உள்ளடக்கத்துக்குச் செல்

போகராஜூ பட்டாபி சீத்தாராமையா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

போகராஜு பட்டாபி சீதாராமையா (Bhogaraju Pattabhi Sitaramayya) (பிறப்பு:1880 நவம்பர் 18 - இறப்பு:1959 டிசம்பர் 17) [1] [2] இவர் ஆந்திர மாநிலத்தில் ஒரு இந்திய சுதந்திர ஆர்வலராகவும், அரசியல் தலைவராகவும் இருந்தார்.  

கல்வி

[தொகு]

ஆந்திராவில் கிருட்டிணா மாவட்டத்தில் (இப்போது மேற்கு கோதாவரி மாவட்டத்தின் ஒரு பகுதி) குண்டுகோலனு கிராமத்தில் பிறந்த பட்டாபி மதிப்புமிக்க சென்னை கிறித்துவக் கல்லூரியில் பட்டம் பெற்றார். மருத்துவப் பட்டம் பெற்றதன் மூலம் மருத்துவ பயிற்சியாளராக வேண்டும் என்ற தனது லட்சியத்தை நிறைவேற்றினார். கிருட்டிணா மாவட்டத்தின் தலைமையகம் மற்றும் ஆந்திராவின் அரசியல் மையமான கடலோர நகரமான மச்சிலிபட்டணத்தில் மருத்துவராக தனது பயிற்சியைத் தொடங்கினார். சுதந்திர போராட்ட இயக்கத்தில் சேர தனது இலாபகரமான தொழிலை விட்டுவிட்டார்.

1912-13 ஆண்டுகளில், ஆந்திராவிற்கு ஒரு தனி மாகாணத்தை உருவாக்க விரும்புவது குறித்து பெரும் சர்ச்சை ஏற்பட்டபோது, மொழியியல் மாகாணங்களை உடனடியாக உருவாக்க வேண்டியதன் அவசியத்தை விளக்கி "தி இந்து" மற்றும் பிற பத்திரிகைகளில் பல கட்டுரைகளை எழுதினார்.

காங்கிரசு கட்சியில்

[தொகு]

1916 இல் நடந்த காங்கிரசின் இலக்னோ அமர்வில், ஆந்திராவிற்கு தனி காங்கிரசு வட்டம் அமைக்கக் கோரினார். இந்த கோரிக்கையை மகாத்மா காந்தி எதிர்த்தார், ஆனால் பால கங்காதர திலக் பட்டாபியை ஆதரித்ததால், ஆந்திர காங்கிரசு குழு 1918 இல் நடைமுறைக்கு வந்தது. இவர் பல ஆண்டுகளாக காங்கிரசின் செயற்குழு உறுப்பினராகவும், 1937–40ல் ஆந்திர மாகாண காங்கிரசு குழுவின் தலைவராகவும் இருந்தார்.

1939 திரிபுரா அமர்வில் நேதாஜி சுபாஷ் சந்திரபோசுக்கு எதிராக மோகன்தாசு காந்திக்கு மிக நெருக்கமான வேட்பாளராக இந்திய தேசிய காங்கிரசு தலைவர் பதவிக்கு இவர் போட்டியிட்டார். நேதாஜி பிரபலமடைந்து வருவதாலும், சுதந்திர இந்தியாவில் எதிர்கால தெலுங்கு மாநிலத்தில் தமிழ் பெரும்பான்மை மாவட்டங்களை சேர்ப்பதற்கு பட்டாபி ஆதரவளிப்பார் என்ற நம்பிக்கையினாலும் இவர் தோல்வியடைந்தார்.

சுதந்திர போராட்டத்தில்

[தொகு]

1942 ஆம் ஆண்டில் வெள்ளையனே வெளியேறு இந்தியா இயக்கம் தொடங்கப்பட்டபோது காங்கிரசின் செயற்குழுவில் பணியாற்றிய பட்டாபி கைது செய்யப்பட்டு மகாராட்டிராவின் அகமதுநகரில் உள்ள கோட்டையில் வெளி தொடர்பு இல்லாமல் மூன்று ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நேரத்தில் இவர் சிறைவாசத்தின் போது அன்றாட வாழ்க்கையின் விரிவான நாட்குறிப்பை எழுதிவந்தார். இது பின்னர் இறகுகள் மற்றும் கற்கள் என்ற பெயரில் வெளியிடப்பட்டது. இராஜேந்திர பிரசாத் கொடுத்த அறிமுகக் குறிப்புடன் 1935 இல் வெளியிடப்பட்ட காங்கிரசின் வரலாறு என்ற நூலைஇவர் எழுதியுள்ளார். இவரது மற்றொரு பிரபலமான வெளியீடு காந்தி மற்றும் காந்தியம் எனற நூலாகும் .

காங்கிரதுத் தலைவராக

[தொகு]

இவர் 1948 இல் காங்கிரசு தலைவர் பதவிக்கு போட்டியிட்டு இந்தியப் பிரதம மந்திரி ஜவகர்லால் நேருவின் ஆதரவுடன் வென்றார். அவர் ஜே.வி.பி கமிட்டியில் (ஜவஹர்லால் நேரு, வல்லபாய் படேல் மற்றும் பட்டாபி) உறுப்பினராக இருந்தார். இது மொழியியல் அடிப்படையில் மாநிலங்களை மறுசீரமைப்பதை முறையாக நிராகரித்தது. ஆனால் பொட்டி சிறீராமுலுவின் 56 நாள் உண்ணாவிரதத்திற்குப் பிறகு சென்னை நகரம் இல்லாமல் ஆந்திர மாநிலம் அமைந்தது. இதற்கு முன்னர் இவர் அரசியலமைப்பு சபையில் உறுப்பினராக பணியாற்றினார்.

வங்கி நிறுவனராக

[தொகு]

1952 இல் இவர் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். பட்டாபி 1952 முதல் 1957 வரை மத்திய பிரதேச ஆளுநராகவும் பணியாற்றினார். 1923 ஆம் ஆண்டு நவம்பர் 28 ஆம் தேதி மச்சிலிபட்டணத்தில் ஆந்திர வங்கியை நிறுவினார். இது தற்போது இந்தியாவின் முக்கிய வணிக வங்கிகளில் ஒன்றாகும். அதன் தற்போதைய தலைமையகம் ஐதராபாத்தில் அமைந்துள்ளது. ஆந்திர வங்கியின் தலைமை அலுவலகம், "பட்டாபி பவன்" என்ற இவரது பெயரிடப்பட்டது. கிருட்டிணா மாவட்டத்தில் கிருட்டிணா மாவட்ட கூட்டுறவு வங்கியான பாக்யலட்சுமி வங்கியையும் ஆந்திர காப்பீட்டு நிறுவனத்தையும் தொடங்கினார். 2019 ஆகஸ்ட் 29, அன்று இந்திய அரசு அறிவித்தபடி, ஆந்திர வங்கியானது யூனியன் வங்கி மற்றும் கார்ப்பரேஷன் வங்கியுடன் இணைக்கப்பட்டு அதன் பிரத்யேக அடையாளத்தை இழக்கிறது.

குறிப்புகள்

[தொகு]
  1. "Dr Pattabhi Sitaraimayya". congresssandesh.com. Archived from the original on 1 March 2007. பார்க்கப்பட்ட நாள் 6 March 2006.
  2. other sources give birth date as 24 November 1888:

வெளி இணைப்புகள்

[தொகு]