பேச்சு:மிகை திருத்தம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மிகை திருத்தம் எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia

//தமிழ் கற்கும் கன்னடத்தவர் அப்படியா என்பதைத் தவறுதலாக ஆமாவா? என்கின்றனர்//. தெலுங்கிலும் அப்படியா என்பது அவுனா ? எனவும் வழங்குவ்து குறிப்பிடத்தக்கது.(அவுனு - ஆம்). వినోద్  வினோத் 11:26, 5 ஏப்ரல் 2008 (UTC)

ஒருவேளை ஆமாவா? தமிழில் வழக்கொழிந்த ஒரு பயன்பாடாக இருக்கலாம். கன்னடத்தில் வெகுவாகப் பயன்படுத்தப்படும் மாடு என்ற வினைச்சொல் தமிழில் இல்லாதிருத்தலும் அதன் எதிர்மறைச் சொல்லான மாட்டேன் என்பது மட்டும் நிலைத்துள்ளது கண்டு மேலும் ஆய்ந்ததில் திருக்குறளில் பயன்படுத்தப்பட்டுள்ளதை அறிந்ததாக ஆய்வாளர் ஒருவர் தமிழிணைய மாநாட்டில் தெரிவித்தார். -- சுந்தர் \பேச்சு 12:34, 5 ஏப்ரல் 2008 (UTC)

புதுக்கோட்டையைச் சேர்ந்த எனது தோழி ஒருத்தி இப்படி "ஆமாவா" என்று கேட்பதுண்டு. சிங்கப்பூரில் உள்ள அவர்கள் உறவினர் வீட்டிலும் சிறியவர் முதல் பெரியவர் வரை இப்படி "ஆமாவா" என்பார்கள். அவர்கள் பல பத்தாண்டுகளுக்கு முன்பே சிங்கப்பூர் சென்று வாழ்ந்து வருபவர்கள். எனவே, இது நமது விட்டுப் போன தொல்வழக்கமாகவும் இருக்கலாமோ? இது அவர்கள் வீட்டுப் பழக்கமா, புதுகைப் பழக்கமா, சிங்கப்பூர் பழக்கமா என்று தெரியவில்லை. சில வீடுகளில் செல்லத்துக்கும் இது போல் புது விதமாகப் பேசிக் கொள்வதுண்டு என்பதால் ஒரு முடிவுக்கு வர இயலவில்லை :) --ரவி 20:04, 5 ஏப்ரல் 2008 (UTC)

பிற எடுத்துக்காட்டுகள்[தொகு]

கேட்பவரையும் உள்ளடக்கும் நமது, நாம் போன்றவற்றை மட்டுமே எங்கள், நாங்கள் என்று வர வேண்டிய இடங்களிலும் எனது கன்னட நண்பர்கள் தமிழ் பேசுகையில் கவனித்த நினைவு. கன்னடத்தில் இவ்வேறுபாடு இல்லையா?

இதேபோல் அஃறிணை உட்பட அனைத்து பால்களுக்கும் சுட்டுப்பெயர்களில் வேறுபாடு இல்லாமையால் இந்தி மொழியினர் அது, இது என மக்களைக் குறிப்பதை எவரேனும் உறுதிப்படுத்த முடியுமா?

"Grammatical article" என்று தனியாக பிரிவு இல்லாமையால் தமிழர்கள், சப்பானியர்கள் உட்பட பல மொழியினர் ஆங்கிலத்தில் தடுமாறுவதும் அறியப்பட்டதே. -- சுந்தர் \பேச்சு 14:43, 5 ஏப்ரல் 2008 (UTC)

ஈழத்து நண்பர்கள் எங்கள், நாங்கள் - என்பதை நமது, நாம் என்பதற்கு ஈடாகப் பயன்படுத்துவதைக் கவனிக்கலாம்--ரவி 20:04, 5 ஏப்ரல் 2008 (UTC)

ஆமாவா பற்றியும் ஆ என்னும் வினா ஒட்டைப் பற்றியும்[தொகு]

