பைசன்டியக் கலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கொன்சுட்டன்டினோப்பிளின் "ஏகியா சோபியா"வில் உள்ள பிரபலமான சித்திர வடிவுகளுள் ஒன்று. 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது.

பைசன்டியக் கலை (Byzantine art) என்பது, கிழக்கு உரோமப் பேரரசினதும், அப்பேரரசிலிருந்து பண்பாட்டு அடிப்படையில் உருவான நாடுகளினதும் தேசங்களினதும் கலைப் பொருட்களைக் குறிக்கும். பசண்டியப் பேரரசு, உரோமப் பேரரசின் வீழ்ச்சியுடன் உருவாகி 1453 இல் கான்சுடன்டினோப்பிளின் வீழ்ச்சியுடன் முடிவடைந்தாலும்,[1] கிழக்கு ஐரோப்பாவில் இருந்த பல கிழக்குப் பழமைவாத நாடுகளும், கிழக்கு நடுநிலக்கடல் பகுதியைச் சேர்ந்த சில இசுலாமிய நாடுகளும் பேரரசின் பண்பாட்டினதும், கலையினதும் பல அம்சங்களை மேலும் பல நூற்றாண்டுகள் பாதுகாத்து வைத்திருந்தன.

பைசண்டியப் பேரரசின் பகுதியாக அமையாத போதும், அப்பேரரசின் சமகாலத்தில் இருந்த பல நாடுகள் பேரரசின் பண்பாட்டுச் செல்வாக்குக்கு உட்பட்டிருந்தன. இவற்றுள் "ருஸ்"; பழமைவாத நாடுகள் அல்லாத, 10 ஆம் நூற்றாண்டில் பேரரசில் இருந்து பிரிந்த வெனிசுக் குடியரசு; பைசண்டியப் பேரரசுடன் நெருங்கிய உறவைப் பேணிவந்ததும், 10 ஆம் நூற்றாண்டுவரை அப்பேரரசின் கீழ் இருந்ததும், பெருமளவில் கிரேக்க மக்களைக் கொண்டதுமான சிசிலி இராச்சியம் என்பன இவற்றுள் அடங்கும். சேர்பியா, பல்கேரியா போன்ற பைசண்டியக் கலை மரபுகளைக் கொண்ட சில நாடுகள் மத்திய காலத்தில் சில வேளைகளில் பேரரசின் பகுதியாகவும், சில வேளைகளில் சுதந்திரமாகவும் இருந்தன. 1453 இல் பைசண்டியத் தலைநகர் கொன்சுட்டன்டினோப்பிள் வீழ்ச்சியடைந்த பின்னர், ஓட்டோமான் பேரரசில் வாழ்ந்த கிழக்கத்தியப் பழமைவாதக் கிறித்தவர்களால் உருவாக்கப் பட்ட கலைப் பொருட்கள் "பின் பைசண்டிய"க் கலை எனப்பட்டது. பைசண்டியப் பேரரசில் உருவான சில கலை மரபுகள், குறிப்பாகப் படிம ஓவியங்களும், தேவாலயக் கட்டிடக்கலையும் இன்றுவரை கிரீசு, சைப்பிரசு, சேர்பியா, பல்கேரியா, ரோமானியா, உருசியா, மற்றும் சில கிழக்கத்தியப் பழமைவாத நாடுகள் போன்றவற்றில் பேணப்பட்டு வருகின்றன.

பைசண்டியப் பேரரசு, உரோமப் பேரரசின் அரசியல் தொடர்ச்சியாக உருவானது போலவே, பைசண்டியக் கலையும் உரோமப் பேரரசின் கலையில் இருந்து வளர்ச்சியடைந்தது. உரோமப் பேரரசின் கலை பண்டைய கிரேக்கக் கலையின் செல்வாக்குக்கு உட்பட்டது. பைசண்டியக் கலை இந்தச் செந்நெறி மரபில் இருந்து என்றும் விலகியதில்லை. பைசண்டியத் தலைநகர் கொன்சுட்டன்டினோப்பிளில் பல செந்நெறிச் சிற்பங்கள் இருந்தன.[2] எனினும் பின்னாளில் இவை நகர வாசிகளுக்குக் குழப்பத்தை ஏற்படுத்துவனவாக இருந்ததையும் குறிப்பிட வேண்டும்.[3] அவ்வப்போது செந்நெறிக்கால அழகியல் மறுமலர்ச்சிகள் ஏற்பட்ட போதும், இவற்றுக்கும் மேலாகப் பைசண்டியப் பேரரசுக் காலத்தில் உருவான கலை புதிய அழகியல் வளர்ச்சியைக் குறிப்பதாக இருந்தது.

புதிய அழகியலின் மிக முக்கியமான சிறப்பு அம்சம் அதன் பண்பியல் சார்ந்த அல்லது இயற்கைத் தன்மைக்கு மாறான இயல்பு ஆகும். செந்நெறிக்காலக் கலையில், உண்மைத் தன்மையைக் கூடிய அளவு வெளிப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோது, பைசண்டியக் கலை இந்த முயற்சியைக் கைவிட்டுக் கூடுதலாகக் குறியீட்டு அணுகுமுறையைக் கைக்கொண்டது. செந்நெறிக் காலாலத்தில் இருந்து மத்திய காலத்துக்கான மாறுநிலைக் காலத்தின் பிற்பகுதியில் இடம்பெற்ற மேற்படி மாற்றத்தின் தன்மை, அதன் காரணங்கள் என்பன நூற்றாண்டுகளாக அறிஞர்களின் விவாதப் பொருளாக இருந்தது. "ஜியோர்கியோ வாசரி" என்பார், கலைத் திறமையிலும், தரத்திலும் ஏற்பட்ட வீழ்ச்சியே இந்த மாற்றத்துக்கான காரணம் எனக் குறிப்பிட்டார். ஆனாலும், தற்கால அறிஞர்கள் பைசண்டியக் கலை குறித்துச் சாதகமான நோக்கைக் கொண்டுள்ளனர். அலோயிசு ரீகிள் என்பார், உரோமக் கலையில் முன்னரே இருந்த ஒரு போக்கின் இயல்பான வளர்ச்சியே இந்த மாற்றம் எனக் கருதினார். யோசேப் இசுட்ரிகோவ்சுக்கி (Josef Strzygowski) இது கீழைத்தேசச் செல்வாக்கினால் ஏற்பட்டது என்றார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. See Kitzinger, Ernst, Byzantine art in the making: main lines of stylistic development in Mediterranean art, 3rd-7th century, pp 1-3, 1977, Faber & Faber, ISBN 0571111548 (US: Cambridge UP, 1977). The start date of the Byzantine period is rather clearer in art history than in political history, if still imprecise.
  2. S. Bassett, The urban image of late antique Constantinople (Cambridge, 2004).
  3. C. Mango, "Antique statuary and the Byzantine beholder," Dumbarton Oaks Papers 17 (1963), 53-75.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பைசன்டியக்_கலை&oldid=2525140" இலிருந்து மீள்விக்கப்பட்டது