போர்னியோ போர்
| ||||||||||||||||||||||||||||||
போர்னியோ போர் அல்லது இரண்டாம் போர்னியோ போர் (ஆங்கிலம்: Borneo Campaign அல்லது Second Battle of Borneo; மலாய்: Kempen Borneo) என்பது இரண்டாம் உலகப் போரின் போது சப்பானிய கட்டுப்பாட்டில் இருந்த பிரித்தானிய போர்னியோ மற்றும் இடச்சு போர்னியோவை விடுவிப்பதற்காக தென்மேற்கு பசிபிக் பகுதியில் நடந்த கடைசி பெரிய நேச நாடுகளின் படையெடுப்பாகும். 1945 மே 1-ஆம் திகதி தொடங்கி 1945 சூலை 21-ஆம் திகதி வரையில் நடைபெற்ற இந்தப் படையெடுப்பு ஓபோ நடவடிக்கை (Operation Oboe) என்றும் அழைக்கப்படுகிறது.
1941-ஆம் ஆண்டின் பிற்பகுதியிலிருந்து 1942-ஆம் ஆண்டின் முற்பகுதி வரை போர்னியோ தீவுக்குள் ஊடுருவல் செய்த சப்பானிய பேரரசுப் படைகளுக்கு (Imperial Japanese Forces) எதிராக இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இந்தத் தாக்குதல்களுக்கு நேச நாடுகளின் தலைமையில் ஆத்திரேலிய இராணுவத் தளபதி லெசுலி மோர்சுகெட் (Leslie Morshead) என்பவர் தலைமை தாங்கினார்.
போர்னியோ தீவில் இருந்த முதனமை சப்பானிய இராணுவம் முப்பத்தேழாவது இராணுவமாகும். இந்த இராணுவம் இராணுவத் துணைத் தளபதி மசாவோ பாபா (Masao Baba) என்பவரின் கட்டளையின் கீழ் இருந்தது. கடற்படைக்கு இராணுவத் துணைத் தலைமை தளபதி மிச்சியாகி கமாடா (Michiaki Kamada) தலைமை தாங்கினார்.
பொது
[தொகு]ஆத்திரேலிய தரைப்படைகளுக்கு ஐக்கிய அமெரிக்கா மற்றும் பிற நேச நாட்டு வான்படை மற்றும் கடற் படைகளுக்கு பாதுகாப்பு அளித்தன. இந்த நடவடிக்கையை நடத்துவதற்கு ஐக்கிய அமெரிக்கா நாடுகள் பெரும் அளவில் கப்பல் போக்குவரத்து மற்றும் தளவாடப் பொருள்களை வழங்கியது. தாராக்கான், லபுவான், வடக்கு போர்னியோ மற்றும் பாலிக்பாப்பான் ஆகிய நான்கு இடங்களில் தரையிறக்கம் மேற்கொள்ளப்பட்டது.
போர்னியோ தீவின் உட்புறத்தில் தயாக்கு பழங்குடியினராலும், சிறிய எண்ணிக்கையிலான நேச நாட்டுப் பணியாளர்களாலும் கெரில்லா நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
பின்னணி
[தொகு]


இரண்டாம் உலகப் போருக்கு முன்பு, போர்னியோ தீவின் வடக்குப் பகுதி பிரித்தானிய போர்னியோ என்றும்; தெற்குப் பகுதி இடச்சு போர்னியோ என்றும் பிரிக்கப்பட்டு இருந்தது. இடச்சு போர்னியோ என்பது நெதர்லாந்து கிழக்குத் தீவுகளின் (Netherlands East Indies) ஒரு பகுதியாக இந்தது. 1941-ஆம் ஆண்டு நிலவரப்படி, போர்னியோ தீவின் மக்கள் தொகை 3 மில்லியன் என மதிப்பிடப்பட்டது.
