உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:பளிங்கு அரண்மனை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இலங்கையில் Water Tanks தண்ணீர்த் தாங்கிகள் என்று அழைக்கப்படுகிறதா? தமிழகத்தில் நாங்கள் தண்ணீர்த் தொட்டிகள் என்றே அழைக்கிறோம். மேலும், Tank - தாங்கி ஒலிப்பொற்றுமை வியக்க வைக்கிறது. --Sivakumar \பேச்சு 12:58, 28 நவம்பர் 2007 (UTC)[பதிலளி]

சிவா, புதுகைப் பக்கம், இதை டாங்கி என்பார்கள் :) தாங்கி நல்ல சொல் தான்--ரவி 13:16, 28 நவம்பர் 2007 (UTC)[பதிலளி]

அதுமட்டுமல்ல. போரில் தாக்குதல்களைத் தாங்கிக்கொண்டு தாக்க வல்ல தாங்கி (tank) என்னும் போர் ஊர்திக்கும் பொருந்தும். :) தாங்க்கி (தாங்கி-தாக்கி) என்று கூறலாமோ? --செல்வா 16:35, 28 நவம்பர் 2007 (UTC) தொடர்பான நினைவுகள்: நீர் தேங்கி நிற்கும் குட்டைகள். தேங்கி? நீர் தேக்கி வைக்கும் தேக்கி. --செல்வா 16:52, 28 நவம்பர் 2007 (UTC)[பதிலளி]
தண்ணீர்த் தொட்டி என்பது சிறிய தேக்கிகளைக் (மனிதனால் ஆக்கப்பட்டவை) குறிக்கும். தண்ணீர்த் தாங்கிகள் என்பவை அளவில் பெரியவையான தேக்கிகளைக் குறிக்கும். வீடுகளுள் உள்ளவை தண்ணீர்த் தொட்டி என்போம்.--Kanags 20:35, 28 நவம்பர் 2007 (UTC)[பதிலளி]

அரண்மனை, மாளிகை

[தொகு]

Palace, Fortress, Castle இவற்றுக்கு இணையான தமிழ்ச்சொற்கள்?--Sivakumar \பேச்சு 15:15, 28 நவம்பர் 2007 (UTC)[பதிலளி]

Palace = அரண்மனை, Fort/Fortress = கோட்டை, Castle = அரணகம், கோட்டையகம், கோட்டைமனை (கோட்டை போல அரண் செய்யப்பட்ட வீடு) --செல்வா 16:41, 28 நவம்பர் 2007 (UTC)[பதிலளி]

மாளிகை என்பதற்கு இணையான ஆங்கிலச் சொல்?--சிவக்குமார் \பேச்சு 20:03, 5 டிசம்பர் 2008 (UTC)

மாளிகை என்பதும் Palace தான். அரண்மனை என்பது பொதுவாக அரசருடைய அரண் செய்ப்பட்ட இருப்பிடத்திற்குப் பெயர். அரண் (பாதுகாப்பு) செய்யப்பட்ட அரசர்மனை. மாளிகை என்பது பெரிய, விசாலமான இடம் உள்ள அறைகளுடன் உள்ள பெரிய வீடு. மாடமாளிகை என்னும் சொல்லில் வரும் மாடம் என்பது பெரிய வீடு என்னும் பொருள் தருவது. மாடு என்றால் இடம் என்று பொருள். தலைமாட்டிலே என்றால் தலை வைத்துப் படுக்கும் இடத்தில் (தலை வைத்து படுக்கும் பக்கத்தில்) என்று பொருள். தலைமாட்டிலே, கால்மாட்டிலே என்பன பேச்சு வழக்கில் இன்றும் உள்ள சொற்கள். இந்த மாடு என்பது மாடம் என்று ஆகியது. இடமானம் என்றால் பெரிய வீடு என்று பொருள். கன்னிமாடம், புலிமுக மாடம், மணிமாடம், பொன்மாடம் என்பன வழக்கு. மாள்-->மாண்--மாட் என்று ஆகும். மாண்பு, மாட்சி என்பது மேன்மை என்னும் பொருள் தருவது. மாடு என்றால் செல்வம் என்பதனையும் நிலைவில் கொள்ளல் வேண்டும். மாடு = இடம், செல்வம்! மாடமாளிகை. மாண்டார் என்றால் இறந்தார் என்று பொருள், ஆனால் உயர்வு எய்தினார், மேலே போய்விட்டார், மாண்பு எய்தினார், மாட்சிமை எய்தினார் என்று பொருள். இறத்தல் என்னும் சொல்லும் கூட மீறுதல் "கடந்து போதல்", தாண்டிப்போதல் என்று பொருள். வழக்கு இறந்து போதல் என்றால் வழக்கு மீறி, தாண்டிப் போதல் என்று பொருள். அற்றுப்போதல் என்பது இல்லாது போதல் (ஆனால் இறத்தல் என்பதற்கு இதுவல்ல பொருள்). எனவே இறத்தல் என்பது ஒரு மங்கல வழக்குச்சொல். மாள் என்பதற்கு உருண்டு திரண்டு இருத்தல் என்னும் பொருளும் உண்டு (பிங்), ஆனால் சாதல் என்பது பொதுவாக அறியும் பொருள். உண்மையாக மாட்சிமை அடைதல், மாண்பு எய்துதல் என்று பொருள். எனவே மாளிகை என்பது மேன்மை மிக்க பெரிய இடம் என்று பொருள். --செல்வா 21:36, 5 டிசம்பர் 2008 (UTC)
நன்றி செல்வா--சிவக்குமார் \பேச்சு 08:32, 6 டிசம்பர் 2008 (UTC)
இறப்பெனும் ஆழமான கருப்பொருளைக் குறிக்கும் சொல்லிலும் இத்தனை ஆழமா? வியப்பாக இருக்கிறது. மங்கல வழக்கு என்று நீங்கள் குறிப்பிட்டது ஒரு வகை தகுதிச் சொல்வழக்கு என்ற பொருளிலா? -- சுந்தர் \பேச்சு 05:39, 6 டிசம்பர் 2008 (UTC)

