போர்த்துக்கேய யாழ்ப்பாணத்தின் மீதான கண்டியரசின் படையெடுப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

போர்த்துக்கேய யாழ்ப்பாணத்தின் மீதான கண்டியரசின் படையெடுப்பு என்பது, 1629ல், போர்த்துக்கேயரின் கட்டுப்பாட்டில் இருந்த யாழ்ப்பாணத்தின்மீது கண்டி அரசன் சேனரத்தின் படைகள் மேற்கொண்ட படை நடவடிக்கையைக் குறிக்கும். தொடக்கத்தில் கண்டிப் படைகள் கோட்டை தவிர்ந்த பிற பகுதிகளைத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்திருந்தும், பின்னர் கொழும்பிலிருந்து வந்த போர்த்துக்கேயரின் மீட்புப்படைகள் கண்டிப் படைகளைத் தோல்வியுறச் செய்தன.

பின்னணி[தொகு]

கண்டி இராச்சியத்தில் விக்கிரமபாகுவின் காலத்துக்குப் பின் ஏற்பட்ட வாரிசுரிமைப் போட்டி கண்டி இராச்சியத்தில் போர்த்துக்கேயரின் தலையீட்டைக் கொண்டுவந்தது. கண்டி அரசனை மதம் மாற்றிக் கண்டி இராச்சியத்தையும் தமது கைக்குள் கொண்டுவர முயற்சிசெய்தனர். விமலதர்மசூரியன் என்பவன் போர்த்துக்கேயரின் திட்டங்களை முறியடித்து கண்டியரசைக் கைப்பற்றினான். அப்போதிருந்து கண்டியரசுக்கும் போர்த்துக்கேயருக்கும் அடிக்கடி போர்கள் இடம்பெற்றுவந்தன. விமலதர்மசூரியனுக்குப் பின்னர் சேனரத் அரசனான பின்பும் இதே நிலையே தொடர்ந்தது. 1619 இல் கண்டியரசுக்கு மறைமுக ஆதரவை வழங்கிய யாழ்ப்பாண அரசும் போர்த்துக்கேயரால் கைப்பற்றப்பட்டது. முன்னர் கண்டி இராச்சியம் தென்னிந்தியாவில் இருந்து படைகளையும் ஆயுதங்களையும் யாழ்ப்பாணத்துக்கூடப் பெற்றுவந்தது. 1619ன் பின்னர் இந்த வசதியைக் கண்டி இழந்துவிட்டிருந்தது. கண்டி இராச்சியம் யாழ்ப்பாண இராச்சியத்தின் மீதும் உரிமை கோரியது. இந்த உரிமையை வலுப்படுத்திக் கொள்வதற்காக தஞ்சை நாயக்க மன்னனிடம் பாதுகாப்புக்காக ஒப்படைக்கப்பட்டிருந்த யாழ்ப்பாணத்து இளவரசிகள் இருவரை அழைப்பித்துத் தனது மகன்களான ஊவா இளவரசன் குமாரசிங்கனுக்கும், இரண்டாவது மகன் விஜயபாலவுக்கும் கண்டியரசன் சேனரத் மணம் முடித்துக் கொடுத்திருந்தான்.[1]

அதேவேளை, இந்தியாவிலும் போர்த்துக்கேயரின் ஆட்சிக்குட்பட்ட பகுதிகளில் பலமுனைகளில் எதிரிகளின் பயமுறுத்தல்கள் இருந்தன. இவற்றை வெற்றிகரமாகச் சமாளிப்பதற்கு இலங்கைத் தீவு முழுவதையும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவேண்டிய தேவை போர்த்துக்கேயருக்கு இருந்தது.[2] மட்டக்களப்பை அண்டிய கரையோரப் பகுதிகள் கண்டியரசின் கட்டுப்பாட்டுக்குள் இருந்தன. கண்டி இராச்சியத்தைச் சுற்றிவளைத்துத் தனிமைப்படுத்தும் நோக்கில் மட்டக்களப்பைப் பிடித்து அங்கே ஒரு கோட்டையைக் கட்டும் முயற்சியில் போர்த்துக்கேயர் ஈடுபட்டனர். இதை முறியடிக்க வேண்டிய தேவை கண்டியரசனுக்கு இருந்தது.