தமிழில் ஆமாவா என்றால் பேச்சு வழக்கில் "is it a yes?" என்று பொருள். ஆமாவா இல்லையா என்று சொல் என்று கூறுவதைக் கேட்டுள்ளேன். ஆம் என்பது ஆமாம் (ஆம் ஆம்) என்று இருபொருளில் வரும். வலியுறுத்தும் முகமாக இரட்டிப்பால் ஆமாம் (ஆம்+ஆம்) என்று வருவது ஒன்று. இரண்டாவதாக, சரியாம், தவறாம், வருவானாம், செய்வாளாம் என்று வருவது போல பிறன் மொழியாகவோ, பொதுப்படவோ கூறுமுகமாக இருப்பதாகும். எடுத்துக்காட்டாக, நாளைக்கு வருவாயா என்று கேட்டேன், அவன் ஆமாம் என்று சொன்னான். அதாவது ஆம் என்று அவன் சொன்னான் என்பது. தமிழில் ஆ (யா என்னும் வினாவலின் மாற்றுரு) என்று சேர்த்தால் வினையாவது ஒரு அருமையான எளிமையான வழி. மிகப்பல இடங்களில் எளிதாக வினா எழுப்ப முடியும். பெயர், வினை, உரிச்சொல் என்று எவ்வகைச் சொற்களுக்கும், சொற்றொடர் முழுவதுக்குமோ, அதன் பகுதிகளுக்கோ என்னும் வினாவொட்டைச் சேர்த்து வினா ஆகுதல் தமிழின் சொல்வண்மைக்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு. சிந்தையைத் தூண்டும் வழிகளில் வினா எழுப்ப உதவும். அறமன்றங்களிலும் நுட்பமாக வேறுபாடு விளங்க வினா எழுப்ப இயலும். மணிவேல் கத்தியால் குத்தி செந்திலைக் கொன்றான் என்னும் தொடரில் ஒவ்வொரு சொல்லுக்கும் பின்னே ஆ என்னும் வினா ஒட்டை சேர்த்து எண்ணிப் பாருங்கள். பொருள் மாறுபடுமாறு எத்தனை கேள்விகளைக் கேட்க முடியும் என்று எண்ணிப்பாருங்கள்.
  1. மணிவேல் கத்தியால் குத்தி செந்திலைக் கொன்றானா?
  2. மணிவேல் கத்தியால் குத்தி செந்திலையாக் கொன்றான்?
  3. மணிவேல் கத்தியால் குத்தியா செந்திலைக் கொன்றான்?
  4. மணிவேல் கத்தியாலா குத்தி செந்திலைக் கொன்றான்?
  5. மணிவேலா கத்தியால் குத்தி செந்திலைக் கொன்றான்?

இப்படியாக ஆ என்னும் வினா ஒட்டு துல்லியமாய் கேள்வி கேட்டு சிந்திக்க உதவும். தமிழை அறமன்றங்களில் போதிய அளவு பயன்படுத்தாதது வருந்தத்தக்கது.

[யா --> ஆ என்பது யார் --> ஆர், யானை--> ஆனை,, யாடு --> ஆடு, யாறு --> ஆறு என்பது போல]

--செல்வா 14:53, 5 ஏப்ரல் 2008 (UTC)--செல்வா 14:58, 5 ஏப்ரல் 2008 (UTC)

ஒட்டு இவ்வளவு செறிவு தருவதா? அருமை. அறமன்றங்களில் தமிழ் உலவத்துவங்க வேண்டும். வருவானாம் போன்ற சொற்களில் கூற்றின் சான்றுப்பின்புலம் விளங்குவது தமிழின் சிறப்புகளில் ஒன்று என பயனர்:வடக்கன் தகுந்த சான்றுடன் இங்கு சேர்த்துள்ளதை நினைவு கூறுகிறேன். -- சுந்தர் \பேச்சு 15:03, 5 ஏப்ரல் 2008 (UTC)
அறமன்றங்களில் தமிழைக்காண விரும்பும் நாம் பட்டிமன்றங்களில் தமிழ் குறைந்து ஆங்கிலம் மிகுந்து வருவதையும் கவலையுடன் நோக்க வேண்டியுள்ளது. மக்கள் விருப்பம் என்ற பெயரில் நடக்கும் இம்மொழிக்கொலைக்கு மக்கள் தொலைக்காட்சி விலக்காக இருப்பது ஆறுதல். -- சுந்தர் \பேச்சு 15:55, 5 ஏப்ரல் 2008 (UTC)

