உள்ளடக்கத்துக்குச் செல்

போயாங் ஏரி

ஆள்கூறுகள்: 29°05′N 116°17′E / 29.083°N 116.283°E / 29.083; 116.283
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
போயாங் ஏரி
போயாங் ஏரியின் செயற்கைக்கோள் படம்
அமைவிடம்ஜியாங்சி, சீனா
ஆள்கூறுகள்29°05′N 116°17′E / 29.083°N 116.283°E / 29.083; 116.283[1]
முதன்மை வரத்துஐந்து ஆறுகள், முதன்மையாக கான் மற்றும் சியூ ஆறுகள்
வடிநிலப் பரப்பு162,225 சதுர கிலோமீட்டர்கள் (62,635 sq mi)[2]
வடிநில நாடுகள்சீனா
அதிகபட்ச நீளம்170 கிலோமீட்டர்கள் (110 mi)
அதிகபட்ச அகலம்17 கிலோமீட்டர்கள் (11 mi)
மேற்பரப்பளவு3,210 சதுர கிலோமீட்டர்கள் (1,240 sq mi)[1]
சராசரி ஆழம்8.4 மீட்டர்கள் (28 அடி)[1]
அதிகபட்ச ஆழம்25.1 மீட்டர்கள் (82 அடி)[1]
நீர்க் கனவளவு25.2 கன சதுர கிலோமீட்டர்கள் (6.0 cu mi)[1]
நீர்தங்கு நேரம்0.173 years[1]
கரை நீளம்11,200 கிலோமீட்டர்கள் (750 mi)[1]
கடல்மட்டத்திலிருந்து உயரம்16.5 மீட்டர்கள் (54 அடி)[1]
அலுவல் பெயர்Poyanghu
தெரியப்பட்டது31 March 1992
உசாவு எண்550[3]
1 கரை நீளம் என்பது சரியாக வரையறுக்கப்பட்ட அளவீடு அன்று.
போயாங் ஏரி is located in சீனா
போயாங் ஏரி
போயாங் ஏரி
சீனாவின் நிலவரைபடத்தில் போயாங் ஏரி

போயாங் ஏரி (Lake Poyang, சீனம்: 鄱阳湖/鄱陽湖பின்யின்: Póyáng Hú, கான்: Po-yong U), சீனாவின் ஜியாங்சி மாகாணத்தில் அமைந்துள்ள மிகப்பெரிய நன்னீர் ஏரியாகும்.[4] இந்த ஏரி யாங்சி ஆற்றுடன் கால்வாய் மூலம் இணைக்கப்பட்டுள்ள கான், சின் மற்றும் சியூ ஆறுகளிலிருந்து நீரைப்பெறுகின்றது.

போயாங் ஏரியின் பரப்பளவு ஈரமான மற்றும் வறண்ட காலங்களுக்கிடையில் பெருமளவில் மாறுபடுகிறது, ஆனால் அண்மைய ஆண்டுகளில் ஏரியின் அளவு ஒட்டுமொத்தமாக குறைந்து வருகிறது. ஒரு இயல்பான ஆண்டில் ஏரி சராசரியாக 3,500 சதுர கிலோமீட்டர் (1,400 சதுர மைல்) பரப்பளவைக் கொண்டுள்ளது. 2012 ஆம் ஆண்டின் முற்பகுதியில், வறட்சி, மணல் அள்ளுதல் மற்றும் மூன்று ஆழ்பள்ளத்தாக்கு அணையில் தண்ணீரை சேமிக்கும் நடைமுறை போன்ற காரணங்களால் ஏரியின் பரப்பளவு சுமார் 200 சதுர கிலோமீட்டர் (77 சதுர மைல்) என்ற குறைவான அளவை எட்டியது.[5] இந்த ஏரி ஐநூறாயிரம் புலம்பெயர் பறவைகளின் வாழ்விடமாகவும் பறவை நோக்கல் மற்றும் வளர்த்தலுக்கு மிகவும் ஏற்ற இடமாகவும் விளங்குகின்றது[6]

குளிர்காலத்தில், இந்த ஏரி பல புலம்பெயர்ந்த சைபீரியக் கொக்குகளின் இருப்பிடமாகத் திகழ்கின்றது, அக்கொக்குகளில் 90% வரை குளிர்காலத்தை அங்கேயே கழிக்கின்றன.

