பொங்கல் வாழ்த்து அட்டை
பொங்கல் வாழ்த்து அட்டை (pongal card) என்பது தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் விழாவைக் கொண்டாடுவதற்காக வழங்கப்படும் அல்லது அனுப்பப்படும் வாழ்த்து அட்டை ஆகும்.[1] கணினிமயமாக்களின் வருகையும் இணையம் மற்றும் சமூக ஊடகங்களின் அறிமுகமும் பொங்கல் வாழ்த்து செய்திகளை அனுப்ப மின்னணு பொங்கல் அட்டைகள் அல்லது முகநூல் இடுகைகளைப் பயன்படுத்துவது வழக்கத்திற்கு வந்து, அஞ்சலில் வாழ்த்து அட்டை அனுப்பும் பழக்கம் அருகிவிட்டது.
வரலாறு
[தொகு]1930களில் பெ. தூரனும் அவர்களது நண்பர்களும் ஒரு விவாதத்தின்போது கிறித்துமசு வாழ்த்து அட்டைகள், மடல்கள் போல பொங்களுக்கும் வாழ்த்து அனுப்பும் பழக்கத்தைக் கொண்டுவரவேண்டும் என்ற யோசனை எழுந்தது. அதில் மாற்றுக் கருத்துகளும் உருவானதால், விரும்பியவர்கள் மட்டும் அவ்வாறு அனுப்பலாம் என்று முடிவானது.
பெ. தூரன் பனையோலைக் குருத்துளை அழகாக நறுக்கி அதில் வண்ண மை கொண்டு கலைவேலைப்பாடுடன் வாழ்த்துச் சொற்களை எழுதி திருவிக, கல்கி, கா. நமச்சிவாயம் போன்ற பல ஆளுமைகளுக்கு அனுப்பினார். இந்த புதுமையான வாழ்த்து மடலை அறிஞர்கள் பலரும் வரவேற்றனர். தமிழர் அனைவரும் பொங்களுக்கு வாழ்த்துகளை அனுப்பவேண்டும் என்று திருவிக நவசக்தி இதழில் வேண்டுகோள் விடுத்தார்.[2] அதற்கு பல தமிழறிஞர்கள் ஆதரவு அளித்தனர். இதற்குப் பிறகு பலர் உள்ளூரில் உள்ள ஒளிப்படக் கலைஞர்கள், ஓவியர்களைக் கொண்டு பொங்கள் வாழ்த்து அட்டைகளை உருவாக்கி அனுப்பத் துவங்கினர். அதன் பிறகு பொங்கல் வாழ்த்து அட்டை அனுப்பும் பழக்கம் தமிழரிடையே விரைவாக பரவியது.
பொங்கல் வாழ்த்து அனுப்பும் பழக்கம் பரவத் தொடங்கிய நிலையில் மதுரை கீழ ஆவணி மூல வீதியில் இருந்த கலைமகள் புத்தக நிறுவனர் ஆர் நடராசன் இதழ்கள், திரைப்படப் பதாகைகளுக்கு ஓவியங்களை வரைந்து கொண்டிருந்த ஓவியர் கே. மாதவன் என்பவரைக் கொண்டு தமிழர் வாழ்வை சித்தரிக்கும் ஓவியங்களை வரையவைத்து பொங்கள் வாழ்த்து அட்டைகளை அச்சிட்டு அறிமுகப்படுத்தினார்.[3] அவை தமிழரிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன. அதன் பிறகு விதவிதமான பொங்கள் வாழ்த்து அட்டைகள் விற்பனைக்கு வந்தன.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ கலாப்ரியா (2026-01-15). "பொங்கும் மங்கலம் எங்கும் தங்குக! | பாற்கடல் 48". Hindu Tamil Thisai. Retrieved 2026-08-25.
- ↑ "பொங்கலோ பொங்கல்..." தினமணி. 2012-01-21. Retrieved 2025-01-18.
- ↑ "பொங்கல் வாழ்த்து வந்த கதை". Hindu Tamil Thisai. 2025-01-14. Retrieved 2025-01-18.