பெரும்பான்மையான மக்கள் சிறிய கிராமங்களில் வசித்து வந்தனர். அப்போதைய நிலையில் போர்னியோவில் ஏறக்குறைய 15-க்கும் குறைவான பெரு நகரங்கள் மட்டுமே இருந்தன. போர்னியோ ஒரு வெப்பமண்டல காலநிலையைக் கொண்டுள்ளது; மற்றும் இரண்டாம் உலகப் போரின் போது அடர்ந்த காடுகளால் மூடப்பட்டிருந்தது. பெரும்பாலான கடற்கரை சதுப்புநிலங்களில், அலையாத்தித் தாவரங்கள் பெருமளவில் இருந்தன.[5]
போர்னியோ வளர்ச்சி அடையாத தீவாகவும், ஒரு சில சாலைகளையும், ஒரே ஒரு தொடருந்து வழித்தடத்தையும் மட்டுமே கொண்டிருந்தது. பெரும்பாலான பயணப் பாதைகள்; நீர்வழிப் பாதைகள் அல்லது குறுகிய பாதைகளின் கிளைத் தடங்களாகவே இருந்தன. பிரித்தானியர்களும் மற்றும் இடச்சுக்காரர்களும் தங்கள் சொத்துக்களைப் பாதுகாக்க போர்னியோவில் சிறிய அளவிலான படைத்துறைகளை மட்டுமே அங்கு நிறுத்தி வைத்திருந்தனர்.[5]
போர் தொடக்கம்
[தொகு]பசிபிக் போர் தொடக்கத்தின் சில வாரங்களிலேயே போர்னியோவை சப்பானியர்கள் கைப்பற்றி விட்டனர்.[5][6] திசம்பர் 16, 1941-இல் சப்பானிய துருப்புக்கள் சரவாக்கில் தரையிறங்கின. அங்கு இருந்த பிரித்தானிய இந்தியத் துருப்புக்களின் ஒரு படையினர் பல வாரங்களாக சப்பானிய துருப்புக்களின் முன்னேற்றத்தைத் தாமதப்படுத்தும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அதன் தொடர்ச்சியில் பல முக்கிய எண்ணெய்க் கிணறுகளையும் சேதப்படுத்தினர். எதிரிகளின் தாக்குதல் நகர்வுகளை பின்னடைவுச் செய்யும் போர் உத்திகளில் இதுவும் ஒன்றாகும்.
இதற்கிடையில், சனவரி 11, 1942 அன்று, சப்பானிய துருப்புக்கள் தாராக்கான் (Tarakan) தீவில் தரையிறங்கின. அடுத்த நாள் சுலாவெசி தீவில் சப்பானிய வான்குடை துருப்புக்கள் தரையிறங்கின. அப்போது அங்கு ஒரு சிறிய இடச்சுப் படை வீரர் குழு மட்டுமே காவலில் இருந்தது. சப்பானியர்களின் முன்னேற்றத்தைத் தற்காலிகமாக தடுத்து நிறுத்த அந்தக் குழுவால் ஒரு சில உள்கட்டமைப்புகளை மட்டுமே அழிக்க முடிந்தது. இறுதியில் அந்தக் குழுவினர் சப்பானியர்களால் பிடிபட்டனர்.[7] அங்குள்ள உள்கட்டமைப்பு வசதிகள் அழிக்கப்பட்டதால் பொதுமக்கள் மீது சப்பானியர்களின் கடுமையான பழிவாங்கல் நடவடிக்கைகள் தொடங்கின. குறிப்பாக பாலிக்பாப்பான் (Balikpapan) பகுதியில் 80 முதல் 100 இடச்சுக்காரர்கள்; மற்றும் பிரித்தானியர்கள் வரை தூக்கிலிடப்பட்டனர்.[8][9]
சப்பானியர் நிர்வாகம்
[தொகு]

அதன் பின்னர், அரச சப்பானிய இராணுவம் (Imperial Japanese Army), பிரித்தானிய வடக்கு போர்னியோவை நிர்வகித்தது. அரச சப்பானிய கடற்படை (Imperial Japanese Navy), இடச்சு போர்னியோவை நிர்வகித்தது. போர்னியோ தீவில் தற்காப்புக்காக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த பிரித்தானிய இடச்சு படைகள் 1944-ஆம் ஆண்டு நடுப்பகுதி வரையில் மிகக் குறைவாகவே இருந்தன. அதனால்தான் சப்பானிய படைகளை எதிர்கொள்ள இயலவில்லை.[10] சப்பானிய ஊடுருவலின் போது, உள்ளூர் மக்கள் கடுமையான சித்ரவதைகளுக்கு உள்ளாகினர்.
