பைகார்பனேட்டு நிலைகாட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பைகார்பனேட்டு நிலைகாட்டி அல்லது நிறங்காட்டியானது (Bicarbonate indicator)  ஒரு வகையான pH நிலைகாட்டியாகும். இந்த நிலைகாட்டி அல்லது நிறங்காட்டியானது ஒரு நீர்க்கரைசலில் கார்பனீராக்சைடு வாயுவின் செறிவு அதிகமாகும் போது ஒரு நிறமாற்றத்தைத் தரவல்ல அளவுக்கு உணர்வுநுட்பமுடையதாகும்.  இந்த நிலைகாட்டியானது ஒளித்தொகுப்பு மற்றும் உயிரணு ஆற்றல் பரிமாற்ற சோதனைகளில் கார்பனீராக்சைடானது வெளியிடப்படுகிறதா? இல்லையா? என்பதைக் கண்டறியும் சோதனையில் பயன்படுகிறது.[1] இந்த நிலைகாட்டியானது உயிரினங்களில் நடைபெறும் வாயு பரிமாற்றத்தின் போது கார்பனீராக்சைடின் உள்ளடக்கத்தை சோதிக்கவும் பயன்படுத்தப்படுகிறது.  கார்பனீராக்சைடின் செறிவானது 0.04% என்ற  அளவிற்கும் அதிகமாக இருக்கும் போது தொடக்கத்தில் இருந்த சிவப்பு நிறமானது pH மதிப்பின்படி அமிலத்தன்மை அதிகமாகும் போது மஞ்சள் நிறமாக மாறுகிறது. கார்பனீராக்சைடின் செறிவானது 0.04% என்ற அளவிற்கும்  குறைவாக இருக்கும் போது சிவப்பு நிறத்திலிருந்து கருஞ்சிவப்புச்சாயமாகவும், இன்னும் மிகக்குறைந்த கார்பனீராக்சைடின் செறிவில் ஆழ்ந்த ஊதா நிறத்திற்கும் மாற்றமடைகிறது.[1] வெளிச்சுவாசத்தின் போது வெளிவிடப்படும் கார்பனீராக்சைடின் செறிவுகளில் கூட நிலைகாட்டியில் கரைந்து வலிமை குறைந்த கார்போனிக் அமிலத்தை உருவாக்குகிறது. இதன் காரணமாக pH மதிப்பில் குறைவு ஏற்பட்டு நிற மாற்றத்திற்குக் காரணமாகிறது.[1] ஒளித்தொகுப்பின் போது நிகழும் கரு ஊதாவாக மாறும் நிறமாற்றம் கார்பனீராக்சைடின் சதவீத இயைபில் குறைவு ஏற்படுவதைக் காட்டுகிறது. இந்த நிகழ்விலிருந்து ஆக்சிசனின் உற்பத்தியாவதும் உணரப்படுகிறது. ஆனால், இதற்கான நேரடியான சான்றுகள் ஏதுமில்லை.[2]

இந்த வகை சோதனைகளில் கருவிகளில் அமில அல்லது கார மாசுபாடுகளைத் தவிர்ப்பதில் மிகுந்த கவனம் செலுத்தப்பட வேண்டும். ஏனெனில், இந்த சோதனையானது நேரடியாக கார்பனீராக்சைடுக்கான சிறப்பான சோதனையல்ல.[2]

இயைபு[தொகு]

இரண்டு கரைசல்கள் தனித்தனியாக தயாரிக்கப்படுகின்றன.[2][3]

  • கரைசல் A: தைமால் நீலம் 0.02 கி , கிரெசால் சிவப்பு 0.01 கி மற்றும் எத்தனால் 2 மிலி
  • கரைசல் B: சோடியம் பைகார்பனேட்டு 0.8 கி, பொட்டாசியம் குளோரைடு 7.48 கி மற்றும் நீர் 90 மிலி
  • கரைசல்கள் A மற்றும் B இவற்றைக் கலக்கவும் பின்னர் கலக்கப்பட்ட கரைசலில் 9 மிலி கரைசலை 1000 மிலி வாலை வடிநீரில் கலக்கவும்.
  • பைகார்பனேட்டுகள் மற்றும் கார்பனேட்டுகளின் செறிவைக் கண்டறியப் பயன்படும் இந்த முறையானது "மேக்னியின் முறை" எனவும் அழைக்கப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]