பேச்சு:மருத்துவத் தமிழ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழில் அறிவியல் தேவையா? அது சாத்தியமா?[தொகு]

தமிழில் அறிவியல் முடியமா என்பதைப் பற்றி தமிழ் வழி மருத்துவக்கல்வி - சில கருத்துக்கள் என்ற இடுக்கையில் பயனர்:Mariano Anto Bruno Mascarenhas சில கருத்துக்களை முன்வைத்துள்ளார். அவர் ஒரு தமிழ் ஆர்வலரே. எனினும் யதார்த்தாமக பாக்கையில் தமிழ் மருத்துவக்கல்வி மாணவனுக்கு ஏன் நல்லதல்ல என்பதை விளக்கியுள்ளார். எ.கா மேற்படிப்பு செய்வது கடினம். மருத்துவம் ஒரு அறிவியல் துறை. இந்தக் கேள்வி அனைத்து துறைகளுக்கும் பொருந்தும். இதைப்பற்றிய ஒரு புரிந்துணர்வு எமக்கும் தேவை என நினைக்கிறேன்.

இன்று உலகில் அறிவியல் ஆங்கிலத்திலேயே பெரிதும் வளர்கிறது என்பது நாம் அறிவோம்.

 • இந்த அறிவியல் தமிழில் தேவையா?
 • அல்லது தமிழை இன்ப இலக்கிய மொழியாகவே வைத்திருக்கலாமா?
 • இன்ப இலக்கிய மொழியாக வைத்திருந்து கண்ட நன்மை என்ன?
 • தமிழை அறிவியல் மொழியாக்குவது சாத்தியமா?
 • யப்பான், இஸ்ரேல், உருசியா, ஜேர்மன், பிரேஞ் ஆகிய நாட்டோர் எப்படி தத்தம் மொழியில் அறிவியலைப் பேணக்கூடியதாக இருக்கிறது?
 • தமிழில் அறிவியல் சாத்தியமில்லை என்றால், தமிழை தொடர்ந்து பேண வேண்டுமா?
 • ஆங்கிலத்தை இணை மொழியாக கற்றாலும், தற்போதைய நிலையில் இது துறைசார் வல்லுனர்களின் ஆதிக்கத்தை வலுப்படுத்தாதா?
 • வணிக மயமாக்கப்படிருக்கும் மருத்துவத்துறை மக்களை அன்னியப்படுத்த அதன் மொழி பிரிவினை உதவுமல்லவா?
 • உடல் நலம் மருத்துவம் பற்றி பரந்த அறிவு தேவை இல்லையா?

- Natkeeran

செல்வா கருத்துக்கள்[தொகு]