உருவாக்கம்[தொகு]

வரலாற்றில் போயாங் ஏரி, பெங்லி ஏரி (彭蠡澤) என்றும் அழைக்கப்பட்டுவந்துள்ளது, எனினும் அவை இரண்டும் ஒன்றல்ல. ஹான் அரசமரபிற்கு முன்னர், யாங்சி ஆறு இக்காலத்தில் லோங்கான் என்றழைக்கப்படும் ஏரியின் வழியாக இப்போதிருக்கும் பாதையை விட மிகவும் வடக்குப்புறமானப் பாதையைப் பின்பற்றியது, அதே நேரத்தில் பெங்லி சதுப்புநிலம் கான் ஆற்றின் கீழ்ப்பகுதிகளில் அமைந்திருந்தது. இப்போது போயாங் ஏரியாக இருக்கும் பகுதி, கான் ஆற்றின் அருகே ஒரு சமவெளியாக இருந்தது. கி.பி 400 இல், யாங்சி ஆறு அதன் முந்தைய பாதையை மாற்றிக் கொண்டு தென்புறப்பாதைக்குத் திரும்பியது, இதனால் கான் ஆறு பின்னோக்கித் தள்ளப்பட்டு போயாங் ஏரியை உருவாக்கியது. கான் ஆற்றின் பின்னோக்கிய தேக்கல், போயாங் மற்றும் ஹைஹூன் மாவட்டங்களை மூழ்கடித்து, அங்கிருந்த மக்களை இக்காலத்தில் யோங்சியூ என்றழைக்கப்படும் மாவட்டத்தின் ஊச்செங் நகரியத்திற்கு பெருமளவில் இடம்பெயரச்செய்தது. இவ்வாறு ஊச்செங் நகரம், ஜியாங்சி மாகாணத்தின் மிகப் பெரிய பழங்கால நகரங்களில் ஒன்றாக ஆனது. இந்த இடம்பெயர்வு "ஹைஹூன் மாவட்டத்தை மூழ்கச்செய்து ஊச்செங் நகரியத்தை உயரச்செய்தல்" (சீன: 淹了海昏縣,出了吳城鎮) என்ற சொற்றொடர் உருவாகக் காரணமானது.

டாங் அரசமரபின் போது போயாங் ஏரி அதன் மிகப்பெரிய அளவான 6,000 சதுர கிலோமீட்டர்களை (2,300 சதுர மைல்) எட்டியது.

சுற்றுச்சூழல் பிரச்சனைகள்[தொகு]

போயாங் ஏரி அணையின் இருப்பிடம், யாங்சி ஆற்றின் நடு மற்றும் கீழ்நிலைப்பகுதி வடிகால் வரைபடம்

வனவிலங்குகளின் இழப்பு[தொகு]

2002 முதல் இந்த ஏரியில் மீன்பிடிக்கத் தடை உள்ளது. 2007 ஆம் ஆண்டில், இந்த ஏரியையும், டோங்டிங் ஏரி போன்ற அருகிலிருக்கும் நீர்நிலைகளையும் தாயகமாகக் கொண்ட, உள்நாட்டில் ஜியாங்சு ("ஆற்றுப்பன்றி") என அழைக்கப்படும் சீனாவின் துடுப்பற்ற கடற்பன்றி, பைஜீ எனப்படும் யாங்சி ஆற்று டால்பின்களைப் போல அழிந்துபோகக்கூடும் என்று அஞ்சப்பட்டது. எஞ்சியிருந்த சுமார் 1,400 கடற்பன்றிகளைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்க அழைப்பு விடுக்கப்பட்டது. அவற்றில் யாங்சி ஆற்றில் 700 முதல் 900 வரையும் எஞ்சியுள்ள சுமார் 500 போயாங் மற்றும் டோங்டிங் ஏரிகளிலும் இருந்தன. 2007 ஆண்டின் கடற்பன்றிகளின் எண்ணிக்கை 1997 ஆண்டளவின் பாதிக்கும் குறைவாக இருந்தது, மேலும் கடற்பன்றிகளின் தொகை ஆண்டுக்கு 7.3 சதவீத வீதத்தில் குறைந்து வருகிறது.