சப்பானியர்களின் போர்னியோ படையெடுப்பினால் பொதுமக்கள்தான் மிகுதியாகப் பாதிக்கப்பட்டன. தாராக்கான் தீவில் ஏராளமான மக்கள் தொழிலாளர்களாக மாற்றப்பட்டனர். பொருளாதாரம் சீர்குலைந்தது; உணவு பற்றாக்குறை அதிக அளவில் அதிகரித்தது. அக்டோபர் 1943-இல், உள்ளூர் தயாக்கு பழங்குடியினர் மற்றும் சீனர்கள் நடத்திய வெளிப்படையான போராட்டம் செசல்டன் கிளர்ச்சி (Jesselton revolt) எனும் வரலாற்று நிகழ்வைத் தொடக்கியது.
இந்தக் கிளர்ச்சி பின்னர் சப்பானியர்களின் முரட்டுத்தனமான வன்முறையால் நசுக்கப்பட்டது; மற்றும் நூற்றுக் கணக்கான பொது மக்கள் தூக்கிலிடப்பட்டனர். மேலும் பலர் நோய்கள் மற்றும் பட்டினியால் இறந்தனர். சப்பானியக் கொள்கைகள் உள்ளூர் மக்கள் மீது வலுக்கட்டாயமாகத் திணிக்கப்பட்டன.[11] அத்துடன் சப்பானியப் படைகள் போர்னியோவை நிருவாகம் செய்தபோது பல படுகொலைகளையும் செய்தன என்றும் அறியப்படுகிறது.[12][13]
பின்விளைவுகள்
[தொகு]
இந்தப் படையெடுப்புக்குப் பிறகு, ஆத்திரேலியப் பணியாளர்கள் 1945-ஆம் ஆண்டு இறுதி வரை போர்னியோவில் இருந்தனர். அரசு நிர்வாகத்தை மீட்டெடுக்கவும்; மறுகட்டமைப்பு முயற்சிகளை மேற்பார்வையிடவும்; சப்பானிய துருப்புக்களின் சரணடைதலை மேற்பார்வையிடவும்; போர்னியோவைச் சுற்றியுள்ள முகாம்களில் அடைக்கப்பட்டிருந்த முன்னாள் நேச நாட்டுப் போர்க் கைதிகளை விடுவிக்கவும்; ஆத்திரேலியப் பணியாளர்கள் அங்கேயே இருந்தனர்.[14]
போருக்குப் பிறகு சரணடைந்த சப்பானியத் துருப்புக்களை படுகொலை செய்ய பியூபோர்ட் அருகே இருந்த ஆத்திரேலியப் படைகள், உள்ளூர்ப் போராளிகளை ஊக்குவித்தன என்றும் கூறப்படுகிறது.
சண்டக்கான் மரண அணிவகுப்பு
[தொகு]சண்டக்கான் மரண அணிவகுப்பு[15] நிகழ்விற்குப் பழிவாங்கும் முறையில் சப்பானியத் துருப்புக்களின் படுகொலை அமைந்ததாகவும் கூறப்படுகிறது.[16] ஏறக்குறைய 6,000 சப்பானிய போர் வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்தக் கூற்றுக்களை ஏற்றுக் கொள்ள எந்த ஆவணச் சான்றுகளும் இல்லை என்று வரலாற்றாசிரியர் ஓய் கீட் கின் (Ooi Keat Gin) கூறுகிறார்.[17] இருப்பினும் அப்படி ஒரு நிகழ்வு நடந்ததாக தயாக்கு பழங்குடி மக்களின் வாய்மொழி கதைகளின் மூலமாகவும் உறுதி செய்யப்படுகிறது.
போர்னியோ போர் போர்க்களத்தில், நேச நாடுகளின் தரப்பில், ஏறக்குறைய 2,100 பேர் உயிர் இழந்தனர்;[3] சப்பானியர் தரப்பில் ஏறக்குறைய 4,700 பேர் உயிர் இழந்தனர்.[4] அத்துடன், கணிசமான அளவிற்கு பொதுமக்களும் கொல்லப்பட்டனர் அல்லது காயம் அடைந்தனர்.[18]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Ooi 2010, ப. 204.
- ↑ Dean 2018.
- ↑ 3.0 3.1 Australian War Memorial London.
- ↑ 4.0 4.1 Bōei Kenshūjo 1966.
- ↑ 5.0 5.1 5.2 Kirby 2004, ப. 221.
- ↑ Shindo 2016, ப. 67.
- ↑ Costello 2009, ப. 166, 189.
- ↑ Costello 2009, ப. 216.
- ↑ Advocate 7 December 1946, ப. 1.
- ↑ Shindo 2016, ப. 67–68.
- ↑ Long 1963, ப. 454.
