பேச்சு:மைசூர் பாகு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மைசூர்ப் பாகு என்று தானே கூறுவார்கள்?--Kanags \உரையாடுக 12:16, 31 சூலை 2014 (UTC)[பதிலளி]

மைசூர் பாக் என்பதே சரி திரு Kanags-- mohamed ijazz(பேச்சு) 12:21, 31 சூலை 2014 (UTC)[பதிலளி]
பாக் (paak) என்பது சரி! கன்னடத்தில் (சர்க்கரை) பாகை பாக் (paak) என்று எழுதியிருக்கின்றனர். தெலுங்கிலும் பாக் என்றே எழுதப்பட்டுள்ளது. மலையாளத்திலும், தமிழிலும் மைசூர் பாக்கு என்று அழைப்பது வழக்கம். (பாக்கு - கு என்பது குற்றியலுகர ஒலி) தமிழின் ’பாகு’ கன்னடத்தில் ’பாக்’ என்றாகும். (சில பொது திராவிட விதிகள்!) தமிழில் பொது வழக்கில் பாக்(கு) என்றே எழுதுகிறோம். பாக் (கன்னட முறை), பாக்கு (கன்னட வழி தமிழ்ப் பெயர்), பாகு (தமிழ்ப் பெயர்) மூன்றுமே முறைப்படி சரி. இந்த இனிப்பில் சர்க்கரை இருக்கும் என்ற போதும், பொருள் பாகாக இருக்காது. மென்மையான திடப்பொருளாக இருக்கும்! எனவே, பாக்/பாக்கு என்பதே சரியாக இருக்கும் என கருதுகிறேன். :) மேலும், மைசூர் பாக்கை வெற்றிலைப் பாக்குடன் குழப்பிக் கொள்வதில்லை. மைசூர் பாக்கு என்பது இந்த இனிப்பையே குறிக்கும். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 12:33, 31 சூலை 2014 (UTC)[பதிலளி]
நீங்கள் தெலுங்கு, கன்னடம், மலையாளத்தில் அவ்வாறு அழைக்கப்படுவதால் அதனைத் தமிழிலும் அவ்வாறு அழைக்க வேண்டும் என விரும்புகிறீர்கள். ஆனால், பன்னெடுங்காலமாக இது பாகு என்று தான் தமிழில் வழங்கப்படுகிறது. பாக்கு என்பதற்கு வேறு பொருள் தமிழில் உள்ளது. தெலுகு என ஆந்திரப் பிரதேசத்தில் வழங்கும் ஒரு மொழியை நாம் தெலுங்கு என அழைக்கிறோமே. அது போன்றே எமது மொழிக்கேற்ப நாம் அவற்றை உச்சரிப்பதில் தவறில்லை. --Kanags \உரையாடுக 12:43, 31 சூலை 2014 (UTC)[பதிலளி]
இல்லை, தமிழகத்தில் நெடுங்காலமாகவே மைசூர் பாக்(கு) என்றே சொல்கிறோம். பாகு என்று சொல்வதில்லை. தமிழிலும் அதே வழக்கமே -தமிழ்க்குரிசில் (பேச்சு) 12:56, 31 சூலை 2014 (UTC)[பதிலளி]
மரபுவிக்கியில் பயனர்:கீதாசாம்பசிவம் எழுதுவதைக் கவனியுங்கள். கூகுளில் தேடினால் ஏராளமாக வருகிறது.--Kanags \உரையாடுக 13:09, 31 சூலை 2014 (UTC)[பதிலளி]
பாக்(கு) என்பதும் தமிழில் உள்ள வழக்கம் தான், நான் கேட்டிருக்கிறேனே! பிற மொழிகளில் இருப்பதை எடுத்துக்காட்டாகத் தான் காட்டினேன். சிலர் எழுத்தளவில் பாகு என்று எழுதியிருக்கலாம், பேசுகையில் பாக் என்றே சொல்கிறோம். கூகுள் தேடலில், பாகு என்பது அதிக முடிவுகளைக் கொண்டிருந்தாலும், ”மைசூர் பாக்கில்” என்ற சொல்லுக்கு அதிக முடிவுகள் கிடைக்கின்றன. மேலும், இந்த பண்டம் கர்நாடக மூலத்தைக் கொண்டிருப்பதாலும் பாக்(கு) என்பது கூடுதல் பொருத்தமாக இருக்கலாம். மைசூரின் மொழியான கன்னடத்திலேயே பாக் என்ற பெயர் இருக்கும்போது, பாகு என்று அழைக்கப்பட்டதாக மரபுவிக்கியில் சொன்னதை நம்பமுடியவில்லை. :( -தமிழ்க்குரிசில் (பேச்சு) 14:27, 31 சூலை 2014 (UTC)[பதிலளி]

