உள்ளடக்கத்துக்குச் செல்

பேட்ரசு வைஸ்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பேட்ரசு வைஸ்ட் (Petrus Vuyst) 1726 ஆம் ஆண்டு முதல் 1729 ஆம் ஆண்டுவரை ஒல்லாந்தர் ஆட்சியின் கீழ் இலங்கையின் ஆளுனர் நாயகமாகப் பதவி வகித்தார். இவர் இலங்கையில் வந்து இறங்கும்போதே தனது வலது கண்ணை மறைத்துக் கட்டிக் கொண்டு, இலங்கை போன்ற முக்கியத்துவம் அற்ற ஒரு சிறிய நாட்டை ஆட்சி செய்வதற்கு இரண்டு கண்கள் தேவையில்லை என்று சொன்னாராம்[1]. இவரது ஆட்சி மிகவும் கொடூரம் நிறைந்ததாக இருந்தது. தனது கருத்துக்களுக்கு உடன்படாதவர்களைக் கடுமையான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கினார். பலர் மீது பொய்வழக்குப் போட்டுத் தண்டனை வழங்கினார். தன்னை இலங்கையின் சுதந்திரமான ஆட்சியாளனாக ஆக்கிக்கொள்ளும் எண்ணம் அவருக்கு இருந்ததாகச் சொல்லப்படுகிறது. இவர் தனது அதிகாரங்களைப் பிழையாகப் பயன்படுத்தியதுடன், ஒழுங்கீனமான ஆட்சியும் நடத்திவந்தார். அரசாங்கத்தில் பல மட்டங்களிலும் ஊழல் மலிந்து காணப்பட்டது. இவருக்கு எதிராகச் சதி செய்ததாகச் சந்தேகத்தின் பேரில் 19 பேர் கொல்லப்பட்டதுடன், பலர் சித்திரவதைகளுக்கும் உள்ளாயினர்[2].

இவரது கொடுமைகளைப் பொறுக்க முடியாத சிலர் இவரது நடவடிக்கைகள் குறித்து பத்தேவியாவில் இருந்த தலைமையகத்துக்கு அறிவித்தனர். வைஸ்ட் மீதான குற்றச்சாட்டுகள் அடங்கிய கடிதம் தகவல் கொண்டு செல்பவரின் காலணியின் அடிப்பாகத்தில் வைத்துத் தைத்து இரகசியமாக எடுத்துச் செல்லப்பட்டதாம்[3]. பத்தேவியாவில் இருந்த உயர் ஆட்சிக் குழு உடனடியாக வைஸ்ட்டைத் திருப்பி அழைத்து அவர்மீது விசாரணை நடத்தியது. முடிவில் இவரது தலை வெட்டப்பட்டு மரண தண்டனை வழங்கப்பட்டது[3].

குறிப்புகள்

[தொகு]
  1. Blaze, 1933 பக். 183
  2. 1726 Peter Vuijst
  3. 3.0 3.1 Blaze, 1933 பக். 184

உசாத்துணைகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேட்ரசு_வைஸ்ட்&oldid=3405888" இலிருந்து மீள்விக்கப்பட்டது