போர்பெக் பாலம் நினைவுச்சின்னம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

போர்பெக் பாலம்: ஆங்கிலேயர் கட்டிய ஓடைப்பாலம் குறித்த நினைவுச்சின்னம் தமிழ் நாட்டின், சென்னை மாநகரம், மேற்கு சிஐடி நகரில் உள்ள மாநில நெடுஞ்சாலைத் துறையின் பணிமனை வளாகத்தில், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் பராமரிப்பில் இருந்து வருகிறது. அண்ணாசாலை - சைதாப்பேட்டை ஜோன்ஸ் சாலை சந்திப்பை அடுத்துள்ள எம்.சி. இராஜா விடுதியை ஒட்டி, நந்தனம் கால்நடை மருத்துவ மனைக்கு எதிரே, இந்த நினைவுச்சின்ன வளாகம் அமைந்துள்ளது. அண்ணா சாலையில் யாவரும் காணும் வண்ணம் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் எனாமல் அறிவிப்புப் பலகை ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. [1]

நான்கு மொழிகளில் பொறிக்கப்பட்ட நான்முக பீடம்[தொகு]

இரும்பு வலைத்தட்டி அடைப்பினுள்ளே, 26 ச. மீ பரப்பளவில் அமைந்த வளாகத்தின் நடுவே, இந்த நான்முக நினைவு பீடம் நிறுவப்பட்டுள்ளது. [1] நான்முக பீடத்தின் நான்கு புறங்களிலும் ஆங்கிலம், இலத்தீன், பாரசீகம் மற்றும் தமிழ் மொழிகளில் பொறிக்கப்பட்டுள்ள வாசகங்கள் போர்பெக் பாலத்தின் வரலாற்றுப் பின்னணியைத் தெரிவிக்கிறது. [1][2]சுமார் 239 ஆண்டுகள் கழிந்த பின்னும் இந்த நினைவுச் சின்னம், கருனையுள்ளம்கொண்ட ஓர் ஐரோப்பியர், தனது உயில் வாயிலாக, எழுப்பிய ஓர் ஒடைப்பாலம் குறித்த வரலாற்றைத் தாங்கி நிற்கிறது. [3][4]

நினைவுச் சின்னத்தில் பொறிக்கப்பட்ட வாசகம்[தொகு]

"மெட்ராஸின் வணிகரான திரு அட்ரியன் போர்பெக் (Adrian Fourbeck) என்பவரால் வழங்கப்பட்ட உயில்வழிக்கொடையைக் கொண்டு பொது நன்மைக்காக அமைக்கப்பட்ட இந்த பாலம், பரந்த வள்ளல் குணம் படைத்த ஒரு நல்ல குடிமகன் ஏற்படுத்திய நினைவுச்சின்னம் ஆகும். 1786 ஆம் ஆண்டில், தலைமைப் பொறியாளர் லெப்டினன்ட் கர்னல் பாட் ரோஸின் (Lieutenant Colonel Pat Ross, Chief Engineer) வழிகாட்டுதலின் கீழ், அட்ரியன் போர்பெக்கின் செயலாளர்களான (Executors) டி பெல்லிங் (T Pelling), டி ஃப்ரீஸ் (De Freies), பி போட்கின் (P Bodkin) ஆகியோரால் இப்பாலம் நிறுவப்பட்டது. செயின்ட் ஜார்ஜ் கோட்டையின் ஆளுநர் மேஜர் ஜெனரல் சர் ஆர்ச் டி காம்ப்பெல் (Major General Sir Arch D Campbell) ." [1][2]

மாம்பலம் ஒடைப்பாலம்[தொகு]

நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை தொடங்கி சைதாப்பேட்டை வரை பரவி, தற்போதைய அண்ணாசாலையின் மேற்கு விளிம்பிற்கு இணையாக 'லாங் டேங்க்' என்ற ஒரு பெரிய ஏரி இருந்தது. இப்போது இந்த லாங் டேங்க் ஏரி இருந்ததற்கான தடயங்கள் எதுவும் கிடைக்கவில்லை. இந்த ஏரியில் இருந்து வெளியேறும் உபரி நீர், அண்ணாசாலையின் (மவுண்ட் ரோடு) குறுக்கே ஒரு ஓடை (கால்வாய்) வழியாக அனுப்பப்பட்டது. [2] மவுண்ட் ரோட்டின் குறுக்கே, இந்தக் கால்வாயின் மீது 'மாம்பலம் ஓடைபாலம்' என்ற சிறிய தற்காலிக பாலம் அமைக்கப்பட்டிருந்தது.