நான் அறிந்த வரை (தமிழகத்தில்) இது மைசூர் பாக்கு என்று தான் அழைக்கப்படுகிறது. பாக் என்பது தவறு போல் தோன்றுகிறது. --குறும்பன் (பேச்சு) 15:24, 31 சூலை 2014 (UTC)[பதிலளி]

பாகு என்ற தமிழ்ச் சொல் தான் கன்னடத்திற்கு பாக் என்று போய் மைசூரில் செய்யப்படும் பாகு மைசூர்ப் பாக்காகி அது தமிழ்நாட்டுக்கு மைசூர்ப் பாக்காக வந்து விட்டது என்று நான் சொல்கிறேன். பாகு என்ற சொல்லைப் பற்றியும் கட்டுரையில் உள்ளதே. அது என்ன? இந்த மைசூர் இனிப்பை இலங்கையில் மைசூர்ப் பாகு என்று தான் நாம் கூறுவோம்.--Kanags \உரையாடுக 21:11, 31 சூலை 2014 (UTC)[பதிலளி]

பாக்கு என்றால் தமிழில் கமுகு என்று பொருள். ஒரு மொழியில் இருக்கும் சொல்லை அது மொழியப்படும் விதமே எழுதுவதை நான் தவறென்று கூற மாட்டேனாயினும் பொருண்மயக்கம் தரும் சொற்களைத் தமிழ் முறைக்கு ஏற்ப மாற்றி எழுதுவதே சாலச் சிறந்தது. இங்கே மைசூர்ப் பாக் என்று ககர மெய்யெழுத்து தொக்கி நிற்க நிறைவடைவதை விட மைசூர்ப் பாகு என்று எழுதுவதே சிறந்தது. இனிப்பான பண்டங்களைக் காய்ச்சி, கிண்டிக் கிளறிச் செய்தெடுக்கும் போது அவற்றுக்குப் பொதுவான தமிழ்ச் சொல்லே பாகு என்பது. மேலும் திராவிட மொழிகளில் காலத்தாற் பழையது தமிழ் என்பதால் திராவிட மொழிகளில் ஒத்து ஒலிக்கும் சொற்களைத் தமிழ் முறைக்கு ஏற்றவாறு நற்றமிழ்ச் சொல்லில் எழுதுவதே சரியானது. இங்கே நான் திராவிட மொழிக் குடும்பத்தை மாத்திரமே குறிக்கிறேன்.--பாஹிம் (பேச்சு) 00:44, 1 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]

👍 விருப்பம்-தமிழ்க்குரிசில் (பேச்சு) 04:21, 1 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்--- mohamed ijazz(பேச்சு) 05:01, 1 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]

தமிழகத்தில் பேச்சு வழக்கில் பெரும்பான்மையானோர் பாக்கு என்று தான் கூறுகிறோம். பாகு தான் பாக்கு ஆனதோ என்று இந்த உரையாடலைப் பார்த்து தான் எண்ணத் தோன்றுகிறது. தற்போது உயர் தட்டினருக்கான இனிப்புகள் விற்கும் கடைகள் இதனை ஆங்கிலத்தில் மைசூர் பா என்று எழுத அதுவே புழக்கத்துக்கும் வந்து விட்டது. பாக் என்று எழுதுவது இலக்கணப் பிழை. பாக்கு என்று எழுதலாம். முன்னால் மைசூர் வருவதால் இதனை யாரும் பாக்குப் பொருட்களுடன் குழப்பிக் கொள்ள மாட்டார்கள் :)--இரவி (பேச்சு) 05:22, 1 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]