அரவிந்தின் சுட்டுக்கும் கருத்துக்கும் நன்றி, சுந்தர். --செல்வா 15:14, 5 ஏப்ரல் 2008 (UTC)

தமிழின் உணர்வு நுட்பம் காட்டும் கூற்றுகள் மிக உள்ளன. Evidentiality ஒரு நல்ல எடுத்துக்காட்டு. தமிழில் அ, இ, உ, எ என்னும் சுட்டுகள் தொன்றுதொட்டு தமிழில் சீராக இருப்பது தமிழின் அருமைகளில் ஒன்று. வருவானாம் என்பதுடன் ஒரு ஏகாரம் சேர்த்தால் தரும் உணர்வு வேறு வருவானாமே ; அல்லது ஆகாரம் ஓகாரம் சேர்த்தால் தரும் பொருள்களும் வேறு. வருவானாமோ, வருவானாமா. நீ வெளியூருக்குப் போய்ட்டு வருவியோ மாட்டியோ என்பதன் ஏக்கம் வேறு, மிரட்டும் முகமாக வருவியோ என்பது வேறு. ஓகாரம் வியப்பு, ஐயம் என்று பல உணர்வுகளைத் தரும் பின்னொட்டு. --செல்வா 15:29, 5 ஏப்ரல் 2008 (UTC)

அருமை! clitic, affix போன்ற தலைப்புகளில் கட்டுரைகள் வரைந்து அவற்றிற்கிடையேயான நுண்ணிய வேறுபாடுகளை விளக்க வேண்டும். -- சுந்தர் \பேச்சு 15:55, 5 ஏப்ரல் 2008 (UTC)
ஆமாவா? என்பது இலங்கையில் உள்ள இந்தியத் தமிழரிடையேன் பரவலாக பயன்படும் சொல்லாகும். பல்கலைகழகத்தில் இருந்த போது கூட இந்திய வம்சாவழித் தமிழ் மாணவரிடையே ஆமாவா இல்லையா? போன்றவைக் காணப்பட்டன.--Terrance \பேச்சு 16:39, 30 ஏப்ரல் 2008 (UTC)

தெரன்சு, நீங்கள் சொல்லியுள்ள சூழலில் வரும் ஆமாவா, தற்போதும் இந்தியாவில் இருக்கிறது. ஆனால், அப்படியா என்பதற்குப் பதில் ஆமாவா என்பது தான் இல்லை--ரவி 18:52, 30 ஏப்ரல் 2008 (UTC)

மிகுதிருத்தம் X மிகு திருத்தம்[தொகு]

மிகுதிருத்தம், மிகு திருத்தம் - எது சரி? முன்னதை migudhiruththam என்று வாசித்தால் ஏதோ பொருள் புரியா வேறு ஒற்றைச் சொல் போல் தோன்றலாம். ஒற்று மிகா இடங்களில் இது போல் சேர்த்து எழுதுவது சரியா? எங்கெங்கு எழுதலாம் என்பதற்கு விதி என்ன? --ரவி 20:07, 5 ஏப்ரல் 2008 (UTC)

மிகை திருத்தம் அல்லது மிகைபட திருத்தம் என்று சொல்வது பொருந்தும். --செல்வா 22:11, 5 ஏப்ரல் 2008 (UTC)

முதன்மை ஆய்வு[தொகு]

இக்கட்டுரையில் தந்துள்ள காட்டுகள் முதன்மை நூல்களான தொல்காப்பியம் போன்றவற்றின்வழி எண்ணிப் பார்த்து எழுதியுள்ளவை. இரண்டாம் நிலை ஆய்வு நூல்கள் எவற்றிலும் வெளிவந்திருந்தால் அவற்றைச் சான்றாகத் தருவது நலம். இது தவறுதலாகப் பிழையான சொந்த கருத்தை ஏற்றிவிடாமல் இருக்க உதவும். எவரிடமாவது இத்தகைய நூல்கள் இருந்தால் உதவுங்கள். -- சுந்தர் \பேச்சு 04:59, 11 ஜூலை 2009 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மிகை_திருத்தம்&oldid=812702" இலிருந்து மீள்விக்கப்பட்டது