இடக்கர் அடக்கல் என்று சொல்ல முடியாது. ஆனால் இறத்தல் என்பதன் சொற்பாங்கு வேறு சாதல் என்பதன் சொற்பாங்கு வேறு. இறத்தல் என்பது சாதல் என்னும் பொருளில் ஆண்டாலும், இறத்தல் என்பதன் பொருள் கடந்து போதல், எல்லை கடத்தல் என்பதாகும். எண்ணிறந்த, அளவிறந்த என்னும் சொல்லாட்சிகளிலும், இறந்த என்பது மீறிப்போன, வரம்பு மீறிய என்னும் பொருளில் ஆள்வது. இங்கே பொருள்கள் 4, 5 ஐப் பார்க்கவும். நாலடியாரில் வரும் ஒரு பாடல்

உறக்கும் துணையதோர் ஆலம்வித் தீண்டி
இறப்ப நிழற்பயந் தாஅங்கு -- அறப்பயனும்
தான்சிறி தாயினும் தக்கார்கைப் பட்டக்கால்
வான்சிறிதாப் போர்த்து விடும்.

இப்பாடலில் வரும் இறப்ப நிழற் பயந்தாங்கு என்னும் சொற்றொடரில் "இறப்ப" என்னும் சொல் மிகுந்த, நிறைந்த நிழல் தருவதைப் பற்றி கூறுகின்றது. காதல் இறப்ப என்றால் அன்பு மிகுந்து என்று பொருள். அளவிறந்து புகழக்கூடாது என்றால் அளவு மீறிப் புகழக்கூடாது என்று பொருள். பாலை பாடிய பெருங்கடுங்கோவின் அகநானூற்றுப் பாடல் ஒன்றில்

..விரல்நுதி சிதைக்கும் நிரைநிலை அதர,
பரல்முரம்பு ஆகிய பயம்இல் கானம்
இறப்ப எண்ணுதிர் ஆயின்- 'அறத்தாறு
அன்று' என மொழிந்த தொன்றுபடு கிளவி
அன்ன ஆக என்னுநள் போல,

என்று வருகின்றது. அதில் "பரல்முரம்பு ஆகிய பயமில் கானம் இறப்ப எண்ணுதிர் ஆயின்" என்பதன் பொருள் பரற்கற்களால் ஆன கல்மேடாகிய கடுநிலத்தில் (முரம்பு = கல்மேடு கரடுமுரடான நிலம்), பழமரங்கள் போன்ற ஏதுமற்ற, பயனற்ற (பயம் இல்; பயம் = பயன்) காடு. அதனைக் கடந்து செல்ல எண்ணுவீராகில் (இறப்ப = கடந்து செல்ல)". எனவே இறப்ப என்பதற்குக் கடந்து செல்ல, மீறிப்போக, மிகுந்து உள்ள என்னும் பொருள்கள் உண்டு.--செல்வா 06:37, 6 டிசம்பர் 2008 (UTC)

விளக்கத்துக்கு நன்றி செல்வா. -- சுந்தர் \பேச்சு 07:30, 6 டிசம்பர் 2008 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பளிங்கு_அரண்மனை&oldid=315554" இலிருந்து மீள்விக்கப்பட்டது