தமிழகத்தில் இதனை "மைசூர் பாக்(கு)" என்று பயன்படுத்துவதைக் கவனித்திருக்கிறேன். இலங்கையில் இதை "மைசூர் பாகு" என்றுதான் அழைப்பது வழக்கம். "மைசூர் பாக்கு" என்ற சொல்லைக் கேள்விப்பட்ட போது இது மைசூர் பாணியிலான ஒருவகைப் "பாக்கு" ஆக இருக்கும் எனவே எண்ணினேன் பின்னர் தான் அது குறிப்பிட்ட இனிப்பு வகையைக் குறிக்கும் என அறிந்து கொண்டேன். பொதுவாக இலங்கைத் தமிழர்கள் "மைசூர் பாக்கு" என்பதைச் சரியாகப் புரிந்துகொள்ள மாட்டார்கள். "மைசூர் பாக்" என்றாலும் இலங்கையருக்கு, இது மைசூரில் உள்ள ஒரு பூங்காவாக (park) இருக்கலாம் என்றுதான் எண்ணத்தோன்றும். எனவே, வழக்கம் போலக் கட்டுரையில் "மைசூர்ப் பாகு" என்பதை இலங்கை வழக்காகக் குறிப்பிட்டு, ஒரு வழிமாற்றும் ஏற்படுத்துவது நல்லது. ---மயூரநாதன் (பேச்சு) 06:29, 1 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]
எங்கள் வீட்டிலும் மைசூர் பாகு என்றே கூறிவந்திருக்கிறோம். சமையற்குறிப்புகளிலும் அவ்வாறே பார்த்திருக்கிறேன். அறுசுவை தளத்தில் மைசூர் பாகு என்று தேடினால் 826 முடிவுகள் வருகின்றன, மைசூர் பாக்கு எனத்தேடினால் 10 முடிவுகள் மட்டுமே வருகின்றன. கூகுள் பொதுத்தேடலிலும் முந்தையதிற்கு நான்கு மடங்கு குறிப்புகள் உள்ளன. அதைமட்டும் வைத்துப் பார்க்க வேண்டியதில்லை. சமையல் நூல்களிலும் ஒருமுறை பார்ப்போம். எதுவானாலும் மைசூர் பாகு என்பதையும் கட்டுரையில் குறிப்பிடவேண்டும். -- சுந்தர் \பேச்சு 06:57, 1 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]
👍 விருப்பம். பாகிம் கூறுவது போல், இனிப்பான பண்டங்களைக் காய்ச்சி, கிண்டிக் கிளறிச் செய்தெடுக்கும் போது அவற்றுக்குப் பொதுவான தமிழ்ச் சொல்லே பாகு என்பது. மைசூர் பாகு என்பதே இலங்கை வழக்கம். பாக் என முடிவது தமிழ் இலக்கணத்திற்கொவ்வாததாகையால் தலைப்பை மைசூர் பாக்கு அல்லது மைசூர் பாகு என மாற்றி விட்டு, மயூரநாதன் பரிந்துரைப்படி வழிமாற்றை உருவாக்கலாம். --சிவகோசரன் (பேச்சு) 06:58, 1 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]
👍 விருப்பம், ஆதரிக்கிறேன் --♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 07:13, 1 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]
மேலும், இங்கு கடலை மாவு என குறிப்பிட்ப்பட்டுள்ளது. மாவு என்பது பேச்சு வழக்கல்லவா? மா என்பதே சரியானது. இந்திய ஊடகங்களில் மாவு என பொதுவாக வழங்கப்படுகின்றது. இது சரியா? --சிவகோசரன் (பேச்சு) 07:07, 1 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]
இக்கட்டுரையில் தரப்பட்டுள்ள சான்றுக் கட்டுரையில் “The cook used to be called nalapaka — he who makes the paka, or sugar syrup,” says Natraj. “So he cooked up this dish and called it Mysore Pak.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, "மைசூர் பாக்" அல்லது "மைசூர் பாக்கு" என்பதில் உள்ள "பாக்" அல்லது "பாக்கு" என்பது "சர்க்கரைப் பாகு" என்பதை அடியொற்றி வந்ததாகவே தெரிகிறது. எனவே இதைத் தமிழில் "மைசூர்ப் பாகு" என்று அழைப்பதே பொருத்தமாக இருக்கக்கூடும். இப்பெயர் கன்னடத்தின் வழியாக அல்லது ஆங்கிலத்தின் வழியாகத் தமிழுக்கு வந்திருக்கக்கூடும் என்பதால் தமிழகத்தின் சில பகுதிகளில் இது "பாக்" என்றும் பின்னர் தமிழ் உச்சரிப்பு மரபுக்கு இணங்க "பாக்கு" எனவும் ஆகியிருக்கக்கூடும். ---மயூரநாதன் (பேச்சு) 07:17, 1 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]
மயூரநாதனின் கருத்தே எனதும். ஔவையாரினால் எழுதப்பட்ட பாகு என்ற தமிழ்ச் சொல் எவ்வாறு எங்கோ சென்று உரு மாறி வந்துள்ளது என்பதற்கு இது ஓர் உதாரணம். மேலும், மைசூர்ப் பாகு என்ற சொல் தமிழகத்துக்குப் புதிதல்ல. நிறையப் பேர் பயன்படுத்துகிறார்கள் என்பதை நான் முன்னரே ஆதாரம் தந்துள்ளேன். அதனையே முதன்மைப்படுத்தி மற்றவற்றுக்கு வழிமாற்றுத் தரலாம்.--Kanags \உரையாடுக 08:22, 1 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]
சிவகோசரன், "மாவு" என்பது தமிழ்நாட்டில் பரவலாக வழக்கில் உள்ள சொல். ஆனால், இலங்கையில் இதற்கு ஈடாக "மா" என்ற சொல்லே பயன்படுகிறது. தமிழ் நாட்டிலும் எப்பகுதியிலாவது மா என்ற சொல் இப்பொருளில் பயன்படுகிறதா தெரியவில்லை. தமிழ்ப் பேரகராதியில் "மா" என்ற சொல்லையே முதன்மைப்படுத்தி உள்ளதாகத் தெரிகிறது. பேரகராதியில் இரு சொற்களுக்கும் பின்வருமாறு விளக்கங்கள் உள்ளன:
"மா&sup6; mā , n. prob. மாய்-. 1. Flour, meal, dough, powder; அரிசி முதலியவற்றின் மாவு. காயங் கொண்டன மாவிருந்து (மலைபடு. 126). 2. Dust; துகள். (W.) 3. [T. māvī.] After-birth, Secundines; நஞ்சுக்கொடி. (W.)"
"மாவு māvu , n. Flour. See மா&sup6;, 1".
பேரகராதியில் தொடர்புடைய பிற சொற்களுக்கு விளக்கம் தரும்போதும் "மா" என்ற சொல்லே பயன்படுகிறது. எடுத்துக்காட்டாக,
"நூறு² nūṟu , n. < நூறு-. [M. nūṟu, Tu. nūtra.] 1. Powder; flour; dust; மா, பொடி முதலி யன.",
"நுவணை nuvaṇai, n. 1. Minuteness, fineness; நுட்பம். (திவா.) 2. cf. நுணவை¹. Flour; இடித்த மா".
"மா" என்ற சொல்லே கூடுதல் சரிபோல் தெரிகிறது. ---மயூரநாதன் (பேச்சு) 08:27, 1 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]

