பேச்சு:பிரித்தானிய அலகுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இம்பீரியல் = imberial. இம்ப்பீரியல் = imperial. ஆனால், தமிழில் ம்ப் என்று வராது. இது போன்ற சூழ்நிலைகளில், ஒலிப்புத் துல்லியம் எதிர் தமிழ் இலக்கணம் என்பதில் எதற்கு முன்னுரிமை கொடுக்கலாம் என்று நடைக்கையேட்டில் வழிகாட்டினால் நன்றாக இருக்கும்--இரவி (பேச்சு) 20:43, 9 மார்ச் 2012 (UTC)

ஒலிப்புத் துல்லியத்தை விட இலக்கணத்திற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாக இருந்து வருகிறது.--Kanags \உரையாடுக 21:41, 9 மார்ச் 2012 (UTC)
என்னுடைய நினைப்பும் இலக்கணத்துக்கு முன்னுரிமை கொடுப்பதே, ஆனால் இம்பீரியல் என்று எழுதிவிட்டு இம்ப்பீரியல் என்று வல்லின பகர ஒலியுடன் ஒலித்தால், தமிழின் மிக அருமையான, மிக மிகத் தேவையான ஒலிப்பொழுக்கம் கெட்டுவிடுகின்றது. அதாவது தமிழில் சூழல் சார்ந்தே வல்லினங்கள் வலித்து ஒலிக்குமா மெலிந்து ஒலிக்குமா என்பதை முடிவு செய்ய முடியும். இவை மிகவும் ஒழுக்கமான முறையில் வருவன. எனவேதான் தமிழில் B-P, D-T, G-K, J-Ch, Dh-Th ஆகியவற்றைக் குறிக்கவும் அவற்றுள் ஏற்படும் நுட்ப வேறுபாடுகளைக் குறிக்கவும் கசடதப ஆகிய ஐந்தே எழுத்தைப் பயன்படுத்திச் சிக்கனமும், ஒரு வகையான அறிவுடைய போக்கையும் காகக் இயலுகின்றது. தமிழ் மொழியானது ஒலிப்பொழுக்கம் மிக்க மொழி. எழுதுவது ஒருமாதிரியும், ஒலிப்பது வேறு மாதிரியும் அமைந்தால், அடிப்படைப் பண்பே கெட்டுவிடும். எனவே இம்ப்பீரியல் என்று வல்லினப் பகரத்துடன் ஆங்கிலத்தில் ஒலிக்கும் ஆனால் தமிழில் இம்பீரியல் (imbiiriyal) என்றுதான் ஒலிக்கும் என்று துணிவாகவும் தெளிவாகவும் கூறுதல் வேண்டும். இதில் இழுக்கொன்றும் இல்லை. ஒவ்வொரு மொழியாளரும் இதனைச் செய்கின்றார்கள் ஆங்கிலத்தில் பேசும் பொழுது வரும் ஒலி தமிழில் வரவேண்டுவதில்லை!!! மணி என்பதை மேஅனி என்றுதானே ஆங்கிலேயர் ஒலிக்க இயலுகின்றது. அது போலவே. தமிழ் என்னும் மொழிப்பெயரையும் டே*அமில் (டே* = பல்லண்ண டகரம், தமிழ் போன்ற மேலண்ண (retroflex) டகரம் அல்ல. டே*அ என்பதும் æ என்பதைக் குறிக்க) என்றுதானே கூற இயலுகின்றது. அதுபோலத்தான் இதுவும். --செல்வா (பேச்சு) 21:58, 9 மார்ச் 2012 (UTC)

சிறீதரன், ம்ப் என்று எழுதுவது இலக்கணத்தைக் கெடுக்கிறது என்று இம்பீரியல் என்று எழுதினால், அதனை 100க்கு 99 பேர் imperial என்றே வாசிப்பார்கள். இதுவும் செல்வா சுட்டியுள்ளது போல் ஒரு வகை இலக்கண முரண் தான் ! எனவே தான், இதனை எப்படி அணுகுவது என்று வினவினேன். நன்றி--இரவி (பேச்சு) 22:04, 9 மார்ச் 2012 (UTC)

