கலைச்சொல்லியற் பொதுக் கோட்பாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பொதுக் கலைச்சொல்லியற் கோட்பாடு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
கலைச்சொல்லியற் பொதுக் கோட்பாட்டின் உருவாக்கத்துக்கு அடிப்படைகளை வழங்கிய யூஜீன் வூசுட்டர்

கலைச்சொல்லியற் பொதுக் கோட்பாடு என்பது, கலைச்சொல்லியல் துறை சார்ந்த ஒரு கோட்பாடு ஆகும். 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கப் பகுதியில் யூஜின் வூசுட்டரின் ஆய்வுப் பெறுபேறுகளை அடிப்படையாகக் கொண்டு இந்தக் கோட்பாடு உருவானது. வூசுட்டருக்குப் பின்னர் அவரைப் பின்பற்றுபவர்கள் இதை மேலும் விரிவாக்கியுள்ளனர். பல கலைச்சொல்லியல் வல்லுனர்களும், இதோடு தொடர்புடைய பிற துறைகளைச் சார்ந்தோரும் இக் கோட்பாடு குறித்துப் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்துள்ளனர். இவர்களுட் சிலர் இது ஒரு முறையான கோட்பாடு அல்ல என்கின்றனர்.[1]

தோற்றப் பின்னணி[தொகு]

ஒரு மின் பொறியாளரும், ஒரு தொழிலதிபருமான யூஜின் வூசுட்டர், தகவல் அறிவியலில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். அத்துடன், தொழிற்றுறைத் தொடர்பாடல்களில் ஐயத்துக்கு இடமற்ற துல்லியத் தன்மையைப் பேணவேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தி வந்தார். இதை முன்னிறுத்தி, 1969 ஆம் ஆண்டில் பிரெஞ்சு, ஆங்கில மொழிகளை உள்ளடக்கிய அடிப்படைக் கருத்துருக்களுக்கான அகரமுதலி ஒன்றை உருவாக்கினார். இயந்திரக் கருவிகள் தொடர்பான இவ்வகரமுதலி ஒரு மாதிரித் திட்டமாக உருவாக்கப்பட்டது. இப்பணியின் போது பெற்ற அனுபவங்களையும், அவரது ஆய்வுகளையும் அடிப்படையாகக் கொண்டு கலைச்சொல்லியல் தொடர்பான பல கருத்துக்களை அவர் முன்வைத்தார்.[2] தரப்படுத்துவதன் மூலம் கலைச்சொற்கள் தொடர்பில் ஐயப்பாட்டுத் தன்மையை நீக்கி அவற்றைச் செயற்றிறன் மிக்க தகவல்தொடர்புக் கருவிகளாக்குவது அவரது முக்கியமான நோக்கங்களில் ஒன்று. இதையும் தொடர்புள்ள பிற நோக்கங்களையும் அடைவதற்காகக் கலைச்சொற்களை விளக்குவதற்கும் அவற்றைப் பதிவு செய்வதற்கும் உதவக்கூடிய தரப்படுத்திய பன்னாட்டுக் கொள்கைகளை உருவாக்குவதிலும் ஈடுபட்டார். இவ்விடயங்கள் குறித்து வூசுட்டர் ஏராளமாக எழுதியுள்ளார் எனினும், இவரது காலத்தில் இவரது கொள்கைகள் ஒரு கோட்பாடாக முன்வைக்கப்படவில்லை. இவரது இறப்புக்குப் பின்னர் இவரது விரிவுரைகளை அடிப்படையாகக் கொண்டு "கலைச்சொல்லியலுக்கும், கலைச்சொல் தொகுப்புக்குமான பொதுக் கொள்கைகள்" என்னும் தலைப்பிலான நூல் ஒன்று செருமன் மொழியில் வெளியிடப்பட்டது. இதில் அடங்கியுள்ள கொள்கைகளே பின்னர் "கலைச்சொல்லியற் பொதுக் கோட்பாடு" என அழைக்கப்பட்டன.[3]

அடிப்படைகள்[தொகு]

பின்வரும் ஐந்து விடயங்கள் கலைச்சொல்லியல் பொதுக் கோட்பாட்டின் அடிப்படைகளாகக் கொள்ளப்படுகின்றன:[4]

  1. கருத்துருக்கள் கலைச்சொற்களுக்கு முற்பட்டவை எனக் கொள்ளல். இதனால் கலைச்சொல்லியல் வழிமுறைகள் கருத்துருவில் தொடங்கி கலைச்சொல்லுக்கு வருகின்றன.
  2. கருத்துருக்கள் தெளிவானவை எனவும், கருத்துருத் தொகுதியில் ஒவ்வொரு கருத்துருவுக்கும் ஒரிடம் உண்டு எனவும் கொள்ளல்.
  3. கருத்துருக்கள் மரபுவழியான வரைவிலக்கணங்கள் மூலம் வரையறுக்கப்படுதல்.
  4. ஒவ்வொரு கருத்துருவுக்கும் ஒரு நிலையான கலைச்சொல் ஒதுக்கப்படுவதாகக் கொள்ளல்.
  5. கலைச்சொல்லும் கருத்துருவும் ஒரேநேரத்தில் ஆய்வு செய்யப்படல்.