மாவு என்ற சொல் தமிழ் நாட்டில் புழங்கும் சொல். இது மா என்ற சொல்லிலிருந்து பிறந்திருக்க வேண்டும் என்பது என் கருத்து. ஏனெனில், பண்டைய ஆக்கங்களில் மாவு என்ற சொல் இருப்பதாகத் தெரியவில்லை. நிற்க, மேற்படி தலைப்பு தொடர்பில் நான் இங்கே மற்றொரு கருத்தையும் கூறிக் கொள்ள விழைகிறேன். ஒரு மொழியிலிருக்கும் சொல்லுக்கு நிகரான தமிழ்ச் சொல் இருந்தால், நாம் தமிழ்ச் சொல்லையே முதன்மைப்படுத்த வேண்டும். இங்கேயு எமக்கு பொதுவான ஒரு சொல் இருக்கும் போது நாம் எதற்கு வேற்று மொழிச் சொல்லொன்றைப் பயன்படுத்த வேண்டும்? ஒரு பொருளுக்கு நல்ல தமிழ்ப் பெயரொன்று தமிழ் கூறும் நல்லுலகில் எங்கேயாவது ஒரு மூலையில் வழங்கினாலும், அப்பெயரை முதன்மைப்படுத்துவதில் தவறில்லையே. மாறாக, தமிழ் வழக்கில் இல்லாத ஏதேனும் பொருளாக இருந்தால் அதற்குரிய வேற்று மொழி இடுகுறிப் பெயரைப் பயன்படுத்தலாம்.--பாஹிம் (பேச்சு) 09:59, 1 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]

