பொங்கல் (முதியோர் கல்வி மடல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பொங்கல்
நூல் பெயர்:பொங்கல்
வகை:கட்டுரை
துறை:முதியோர்கல்வி
இடம்:சென்னை
மொழி:தமிழ்
பக்கங்கள்:8
பதிப்பகர்:பொதுக்கல்வி இயக்குநர், சென்னை
பதிப்பு:1958
ஆக்க அனுமதி:தமிழ்நாடு பொதுக்கல்வித் துறை

பொங்கல் என்னும் முதியோர் கல்வி மடலானது புதிதாக எழுத்தறிவு பெற்ற முதியோருக்காக வே. தில்லைநாயகம் என்பவரால் எழுதப்பட்டது. 1955-56ஆம் கல்வியாண்டில் கோயமுத்தூர் நகரின் பீளமேடு பகுதியில், பி. எசு. சி. அறக்கட்டளையின் உதவியோடு, நடந்த முதியோர் இலக்கியப் பட்டறையில் இம்மடல் உருவாக்கப்பட்டது.[1]

1958ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் தமிழ்நாடு பொதுக்கல்வி இயக்குநரால் வெளியிடப்பட்டது. காடு, தோட்டம், வயல், பொங்கல் என்னும் தலைப்புகளில் நான்கு சிறுகட்டுரைகளைக் கொண்டது இம்மடல்.

காடு[தொகு]

ஆடிப் பட்டம் தேடி விதைத்தேன்.
அவரை மொச்சை காட்டில் போட்டேன்.
துவரைப் பயிரும் துணையாய்ப் போட்டேன்.
பயிர் முளைத்தது, பசுமை கண்டது.
ஆவணி வந்தது, மழையும் பெய்தது.
அதனால் எல்லாம் நன்றாய் விளைந்தது.
விளைந்த பலனை வீட்டில் சேர்த்தேன்.
பசி தீர்ந்த்து, பணமும் வந்தது.

மேலே கண்ட எட்டு அடிகளைக்கொண்டது காடு என்னும் முதற்கட்டுரை.

தோட்டம்[தொகு]

அதோ பார் எங்கள் தோட்டம்.
சுற்றி இலுப்பை மரங்கள் உள்ளன.
மாமரம் ஐந்து நடுவில் உள்ளன.
ஒன்பது தென்னை ஓரம் உள்ளன.
பெரிய கிணறு நடுவில் உள்ளது.
நீர் இறைத்தேன், நன்றாய் வளர்ந்தன.
பாடு பட்டேன், பலன் கண்டேன்.
செல்வம் சேர்ந்தது, ஈகை வளர்ந்தது.
மக்கள் யாவரும் மகிழ்ந்து வாழ்த்தினர்.

மேலே கண்ட ஒன்பது அடிகளைக்கொண்டது தோட்டம் என்னும் இரண்டாம் கட்டுரை.

வயல்[தொகு]

ஊர் அருகில் எங்கள் வயல்.
உழவு மாடு இரண்டு உண்டு.
நன்கு உழுது நாற்று நட்டேன்.
நீர்ப் பாய்ச்சி எரு போட்டேன்.
களை எடுத்துக் கண்போல் காத்தேன்.
கதிர் விட்டு மணி விளைந்தது.
களத்தில் நெல் அடித்துக் குவித்தேன்.
காசு வந்தது, கவலை பறந்தது.

மேலே கண்ட எட்டு அடிகளைக்கொண்டது வயல் என்னும் மூன்றாவது கட்டுரை.

பொங்கல்[தொகு]

தை மாதம் பொங்கல் வந்தது.
மங்கலப் பொங்கல் எங்கும் உண்டு.
பொங்கல் வைத்துச் சூரியனை வணங்கினோம்.
உழைப்பின் பயனை உண்டு களித்தோம்.
மக்களுக்கு உழைத்த மாட்டைப் போற்றினோம்.
மனைவி, மக்கள் யாவரும் மகிழ்ந்தோம்.
உழைப்பு உயரும் உண்மை கண்டோம்.
வாழ்க பொங்கல், வாழ்க வையம்.

மேலே கண்ட எட்டு அடிகளைக்கொண்டது பொங்கல் என்னும் இறுதிக் கட்டுரை.

சான்றடைவு[தொகு]

  1. சுந்தரவடிவேலு நெ.து., நினைவு அலைகள் – தன்வரலாறு – மூன்றாம் பகுதி, 1988 திசம்பர், பக்.139, வானதி பதிப்பகம், சென்னை

வெளி இணைப்பு[தொகு]

பொங்கல் என்னும் இச்சுவடியின் எண்மப்படி (Digitl Copy)