கடந்த சில ஆண்டுகளாக மணல் அகழ்வு உள்ளூர் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய காரணியாக மாறியுள்ளது, இது போயாங் ஏரியின் எல்லையில் அமைந்துள்ள பகுதியின் வருவாய்க்கான முக்கிய ஆதாரமாகும். அதே நேரத்தில், அதிக அடர்த்தி கொண்ட மணல் அகழ்வுத் திட்டங்கள் உள்ளூர் வனவிலங்குகளின் இறப்பிற்கு முக்கிய காரணமாக இருந்துவருகின்றன. மணல் அகழ்வு ஏரியின் நீரை கலங்கச்செய்கிறது, இதனால் கடற்பன்றிகளால் முன்புபோல் வெகுதூரம் பார்க்க முடிவதில்லை, எனவே தடைகளைத் தவிர்ப்பதற்கும், உணவைத் தேடுவதற்கும் அவை மிகவும் மேம்பட்ட ஒலியலை அமைப்புகளைச் சார்ந்திருக்க வேண்டியுள்ளது. பெரிய கப்பல்கள் இந்தஏரிக்கு ஒரு நிமிடத்திற்கு இரண்டு என்ற விகிதத்தில் நுழைந்து வெளியேறுகின்றன, இத்தகைய அதீதக்கப்பல் அடர்த்தியால் கடற்பன்றிகள் தங்கள் உணவு இருக்குமிடத்தை கேட்டறிவதில் தடங்கலுற்று இருக்கின்றன, மேலும் ஒரு கரையிலிருந்து மற்றொரு கரைக்கு சுதந்திரமாக அவற்றால் நீந்தவும் முடிவதில்லை.[7]

ஜியாங்சி அரசால் முன்மொழியப்பட்ட போயாங் ஏரி அணை கட்டுமானம் மீதமுள்ள கடற்பன்றிகளுக்கும் பேரழிவான விளைவுகளை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.[8]

ஏரிப்பரப்புச் சுருக்கம்[தொகு]

யாங்சி ஆற்றில் மேற்புறம் கட்டப்பட்டுள்ள மூன்று ஆழ்பள்ளத்தாக்கு அணையால், போயாங் ஏரி ஆண்டின் சில பகுதிகளில் சுருங்கி வறண்டு போகும்.

2016 ஆம் ஆண்டில், ஏரி கிட்டத்தட்ட முற்றிலும் வறண்டு போனது. பொதுவாக 3,500 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் மூழ்கியிருக்கும் இந்த ஏரிப்பகுதி, அக்டோபரில் 200 சதுர கிலோமீட்டர் நிலம் மட்டுமே நீருக்கடியில் மூழ்கியிருந்தது, குளிர்காலப் பயன்பாட்டிற்கென மூன்று ஆழ்பள்ளத்தாக்கு அணையில் தேக்கப்படும் நீரும், அந்த வேளையில் ஏற்பட்ட வறட்சியும் இந்த ஏரி சுருங்கியதற்கான காரணமெனச் சுட்டப்பட்டது.[5]