நளபாகா[தொகு]

சான்றுக் கட்டுரையில் "The cook used to be called nalapaka — he who makes the paka, or sugar syrup" என்ற கூற்று வருகிறது. இது சரியானதாகத் தெரியவில்லை. எனக்குக் கன்னடம் தெரியாது. அதனால் கன்னடத்தில் "nalapaka" என்பதன் பொருள் என்னவென்றும் தெரியாது. ஆனால், nalapaka என்பது சமசுக்கிருதத்தில் இருந்து பெறப்பட்டது என்று தோன்றுகிறது. தமிழிலும் "நளபாகம்" என்ற சொல்லைப் பயன்படுத்துவது உண்டு. இது "சமைத்த உணவு" என்பதைக் குறிப்பதாகப் பேரகராதி கூறுகிறது. தமிழில் "பாகம்" என்பது சமையல், சூடாக்குதல், பக்குவப்படுத்தல் போன்ற பொருள்களிலும் பயன்படுத்தப்படுவது உண்டு. எனவே nalapaka என்பது பொதுவாகச் சமையல் செய்வதால் ஏற்பட்ட பெயராக இருக்கலாமே அன்றிப் பாகு செய்வதால் ஏற்பட்ட பெயர் என்பது பொருத்தமாகத் தெரியவில்லை. எனவே இதைச் சான்றாகக் காட்டி இக்கட்டுரையில் சமையல் கலைஞர்கள் (சர்க்கரை) பாகு செய்வதால் நளபாகா என்று அழைக்கப்படுவர் என்று சேர்க்கப்பட்டுள்ள பகுதியை உரியவாறு மாற்றுவது நல்லது என்பது எனது கருத்து.

குறிப்பு: ஒரு சிறிய கட்டுரையில் இவ்வளவு கருத்துக்கள் எழுதுகிறார்களே என்று எவரும் குறைப்பட்டுக்கொள்ள வேண்டாம். ஒரு விடயத்தில் தொடங்கி நமது கருத்தைச் செலுத்தும்போது பல விடயங்கள் கவனத்துக்கு வருவது இயல்புதான். அதனால், இக்கட்டுரையில் தன் கருத்துச்சொல்ல ஏராளமாக உள்ளன என்றோ வேறு கட்டுரைகளில் எதுவும் இல்லை என்பதோ பொருளல்ல. அது மட்டுமன்றி நாமெல்லோரும் இவ்வாறான தருணங்களில்தான் பல விடயங்களைக் கற்க முடிகிறது. இது நமது அறிவை விரிவாக்கவும், பகிர்ந்து கொள்ளவும் உதவுவதுடன் தமிழ் விக்கியின் உள்ளடக்கங்களை மேம்படுத்தவும் வாய்ப்பாக அமைகிறது.---மயூரநாதன் (பேச்சு) 10:03, 1 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]

👍 விருப்பம்-தமிழ்க்குரிசில் (பேச்சு) 10:52, 1 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்-- mohamed ijazz(பேச்சு) 11:01, 1 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்--சிவகோசரன் (பேச்சு) 11:18, 1 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்--♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 11:25, 1 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மைசூர்_பாகு&oldid=3853365" இலிருந்து மீள்விக்கப்பட்டது