உள்ளடக்கத்துக்குச் செல்

பேராசிரியர் (தொல்காப்பிய உரை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பேராசிரியர் (தொல்காப்பியம்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பேராசிரியர் (Perasiriyar) என்பவர் தொல்காப்பியம் பொருளதிகாரத்திற்கு உரை வகுத்த இடைக்காலத் தமிழ் மொழி உரையாசிரியர்களில் ஒருவர்.

வாழ்வும் காலமும்

[தொகு]

இவரது இயற்பெயர் இன்னதென தெரியவில்லை. இவரது உரைச்சிறப்பும் அறிவுத்திறனும் நோக்கி இவரைப் பிற்காலத்தவர் பேராசிரியர் என்றே அழைத்தனர். இவர் பரந்த புலமையுடையவர், தொல்காப்பியம் பொருளதிகாரம் முழுமைக்கும் உரைகண்டவர். சைவ சமயத்தைச் சார்ந்தவர். தம் உரைகளில் நன்னூல், தண்டி, யாப்பருங்கலம் ஆகிய நூலாசிரியர்களின் கருத்துகளை எடுத்துக் கூறி மறுக்கின்றார். எனவே இவர் பொ.ஊ. 12-ஆம் நூற்றாண்டிற்குப் பிற்பட்டவர்,[1] அல்லது இவரது காலம் 13-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியாகும்.[2]

கிடைத்த உரைப்பகுதிகள்

[தொகு]

இவர் பொருளதிகாரம் முழுமைக்கும் உரை எழுதினார் என்பதற்குப் பல சான்றுகள் உள்ளன. தற்போது

  • மெய்ப்பாட்டியல்
  • உவம இயல்
  • செய்யுள் இயல்
  • மரபியல்

ஆகிய நான்கிற்கு மட்டுமே இவரது உரை கிடைக்கின்றது, மற்ற பகுதிகளுக்கான உரைகள் கிடைக்கவில்லை.

உரைச் சிறப்புகள்

[தொகு]

'என்றான் ஆசிரியன்' என்று நூலாசிரியரை ஒருமையில் கூறும் ஒரே உரையாசிரியர் இவரே. இவர் உரையால் மெய்ப்பாட்டியலும் உவம இயலும் பெரிதும் விளக்கமடைகின்றன. இளம்பூரணர் மிகச்சுருக்கமாக எழுதிச் சென்றுள்ள இயல்களை எல்லாம் இவர் நன்கு விளக்கியுள்ளார். தமக்கு முன் இருந்த உரையாசிரியர்களின் பெயரையோ நூலாசிரியர்களின் பெயரையோ இவர் கூறுவதில்லை. கருத்துக்களை மட்டுமே கூறி மறுக்கிறார். இவரது உரை விளக்கம், சிறந்த இலக்கியத் திறனாய்வு நெறிகளைக் கொண்டுள்ளது. இவர் உவம உருபுகளைப் பற்றி விரிவாக ஆராய்ந்துள்ளார். தொல்காப்பியர் கூறிய 36 உருபுகளேயன்றி வேறு சில உவம உருபுகள் வரும் என்று குறிப்பிடுகின்றார்.

இலக்கணத்திற்கு மட்டுமன்றி மாணிக்கவாசகரின் திருக்கோவையார், சங்க இலக்கியமான குறுந்தொகை போன்ற இலக்கியங்களுக்கும் இவர் உரை எழுதியுள்ளார். இவற்றுள் இவரது குறுந்தொகை உரை கிடைக்கப்பெறவில்லை.

இவரது உரையில் சங்க இலக்கியங்களிலிருந்து மேற்கோள்கள் தரப்பட்டுள்ளன. சில எடுத்துக்காட்டுகள் இவர் அறிந்தனவும், அமைத்தனவுமாக உள்ளன. தொல்காப்பியத்தைத் தழுவி மேலும் இவர் தொகுத்துத்தரும் எடுத்துக்காட்டுகள் இவரது மொழிப்புலமையைக் காட்டுகின்றன. அகத்தியம் பற்றிய குறிப்புகள் இவரது உரையில் உள்ளன. சிறந்த திறனாய்வு நோக்கில் எதற்கும் நுட்பமான வகையில் சொற்பொருள் தந்து உரை விளக்கம் தருதல் இவரது சிறப்பாகும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. மு. வை. அரவிந்தன், உரையாசிரியர்கள் மணிவாசகர் பதிப்பகம் பக்கம்-217
  2. இவரது காலம் 15-ஆம் நூற்றாண்டுக்குப் பின் என்பர். தமிழிலக்கிய வரலாறு. ஜனகா பதிப்பகம். 1997
  • முனைவர் தேவிரா தமிழ் இலக்கியத் தகவல் களஞ்சியம் ஸ்ரீநந்தினி பதிப்பகம்
  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதின்மூன்றாம் நூற்றாண்டு, பதிப்பு 2005

ஒப்பிட்டுப் பார்க்கவேண்டியவை

[தொகு]