நிரந்தர பாலத்திற்கான தேவை[தொகு]

அன்றைய மதராஸ் நகரின் முக்கிய சாலையான மவுண்ட்ரோடில் மாம்பலம் ஓடையின் மீது கட்டப்பட்டிருந்த தற்காலிக ஒடைப்பாலம் போக்குவரத்திற்கு ஏற்றதாக இல்லை. 1772 ஆம் ஆண்டில், ஆண்ட்ரூ ரோஸ் என்ற இலவச வணிகர் நிரந்தர "புரூக் அட் மாமெலனில் பாலம்" ("Bridge over the Brook at Mamelon”) [1] கட்டுவதற்கு முன்வந்தார்.

அட்ரியன் போர்பெக்[தொகு]

அட்ரியன் போர்பெக் செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் துப்பாக்கி அறை பணிக்குழுவில் பணியாற்றி வந்தார், போர்பெக் மாம்பலம் ஓடையின் மீது ஒரு நிரந்தர பாலம் அமைக்க விரும்பினார். இதற்கான ஓர் உயிலையும் எழுதினார். நல்லிதயம் கொண்ட இந்த ஐரோப்பியர் 1740 ஆம் ஆண்டில், ஊனமுற்றதால், மாதம் 1-14-0 பகோடா பெறும் ஊனமுற்றோர் ஓயவூதிய திட்டத்தின் கீழ் பணியிலிருந்து வெளியேற்றப்பட்டார். பின்னர் அவர் சாமுவேல் ட்ரூட்பேக்குடன் கூட்டு சேர்ந்து ஒரு செல்வ வளமிக்க வணிகரானார் . போர்பெக் பிப்ரவரி 22, 1783 ஆம் ஆண்டு இறந்தார். தான் இறக்கும் முன்னர் பாலம் கட்டுவதற்கான 'விதிமுறைகள்' அடங்கிய உயிலை விட்டுச் சென்றுள்ளார்.போர்பெக் அளித்த உயில்வழிக்கொடையைப் பயன்படுத்தி இந்த ஓடையின் மீது நிரந்தரப் பாலம் கட்டப்பட்டது. [1]

வரலாற்று பதிவுகளின்படி, வணிகர் அட்ரின் போர் பெக் இறந்து மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, 1786 ஆம் ஆண்டில், அவரது மூன்று செயலாளர்களான - தாமஸ் பெல்லிங், ஜான் டி ஃப்ரைஸ் மற்றும் பீட்டர் போடின் - அவரது உயிலில் குறிப்பிடப்பட்ட தங்கள் எஜமானரின் கடைசி விருப்பத்தை நிறைவேற்றினர். [2] [4]அட்ரியன் போர்பெக்கின் மனிதநேயத்தையும், கொடையுள்ளத்தையும் நினைவுகூரும் வகையில் இந்த பாலத்திற்கு போர்பெக் பாலம் என்று பெயரிடப்பட்டது.

நான்முக தகவல் பீடம்[தொகு]

இந்தப்பாலம் தற்போது பயன்பாட்டில் இல்லை. இந்தப் பாலத்திற்குப் பதிலாக பெரிய அளவிலான நவீன பாலம் 1970 ஆம் ஆண்டு கட்டப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது. ஆனால் இந்த நான்முக தகவல் பீடம் மட்டும் இந்த வரலாற்றுச் செய்தியினை தாங்கி நிற்கிறது. 2003 ஆம் ஆண்டு முதல் இந்த நினைவுச்சின்னம் தமிழநாடு அரசு தொல்லியல் துறையின் பராமரிப்பில் இருந்து வருகிறது. [1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 The sole reminder of long-lost bridge from yore The New Indian Express May 19, 2011
  2. 2.0 2.1 2.2 2.3 In the honour of a visionary engineer D Madhavan The Hindu October 02, 2017
  3. A bridge back to Chennapattinam Yogesh Kabirdoss The Times of India Dec 20, 2016
  4. 4.0 4.1 On the trail of bridges D.H. Rao. Madras Musings Vol.. XXIV No. 13, October 16-31, 2014