மகாராஜபுரம் விஸ்வநாதர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மகாராஜபுரம் விஸ்வநாத ஐயர்
மகாராஜபுரம் விஸ்வநாத ஐயர்
பின்னணித் தகவல்கள்
பிறப்பு1896
பிறப்பிடம்சென்னை மாகாணம், இந்தியா
இறப்பு1970 (அகவை 74)
இசை வடிவங்கள்கருநாடக இசை
தொழில்(கள்)கருநாடக இசைப் பாடகர்
இசைத்துறையில்1911–1966

மகாராஜபுரம் விசுவநாத ஐயர் (Maharajapuram Viswanatha Iyer; 1896 – ஏப்ரல் 1970) புகழ்பெற்ற கருநாடக இசைக் கலைஞர்களில் ஒருவராவார்.[1] சங்கீத கலாநிதி, சங்கீத பூபதி உள்ளிட்ட பல விருதுகள் பெற்றவர். பழம்பெரும் நடிகரும் பாடகருமான எம். ஆர். கிருஷ்ணமூர்த்தி இவரின் இளைய சகோதரர் ஆவார்.

வாழ்க்கைப் பின்னணி[தொகு]

தென்னிந்தியாவில் மகாராஜபுரம் என்னும் ஊரில் பாடகரான இராமா என்பவருக்கு மகனாகப் பிறந்தார்.

இசைப் பயிற்சி[தொகு]

தொடக்கத்தில் உமையாள்புரம் சுவாமிநாதரிடம் இசை பயின்றார். சுவாமிநாதர் மகா வைத்தியநாதரின் நேரடி மாணாக்கராவார். இந்த மகா வைத்தியநாதர், தியாகராஜரின் நேரடி மாணாக்கர் ஒருவரிடமிருந்து இசை கற்றவர். ஆகவே விசுவநாதர் தியாகராஜரின் இசைப்பரம்பரையில் ஐந்தாவது சந்ததியினராவார்.

அரங்கேற்றம்[தொகு]

விசுவநாதரின் முதல் மேடைக் கச்சேரி எதிர்பாராத வகையில் அமைந்தது. இவரது இளமைக்காலத்தில் திருப்பாயணம் பஞ்சாபகேச பாகவதர் நடத்திய இராம நவமி விழாவுக்கு போயிருந்தார். பாகவதருக்கு விசுவநாதர் யார், அவர் யாருடைய மாணாக்கர் என்பது தெரிந்திருந்தது. பாகவதரின் கதாகாலட்சேபம் தொடங்க சற்றுத் தாமதமாகும் என்ற நிலையில், இளம் விசுவநாதனை அந்த இடைவேளையில் பாடும்படி பாகவதர் கேட்டார். விசுவநாதர் நான்கு இராகங்களில் நான்கு கீர்த்தனைகள் பாடினார். இராக ஆலாபனைக்கு கூடிய நேரம் கொடுத்தார். அவரது நல்ல குரல், இராகம், பாவம், கீர்த்தனங்களை சரியாகப் பாடியது, அனைத்தும் அங்கிருந்தோரின் பாராட்டுகளைப் பெற்றது. அடுத்து இரண்டு மூன்று ஆண்டுகள் கோவில் விழாக்களிலும், சங்கர மடத்தின் மாலை வேளை இசை நிகழ்ச்சிகளிலும் பாடி வந்தார். அப்போது காஞ்சி சங்கர மடம் கும்பகோணத்தில் இருந்தது.

இசை விற்பன்னர்[தொகு]

இராக ஆலாபனை செய்வதில் இவர் சிறப்பு பெற்று விளங்கினார். அவரது இராக ஆலாபனையில் கற்பனை கரை கடந்து ஓடும். அவருக்கு மிகவும் பிடித்த இராகம் மோகனம். அதே போல ஆரபி, தர்பார், பந்துவராளி, கல்யாணி, ஹரிகாம்போதி, கமாஸ், காம்போதி மற்றும் தோடி இராகங்களில் அவரது ஆலாபனை சிறப்பாக இருக்கும். இந்த இராகங்களில் அமைந்த, தியாகராஜர், முத்துசாமி, சியாமா, பட்னம் சுப்பிரமணியர் ஆகியோரின் கீர்த்தனைகளையும், கோபால கிருஷ்ண பாரதியின் தமிழ் பாடல்களையும் அவர் முழுவதுமாக கற்றுக் கொண்டார்.

தியாகராஜர் கீர்த்தனைகளில் மிக்க கடினமானவற்றை அவர் மிகுந்த அக்கறையுடன் பயின்றார். ஒரு காலகட்டத்தில் தியாகராஜரின் பஞ்சரத்தின கீர்த்தனைகள் ஐந்தையும் சரியாகப் பாடக்கூடியவர் இவர் ஒருவரே என்ற நிலை இருந்தது.