இதே வேளையில் போர்த்துக்கேயர் கண்டியின் மீது ஒரு படையெடுப்பையும் தொடங்கியிருந்தனர். இந்த நிலையில், போர்த்துக்கேயரின் கவனத்தைத் திசை திருப்புவது, மட்டக்களப்புக் கோட்டையைக் கைப்பற்றுவது, யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றுவது ஆகிய மூன்று நோக்கங்களை முன்வைத்து மட்டக்களப்பை நோக்கியும், யாழ்ப்பாணத்தை நோக்கியும் இரண்டு பிரிவுகளாகக் கண்டிப் படைகளை அனுப்புவதற்குக் கண்டியரசன் சேனரத் தீர்மானித்தான்.

படையெடுப்பு[தொகு]

கண்டியரசன் சேனரத்தின் உறவினனான அத்தப்பத்து முதலியார் தலைமையிலான படை யாழ்ப்பாணத்தை நோக்கி வந்தது. அத்தப்பத்து முதலியாரையே யாழ்ப்பாணத்தின் ஆளுனனாக கண்டியரசன் நியமித்திருந்தான். இப்படையில் 10,000 இருந்ததாக கேரோசுப் பாதிரியார் குறிப்பிட்டுள்ளார். ஆனால், வேறு மூலங்கள் இது 4,000 வரையில் இருக்கும் என்கின்றன. தஞ்சாவூர் நாயக்க மன்னனும் கண்டி மன்னனுக்கு உதவியாகப் படைகளை அனுப்ப இணங்கியிருந்தான். கண்டிப் படைகள் வருவதை அறிந்து, யாழ்ப்பாண நகருக்கு வெளியே வசித்துவந்த போர்த்துக்கேயர் அனைவரும், தமது வீடு வாசல்களையும், நிலங்களையும், பிற உடைமைகளையும் விட்டுவிட்டு கோட்டைக்குள் அடைக்கலம் புகுந்ததனர். அவ்வாறு செல்லாதிருந்த சிலர் கண்டிப் படைகளால் கொல்லப்பட்டனர். இவ்வாறு கொல்லப்பட்டவர்களுள் கத்தோலிக்கப் பாதிரிமாரும் அடங்குவர். போர்த்துக்கேயரிடம் போதிய படைபலம் இல்லாதிருந்ததால் அவர்கள் கோட்டைக்குள் முடங்கிக் கிடந்தனர். யாழ்ப்பாணக் கோட்டைத் தளபதி லான்சாரோட்டே டெ செயிசாசு எவ்வித எதிப்பையும் காட்ட முடியாதவனாக இருந்தான். ஏறத்தாழ யாழ்ப்பாணக் குடாநாடு முழுவதும் கண்டிப் படைகளின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டன. கோட்டையை முற்றுகை இட்டிருந்த கண்டிப் படைகள் மக்களிடம் வரியும் அறவிடத் தொடங்கியிருந்தனர்.[3]

