சிலைகள் திறப்பு". Dinamani. Retrieved 2025-11-25.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மங்கலங்கிழார்&oldid=4416204" இலிருந்து மீள்விக்கப்பட்டது