உள்ளடக்கத்துக்குச் செல்

பைல் போர்த்தொடர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பைல் போர்த்தொடர் (Phyle Campaign) என்பது பண்டைய ஏதென்சில் நடந்த ஒரு உள்நாட்டுப் போராகும். பெலோபொன்னேசியன் போரில் எசுபார்த்தாவிடம் ஏதென்சு தோல்வியுற்றது. இதையடுத்து ஏதென்சில் இருந்த சனநாயக ஆட்சியை நீக்கி சிலவர் ஆட்சியை எசுபார்த்தா திணித்ததது. அதன் ஒரு விளைவே (பார்க்க முப்பது கொடுங்கோலர்கள் ) இப்போர்களாகும். இப்போர் இறுதியில் ஏதெனியன் சனநாயகத்தை மீட்டெடுப்பதில் முடிந்தது.

முன்னுரை

[தொகு]

முப்பது கொடுங்கோலர்களுக்கு நிதி பற்றாக்குறை இருந்தது. இதனால் அவர்களின் அரசியல் பார்வையோடும் பணக்கார ஏதெனியர்களை துன்புறுத்தினர். [1] இதனால் பலர் எசுபார்த்தாவின் செல்வாக்கையும் மீறி போயோட்டியா மற்றும் கொரிந்துக்கு தப்பிச் சென்றனர். [2]

போர்த்தொடர்

[தொகு]
பைல் போர்த்தொடரின் போது பைலைக் காட்டும் வரைபடம்

ஏதென்சை ஆண்ட முப்பது கொடுங்கோலர்கள் ஏதென்சின் எல்லையில் உள்ள கோட்டைகளை எசுபார்த்தாவின் மேல் உள்ள நம்பிக்கையாலும், பணப் பற்றாக்குறையின் காரணமாகவும் காவலர்களை வைக்காமல் விட்டுவிட்டனர். இதன் காரணமாக ஏதென்சில் இருந்து நாடுகடத்தப்பட்டு தீப்சில் தஞ்சமடைந்திருந்த சனநாயகவாதிகள் ஒரு படையாக திரண்டு கிமு 404/403 இல் பைல் [1] கோட்டையை எளிதாக கைப்பற்றிக் கொண்டனர். [3] நாடுகடத்தப்பட்டவர்களில் கிளர்ச்சியாளர்கள் ஆரம்பத்தில் சுமார் 70 பேர் மட்டுமே இருந்தனர். அவர்களின் தலைவராக மிதவாத சனநாயகவாதியாக நற்பெயரைக் கொண்டிருந்த திராசிபுலஸ் இருந்தார். அவர் முப்பது சர்வாதிகாரிகளை எதிர்த்த அனைத்து சனநாயக ஆதரவாளர்களையும் திறமையோடு ஒன்றிணைத்தார். [3] ஏதெனியன் குதிரைப்படை மற்றும் எசுபார்த்தன்களின் ஒரு படை பைலுக்கு எதிராக அனுப்பப்பட்டது. ஆனால் இரண்டு முறை நடந்த பைல் போரில் திராசிபுலஸ் தலைமையிலான சனநாயக வாதிகள் அவர்களைத் தோற்கடித்தனர். பின்னர் திராசிபுலஸ் தலைமையிலான படையினர் அணிவகுத்து பிரேயஸ் துறைமுகத்தைக் கைப்பற்ற சென்றனர். அப்போது நடந்த முனிச்சியா போரில் முப்பது கொடுங்கோலர்கள் அனுப்பிய படையை தோற்கடித்து துறைமுகத்தைக் கைப்பற்றினர்.

எசுபார்த்தா முதலில் லைசாந்தரை கூலிப்படையுடன் அனுப்பியது. அதன் நோக்கம் முப்பது சர்வாதிகாரிகளின் அதிகாரத்தை மீட்டெடுப்பதே ஆகும். [1] பின்னர் மிக விரைவாக, எசுபார்த்தா பெலோபொன்னேசியன் கூட்டணியின் படையுடன் மன்னர் பௌசானியாசை அனுப்பியது. பிரேயஸ் போரில் மன்னர் பௌசானியாஸ் சனநாயகவாதிகளை தோற்கடித்தார். என்றாலும், அவர் பேச்சுவார்த்தை மூலமாக சனநாயகத்தை மீட்டெடுப்பதை ஏற்றுக்கொண்டார். இருப்பினும் சிலவர் ஆட்சிக்குழுவினருக்கு பாதுகாப்பான புகலிடமாக எலியூசிசை பிரித்து உருவாக்க வலியுறுத்தினார். [4]

பின்விளைவு

[தொகு]

எசுபார்த்தாவில் லைசாண்டரின் சார்பினர் பௌசானியாஸ் மீது கோபமடைந்தனர். மேலும் மன்னர் அகிசுடன் சேர்ந்து கிமு 403 இன் இறுதி வரை பௌசானியாசிடம் விசாரணை மேற்கொண்டனர். அவர் மீது சாட்டிய குற்றச்சாட்டு குறித்து சரியாக தெரியவில்லை ஆனால் அதன் சாராம்சம் அவர் ஏதென்சில் மென்மையாக நடந்து கொண்டார் என்பது ஆகும். அகிஸ் உட்பட 15 செரோசியா உட்பட 15 பேர் குற்றவாளிகள் என்றும், 14 பேர் அதற்கு எதிராகவும் வாக்களித்தனர், ஆனால் 5 எபோர்களும் குற்றமற்றவர்கள் என வாக்களித்ததால் அவர் விடுவிக்கப்பட்டார். [5]

குறிப்புகள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 Cartledge 1987, ப. 350.
  2. Cartledge 1987, ப. 349–350.
  3. 3.0 3.1 Cartledge 1987, ப. 283.
  4. Cartledge 1987, ப. 283–284.
  5. Cartledge 1987, ப. 351.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பைல்_போர்த்தொடர்&oldid=3498758" இலிருந்து மீள்விக்கப்பட்டது