மருத்துவம் மட்டுமல்ல, எந்தக் கல்வித்துறை அறிவும் தம் தாய்மொழியிலேயே இருப்பது சிறந்தது மட்டுமல்ல, அடிப்படைத் தேவை. ஆய்வுநிலையில், அறிவுத்துறையைப் பொறுத்து ஆங்கிலம் உட்பட பிற மொழிகளின் தேவை இருக்கலாம். மறுப்பதற்கு இல்லை. ஆனால் அது 10,000 இல் ஒருவருக்குத்தான் தேவை. அதுவும் எப்பொழுதும் ஆங்கிலமாகவும் இருக்காது. ஆங்கிலேயராகிய நியூட்டன் கூட இலத்தீன் மொழியில் ஒரு காலத்தில் எழுதினார். காலத்திற்கு காலம் ஒரு சில மொழிகள் செல்வாக்கு பெற்று இருக்கும். மிக அண்மையில் கூட பிரான்சிய மொழி முதன்மை வாய்ந்த மொழியாக இருந்தது. அதே போல டாய்ட்சு மொழியும் மிகுந்த செல்வாக்குடைய மொழியாக இருந்தது. வருங்காலத்தில் சீன மொழி செல்வாக்கு உடையதாக வளர்ந்து எழலாம் . ஆனால் இதற்காக தம் கல்வியை தங்கள் தாய்மொழியில் இருந்து மாற்றிக்கொண்டு இருக்க முடியாது. தம் தாய் மொழியில் இயலுமா என்ற கேள்விக்கு ஒரு சிறிதும் இடமே கிடையாது, அதிலும் தமிழ் மொழி போன்ற செம்மொழிகளில், 75 மில்லியன் மக்களுக்கு மேலானவர்கள் தங்கள் தாய்மொழியாகக் கொண்ட மொழியில் இயலுமா என்று கேட்பதா!! கட்டாயம் இயலும் என்பது மட்டுமல்ல, எம்மொழிக்கும் இளைக்காத வழியில் சிறப்பாக அனைத்து அறிவுச்செல்வங்களையும் ஆக்கலும் வளர்த்தெடுத்தலும் இயலும். ஆக்குவதும் வளர்த்தெடுத்தலும் அம்மொழியாளர்களின் கடமை. அவர்கள் ஆக்கவில்லை என்றால் அம்மொழியாளர்களின் இயலாமையே தவிர மொழியின் இயலாமையோ, தேவையின் இன்றியமையாமையோ அல்ல. கல்வி கற்கும் பொழுது மேலோட்டமான அறிவு (passive learning), கிளர்வுறும் உள்ளறிவு, இயங்கறிவு (operative, inner creative learning called active learning) என்றும் கூறுவதுண்டு. தாய்மொழியில் கற்கும் பொழுது அறிவு ஊறும். அறிவு ஆழம் பெறும். குறைந்த ஆற்றலில் அதிக அறிவு பெறுதல் இயலும். இவற்றையெல்லாம் விளக்கி இங்கு எழுதினால் மிக விரிந்துவிடும். நெடுங்காலமாக தாய்மொழிவழிக் கல்வியின் உயர்வு நன்கு உணர்ந்தறியப்பட்ட ஒன்று. யுனெஸ்கோ (UNESCO) வை சேர்ந்த ஜான் டேனியல், கல்வித்துறையின் துணைச் செயலாளர்-இயக்குனர் (John Daniel, Assistant Director-General for Education) கீழ்காணுமாறு ஒரு செய்தி ஊடகத்திலே கூறுகிறார்:
"Years of research have shown that children who begin their education in their mother tongue make a better start, and continue to perform better, than those for whom school starts with a new language. The same applies to adults seeking to become literate. This conclusion is now widely implemented, although we still hear of governments that insist on imposing a foreign language of instruction on young children, either in a mistaken attempt at modernity or to express the pre-eminence of a social dominant group."
ஆங்கிலேயர்களும் நாளும் வளர்ந்துவரும் அறிவியல் வளர்ச்சிகளை அக்கறையுடன் தங்கள் மொழியில் பதிவு செய்து வளர்த்து வருகின்றார்கள்- பொதுக் கட்டுரைகள் எழுதுவது முதலாக, சிறப்பு நூல்கள் எழுதுவது வரை. அவற்றை அவர்கள் செய்யவில்லை என்றால் ஆங்கிலம் தன் முதன்மையை இழந்துவிடும். எனவே நாமும் நம் தேவைக்கு ஏற்றார்போல ஆக்கிவருவது கட்டாயம் தேவை. வருங்காலத்தில் தானியங்கி-வழி பெரும்பாலானவை மொழி பெயர்க்கவும் கூடும். உழைப்பவர்களுக்கே உலகம்! எனவே உழைப்போம், அது நம் கடமை. கடைசியாக, ஒன்றைச் சொல்ல வேண்டும். எல்லாத் துறையைக் காட்டிலும் மருத்துவத்துறையின் அறிவைத் தமிழில் வழங்குவது மிகவும் எளிது ! --செல்வா 02:50, 21 ஏப்ரல் 2008 (UTC)

சுந்தர் கருத்துக்கள்[தொகு]

நன்றாகச் சொல்லியுள்ளீர்கள், செல்வா. இதைப்பற்றி ஆசுதிரேலியாவில் நடைபெற்ற ஆய்வரங்கு ஒன்றில் நல்ல சான்றுகோள்கள் கிட்டின. இணைப்பு கிடைத்தவுடன் இடுகிறேன். நேற்று கார்த்திக்பாலாவுடன் உரையாடிக் கொண்டிருந்தேன். தொடர்புடைய ஒரு செய்தி கிடைத்தது. அவர் தனது முனைவர் பட்டத்திற்காக இருசெல் (?) (diatoms) பாசிகளைப் பற்றி ஆய்வு செய்து கொண்டிருக்கிறார். அத்துறை பற்றிய ஆய்வுக் கட்டுரைகள் பெரும்பாலும் செருமன் மொழியில் உள்ளதாகவும் அதற்காக அம்மொழியைக் கற்று வருகிறார். அதேபோல் அவருக்குத் தெரிந்த அமெரிக்க ஆய்வர் ஒருவர் மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள உயிரினங்களைப் பற்றி ஆய்வு செய்வதற்காக தமிழ் கற்றதாகவும் குற்றாலக் குறவஞ்சியில் முன்னூறுக்கும் மேற்பட்ட உயிரினங்களைப் பற்றிய பயனுள்ள தகவல்கள் பதியப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார். அதேபோல் சித்த மருத்துவம் படிக்கும் தோழி ஒருவர் தமிழ்வழிக் கல்வி படித்திருந்தால் இப்போது உதவியாக இருந்திருக்கும் என்றார். திருமூலர் திருமந்திரம் முதலாக எண்ணற்ற தமிழ் நூல்களைக் கற்கின்றனர். -- சுந்தர் \பேச்சு 04:12, 21 ஏப்ரல் 2008 (UTC)

