வேழக்கரும்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பேய்க்கரும்பு இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பேய்க்கரும்பு, கொறுக்காந் தட்டை, வேழக்கரும்பு (Saccharum arundinaceum, பொதுவாக hardy sugar cane என்று அழைக்கப்படுகிறது.) என்பது தெற்கு ஆசியாவின், இந்தியாவைச் சேர்ந்த ஒரு புல் இனம் ஆகும்.

இது தமிழ் மொழியில் நாணல் என்று பொதுவாக அழைக்கப்படுகிறது. அசாமிய மொழியில் மேகிலா குய்யார் ( মেগেলা কুঁহিয়াৰ ) என்று அறியப்படுகிறது. இதில் குய்யார் என்ற சொல்லின் பொருள் கரும்பு ஆகும்.

இத்தாவரம் இந்தியாவின் அசாம் மாநிலத்தில் உள்ள காசிரங்கா தேசியப் பூங்காவின் புல்வெளிகளில் இந்த இனம் அகணிய உயிரியாக காணப்படுகிறது.[1]

இதன் சங்க இலக்கியப் பெயர் வேழம் என்பதாகும். தற்காலத்தில் வேழக்கரும்பு, பேய்க்கரும்பு கொறுக்காந் தட்டை என்றும் பொதுவாக நாணல் என்றும் அறியப்படுகிறது. இனிய சாற்றைக் கொண்ட கரும்பு மென் கரும்பு என்றும், சாறில்லாத நாணலை, 'வேழக் கரும்பு' என்றும் கூறுவர். இதனைப் பேய்க்கரும்பு என்பாரும் உளர்.

வேழம் என்பது மூங்கில், கரும்பு, யானை முதலிய பொருள்களிலும் வழங்கப்படும். "வேழம்" கரும்பிற்கு மிக நெருங்கியது எனினும் உட்கூடு உள்ளது; மெல்லியது; கரும்பு போன்று நீளமானது. தாவர இயலில் இதுவும் கரும்பும் ஒரே பேரினத்தைச் சார்ந்தவையாகும். வேழத்திலிருந்துதான் கரும்பு தோன்றியிருக்கக்கூடும் என்று கருதுவர் தாவரவியல் அறிஞர்கள். இதில் மூங்கிலைப் போல உட்கூடும் கணுக்களும் உள்ளமையின் வேழம் மூங்கிலுக்கும் பெயராதலன்றி மூங்கிலுடன் நெருங்கியது. வேழம், கரும்பு, மூங்கில் ஆகியவை புறக்காழ் உடையனவாதலின் "புல்" எனப்படும். வேழம் தாவர இயலில் ஒருவகையான புல் (நாணற்புல்) ஆகும். இதன் குரோமோசோம் எண்ணிக்கை 2n= 40, 60 எனப் பிரிமெர் (1925, 1934) கணக்கிட்டுள்ளார்.[2]

விளக்கம்[தொகு]

இது ஒரு புதர்ச்செடி ஆகும். இது கரும்புச் செடியைப் பெரிதும் ஒத்தது. இதுவும் 20 அடி உயரம் வரை வளரும். கணுக்களை உடையது. இதன் இலைகள் ஆறு அடி வரை நீளமும் 1-2 அங்குல அகலமும் உடையது.

மலர்[தொகு]

இதன் மலர் கரும்பைப் போன்றது. கலப்பு மஞ்சரி. இது 'கல்ம்' என்ற தண்டின் நுணியில் கிளைத்து வள்ரும். வெண் சாமரை போன்று வெண்ணிறமாக இருக்கும். மேலும் எல்லா வகையிலும் கரும்பின் மலரை ஒத்ததாக இருக்கும்.

பயன்கள்[தொகு]

வேழக்கரும்பு மூங்கில் அமைப்பில் குச்சியாக அமைந்திருப்பதால், தண்டு என்ற குச்சிகள் கூரை வீட்டிற்குக் கட்டுக் குச்சிகளாகப் பயன்படும். இதன் மூலம் தட்டி முதலியனவும் செய்யப்படுகின்றன.

இலக்கியங்களில்[தொகு]

வேழத்தின் தண்டில் உட்கூடு உண்டென்பதை ஐங்குறு நூறு கூறும்.

நூற்றிதழ்த் தாமரைப் பூச்சினை சீக்கும்
காம்புகண்டன்ன தூம்புடை வேழம் -ஐங்குறுநூறு. 20:2-3

வேழம் கிரைத்து வெண்கோடு விரைஇ
தாழை முடித்து தருப்பை வேய்ங்த
குறியிறைக் குரம்பை பறியுடை முன்றில் -பெரும்பா. 26 3.-2 65

வேழம் கரும்பை ஒத்த புதர்ச் செடி. இதுவும் வெள்ளிய துணர்விட்டுப் பூக்கும். மருத நிலத்தின் துறையில் வளர்ந்து நீராடும் மகளிருக்குத் துணை நிற்கும். பூங்கொத்துக் கவரியைப் போன்றது என்றெல்லாம் புலவர் பாடுவர்.

புதல்மிசை நுடங்கும் வேழ வெண்பூ -ஐங். 17:1

கரைசேர் வேழம் கரும்பின் பூக்கும் - ஐங். 12:1

புனல் ஆடு மகளிர்க்குப் புணர்துணை உதவும்
வேழ மூ துார் ஊரன் -ஐங். 15: 2-3

பரியுடை நன்மான் பொங்கு உளை அன்ன
அடைகரை வேழம்வெண்பூ -ஐங். 13:1-2

வேழத்தின் பூவும் கரும்பின் பூவைப் போல மணமற்றது. ஆதலின் இதனைச் சூடுவாரிலர் ஆயினும் பரத்தையர் தமக்கு இசைவாரை அறியவேண்டி இதனைப் பயன்படுத்தினர். நள்ளிரவில் இப்பூவை விற்பதுபோல இதனைக் கையிற்கொண்டு திரிவர். எதிர்ப்படும் ஆடவரிடம் இதனை விலை கூறுவதுபோலக் கொடுத்துப்பார்ப்பர். அவர் ஏற்றால் தமக்கு இசைந்ததாகக் கொள்வர். இதனை ஒரம்போகியார் கீழ்கண்ட பாடலில் பாடுகின்றார்.

அடைகரை வேழம் வெண்பூப் பகரும்
தண்துறை ஊரன் பெண்டிர் (பரத்தையர்)
துஞ்சுஊர் யாமத்தும் துயில் அறி யலரே
-ஐங்குறுநூறு 13:1-4

குறிப்புகள்[தொகு]

  1. "World Heritage Kaziranga.org: "About Park Habitats — Grasslands"". Archived from the original on 2012-10-08. பார்க்கப்பட்ட நாள் 2019-10-28.
  2. சங்க இலக்கியத் தாவரங்கள், டாக்டர் கு. சீநிவாசன், பக்கம் 747-749
"https://ta.wikipedia.org/w/index.php?title=வேழக்கரும்பு&oldid=3572695" இலிருந்து மீள்விக்கப்பட்டது