மகாசமுந்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மகாசமுந்து நகரம் என்பது இந்தியாவின் மாநிலமான சத்தீஸ்கரின் மகாசமுந்து மாவட்டத்தில் உள்ள ஒரு நகரமாகும். இந்த நகரம் 30 வார்டுகள் மற்றும் நான்கு மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இது டிரான்ஸ்-மகாநதி பகுதியில் உள்ள மிகப்பெரிய நகரமாகும். இது மகாசமுந்து மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையகமாகவும், முன்மொழியப்பட்ட புதிய மாநகராட்சியின் ஒரு பகுதியாகவும் உள்ளது.

புவியியல்[தொகு]

மகாசமுந்து 21.1 ° வடக்கு 82.1 ° கிழக்கு என்ற புவியியல் இருப்பிடத்தில் அமைந்துள்ளது.[1] இதன் சராசரி உயரம் 318 மீட்டர் (1043 அடி) ஆகும். மகாசமுந்து தேசிய நெடுஞ்சாலை 6 மற்றும் தேசிய நெடுஞ்சாலை 217 சந்திப்பில் ராய்ப்பூருக்கு தென்கிழக்கில் 56 கி.மீ தொலைவில் உள்ளது. ராய்ப்பூர் - விசாக் தொடருந்து பாதையில் மகாசமுந்து நகரம் ஒரு முக்கியமான நிலையமாகும். புதிய சத்தீஸ்கர் தலைநகரான நயா ராய்ப்பூருக்கு அருகில் உள்ள மாவட்ட தலைமையக நகரங்கள் மகாசமுந்து மற்றும் ராய்ப்பூர் என்பனவாகும்.

புள்ளிவிபரங்கள்[தொகு]

2011 ஆம் ஆண்டின் இந்திய மக்கட் தொகை கணக்கெடுப்பின்படி மகாசமுந்தின் மக்கட் தொகை 85,650 ஆக இருந்தது. ஆண்கள் மக்கட் தொகையில் 51% வீதமும், பெண்கள் 49% வீதமும் உள்ளனர். மகாசமுந்து மக்களின் சராசரி கல்வியறிவு விகிதம் 70% ஆகும். இது தேசிய சராசரியான 59.5% ஐ விட அதிகமாகும். ஆண்களின் கல்வியறிவு 79% வீதமும், பெண்களின் கல்வியறிவு 61% வீதமுமாக காணப்படுகின்றது. மக்கட் தொகையில் 14% வீதமானோர் ஆறு வயதிற்கு உட்பட்டவர்கள்.[2] 2014 ஆம் ஆண்டில் மதிப்பிடப்பட்ட மக்கள் தொகை ஒரு லட்சத்துக்கும் அதிகமாகும்.

பொருளாதாரம்[தொகு]

மகாசமுந்தின் பொருளாதாரம் விவசாயம் மற்றும் சுரங்கத்தை அடிப்படையாகக் கொண்டது. இங்கு பயிரிடப்படும் முக்கிய பயிர் அரிசி ஆகும். மகாசமுந்தில் பல கல் வெட்டும் தொழிற்சாலைகளும் உள்ளன. பிர்கோனி மற்றும் பெல்சொண்டாவின் தொழில்துறை பகுதி முறையே 10 மற்றும் 05 கி.மீ. தூரத்தில் உள்ளது. இந்தியாவின் அனைத்து முக்கிய பொது மற்றும் தனியார் துறை வங்கிகளின் கிளைகளும் மகாசமுந்தில் உள்ளது.[3]

போக்குவரத்து[தொகு]

மகாசமுந்து ராய்ப்பூரிலிருந்து 55 கி.மீற்றரிலும், தம்தாரியில் இருந்து 105 கி.மீற்றரிலும், ராஜீமில் இருந்து 30 கி.மீற்றரிலும், பிலாஸ்பூரிலிருந்து 160 கி.மீற்றரிலும், துர்கிலிருந்து 95 கி.மீற்றரிலும், பிலாயிலிருந்து 85 கி.மீற்றர் தொலைவிலும், சரைபாலியில் இருந்து 115 கி.மீற்றரிலும், பார்கரில் இருந்து 180 கி.மீற்றரிலும், சம்பல்பூரிலிருந்து 250 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது.

பேருந்து[தொகு]

மகாசமுந்தில் உள்ள குரு காசிதாஸ் பேருந்து முனையம் அதன் அருகிலுள்ள நகரங்களுடன் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. ராய்ப்பூர் , பிலாஸ்பூர் , சராய்பாலி , பலோடா பஜார்பெமேதாரா, சிம்கா, ராஜிம் , சாரன்கர், கரியபாண்ட், காரியார் சாலை , நுவாபாடா, பெர்ஹாம்பூர் , ஆசிகா , மற்றும் பவானிபட்னா ஆகிய இடங்களுக்கு வழக்கமான பேருந்து சேவைகள் உள்ளன.

தொடருந்து சேவை[தொகு]

மகாசமுந்தில் இரண்டு தொடருந்து நிலையங்கள் உள்ளன. அவையாவன மகாசமுண்ட் தொடருந்து நிலையம், மற்றும் பெல்சொண்டா நிலையம் என்பனவாகும். மகாசமுந்து தொடருந்து நிலையம் கிழக்கு கடற்கரை ரயில்வே மண்டலத்தில் முக்கியமான நிலையமாகும்.

விமான நிலையம்[தொகு]

சுவாமி விவேகானந்தர் விமான நிலையம் மகாசமுந்தில் இருந்து தென்கிழக்கில் 40 கி.மீ தூரத்தில் உள்ளது.

சாலைகள்[தொகு]

தேசிய நெடுஞ்சாலை 6 மற்றும் தேசிய நெடுஞ்சாலை 217 வழியாக மகாசமுந்து முக்கிய இந்திய நகரங்களுடன் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. மகாசமுந்தில் இருந்து ஒடிசா வரையிலான நான்கு வழிச் சாலையாக தேசிய நெடுஞ்சாலை 6 ஐ மேம்படுத்தும் பணி நடந்து வருகிறது.

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மகாசமுந்து&oldid=3194696" இருந்து மீள்விக்கப்பட்டது