இரவி, நாம் இம்பீரியல் என்றே எழுதலாம். அதனை imbiiriyal என்றுதான் தமிழில் ஒலிக்க வேண்டும் என்று வலியுறத்தலாம் (இதைப் பல களங்களிலே செய்ய வேண்டியிருக்கலாம்). இதுவே சிறந்தது. ஒப்பன் (open) முதலான இடங்களில் ஐயம் திரிபற எழுத இயலும். அங்கேயே தமிழ் மொழியின் இயல்பறியாத ஊடகத்தார்கள் ஓபன் என்று எழுதித் தமிழின் ஒலிப்பொழுக்க விதிகளை மிகவும் குலைக்கின்றார்கள். இப்படியான குழப்பங்களுக்குக் காரணம், கல்வி நிறுவனங்களும், அரசு நிறுவனங்களும் தாங்கள் நிலைநிறுத்த வேண்டிய கருத்துகளை நிலை நிறுத்தாததாலேயே. ஊடகங்களும் போதிய அக்கறையுடனும், பொறுப்புணர்வுடனும் இயங்காமல் இருப்பதால் மக்கள் குழம்புகின்றார்கள். இம்பீரியல் என்றே எழுதலாம் என்பது என் கருத்து. --செல்வா (பேச்சு) 22:16, 9 மார்ச் 2012 (UTC)

//இரவி, நாம் இம்பீரியல் என்றே எழுதலாம். அதனை imbiiriyal என்றுதான் தமிழில் ஒலிக்க வேண்டும் என்று வலியுறத்தலாம் (இதைப் பல களங்களிலே செய்ய வேண்டியிருக்கலாம்). // செல்வா, ஆங்கில ஒலிப்பு நாட்டம் உள்ள சமூகத்தில் இது நடைமுறைக்கு ஒத்து வருவதாகத் தோன்றவில்லை. இம்ப்பீரியல் என்று எழுதினால் ஏன் ப் போட்டீர்கள் என்று சிலர் கேட்கக்கூடும். ஆனால், நாளடைவில் அதற்கான தேவையை உணர்ந்து கொள்வார்கள். ஆனால், இது எல்லா இடங்களிலும் தமிழ் இலக்கண விதிகளை மீறும் போக்குக்கு இட்டுச் செல்லும். எடுத்துக்காட்டுக்கு, ஏன் மெய்யெழுத்தில் சொல்லைத் தொடங்கக்கூடாது என்று கேட்கக்கூடும். தமிழ் மொழிக் கல்வி முறை சீராக இருந்திருந்தால் சமூகத்தின் அனைத்துக் களங்களிலும் அதன் பயன் இருந்திருக்கும். நான் ஊருக்குச் செல்லும் போதும் வேளைகளில் என் தமிழாசிரியரைக் கண்டு பேசி மகிழும் அளவுக்கு எனக்கு மிகச் சிறந்த தமிழாசிரியர்கள் கிடைத்தார்கள். ஆனால், அவர்கள் கூட தமிழில் ஒலிப்பு ஒழுங்குகளை முறையாகக் கற்றுத் தந்த நினைவு இல்லை. இலங்கையில் தமிழகத்தை விடச் சிறப்பாக ஒலிப்பு முறைகளைக் கற்றுத் தருகிறார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிக்கத் தொடங்கிய பிறகே, தமிழின் பல்வேறு கூறுகளை அறிந்து கொள்ள முடிந்திருக்கிறது.--இரவி (பேச்சு) 22:24, 9 மார்ச் 2012 (UTC)

முழுக்க ஆங்கில வழியத்தில் படித்திருந்தாலும் கூட Imperial என்பது பொருளுடைய ஆங்கிலச் சொல் எனச் சட்டென உறைக்கவில்லை :( தலைப்பை பிரித்தானிய அலகுகள் அல்லது பேரரச அலகுகள் என்று மாற்றலாமா?--இரவி (பேச்சு) 07:09, 28 நவம்பர் 2015 (UTC)