பொருளியல் தரவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பொருளியல் தரவு (Economic Data) என்பது, குறித்த ஒரு பொருளாதாரம் அல்லது அனைத்துலகப் பொருளாதாரம் முழுவதற்குமான அல்லது அதன் ஒரு பகுதிக்கான, பொதுவாக எண்சார்ந்ததும், காலம்சார் தொடர், ஆக அமைவதுமான தரவுத் தொகுதி (ஒரு காலப் பகுதியைக் கருத்தில் கொள்வது) ஆகும். இவை காலம்சார் தொடராக அமையும் போது தரவுத் தொகுதிகள் பொதுவாக மாத அடிப்படையில் அமையும், ஆனால் காலாண்டு, ஆண்டு அடிப்படையிலும் அமைவது உண்டு. தரவுகளை, மேலும் பகுப்பாய்வு செய்யும் வசதிக்காகத் தேவைக்கு ஏற்பப் பல விதமாகச் சரிப்படுத்திக் கொள்வது உண்டு. மிகப் பொதுவாக பருவகால ஏற்ற இறக்கங்களைச் சரிப்படுத்துவதற்காகவே இவ்வாறு செய்வர்.


பொருளியல் தரவுகள் மாறிகளுக்கு இடையிலான செயல்பாடுகளையோ ஊடு தொடர்புகளையோ விளக்குவனவாகவும் அமையக் கூடும் என்பதுடன், [இங்கே தொடர்புகள் உண்மைத் தகவல்களை அடிப்படையாகக் கொண்டிராமல், கோட்பாட்டு அடிப்படையிலானவை ஆக இருக்கக்கூடும் (எகா. ஒரு உற்பத்திச் செயல்பாடு)], இவை இயங்கியல் தொடர்புகளையன்றி நிலைத்த தொடர்புகளையும் விளக்கக்கூடும்.


ஆயிரக்கணக்கான தரவுத் தொகுதிகள் உள்ளன. ஒரு பொருளாதார மட்டத்தில், இவை தேசியக் கணக்கு வைப்புகளைப் பயன்படுத்தித் தொகுக்கப்படுகின்றன. இவ்வாறான தரவுகள் மொத்தத் தேசிய உற்பத்தி, மொத்தத் தேசியச் செலவினம், மொத்தத் தேசிய வருமானம், மற்றும் தொடர்களான வெளியிடுகை, ஆணைகள், வணிகம், நம்பிக்கை, விலைகள் மற்றும் நிதிசார் தொடர்கள் (எகா., பணம் மற்றும் வட்டி வீதம்) போன்ற முக்கிய கூறுகளை உள்ளடக்குகின்றன.. அனைத்துலக மட்டத்தில் பன்னாட்டு வணிகம், அனைத்துலக நிதிசார் ஓட்டங்கள், நேரடி முதலீட்டு ஓட்டங்கள் (நாடுகளுக்கு இடையில்) மற்றும் நாணய மாற்று வீதம் என்பவை உள்ளிட்ட பல தொடர்கள் உள்ளன.


ஒரு நாட்டுக்குள் பொதுவாக, ஒன்று அல்லது பல புள்ளியியல் அமைப்புக்கள் தரவுத் தொடர்களை உருவாக்குகின்றன, எகா., ஒரு அரசு அல்லது அரசு சார்பு நிறுவனம், மத்திய வங்கி என்பவற்றுள் ஒன்று அல்லது பல தரவுகளை உருவாக்கலாம். அனைத்துலகப் புள்ளி விபரங்களை அனைத்துலக நாணய நிதியம், பன்னாட்டு ஏற்பாடுகளுக்கான வங்கி போன்ற பல பன்னாட்டு அமைப்புக்களும் நிறுவனங்களும் உருவாக்குகின்றன..


தரவுகளைப் பகுப்பாய்வு செய்வதற்குப் பல வழிமுறைகள் உள்ளன. இவை பல் தொடர்புப்போக்குப் பகுப்பாய்வு, பாக்சு-செங்கின்சு பகுப்பாய்வு, பருவம்சார் பகுப்பாய்வு போன்ற முறைகளைப் பயன்படுத்தும் காலத்தொடர்ப் பகுப்பாய்வுகளை உள்ளடக்குகின்றன. பகுப்பாய்வு, ஒருமாறிப் பகுப்பாய்வு (ஒரு தொடரைப் பயன்படுத்தி எதிர்வு கூறல்) ஆகவோ பல்மாறிப் (பல தொடர்களைப் பயன்படுத்தி எதிர்வுகூறல்) பகுப்பாய்வு ஆகவோ இருக்கலாம். பொருளியலாளர், பொருளளவையியலாளர், நிதியியல் வல்லுனர்கள் போன்றோர், பொருளாதார வளர்ச்சிகளை மாதிரியாக்கம் செய்வதற்காக; மூலப் பொருளியல் தரவுகள், சரிசெய்த பொருளியல் தரவுகள், அவர்கள் மதிப்பீடு செய்த தொடர்புகள் என்பவற்றை உள்ளடக்கிய சிக்கலான மாதிரிகளை உருவாக்குகின்றனர். இம்மாதிரிகள், பொருளாதாரத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் ஆராயும் பகுதி மாதிரியாக்கம் ஆகவோ, முழுப் பொருளாதார முறைமையையும் தழுவி அமைவதுடன், கேள்வி, விலைகள் வேலைவாய்ப்புப் போன்றவற்றை எதிர்வுகூறும் மாதிரிகளாகவோ அமையலாம்.