கோபி கருத்துக்கள்[தொகு]

பதினேழாம் நூற்றாண்டில் பிரெஞ்சு பன்னாட்டு மொழியாக இருந்தது. பின்னர் ஜெர்மன் குறிப்பிடத்தக்க வளர்ச்சி கண்டது. ஆனால் அதிக காலம் நீடிக்கவில்லை. ஆங்கிலம் அந்த இடங்களைப் பிடித்துக் கொண்டது. இரசிய மொழி குறிப்பிடத்தக்க முக்கியத்துவத்தைப் பெற்று முன்னேறிவந்த போதும் சோவியத்தின் வீழ்ச்சி அதனைப் பாதித்துள்ளது. மண்டறின் இப்பொழுது மிக முக்கிய மொழியாக மாறி வருகிறது. பல வட்டார வழக்குக்களையும் பேசும் சீனர்கள் மண்டறினைத் தம் முதன்மை மொழியாகக் கற்கிறார்கள். சீனர்கள் இருவர் சந்தித்தால் எப்பொழுதும் சீனமொழியிலேயே பேசிக் கொள்கிறார்கள்.

//தானியங்கி-வழி பெரும்பாலானவை மொழி பெயர்க்கவும் கூடும்.// ஆம், இது நிச்சயம் நடக்கும். அந்த வகையில் எண்மிய உலகில் நுழையாத மொழிகள் அனைத்தும் இன்னும் 200 ஆண்டுகளில் காணாமற் போய்விடும். இன்னும் நூறாண்டுகளின் பின்னர் ஆங்கிலத்துக்கு இருக்கும் குக்கியத்துவம் குறைந்து விடும். ஏனெனில் தானியங்கி மொழிபெயர்ப்புக்களின் மூலம் உடனுக்குடன் அவரவர் தத்தம் மொழிகளில் மாற்றிக் கொள்வார்கள்.

தானியங்கி மூலம் ஒரு சொடுக்கலில் மொழிமாற்றலாம் எனும் நிலையில் மூலங்களை உருவாக்கியவர்களுக்கான கொடுப்பனவைச் செலுத்தும் பொருளாதார வலிமையுடைய மொழிகள் மிகப் பலமான நிலையில் இருக்கும். இதுவே சீனத்துக்கு வரக்கூடிய பலம்.

மிக வேகமான முன்னேற்றங்களுடனான கால கட்டத்தில் வாழ்கிறோம். சற்றே சிரமப்பட்டுத்தான் தாக்குப் பிடிக்க வேண்டும்.\

இந்தத் தானியங்கியைச் சாத்தியப்படுத்த பெருமளவு திருத்தமான உள்ளடக்கம் எண்மிய வடிவத்தில் வேண்டும். இந்த உள்ளடக்கத்தை வைத்துக் கொண்டுதான் தானியங்கிக்கான உள்ளீடு நடைபெறும். அதனால் திருத்தமான உள்ளடக்கம் என்பது முக்கியம்; அதே நேரம் அதிக அளவிலும் வேணும். கலைச்சொல்லாக்கம் மிக மிக மிக முக்கியமானது.

ஏற்கனவே உள்ள உள்ளடக்கங்களை எண்மிய வடிவத்துக்கு மாற்றுதல், எல்லாத் துறைகளிலுமான கலைச்சொல்லாக்கம் போன்றவற்றுக்கு அதிக முக்கியத்துவமளிக்க வேண்டிய தேவை உணரப்பட வேண்டும்.

ஒரு கட்டுரையைப் புதிதாக எழுதுவது எவ்வளவு முக்கியமோ அந்தளவு முக்கியம் ஏற்கனவே இருக்கும் உள்ளடக்கங்களை அறிவதும் அவற்றை ஒட்டி மேலதிக அறிவை தமிழாக்குவதுமாகும். ஈழ- தமிழக கலைச்சொல் ஒப்பீடுகளும், ஆய்வு உள்ளடக்கங்களும், கலைக்களஞ்சியங்களும் இணையத்தில் மிக அவசியமானவை.