- ↑ Ooi 2011, ப. 86.
- ↑ Ministry of Defence 1995, ப. 175.
- ↑ Long 1963, ப. 496, 561–563.
- ↑ Tanaka 2017, ப. 27.
- ↑ Dennis 1995, ப. 111.
- ↑ Ooi 2011, ப. 137–138.
- ↑ Hastings & Stanley 2016, ப. 281.
நூல்கள்
[தொகு]- Australian War Memorial London. "Borneo: The End in the Pacific, 1945 [The Battle in Brief]". Australian War Memorial, London. Retrieved 4 October 2019.
- Bōei Kenshūjo (1966). 戦史叢書 [Senshi Sōsho (War History Series)] (in ஜப்பானியம்). Vol. 60. Asagumo Shimbunsha. கணினி நூலகம் 297764445.
- Costello, John (2009) [1981]. The Pacific War 1941–1945. New York: Harper Perennial. ISBN 978-0-68-801620-3.
- Dennis, Peter (1995). The Oxford Companion to Australian Military History. Melbourne, Victoria: Oxford University Press. ISBN 0-19-553227-9.
- Hastings, Tony. "A Wasted Effort? – The RAAF and the Battle for Tarakan – Part 1". Military History & Heritage Victoria. Retrieved 20 October 2019.
- Kirby, S. Woodburn (2004) [1957]. The War Against Japan: Volume I The Loss of Singapore. History of the Second World War. Uckfield, United Kingdom: The Naval & Military Press. ISBN 9781845740603.
- Long, Gavin Merrick (1963). The Final Campaigns. Australia in the War of 1939–1945. Series 1 – Army. Vol. VII. Canberra: Australian War Memorial. கணினி நூலகம் 464094764.
- Long, Gavin (1973). The Six Years War: Australia in the 1939–45 War. Canberra: Australian War Memorial and the Australian Government Publishing Service. ISBN 0-642-99375-0.
- "Massacre at Balikpapan". Advocate (Burnie, Tasmania): p. 1. 7 December 1946. https://trove.nla.gov.au/newspaper/article/69043089.
- Ministry of Defence (1995). War with Japan: The Advance to Japan. H.M. Stationery Office. ISBN 978-0-11-772821-9.
- Ooi, Keat Gin (2010). The Japanese Occupation of Borneo, 1941–45. Routledge. ISBN 978-1-136-96309-4.
- Ooi, Keat Gin (2011). The Japanese Occupation of Borneo, 1941-45. Routledge. ISBN 978-0-415-45663-0.
- Ooi, Keat Gin (2002). "Prelude to Invasion: Covert Operations Before the Re-occupation of Northwest Borneo, 1944–45". Journal of the Australian War Memorial (Canberra: Australian War Memorial) (37). பன்னாட்டுத் தர தொடர் எண்:1327-0141. https://www.awm.gov.au/journal/j37/borneo.asp#84. பார்த்த நாள்: 2 November 2014.
- Shindo, Hiroyuki (2016). "Holding on to the Finish: The Japanese Army in the South and South West Pacific 1944–45". In Dean, Peter J. (ed.). Australia 1944–45: Victory in the Pacific. Port Melbourne, Victoria: Cambridge University Press. pp. 51–76. ISBN 978-1-107-08346-2.
- Tanaka, Yuki (2017). Hidden Horrors: Japanese War Crimes in World War II. Lanham, Maryland: Rowman & Littlefield Publishers. ISBN 978-1-5381-0270-1.
மேலும் காண்க
[தொகு]மேலும் படிக்க
[தொகு]- Horner, David (2016). "Advancing Australia's National Interests: Deciding Australia's War Strategy, 1944–45". In Dean, Peter J. (ed.). Australia 1944–45: Victory in the Pacific. Port Melbourne, Victoria: Cambridge University Press. pp. 9–27. ISBN 978-1-107-08346-2.
- Pratten, Garth (2016b). "'Calling the Tune': Australian and Allied Operations at Balikpapan". In Dean, Peter J. (ed.). Australia 1944–45: Victory in the Pacific. Port Melbourne, Victoria: Cambridge University Press. pp. 320–340. ISBN 978-1-107-08346-2.
வெளி இணைப்புகள்
[தொகு]
பொதுவகத்தில் Category:Borneo campaign (1945) தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.- "Last Battles: The Landings", WW2 Australia
- Borneo campaign at AWM London
- Borneo Campaign at WW2 Database