மக்ரூன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மக்ரும்

மக்ரூன் அல்லது மக்ரும் என அழைக்கப்படும் தின்பண்டம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்துக் கடற்கரையோரப் பகுதி மக்கள் விரும்பி உண்னும் இனிப்பு வகைகளுள் ஒன்றாகும். மக்ரூன் என்பது ஒரு போர்த்துக்கீசியச் சொல்லாகும். மக்ரூன் என்றால் போர்த்துக்கீசிய மொழியில் “முந்திரியும் முட்டையும் கலந்த இனிப்பு” என்று பொருள். வணிகத்திற்காகவும், மதத்தைப் பரப்புவதற்காகவும் இந்தியாவின் தென்பகுதிக் கடற்கரைக்கு வந்த போர்த்துக்கீசியர்கள் தங்கள் நிர்வாகத்திற்கேற்ற இடமாக தூத்துக்குடியைத் தேர்வு செய்து அங்கேயே தங்கியிருந்தனர். இவர்கள் மக்ரூனை விரும்பிச் செய்து சாப்பிட்டனர். வெள்ளை நிறத்திலிருக்கும் இந்த இனிப்பு வாயில் போட்டாலே கரைந்து விடும். எனவே இதை குழந்தைகள் கூட விரும்பிச் சாப்பிடும். மக்ரூன் தயாரிப்பில் தூத்துக்குடிதான் இன்னும் பெயர் பெற்று விளங்குகிறது.

தூத்துக்குடியை நிர்வகித்த பிரபுக்களும் பாதிரிமார்களும் பிரேசில் நாட்டின் வடகிழக்குப் பகுதிகளில் இருந்து கொல்லம் வழியாக கப்பல்களில் முந்திரிக்கொட்டைகளைக் கொண்டுவந்து மக்ரூன் செய்து சாப்பிட்டார்கள். கொல்லம் வழியாக வந்ததால் முந்திரிக்கொட்டையை தூத்துக்குடி, குமரி மாவட்ட மக்கள் கொல்லாக்கொட்டை என்று அழைக்கிறார்கள்.

செய்முறை[தொகு]

1 கிலோ மக்ரூன் செய்ய அரை கிலோ சர்க்கரை, அரை கிலோ முந்திரி, 12 முதல் 15 கோழி முட்டைகள் தேவை. முந்திரியையும் சர்க்கரையையும் நன்கு அரைத்துத்தூளாக்க வேண்டும். முட்டையின் வெண்கருவைக் கவனமாகப் பிரித்தெடுத்து நன்றாக அடித்துக் கலக்கவேண்டும். மக்ரூனின் மென்மையைத் தீர்மானிப்பது இந்த கலக்கல்தான். இதற்கென கிரைண்டர் போன்ற இயந்திரங்களைப் பயன்படுத்துகிறார்கள். அடிக்க அடிக்க குப்பென மேலெழுந்து நுரை ததும்பும். சர்க்கரையை கொட்டி, திரும்பவும் அடிக்கிறார்கள். பின், முந்திரிப் பவுடரை கொட்டி மிதமான பதத்தில் பிணைக்கிறார்கள்.

மக்ரூனுக்கு வடிவம் வார்ப்பதுதான் முக்கியம். கைதேர்ந்தவர்களுக்குத்தான் இது சாத்தியப்படும். ஒரு பேப்பரை சுருள் பொட்டலம் போல போட்டுக்கொண்டு அதற்குள் மாவை அள்ளிவைத்து கீழ்பாகம் வழியாக மாவால் கோலம் போட சுருள் வடிவத்தில் கீழே பரவுகிறது மாவு. வடிவம் கிடைத்ததும் சூளை அடுப்பின் மேல்தளத்தில் மிதமான சூட்டில் மக்ரூன் தட்டுக்களை அடுக்கி காயவைக்கிறார்கள். ஒரு இரவு முழுதும் காய்ந்தால் "மக்ரூன்" தயாராகிவிடுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மக்ரூன்&oldid=2353905" இருந்து மீள்விக்கப்பட்டது