இதற்கான முயற்சிகளை இப்பொழுதே மேற்கொள்ளாமற் தாமதித்தாற் தவிக்க நேரிடலாம். ஏற்கனவே உள்ள உள்ளடக்கங்களுகான முக்கியத்துவம் தொடர்பில் நான் முன்னரும் தெரிவித்த கருத்துக்களை நினைவு கூருகிறேன். நன்றி. கோபி

புருனோ மஸ்கரனாஸ் கருத்துக்கள்[தொகு]

தமிழில் அறிவியல் தேவையா, அது சாத்தியமா என்ற கேள்விக்கு பதில் - ஆம். ஆம்

அதே போல் தமிழில் மருத்துவக்கல்வி தேவையா என்றால் - தேவைதான் தமிழில் மருத்துவக்கல்வி சாத்தியமா என்றால் - சாத்தியம் தான்.

இதில் எந்த சந்தேகமும் கிடையாது.

ஆனால் இத்துறை குறித்த சில விளக்கங்களை நான் தருகிறேன்

ஆய்வுநிலையில், அறிவுத்துறையைப் பொறுத்து ஆங்கிலம் உட்பட பிற மொழிகளின் தேவை இருக்கலாம். மறுப்பதற்கு இல்லை. ஆனால் அது 10,000 இல் ஒருவருக்குத்தான் தேவை என்பது சில துறைகளுக்கு வேண்டுமானால் பொருந்தலாமே தவிர மருத்துவத்துறைக்கு பொருந்தாது. தற்பொழுது தமிழகத்தில் உள்ள இளங்கலை இடங்கள் - சுமார் 1600 முதுகலை இடங்கள் - 914. இது 1: 10,000 அல்ல :)

அதே போல், இந்த 914லை 1600 உயர்த்த வேண்டும் என்று தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறோம். வளர்ந்த நாடுகளில் மருத்துவத்தை பொருத்த வரை இளங்கலை : முதுகலை = 1: 1

எனவே ”இந்தக் கேள்வி அனைத்து துறைகளுக்கும் பொருந்தும். இதைப்பற்றிய ஒரு புரிந்துணர்வு எமக்கும் தேவை என நினைக்கிறேன்.” என்றால் தயவு செய்து மருத்துவத்துறையை ஒரு மாதிரியாக எடுக்க வேண்டாம். அதே போல் நான் கூறிய (மருத்துவத்துறைக்காக நான் கூறிய கருத்துக்களை) பிற துறைகளுக்கு பொருத்த வேண்டாம் என்பது என் வேண்டுகோள்

ஏனென்றால் மற்ற (பெரும்பாலான) துறைகளுக்கு இத்துறைக்கும் பாரிய வேறு பாடு நடைமுறையில் உள்ளது (விஞ்ஞான ரீதியாக வேறுபாடு இல்லாவிட்டாலும் கூட)

1. பிற துறைகளைப்போலன்றி நான் ஏற்கனவே கூறிய இளங்கலை : முதுகலை 1:1 (தற்பொழுது அது 5:3 ஆக இருந்தாலும் கூட அதை 1:1 ஆக்க வேண்டும்

2. முதுகலையில் தமிழகத்தில் மட்டும் சுமார் 38 வகை இருக்கின்றது. அதற்கு மேல் சுமார் 20 சிறப்பு (டி.எம், எம்.சி.எச்) இருக்கிறது

தமிழக தவிர்த்த பிற இடங்களில் இன்னும் ஒரு 20 வகைப்படிப்புகள் இருக்கிறது

வேறு எந்த துறையிலும் இந்த அளவு இருக்குமா என்பது சந்தேகம்.

3. மற்ற துறைகளைப்போலன்றி இதில் கற்ற வேண்டிய பாடங்களின் அளவு சிறிதல்ல. உதாரணமாக இளங்கலை பொறியியல் கணினி படிப்பவர் 4 வருடங்களும் படிக்கும் மொத்த பக்கங்கள் (என் அறைநண்பனின் தம்பி படித்தது அது தான். அவன் புத்தகங்களை நான் பார்த்ததை வைத்து கூறுகிறேன்) மருத்துவத்துறையில் முதல் வருடமே படிக்க வேண்டும்.

4. மற்ற துறைகளைப்போலன்றி (கணினி விதிவிலக்கு) மருத்துவத்துறையில் ஒரு புத்தகம் 5 வருடங்களுக்கு மேல் உபயோகப்படாது. (உடற்கூற்றியல் போன்றவை 15 வருடங்கள் வரலாம். மருந்தியல், உடலியக்கவியல் 3 வருடங்கள் கூட அந்த புத்தகத்தை உபயோகிக்க முடியாது.