ஏரியின் நீர்மட்டத்தை பராமரிக்கும் நோக்கில் ஏரிக்கும் யாங்சி ஆற்றுக்கும் இடையிலான தொடர்புக்குக் குறுக்கே ஒரு மதகைக் கட்டமைத்து போயாங் ஏரி அணையைக் கட்ட, ஜியாங்சி உள்ளூர் அரசு முன்மொழிந்தது. இத்திட்டத்திற்கான சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு நிலுவையில் உள்ளது. விஞ்ஞானிகளும், இயற்கைக்கான உலகளாவிய நிதியம் போன்ற சுற்றுச்சூழல் ஆர்வக்குழுக்களும் இந்த திட்டத்தின் மூலம் செயற்கையாக நிலைநிறுத்தப்டும் நீரளவினால் இந்த ஏரிப்பகுதியின் உயிர்ச்சூழல் பன்முகத்தன்மை கடுமையாக பாதிக்கப்படும் என்று விமர்சித்துள்ளன.[9]

வரலாற்றில்[தொகு]

1363 ஆம் ஆண்டில், மிங் அரசமரபு உருவாக வழிவகுத்த போயாங் ஏரிப் போர் இங்கு நடைபெற்றது, இது வரலாற்றில் மிகப்பெரிய கடற்படைப் போர் என்று கூறப்படுகிறது.

இந்த ஏரி சீனாவின் பெர்முடா முக்கோணம் என்றும் விவரிக்கப்பட்டுகின்றது. இதில் பயணம் செய்யும்போது பல கப்பல்கள் மறைந்து போயுள்ளன. ஏப்ரல் 16, 1945 இல், இருநூறு மாலுமிகளுடன் ஜப்பானிய ஆளுகையின் கீழிருந்த சீனப்பகுதியிலிருந்து கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களுடன் பயணித்த ஜப்பானியப் பேரரசின் கடற்படைக் கப்பல் எந்தவொரு தடயமும் இல்லாமல் மறைந்தது.[10]

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 1.7 "Poyang Lake". World Lake Database. International Lake Environment Committee Foundation. 1999. Archived from the original on 8 ஜூலை 2018. பார்க்கப்பட்ட நாள் 6 January 2017. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. Ding, Duowen; Tan, Xueqing (2011). "Numerical Simulation of the Effects of the Urbanization on the Poyang Wetland". In Kenneth W. Potter, Donald K. Frevert (ed.). Watershed Management 2010. American Society of Civil Engineers. p. 444. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7844-1143-8.
  3. "Poyanghu". Ramsar Sites Information Service. பார்க்கப்பட்ட நாள் 25 April 2018.
  4. http://english.people.com.cn/200202/21/eng20020221_90777.shtml People's Daily Online "Spring Fishing Ban on China's Largest Freshwater Lake"
  5. 5.0 5.1 Thibault, Harold (2012-01-31). "China's largest freshwater lake dries up" (in en-GB). The Guardian. https://www.theguardian.com/environment/2012/jan/31/china-freshwater-lake-dries-up. 
  6. Detailed Data Lake Poyang-hu. Global Nature Fund.
  7. Kejia Z. (2007). Poyang Lake saving the finless porpoise. Chinadialogue.net. Retrieved on 28 September 2017
  8. Chen, S. (24 September 2017). "Water scheme threatens Yangtze River porpoises with extinction, scientist warns". South China Morning Post. https://www.scmp.com/news/china/society/article/2112556/water-scheme-threatens-yangtze-river-porpoises-extinction. பார்த்த நாள்: 29 December 2018. 
  9. Ives, Mike (29 December 2016). "As China’s Largest Freshwater Lake Shrinks, a Solution Faces Criticism". New York Times. https://www.nytimes.com/2016/12/28/world/asia/china-lake-poyang-finless-porpoise.html?_r=0. பார்த்த நாள்: 29 December 2016. 
  10. "China’s Poyang Lake: 'Bermuda Triangle of the East'". The Epoch Times. 30 October 2010 இம் மூலத்தில் இருந்து 27 ஜூலை 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150727021001/http://www.theepochtimes.com/n2/science/chinas-poyang-lake-bermuda-triangle-of-the-east-45091.html. 

வெளியிணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
போயாங் ஏரி
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=போயாங்_ஏரி&oldid=3565796" இலிருந்து மீள்விக்கப்பட்டது