இக்கோட்பாட்டின்படி, கலைச்சொல்லியலின் முக்கியமான கூறு கருத்துரு. கருத்துரு ஏற்கெனவே உள்ளது, எல்லா மொழிகளுக்கும் இது பொதுவானது என்பது இக்கோட்பாட்டின் நிலைப்பாடு. அதாவது, கருத்துருவானது பண்பாட்டு வேறுபாடுகளில் தங்கியிராத உலகப்பண்பு கொண்டது என்ற அடிப்படையிலேயே இக் கோட்பாடு உருவாக்கப்பட்டது. கருத்துருக்களைத் தெளிவாக வரையறுக்க முடியும் என்றும், அவ்வாறான கருத்துருக்களுக்கு வழங்கப்படும் பெயர்களே கலைச்சொற்கள் என்றும் இக்கோட்பாடு கூறுகிறது. கலைச்சொல்லியலின் கலைச்சொல்-கருத்துரு இணை, மொழியியலின் சொல்-சொற்பொருள் இணையைப் போன்றது. இவ்விரண்டிலுமே வடிவம்-உள்ளடக்கம் என்ற வகையில் இவ்விணைகள் அமைந்துள்ளன. ஆனாலும் இவ்விணைகள் இரண்டும் ஒன்றுக்கொன்று சமமானவை அல்ல என்பதைப் பொதுக் கோட்பாட்டை ஆதரிப்பவர்கள் வலியுறுத்துகின்றனர். பொதுவான சொற்களைப் போலன்றிக் கருத்துருக்களைக் குறிப்பதற்காகக் கலைச்சொற்கள் திட்டமிட்டு உருவாக்கப்படுகின்றன என்கின்றனர். சொற்களுக்குப் புறம்பாகச் சொற்பொருள் தனித்து இருக்க முடியாது என்றும், இதற்குமாறாகக் கருத்துரு கலைச்சொல்லில் தங்கியிராமல் தனியே இருப்பது என்றும் பொதுக் கோட்பாடு கூறுகிறது. வடிவத்தில் (சொல்) இருந்து தொடங்கி அதற்கான உள்ளடக்கத்தைக் (பொருள்) காண விழையும் அகரமுதலியியலின் வழிமுறைகளுக்கு மாறாக உள்ளடக்கத்தில் (கருத்துரு) இருந்து வடிவத்துக்குச் (கலைச்சொல்) செல்வதே பொதுக் கோட்பாட்டின் வழிமுறையாக உள்ளது.

பொதுக் கோட்பாட்டின் ஒவ்வொரு கருத்துருவுக்கும் ஒரு நிலையான கலைச்சொல் என்னும் நிலைப்பாடு, ஒரு கலைச்சொல் ஒரு கருத்துரு, ஒரு கருத்துரு ஒரு கலைச்சொல் என்பதைக் குறிக்கிறது. இதன் மூலம் இக்கோட்பாடு, பல கருத்துருக்களைக் குறிக்கும் ஒரு கலைச்சொல்லுக்கோ, பல கலைச்சொற்கள் ஒரு கருத்துருவைக் குறிப்பதற்கோ இடமளிக்கவில்லை.[5]

கலைச்சொல் தவிர்ந்த, சொற்றொடர்கள், தொடரமைப்பு போன்ற மொழியியற் கூறுகள் கலைச்சொல்லியலுக்குத் தேவையற்றவை என்பது கலைச்சொல்லியற் பொதுக் கோட்பாட்டின் கருத்து.

விமர்சனங்கள்[தொகு]

