மகத் சத்தியாகிரகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மகத் சத்தியாகிரகம் (Mahad Satyagraha) டாக்டர் பி. ஆர். அம்பேத்கரால் 1927 ஆம் ஆண்டு மார்ச் 20 ஆம் தேதி நடத்தப்பட்டதாகும். இது இந்தியாவின் பம்பாய் மாகாணம் (தற்போதைய மகாராட்டிரம்), ராய்காட் மாவட்டத்தில் மகத் என்னும் நகரில் அமைந்துள்ள பொதுக்குளத்தில் தீண்டத்தகாதோர் என்று சொல்லபட்ட தலித்மக்கள் நீர் எடுக்க அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்து நடத்தப்பட்டப் போராட்டமாகும். இந்நாள் (மார்ச் 20) இந்தியாவின் சமூக மேம்பாட்டு நாள் என அனுசரிக்கப்படுகிறது.

பின்புலம்[தொகு]

பி. ஆர். அம்பேத்காரால் நடத்தப்பட்ட மகத் சத்தியாகிரகத்தைக் குறிக்கும் வெண்கல சிற்பம்

இந்திய சாதிய அமைப்பில் தீண்டத்தகாதோர் என்று சொல்லபட்ட தலித்துகள் இந்துக்களின் சாதிக்கட்டமைப்பிலிருந்து விலக்கி வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு சாதி இந்துக்கள் பயன்படுத்தும் குடிநீர் குளங்கள், கிணறுகள் மற்றும் சாலைநிறுவப்பட்டுகளைப் பயன்படுத்த அனுமதி மறுக்கப்பட்டது. 1923 ஆகத்து மாதத்தில் பம்பாய் சட்டமன்றம், ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவரும், அரசால் நிறுவப்பட்டு இயங்கிவரும் அனைத்து இடங்களையும் பயன்படுத்திக்கொள்ள அனுமதி வழங்கி சட்டமியற்றியது. 1924 ஆம் ஆண்டு சனவரியில் மகத் நகராட்சியும் இதுபோன்ற தீர்மானத்தை நிறைவேற்றியது. ஆனால் சாதி இந்துக்களின் எதிர்ப்பால் தீர்மானம் தோல்வியடைந்தது

சத்தியாகிரகம்[தொகு]

அம்பேத்கர், தீண்டத்தகாதோரும் பொது இடங்களைப் பயன்படுத்த சத்தியாகிரகம் நடத்த முடிவு செய்தார். அவரது பகிசுகரத் கிதகரனி சபா 1927 மார்ச்சு 19, 20 தேதிகளில் பம்பாய் மகத் நகரில் ஆயிரக்கணக்கான தீண்டத்தகாதோர் பங்குபெறும் மாநாட்டை ஏற்பாடு செய்தது. மாநாட்டின் முடிவில், நகரின் முக்கிய குளமான சவுகார் குளத்தை நோக்கி அம்பேத்கர் தலைமையில் பேரணியாகச் சென்று, குளத்தில் இறங்கி நீர் அள்ளிப் பருகினர். அதற்குள் அம்பேத்கரும் தீண்டத்தகாதோரும் நகரின் முக்கிய இந்துக் கோவிலுக்குள் நுழையப் போகிறார்கள் என்ற வதந்தி பரவி, சாதி இந்துக்கள் திரண்டு வந்து தீண்டத்தகாதோர் குளத்தை தீட்டுப்படுத்திவிட்டதாக கூறி வாதிட்டுப் பரிகார பூசை செய்தனர்[1].

டாக்டர் அம்பேத்கர் மகத் நகரில் திசம்பர் 26, 27 தேதிகளில் மீண்டும் ஒரு மாநாட்டைக் கூட்டினார்[2].ஆனால் சாதி இந்துக்கள் மகத் குளம் தனியார் சொத்து என்றும் அதனால் சத்தியாகிரகம் நடத்துவது சட்டமீறல் எனவும் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்[3].1927 திசம்பர் 26 ந்தேதி அம்பேத்கர், இந்துக்களின் புனித சட்ட நூலான மனுசு மிருதியை தீயிட்டு எரித்து தம் எதிர்ப்பை வெளிப்படுத்தினார். 1937 திசம்பரில் பம்பாய் உயர்நீதிமன்றம் மகத் குளத்தை தீண்டத்தகாதோர்ப் பயன்படுத்த உரிமை வழங்கி ஆணையிட்டது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மகத்_சத்தியாகிரகம்&oldid=3672443" இலிருந்து மீள்விக்கப்பட்டது