உள்ளடக்கத்துக்குச் செல்

பேராலயம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
São Paulo Cathedral, a representative modern cathedral built in Neo-Gothic style.
தூய அமலோற்பவ அன்னை பேராலயம், புதுவை-கடலூர் உயர்மறைமாவட்ட பேராலயம்

பேராலயம், மறைமாவட்டப் பேராலயம், மறைமாவட்டத் தலைமைக் கோவில் அல்லது கதீட்ரல் (cathedral, இலத்தீனிடமிருந்து பிரான்சியம் cathédrale. கிரேக்க மொழியில் cathedra என்பதற்கு "இருக்கை") அல்லது பழைய தமிழ் வழக்கில் மெற்றிறாசனக் கோவில் என்பது ஆயரின் தலைமைபீடம் அடங்கிய கிறித்தவத் தேவாலயம் ஆகும்.[1] இது ஓர் மறைமாவட்டம், கிறித்தவ சங்கம் அல்லது கிறித்தவ திருச்சபையினை வழிநடத்தும் ஆயரின் தலைமை ஆலயமாகும்.[2] கத்தோலிக்க திருச்சபை, ஆங்கிலிக்கம், மரபுவழி திருச்சபைகள், மற்றும் சில லூதரனிய மெதடிச திருச்சபைகள் போன்ற ஆட்சியமைப்பு கொண்ட திருச்சபைகளில் மட்டுமே கோவில்களுக்கு இவ்வகை பயன்பாடு உள்ளது.[2] ஆயரின் இருக்கை கொண்ட கதீட்ரல்கள் முதலில் இத்தாலி, கால், எசுப்பானியா மற்றும் வடக்கு ஆபிரிக்காவில் 4வது நூற்றாண்டில் உருவாகத் தொடங்கின. ஆனால் மேற்கத்திய கத்தோலிக்க திருச்சபையில் 12வது நூற்றாண்டு வரை, இத்தகைய வழக்கம் பரவவில்லை. 12வது நூற்றாண்டு வாக்கில் தலைமைக்கோவில்களுக்கான தனி கட்டிட வடிவமைப்பு, கட்டமைப்புகள், சட்ட அடையாளங்கள் ஆகியவை உருவாகத் தொடங்கின.

ஆஸ்திரேலியாவின் சிட்னிக்கான ஆங்கிலிக்க ஆயரின் இருக்கை.

கிறித்தவச் சீர்திருத்த இயக்கத்தை அடுத்து மேற்கு ஐரோப்பாவின் பல பகுதிகளில் உருவான சீர்திருத்தச் சபைகள் ஆயர்களும், படிநிலை ஆட்சியமைப்பம் இல்லாமல் அமைந்தன. ஆயினும் அந்த இடங்களில் இருந்த மறைமாவட்டப் பேராலய கட்டிடங்கள் அதே பெயரிலேயே அழைக்கப்பட்டன; 16வது நூற்றாண்டு முதல், குறிப்பாக 19வது நூற்றாண்டில், மேற்கு ஐரோப்பிய திருச்சபைகள் ஆசியா, ஆபிரிக்கா, ஆத்திரேலேசியா, ஓசியானா, அமெரிக்காக்களில் பல புதிய பணித்தளங்களை தோற்றுவித்தன. மேலும் கத்தோலிக்க திருச்சபையும் மரபுவழி திருச்சபையும் முன்னாள் சீர்திருத்தப்திருச்சபையின் ஆட்சிவட்டத்துள் பல புதிய மறைத்தூதுப் பணித்தளங்களை உருவாக்கின. இவற்றால் ஒரே நகரில் பல்வேறு திருச்சபைகளுக்கான மறைமாவட்டப் பேராலயங்கள் இருக்கலாம்.

ஒரு பங்கு ஆலயம் தற்காலிகமாக மறைமாவட்டப் பேராலயமாக பயன்படுத்தப்படும்போது அதனை மறைமாவட்டப் பதில் பேராலயம் (Pro-cathedral) என்று அழைக்கின்றனர். பேராயர் அல்லது உயர் மறைமாவட்ட ஆயரின் ஆட்சிப்பீடம் உயர்மறைமாவட்ட பேராலயம் (Metropolitan cathedral) என அழைக்கப்படுகிறது. ஒரே மறைமாவட்டத்துக்குள்ளேயே ஒரே திருச்சபையின் இரண்டு ஆலயங்கள் ஒரே ஆயரின் ஆட்சிப்பீடமாக அமைந்திருக்கலாம். இவ்வகை ஆலயங்களில் ஒன்று மறைமாவட்டப் பேராலயம் எனவும் மற்றொன்று மறைமாவட்டப் துணை பேராலயம் (Co-cathedral) எனவும் அழைக்கப்படும்.

காட்சிக் கூடம்

[தொகு]

மேற்சான்றுகள்

[தொகு]
  1. Shorter Oxford English Dictionary, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-860575-7
  2. 2.0 2.1 New Standard Encyclopedia, 1992 by Standard Educational Corporation, Chicago, Illinois; page B-262c

வெளியிணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
கதீட்ரல்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேராலயம்&oldid=3404747" இலிருந்து மீள்விக்கப்பட்டது