இலங்கையின் போர்த்துக்கேயத் தலைமைத் தளபதி கான்சுட்டன்டினோ டி சா கண்டியரசின் யாழ்ப்பாணப் படையெடுப்பைப் பற்றிக் கேள்விப்பட்டதும், டொமிங்கோசு கார்வலூ காம் என்பவனின் கீழ், ஏழு கோரளைகளின் திசாவையான லூயிசு தெய்சேயிரா டி மசேடு என்பவனையும் 200 போர்த்துக்கேயப் படைவீரருடனும் சில ஆயிரம் லசுக்காரின்கள் எனப்படும் சிங்களப் படைவீரர்களையும் அவசரமாக யாழ்ப்பாணத்துக்கு அனுப்பினான்.[4] போர்த்துக்கேய மீட்புப்படைகள் யாழ்ப்பாணக் குடாநாட்டை அண்மித்தபோது கண்டிப் படைகள் பச்சிலைப்பள்ளி வெளியில் முகாமிட்டிருந்தன. போர்த்துக்கேயப் படைகள் காம், தெய்சேயிரா, செயிசாசு ஆகியோர் தலைமையில் மூன்று பிரிவுகளாக மும்முனைகளில் கண்டிப் படைகள்மீது தாக்குதல் நடத்துவதென முடிவு செய்யப்பட்டுக் கோட்டைக்குள் இருந்த செயிசாசுக்குத் தகவல் அனுப்பப்பட்டது. தெய்சேயிராவின் படைகள் உள்நாட்டுக்குள் புகுந்து வடக்குப்புறம் இருந்து தாக்குவது எனவும், காம் நீரேரியை நேராகக் கடந்து தெற்குப் பக்கம் இருந்து தாக்குதல் நடத்துவது எனவும், செய்சாசு கோட்டைக்குள் இருந்து வெளியேறி அங்கிருந்து தாக்குவது எனவும் திட்டமிடப்பட்டது. காமிடம் இருந்து சைகை கிடைக்கும் வரை தெய்சேயிரா தாக்குதல் நடத்தக்கூடாது என்றும் உத்தரவிடப்பட்டது. எனினும் திட்டத்துக்கு மாறாக தெய்சேராவின் படைகள் கண்டிப் படைகளின் காவலரண்களுக்கு முகம் கொடுக்கவேண்டி இருந்ததால் அவர்கள் தாக்குதலில் ஈடுபடவேண்டி ஏற்பட்டது. காமின் படைகளும் தாக்குதலில் இணைந்து கொண்டன. செயிசாசின் படைகள் அவ்விடம் வருவதற்கு முன்பே கண்டிப் படைகள் முறியடிக்கப்பட்டன. தஞ்சாவூர்ப் படைகள் மன்னாரில் இறங்குவதற்கு முன்பே கண்டிப் படைகள் தோல்வியுற்றன. தஞ்சாவூர்ப் படைகளும் மன்னாரில் போர்த்துக்கேயரால் தோற்கடிக்கப்பட்டன.[5]

விளைவுகள்[தொகு]

போரில் கண்டித் தளபதி அத்தப்பத்து பிடிக்கப்பட்டுத் தலை வெட்டிக் கொல்லப்பட்டான். அவனது தலை ஈட்டி முனையில் குத்திக் காட்சிக்கு வைக்கப்பட்டது. ஏராளமானோர் கைதிகளாகப் பிடிபட்டனர். இவர்கள் கொடூரமான தண்டனைகளுக்கு உள்ளானார்கள். பலர் குத்திக் கொல்லப்பட்டனர். வேறு பலர் கோடரியால் வெட்டிக் கொல்லப்பட்டனர்.[6] யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் இப்படையெடுப்பில் கலந்துகொள்ளாததால் அவர்கள் எவ்வித தண்டனைக்கும் உள்ளாகவில்லை. ஆனாலும் அவர்களது தலைவர்கள் போர்த்துக்கேயருக்கு அடங்கி நடப்பதற்கான உறுதிமொழியை மீண்டும் எடுக்கவேண்டியதாயிற்று. இரண்டு நாட்களுக்குப் பின்னர் போர்த்துக்கேயப் படைகள் மீண்டும் கொழும்புக்குத் திரும்பின.

மேற்கோள்கள்[தொகு]

  1. Cosme, O. M. da Silva., Fidelgos in the Kingdom of Jafanapatam, Harwoods Publishers, Colombo, 1994. p.30
  2. கிருஷ்ணராஜா, செ., இலங்கை வரலாறு, பாகம் 2, பிறைநிலா வெளியீடு, கோண்டாவில், 2005, பக். 112, 113.
  3. Cosme, O. M. da Silva., 1994. p. 33.
  4. Cosme, O. M. da Silva., 1994. p. 33.
  5. Cosme, O. M. da Silva., 1994. p. 33.
  6. Pieris, Paul. E., Ceylon the Portuguese Era, Vol Two, Tisara Prakasakayo, Dehiwala, 1983. p. 177