பொன் குருவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பொன் குருவி[தொகு]

பொன் குருவி

மாம்பழக் குருவி எனவும் அழைக்கப்படும். குங்குமப் பூச்சிட்டும் இதுவும் ஒரே குடும்பத்தைச் சார்ந்த வெவ்வேறு இனங்கள். இது பெரிக்ரோக்கோட்டஸ் பிளாம்மியஸ் (Pericrocotus Flammeus) என்னும் இனம். சாதாரணமாக கொண்டைக் குருவி அளவிலிருக்கும் சிறிய பறவை.

அமைப்பு[தொகு]

பகட்டான நிறத்தைக் கொண்டிருக்கும். ஆண் பறவை மேற்புறம் கருமையாகவும் அடிப்பக்கம் ஆழ்ந்த சிவப்புமாக இருக்கும். பெண் மேற்புறம் சாம்பலும் அடிப்பக்கம் மஞ்சளுமாக இருக்கும். சில இனங்களிலே இந்த நிறங்கள் ஆழமாகவும், சிலவற்றில் லேசாகவும் இருக்கும். இந்த குருவிகளெல்லாம் கீச்சாங் குருவிக்கு நெருங்கியவை. இவற்றைச் செங்கீச்சான் குருவிகள் (Red Shrikes) என்றும், மினிவெட்டுக்கள் (Minivets) என்றும் ஆங்கிலப் பறவையிலாளர் சொல்வர்.

செங்கீச்சான்கள்[தொகு]

இந்தியாவிலும், இலங்கையிலும், மலேசியாவிலும், அதைச் சேர்ந்த தீவுகளிலும் வாழ்கின்றன. சாதாரணமாக அடர்ந்த காடுகளில் மரங்களிலேயே வசிப்பவை. இலைகளிலும் கிளைகளிலும் சிறு பூச்சிகளைத் தேடிப்பிடித்து தின்னும். ஐந்தாறு பறவைகள் சேர்ந்த சிறு கூட்டங்களாக உலவும். மரத்தின் உச்சிக்கிளைகளில் அடிக்கடி சேர்ந்திருக்கும். ஆண்கள் எந்நேரமும் ஒலித்துக்கொண்டே இருக்கும்.

பொன் குருவி வாழிடம்[தொகு]

மேற்குத் தொடர்ச்சி மலை நெடுகிலும் வாழ்கிறது. கொடைக்கானலிலும் நீலகிரியில் சாதாரணமாகக் காணலாம். இது இலங்கையிலும் உண்டு. கேரளாவில் மிகுதியாக உண்டு. ஆண் பறவைகளும் பெண் பறவைகளும் வெவ்வேறாகப் பிரிந்து 4,5 அடங்கிய சிறு கூடங்களாக உலவும். இங்குமங்கும் துள்ளிக் குதித்துக்கொண்டு இலையிலும் கிளையிலும் சிறு பூச்சிகளை உண்டு திரியும். சில சமயம் பறந்து செல்லும் பூச்சிகளையும் தாவி பறந்து பிடிக்கும்.

இனப்பெருக்கம்[தொகு]

மிக மெல்லியனான மரக்கொம்புகளை அல்லது மிக மெல்லிய வேர்களைக் கொண்டு உயரமான மரக்கிளைகளில் ஆழமில்லாத கிண்ணம் போன்ற சிறு கூடு கட்டும். கூட்டின் வெளியே கற்பாசியைக் கொண்டு போர்த்தி வைக்கும். ஒரு தடவைக்கு இரு முட்டைகள் இடும். முட்டை வெளுப்பான கடற்பச்சை அல்லது சாம்பல் பச்சை நிறமாக இருக்கும். நீலகிரியிலே ஜூன் முதல் செப்டம்பர் வரையில் முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கும்.

[1] [2] [3]

  1. கலைக்களஞ்சியம் தொகுதி ஏழு
  2. BirdLife International (2012). "Pericrocotus flammeus". IUCN Red List of Threatened Species. Version 2012.1. International Union for Conservation of Nature. Retrieved 16 July 2012.
  3. BirdLife International (2012). "Lanius collurio". IUCN Red List of Threatened Species. Version 2013.2. International Union for Conservation of Nature. Retrieved 26 November 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பொன்_குருவி&oldid=2446342" இருந்து மீள்விக்கப்பட்டது