பஞ்சரத்தின கீர்த்தனைகளில் ஒன்றான கனகனருசிரா என்ற வராளி இராக கீர்த்தனையை ஒருவரும் தனது சீடர்களுக்கு கற்றுக் கொடுப்பதில்லை. சீடர்கள் கேள்வி ஞானத்தின் மூலம் கற்றுக் கொள்ளவேண்டும். இதனைக் கற்றுக் கொடுத்தால் உறவில் பாதிப்பு ஏற்படும் என்ற ஒரு எண்ணம் நிலவியது.

தியாகராஜ ஆராதனையில் பஞ்சரத்தின கீர்த்தனைகள் பாடப்பட வேண்டுமென 1940ஆம் ஆண்டில் முடிவு செய்யப்பட்டது. அப்போது இந்த வராளி இராக கீர்த்தனையை நன்கு அறிந்தவர் விசுவநாதர் ஒருவரே! எனவே எல்லா வித்துவான்களும் அவரது பாணியை பின்பற்றி இக்கீர்த்தனையை பாடினார்கள். இன்றளவும் விசுவநாதரின் பாணியே பின்பற்றப் பட்டு வருகிறது.[2]

பாடிய பிரபல பாடல்கள்[தொகு]

  1. ஈச பாகிமாம் - கல்யாணி
  2. உண்டத்தே ராமுடு - ஹரிகாம்போதி
  3. ஏதுலப்ரோதுவா - சக்கரவாகம்
  4. யெவரிக்கையே அவதாரம் - தேவமனோகரி
  5. மோகன ராமா - மோகனம்
  6. கருணா சமுத்ர - தேவகாந்தாரி
  7. நின்கு வின்ஹ - கல்யாணி
  8. நாரத கான லோல - அடானா
  9. நாரத குரு ஸ்வாமி - தர்பார்
  10. பாராமுகமேலரா - சுருட்டி
  11. புழுவாய்ப் பிறக்கினும் - திருநாவுக்கரசர் தேவாரம்

இவர் பாடிய ப்ரோசேவாரெவருரா என்ற பாடலை எழுதிய மைசூர் வாசுதேவர் இவரைச் சந்தித்தபோது "நான் ஒரு அழகிய பெண்ணை உன்னிடம் அனுப்பினேன். நீ அவளுக்கு விலையுயர்ந்த நகைகள் போட்டு அலங்காரம் செய்துவிட்டாய்" என்று பாராட்டினார்.

பக்த நந்தனார் (1935) திரைப்படத்தில் கே. பி. சுந்தராம்பாளுடன் மகாராஜபுரம் விசுவநாத ஐயர் (வேதியராக)

திரைப்பட நடிகராக[தொகு]

1935 ஆம் ஆண்டு சனவரி 1 வெளியான பக்த நந்தனார் என்ற திரைப்படத்தில் வேதியர் வேடத்தில் நடித்தார். இத்திரைப் படத்தில் நந்தனாராக நடித்தவர் கே.பி. சுந்தராம்பாள்.[3]

மிருதங்க வித்துவானாக[தொகு]

மகாராஜபுரம் விசுவநாதர் மிருதங்கம் வாசிப்பதிலும் தேர்ச்சி பெற்று விளங்கினார். புல்லாங்குழல் மேதை மாலிக்கு இவர் மிருதங்கம் வாசித்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் வயலின் வாசித்தவர் மற்றொரு வாய்ப்பாட்டு வித்துவானான செம்பை வைத்தியநாத பாகவதர் ஆவார்.[4]

விருதுகள்[தொகு]

அறக்கட்டளை[தொகு]

மகாராஜபுரம் விசுவநாதர் நினைவாக அவர் பெயரில் ஒரு அறக்கட்டளை அவரது பேரனான மகாராஜபுரம் ஸ்ரீநிவாசனால் நிறுவப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் தேர்ந்தெடுக்கப்பட்ட இசைக்கலைஞர்களுக்கு இந்த அறக்கட்டளை சார்பில் தங்கப்பதக்கமும் 20 ஆயிரம் ரூபா பணமுடிப்பும் கொண்ட ஒரு விருது வழங்கப்படுகிறது.[6]

யாழ்ப்பாணத்தில் வரவேற்பு[தொகு]

இலங்கை, யாழ்ப்பாணத்தில் இராமநாதன் நுண்கலைக் கல்லூரி தொடங்கப்பட்டபோது விசுவநாதர் விழாவுக்குத் தலைமை தாங்க யாழ்ப்பாணம் சென்றார். கல்லூரியின் அதிபராக இருக்கும்படி அவரை வேண்டினர். ஆயினும் அவர் தான் சென்னை திரும்பவேண்டும் எனக் கூறி தனது மகனும் சங்கீத வித்துவானுமாகிய மகாராஜபுரம் சந்தானத்தை அங்கே பணியில் அமர்த்தினார். மகாராஜபுரம் சந்தானம் கல்லூரியின் முதலாவது அதிபராக நியமிக்கப்பட்டார்.[7]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]