பொசுபரசின் பிறதிருப்பங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பொசுபரசின் நான்கு பிரதான பிறதிருப்பங்கள்.

பொசுபரசு பல பிறதிருப்பங்களில் உள்ளது. இவற்றுள் வெள்ளை மற்றும் சிவப்பு பொசுபரசுகளே இலகுவில் தயாரிக்கப்படக்கூடியன. கறுப்பு மற்றும் ஊதா பொசுபரசுகளும் உள்ளன. இரட்டை பொசுபரசு மூலக்கூறுகளாலான பொசுபரசு வகையும் உள்ளது.

வெள்ளை பொசுபரசிலிருந்து தயாரிக்கப்படும் பிறதிருப்பங்கள்.

வெண் பொசுபரசு[தொகு]

இது வெண் பொசுபரசின் இரசாயனம் பற்றியது. இதன் ஆயுதப் பயன்பாடுக்கு வெண் பொசுபரசு (ஆயுதம்) கட்டுரையைப் பார்க்கவும்

வெண் பொசுபரசு

நான்முகி வடிவ மூலக்கூற்றுக் கட்டமைப்புடைய பொசுபரசின் பிறதிருப்பமே வெண் பொசுபரசாகும் (P4). இதில் ஆறு தனித்தனியான P–P பிணைப்புகள் உள்ளன. வெண் பொசுபரசை வளியில் திறந்து வைத்தால் சிறிது மஞ்சள் நிறமாக மாறும். இருட்டில் மெல்லிய பச்சை நிறமாக ஒளிரும். வளியில் தானாக எரியக்கூடியது. எனவே இது அதிகளவில் ஆயுதமாகப் பயன்படுகின்றது. இது விஷமானதுமாகும். இதனை உட்கொண்டால் ஈரல் பாதிப்படையும். இது நீரில் சிறிதளவே கரையுமென்பதால் இதனை நீரினடியில் சேமித்து வைக்கலாம். இதனை பென்சீன், கார்பன் இருசல்பைட்டு, சல்பர் குளோரைட்டு மற்றும் எண்ணைகளில் கரைக்கலாம்.

உற்பத்தியும் பயன்பாடும்[தொகு]

வெண் பொசுபரசைப் பல்வேறு முறைகளில் உற்பத்தி செய்யலாமென்றாலும், பொஸ்பேட்டுப் பாறையை உலையில் கார்பன் மற்றும் சிலிக்காவுடன் வெப்பமேற்றிப் பெறும் முறையே தொழில் ரீதியாகப் பயன்படுத்தப்படுகின்றது. இம்முறையில் உருவாக்கப்படும் பொசுபரசை பொசுபோரிக் அமிலத்தில் கரைப்பதன் மூலம் பெற்றுக் கொள்ளலாம். பொஸ்பேட்டுப் பாறையின் பிரதான கூறான கல்சியம் பொஸ்பேட்டோடு கார்பன் நடத்தும் தாக்கத்தை இங்கு நோக்கலாம்

2 Ca3(PO4)2 + 8 C → P4 + 8 CO2 + 6 Ca
வெண் பொசுபரசு மூலக்கூறு

வெண் பொசுபரசு 50 °C வெப்பநிலையில் தானாக எரியக்கூடியது. தூளாக்கப்பட்ட வெண் பொசுபரசு சாதாரண வெப்பநிலையிலேயே எரிபற்றும் இயல்புடையது. இதன்போது பொசுபரசு(V)ஒக்சைட்டு தோன்றும்.

P
4
+ 5 O
2
P
4
O
10

இத்தோற்றப்பாடால் இது ஆயுதமாகப் பயன்படுத்தப்படுகின்றது.