மொழியியல், உளவியல், சமூகவியல், மெய்யியல் போன்ற பல்வேறு கோணங்களில் இருந்து இக்கோட்பாட்டுக்குப் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. ஒரு கோட்பாடு அறிவியல் வழிமுறைகளைக் கையாண்டு உருவாக்கப்பட வேண்டும் எனவும், இது அவ்வாறு உருவாக்கப் படவில்லை என்பதும் பொதுவான குற்றச்சாட்டு. பன்மொழிச் சூழலில் மயக்கமற்ற தொடர்பாடலுக்கு வசதியாகக் கலைச்சொற்கள் எப்படி இருக்க வேண்டும் அதன் உருவாக்க வழிமுறைகள் எப்படி அமைய வேண்டும் என்ற அடிப்படையிலேயே வூசுட்டர் அவரது கொள்கைகளை முன்வைத்தாரேயன்றி கலைச்சொற்களும், அவற்றின் உருவாக்க வழிமுறைகளும் உண்மையில் எப்படி இருக்கின்றன என்பதை மையமாக வைத்து அல்ல என்பது இக்கொள்கையை விமர்சிப்பவர்களது கருத்து.[6] பொதுக் கோட்பாடு, அடைய விரும்பும் நோக்கங்களையும், அறிவியலுக்கு அடிப்படையாக அமைய வேண்டிய உண்மை நிலையையும் ஒன்றாக்கிக் குழப்பிக் கொள்வதாகவும், நோக்கங்களை, உண்மைநிலையின் மட்டத்துக்கு உயர்த்துவதன் மூலம், விருப்பத்தை, உண்மையாகக் காட்ட முயல்வதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.[7] ஒரு கருத்துருவுக்கு ஒரு சொல்தான் இருக்க வேண்டும் என்பது இக் கோட்பாட்டின் விருப்பத்துக்கு உரியதாக இருக்கிறதேயல்லாமல், உண்மை அதுவல்ல. ஒரு கருத்துரு பல கலைச்சொற்கள், பல கருத்துருக்கள் ஒரு கலைச்சொல் போன்ற நிலைமைகள் பொதுவானவை என்றும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

பிற்கால வளர்ச்சி[தொகு]

இக்கோட்பாட்டை ஆதரிப்பவர்கள், வூசுட்டுக்குப் பின்னர் வந்தவர்களின் குறிப்பிடத்தக்க பங்களிப்புக் காரணமாக, பொதுக் கோட்பாடு வளர்ச்சி பெற்றுள்ளது என்றும், அதன் குறைபாடுகள் பெருமளவுக்கு அகற்றப்பட்டிருப்பதாகவும் கூறுகின்றனர். இவ்வாறான வளர்ச்சிகள் பின்வருவனவற்றையும் உள்ளடக்குகின்றன:

  • கலைச்சொற்களைப் பன்னாட்டளவில் தரப்படுத்தும் நோக்கம், கலைச்சொல்லாக்கத்தை மொழித் திட்டமிடலின் ஒரு பகுதியாகக் கருதுவதன் மூலம் விரிவாக்கப்பட்டுள்ளது.
  • கட்டுப்படுத்தப்பட்ட அளவில் ஒரு பொருள் பல சொற்கள் அனுமதிக்கப்படுகின்றன (எனினும் தரப்படுத்தல் நோக்கங்களுக்காக இது தவிர்க்கப்பட வேண்டும் என பரிந்துரைக்கப்படுகிறது).
  • சொற்றொடரியல் (Phraseology) கலைச்சொல்லாக்கக் கூறுகள் தொடர்பான ஆய்வுகளில் சேர்த்துக்கொள்ளப்படுகிறது.
  • கலைச்சொல் உருவாக்க வழிமுறைகள் குறித்த விளக்கத்தை அறிமுகப்படுத்தியதன் மூலம் இக்கோட்பாடு இயங்குதன்மை உடையதாக மாறியுள்ளது.
  • படிநிலை சாராத ஒழுங்கமைக்கப்பட்ட கருத்துரு அமைப்புக்களும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

ஆனாலும், இது போதுமானது அல்ல என்பதே பல ஆய்வாளர்களது கருத்தாக உள்ளது.

குறிப்புகள்[தொகு]

  1. Packeiser, Kirsten., 2009. பக். 7.
  2. Cabré, M. Teresa., 2003. பக். 165.
  3. Cabré, M. Teresa., 2003. பக். 166.
  4. Temmerman, Rita., 2000. பக். 4.
  5. Temmerman, Rita., 2000. பக். 10.
  6. Cabré, M. Teresa., 2003. பக். 167.
  7. Temmerman, Rita., 2000. பக். 15.

உசாத்துணைகள்[தொகு]

  • செல்லப்பன், இராதா., கலைச்சொல்லாக்கம், அறிவுப் பதிப்பகம், சென்னை, 2006.
  • Cabré, M. Teresa., Theories of terminology - Their description, prescription and explanation, Terminology 9:2 (2003), 163–199.
  • Packeiser, Kirsten., The General Theory of Terminology: A Literature Review and a Critical discussion, International Business Communication Copenhagen Business School, 2009.
  • Temmerman, Rita., Towards New Ways of Terminology Description: The Sociocognitive-approach, John Benjamin North America., Philadelphia, 2000.
  • Terminology Science and Research, Journal of the International Institute for Terminology Research, Vol. 14(2003), Termnet Publisher.