எனக்கு தெரிந்த வரை 1980ல் உள்ல சரித்திர புத்தகத்திற்கும், 2008ல் உள்ள சரித்திர புத்தகத்திற்கும் 1 சதவிதம் கூட வேறு பாடு இல்லை - காந்தி சுடப்பட்டது மாத்திரம் இடையில் எடுக்கப்பட்டது :) :) :) - அதே போல் 1980ல் உள்ள கணக்கு புத்தகத்திற்கும் இன்று உள்ள கணக்கு புத்தகத்திற்கும் 5 சதம் கூட வித்தியாசம் கிடையாது

மருத்துவத்துறையில் இது நடக்காது.

5. மேற்படிப்பில் சில பாடங்களில் 1 இடம் அல்லது இரு இடங்கள் மட்டும் தான். இப்படி இருக்க சுமார் 25000 பக்கங்களை மொழிபெயர்க்கிறோம் என்று வைத்துக்கொள்ளுங்கள். அந்த புத்தகம் 5 வருடங்களுக்கு மேல் உபயோகப்படாது. அதாவது ஒரு வருடத்தில் 25000 பக்கங்களை மொழிபெயர்த்தால் 4 வருடம் உபயோகிக்கலாம். அதன் பிறகு 4 வருடங்கள் கழித்து மீண்டும் ஒரு வருடத்திற்குள் 25000 பக்கங்களை மொழி பெயர்க்க வேண்டும்

அந்த துறையில் 20 பேருக்கு குறைவாக இருக்கும் பொழுது யார் மொழி பெயர்க்க போகிறார்.

சரி அவர் மொழி பெயர்க்கிறார் என்றே வைத்துக்கொள்ளுவோம். அவ்வாறு மொழி பெயர்க்கும் நேரத்தில் அவர் அறுவை சிகிச்சை செய்தால் எத்தனை அறுவை சிகிச்சை செய்ய முடியும் ???

எனவே ”இந்தக் கேள்வி அனைத்து துறைகளுக்கும் பொருந்தும். இதைப்பற்றிய ஒரு புரிந்துணர்வு எமக்கும் தேவை என நினைக்கிறேன்.” என்றால் தயவு செய்து மருத்துவத்துறையை ஒரு மாதிரியாக எடுக்க வேண்டாம். அதே போல் நான் கூறிய (மருத்துவத்துறைக்காக நான் கூறிய கருத்துக்களை) பிற துறைகளுக்கு பொருத்த வேண்டாம் என்பதும் என் வேண்டுகோள்

தமிழ் வழி மருத்துவக்கல்வி என்பதில் நடைமுறை சிரமங்கள் உள்ளன. அவை இத்துறைக்கே உள்ள சில பிரத்தியேக பிரச்சனைகள ஆகும். எனவே மற்ற துறைகளுக்கு சொல்லப்படும் கருத்துகளை வைத்து அந்த பிரச்சனைகள் தீராது. (மேலும் வளரலாம்).

நடை முறை சிரமங்கள் என்னவென்று பார்த்தால் நேரமின்னை ஆட்கள் இல்லாதது இரண்டும் தான்

12ஆம் வகுப்பு பௌதீக பாட புத்தகத்தை ஒருவர் ஒரு வாரத்தில் மொழி பெயர்த்தால் அதை 3 லட்சம் பேர் படிக்கலாம்

முதுகலை உடலியக்கவியல் புத்தகங்களை படிப்பவர்களை விட அதிகம் பேர் மொழிபெயர்க்க வேண்டிய நிலை உள்ளது. மேலும் அப்படி மொழி பெயர்க்க கூடி அளவு போதுமான நபர்கள் இல்லை என்பது (வருதப்பட வேண்டிய) ஆனால் நிஜ செய்தி

 1. மருத்துவத்துறை முதுகலை படிக்க வேண்டிய மொத்த பக்கங்கள் எத்தனை
 2. சில படிப்புகளை படிப்பது மொத்தம் எத்தனை பேர்

என்று பார்த்தால் நான் கூற வருவது புரியும்

மற்றபடி, இதில் நான் கூறிய கருத்துக்கள் மருத்துவத்துறைக்கு மட்டும்தான். அதுவும் மேலே உள்ள கணக்கினால் (arithmetic of number of pages vs number of students) மட்டுமே இதை எடுத்து பள்ளிக்கல்வியில் தமிழுக்கு எதிராக உபயோகிக்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கிறேன் புருனோ மஸ்கரனாஸ் 20:27, 21 ஏப்ரல் 2008 (UTC)