மக்கட்பெயரியல்
மக்கட்பெயரியல் (Anthroponymy மற்றும் Athroponomastics) அல்லது மக்கட்பெயர் ஆய்வு என்பது பெயரியலின் ஒரு பிரிவு. இது மனிதர்களின் பெயர்கள் தொடர்பாக ஆய்வு செய்யும் ஒரு துறையாகும். மனிதர்களின் பெயர்கள், அடிப்படையில், அவர்களை பிற மனிதரிடம் இருந்து வேறுபடுத்திக் குறிப்பதற்காகவே பயன்படுத்தப்படுவது எனினும், அப்பெயர்கள், குறித்த மனிதர் சார்ந்த சமூகத்தின் பண்பாட்டு அம்சங்கள் பலவற்றை உணர்த்த வல்லவை.[1] இதனாலேயே மக்கட்பெயர்களின் ஆய்வு முக்கியத்துவம் பெறுகிறது. பெயரியலின் ஒரு பிரிவு என்ற வகையில் மக்கட்பெயரியல் மொழியியல் துறைக்குள் அடங்கும் ஒரு ஆய்வுத் துறையாகக் கருதப்படுகின்றது. எனினும் இதை மெய்யியலின் ஒரு பகுதியாகப் பார்ப்பவர்களும் உள்ளனர்.
உட்பிரிவுகள்
[தொகு]சமூகங்களில் பண்பாட்டு வேறுபாடு, கால வேறுபாடு போன்றவற்றுக்கு ஏற்ப மக்கட்பெயர்கள் பல்வேறு வகைகளாக அமைகின்றன. சூட்டிய பெயர், குடும்பப் பெயர், புனைபெயர், இனக்குழுப் பெயர், சிறப்புப்பெயர், தாய்வழிப் பெயர், தந்தைவழிப் பெயர், மகன்வழிப் பெயர், செல்லப்பெயர், இனப்பெயர் போன்றவை இவ்வாறான வகைகளுட் சில. இவை வெவ்வேறு வகையான தகவல்களைத் தம்முள் பொதித்து வைத்துள்ளன. மக்கட்பெயரியலில் இவற்றுள் ஏதாவது ஒன்றுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஆய்வு செய்வது உண்டு.
பயன்பாடு
[தொகு]
மக்கட்பெயரியல் பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஆய்வுகளுக்குப் பயன்படுவதாக உள்ளது. வரலாறு,[2] மானிடவியல்,[3] மானிடப் புவியியல்,[4] சமூகவியல், மெய்யியல், மொழியியல் போன்ற துறைகளில் மக்கட்பெயரியல் பயன்படுவதைக் காணலாம்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Room 1996, ப. 8.
- ↑ Ziolkowska 2011, ப. 383–398.
- ↑ Bruck & Bodenhorn 2009.
- ↑ Bourin & Martínez Sopena 2010.