பொசுபரசின் ஒக்சைட்டு நீருறிஞ்சும் இயல்புடையது. சொற்பளவு நீரையும் உறிஞ்சி பொஸ்போரிக் அமிலத்தை (ஒரு மென்னமிலம்) உருவாக்கும். எனவே இரசாயனப் பரிசோதனைகளின் போது கட்டமைப்பிலுள்ள அனைத்து நீரையும் அகற்ற பொசுபரசின் ஒக்சைட்டு பயன்படுகின்றது.

சிவப்பு பொசுபரசு[தொகு]

சிவப்பு பொசுபரசு
சிவப்பு பொசுபரசின் சாலகக் கட்டமைப்பு

வெண் பொசுபரசை 250 °C (482 °F) வெப்பநிலையில் வெப்பமேற்றுவதாலோ, சூரிய ஒளியில் வைப்பதாலோ (ஒக்சிசன் அற்ற சூழ்நிலையிலேயே இவ்விரு செயன்முறைகளும் செய்யப்பட வேண்டும்) சிவப்பு பொசுபரசு உருவாக்கப்படும். மேலும் வெப்பமேற்றினால் சிவப்பு பொசுபரசு பளிங்காகும். இவ்வாறு உருவாக்கப்பட்ட சிவப்பு பொசுபரசு 240 °C வரை வெப்பமேற்றினாலும் எரியாது. எனினும் பளிங்கல்லாமல் தூளாக்கப்பட்ட சிவப்பு பொசுபரசு சாதாரண வெப்பநிலையிலும் தீப்பற்றக்கூடும்.

ஊதா பொசுபரசு[தொகு]

வலப்பக்கத்தில் ஊதா பொசுபரசு, இடப்பக்கத்தில் சிவப்பு பொசுபரசு
ஊதா பொசுபரசின் சாலகக் கட்டமைப்பு
ஊதா பொசுபரசின் சாலகக் கட்டமைப்பு

வெண் பொசுபரசை 500 °Cயில் உருக்கப்பட்ட ஈயத்தில் கரைத்து 18 மணித்தியாலம் அவ்வெப்பநிலையைப் பேணுவதன் மூலம் ஊதா பொசுபரசு தயாரிக்கப்படும். ஈயத்தை நைத்ரிக் அமிலத்தில் கரைப்பதனால் ஊதா பொசுபரசை வேறாக்கியெடுக்கலாம். ஊதா பொசுபரசு 300 °C வெப்பநிலை மட்டும் எரியாது.

கறுப்பு பொசுபரசு[தொகு]

கறுப்பு பொசுபரசு
கறுப்பு பொசுபரசின் சாலகக் கட்டமைப்பு

இது சாதாரண சூழ்நிலையில் மிகவும் நிலைப்புத் தன்மை வாய்ந்த பொசுபரசின் பிறதிருப்பமாகும். வெண் பொசுபரசை 12000 மடங்கு வளிமண்டல அமுக்கத்தில் வெப்பமேற்றுவதனால் கறுப்பு பொசுபரசு உருவாக்கப்படும். இதன் சாலகக் கட்டமைப்பு காரீயத்தின் சாலகக் கட்டமைப்பை ஒத்திருக்கும். காரீயத்தைப் போலவே கறுப்பு பொசுபரசும் ஒரு மின் கடத்தியாகும்.

இரட்டை பொசுபரசு[தொகு]

இரட்டை பொசுபரசின் மூலக்கூற்றுக் கட்டமைப்பு
இரட்டை பொசுபரசின் மூலக்கூற்றுக் கட்டமைப்பு

இது சாதாரண சூழ்நிலையில் நிலைப்புத்தன்மையற்ற பிறதிருப்பமாகும். இது 1200 °C தொடக்கம் 2000 °C இடையிலான வெப்பநிலை வீச்சிலேயே நிலைப்புத் தன்மையோடிருக்கும். வெண் பொசுபரசை 1100 கெல்வின் வெப்பநிலைக்கும் சூடாக்குவதால் இரட்டை பொசுபரசு (P2) உருவாக்கப்படும்.