பொருளியல் தரவுப் பிரச்சினைகள்[தொகு]

செயற்றிறன் மிக்க பருவினப் பொருளியல் மேலாண்மைக்கு நல்ல பொருளியல் தரவுகள் இன்றியமையாதன. தற்காலப் பொருளாதாரங்களின் சிக்கல் தன்மை, பருவினப் பொருளாதாரக் கொள்கை முறைகளில் இயல்பாகவே காணப்படும் தேக்கநிலை என்பவை காரணமாக ஒரு நாடு அதன் பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய பாதகமான போக்குக்களை உடனே கண்டறிந்து அதனைச் சமாளிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது மிகவும் அவசியம். முழுமையானதும், துல்லியமானதும், சரியான நேரத்தில் கிடைப்பதுமான பொருளியல் தரவுகள் இல்லாவிட்டால் இதனைச் செய்ய முடியாது.


நல்ல பொருளியல் தரவுகள் கிடைப்பது வெளிநாட்டு முதலீடுகளுக்கு வாய்ப்பான இடமாக அமைவதற்குரிய ஒரு குறிகாட்டியாக வெளிநாட்டுச் சந்தைகளில் பார்க்கும் நிலைமை அதிகரித்து வருகின்றது. ஒரு நாடு தனது அலுவல்களைத் திறமையாக மேலாண்மை செய்வதற்கு நல்ல பொருளியல் தரவுகள் அவசியம் என்பதை அனைத்துலக முதலீட்டாளர்கள் அறிந்துள்ளனர். அதனால், பிற விடயங்கள் ஒத்திருக்கும் போது நல்ல பொருளியல் தரவுகளை வெளியிடாத நாடுகளை அவர்கள் தவிர்க்கவே முற்படுவர்.


உடனுக்குடன் இற்றைப்படுத்துபவையும், நம்பத்தகுந்தவையுமான பொருளியல் தரவுகள் பொதுவில் கிடைக்கக் கூடியதாக இருப்பது, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பொருளாதார நிலைமைகளைக் கண்காணித்துத் தமது முதலீட்டுத் தீவாய்ப்புகளை மேலாண்மை செய்வதற்கு உதவுகின்றது. மெக்சிக்கோவிலும், ஆசிய நாடுகள் பலவற்றிலும் அரசுகள் முக்கியமான பொருளியல் தரவுகளைப் பிழையாக அல்லது தாமதமாக வெளியிடுவதன் மூலம் தமது நாடுகளில் இடம்பெறும் பொருளாதாரச் சீர்குலைவுகளை மறைக்கின்றனர் என வெளிநாட்டு முதலீட்டாளர்கள் கருதியதால், அந் நாடுகளின் பொருளாதார நெருக்கடிகள் மேலும் தீவிரமாகின. எந்த அளவுக்குப் பொருளாதாரம் சீர் கெட்டுள்ளது என்று அறிய முடியாத நிலையில் தமது முதலீடுகளை அவர்கள் விரைவாகத் திரும்பப் பெற்றுக் கொண்டதால் குறித்த பொருளாதாரங்களில் மேலும் சிக்கல்கள் உருவாகின. அனைத்துலக அளவிலான இந்த நிதி நெருக்கடியினால் விளைந்த சேதங்களுக்குப் பின்னணியில் தரவுகள் தொடர்பான பிரச்சினைகள் இருப்பதை உணர்ந்து கொண்டதனால், அனைத்துலக நாணய நிதியத்தின் பொதுத் தரவுகள் வெளிப்படுத்தல் முறைமை போன்ற தரப்பாடுகள் உருவாக்கப்பட்டன[1][2].


நாடுகளுக்கு உள்ளே பொருளியல் தரவுகள் பொதுவாகக் கிடைப்பது, நிறுவனங்களும் தனிநபர்களும் தமது வணிகத் தீர்மானங்களை நாட்டின் பருவினப் பொருளியல் சூழலைப் புரிந்து கொண்ட நம்பிக்கையுடன் எடுப்பதற்கு உதவுகிறது. உள்நாட்டு வணிகத் துறையினர் நாட்டின் பொருளாதாரச் சூழலை நன்கு புரிந்து கொண்டால், அனைத்துலக முதலீட்டாளர்களைப்போல் சிறிய கெட்ட செய்திகளுக்கே அளவுக்கு அதிகமாக எதிர்ச் செயலாற்ற மாட்டார்கள்.


மேலும் பார்க்க[தொகு]

தொடர்பான தலைப்புகள்[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. http://dsbb.imf.org அனைத்துலக நாணய நிதியம், வெளிப்பாட்டுத் தரப்பாடுகள் Bulletin Board
  2. http://dsbb.imf.org/Applications/web/gdds/gddshome/ அனைத்துலக நாணய நிதியம், பொதுத் தரவுகள் வெளிப்பாட்டு முறைமை (GDDS)


வெளி இணைப்புகள்[தொகு]

நாடுகள்[தொகு]


மைய வங்கிகள்[தொகு]


தொகுக்கப்பட்ட தரவுகள் வழங்குவோர்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பொருளியல்_தரவு&oldid=2176326" இருந்து மீள்விக்கப்பட்டது