மகர் நோன்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மகர்நோன்பு என்பது தமிழ்நாட்டின் விருதுநகரில் பெண் பார்க்கும் படலத்துடனும் நடத்தப்படும் ஓரு நிகழ்வு ஆகும். இது நவராத்திரி விழா நிறைவு நாளான விசயதசமியன்று அனைத்து சமுதாயத்தினராலும் கொண்டாடப்படுகிறது. இது ஒருவகை சுயம்வரமாகவும் உள்ளது.

விழா கொண்டாடப்படும் முறை[தொகு]

விருதுநகரில் பராசக்தி மாரியம்மன் கோயிலில் பங்குனி பொங்கல் திருவிழாவை அடுத்து நடத்தப்படும் பெரிய விழா இந்த மகர்நோன்பு திருவிழா. இந்த விழா விசயதசமி நாளில் துர்க்கை, அசுரனை வதம் செய்வதைக் கொண்டாடும் வகையில் நடத்தப்பட்டுகிறது. விழா நாளன்று இங்கு வாழும் முதன்மைச் சாதியினர் தங்கள் சாதியினரில் குறிப்பிட்ட ஒருவரைத் தேர்ந்தெடுத்து அவருக்குப் புலி வேடமிட்டு தங்கள் பகுதியிலிருந்து வாணவேடிக்கைகளுடன் ஊர்வலமாக அழைத்து வருவர்.[1] அவர்களுடன் அச்சாதியைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள், சிறுவர், பெரியவர்களும் கலந்து கொண்டு ஊர்வலமாக வருவர்.

விழாவின்போது திருமணமாகாத இளம் பெண்கள் பலர் குடும்பம் குடும்பமாக வந்திருந்து ஊர்வலத்தைக் காண்பர் இந்நிகழ்வின்போது உறவினர்கள் மூலம் மாப்பிள்ளை வீட்டார் திருமணத்துக்குத் தயாராக உள்ள பெண்கள் பற்றியும், பெண் வீட்டார் மாப்பிள்ளை வீட்டாரைப் பற்றியும் உடன் வந்திருந்த உறவினர்கள் மூலம் ஒருவருக்கொருவர் விசாரித்துக்கெள்வர். இதன்வழியாக விழாவின்போது, யார் வீட்டில் பெண் உள்ளனர் என்பதை மாப்பிள்ளை வீட்டார் பார்த்துக் கொள்வர். திருவிழாவின்போது மாப்பிள்ளை வீட்டார் சாடைமாடையாக பெண்ணையும் பார்த்துக்கொள்வர். பின்னர், அவரவர் வீடுகளுக்குச் சென்றபின் யாரைப் பேசி முடிக்கலாம் என்று தீர்மானித்து பெண் பார்க்கச் சென்று பேசி முடித்து சம்பந்தம் செய்துகொள்வர். [2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "விருதுநகரில் மகர் நோன்பு விழா". செய்தி. தினமலர். 6 அக்டோபர் 2011. பார்க்கப்பட்ட நாள் 14 அக்டோபர் 2016.
  2. இ.மணிகண்டன் (12 அக்டோபர் 2016). "விருதுநகரின் பாரம்பரிய மகர்நோன்பு திருவிழா: காலையில் வீர விளையாட்டு மாலையில் பெண்பார்க்கும் படலம்". செய்திக்கட்டுரை. தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 14 அக்டோபர் 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மகர்_நோன்பு&oldid=3577950" இலிருந்து மீள்விக்கப்பட்டது