பேச்சு:கார்பனீராக்சைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இதன் தலைப்பு கார்பன்-டை-ஆக்சைடு என்று இருத்தல் நலம். பிறைக்குறிகளுக்குள் பிற வழக்குகளைக் குறிக்கலாம். கரிம-இரு-உயிர்வளிமம் என்றும், கரிமக்காடி வளிமம் என்றும் கூறலாம். கரியமிலம் என்பது கரி+அமிலம் என்பதே; தற்காலத்தில் அமிலம் என்பதை காடி என்கிறார்கள் தமிழ்நாட்டில். அமிலம் என்பதற்குப் புளிமம் என்பது என் பரிந்துரை!. --செல்வா 22:51, 11 மே 2007 (UTC)

கட்டுரைத் தலைப்பு குறித்த செல்வாவின் கருத்தை நானும் ஆமோதிக்கிறேன்.--Sivakumar \பேச்சு 07:22, 13 மே 2007 (UTC)

டை என்பதற்கு நல்ல தமிழ்ச் சொல் (இரு அல்லது ஈர்) இருக்க, இங்கு அதனை மறுப்பது ஏன் என்பது எனக்கு விளங்கவில்லை. ஈழத்தில் 7ம் வகுப்பில் இருந்து மாணவர்கள் முதல் இவ்வாறே கற்பிக்கப்பட்டு வருகிறது. இந்தத் தலைப்பைப் படிக்கும் எந்தத் தமிழருக்கும் இந்த எளிய சொல் விளங்காதா? செல்வா //இதன் தலைப்பு கார்பன்-டை-ஆக்சைடு என்று இருத்தல் நலம்// என்கிறார். காரணம் என்ன என்பதை அவர் விளக்கவில்லை. தமிழகத்தில் இவ்வாறே எழுதிப் பழகியாகி விட்டதா? நல்ல சொற்களை மற்றவர்களிடம் இருந்து பெறுவதில் என்ன தயக்கம்? மன்னிக்க வேண்டும். வேண்டுமானால் கரியமில வளிமம் என்பதை முதன்மைப் படுத்தலாம்.--Kanags 07:36, 13 மே 2007 (UTC)

கனகு (இப்படி அழைப்பதில் தவறில்லையே?), செல்வா இரு என்ற தமிழ் வேர்ச்சொல்லைத் தவிர்ப்பதற்காகக் கூறவில்லை என்று எண்ணுகிறேன். பகுதி தமிழாகவும் மற்றது ஆங்கிலமாகவும் உள்ளதைத்தான் தவிர்க்க விரும்புகிறார் என்று நினைக்கிறேன். ஏனெனில் அவருடைய ஒரு பரிந்துரை "கரிம இரு உயிர் வளிமம்" என்பதைக் கவனிக்கலாம். மற்றபடி நல்ல தமிழ் சொற்பயன்பாட்டை எங்கிருந்து வேண்டுமானாலும் கற்று ஏற்கலாம் என்பதில் எனக்கு முழு உடன்பாடே. ஈழத்திலும் தமிழ்நாட்டிலும் மட்டுமல்ல ஃபிஜி நாட்டில் இருந்தால் கூட நான் ஏற்றுக் கொள்வேன். -- Sundar \பேச்சு 15:13, 13 மே 2007 (UTC)

வேதியியல் சேர்வைகளைத் தமிழில் எழுதுவதில் தனித் தனியாகப் பார்க்காமல் ஒட்டு மொத்தமாகப் பார்க்கவேண்டும். கரியமில வளிமம், உயிர் வளிமம் போன்ற சொற்கள் பொதுப் பயன்பாட்டுக்குப் வைத்துக் கொள்ளலாமேயன்றி அறிவியல் தேவைகளுக்குப் பயன்படுத்துவதில் சிக்கல்கள் உள்ளன. Carbon dioxide கரியமில வளிமம் என்றால் Carbon monoxide ஐ எப்படித் தமிழாக்குவது? வேதியியல் தனிமங்களின் பெயர்களை அறிவியல் தேவைகளுக்காகத் தமிழில் எழுதும்போது பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது என்றுதான் நான் நினைக்கிறேன். இங்கே அப்பெயர்கள் அத் தனிமங்களுக்கான சொந்தப் பெயர்களாகக் கொள்ளப்படுகின்றன. சேர்வைகளுக்குப் பெயரிடும்போது இணைப்புச் சொற்களாக வரும் di, mono, tri போன்ற பொதுச் சொற்களையும் ஆங்கிலத்திலேயே வழங்கவேண்டும் என்பதில்லை. ஈர், ஓர், மூ எனத் தமிழில் பயன்படுத்துவது புரிதலை அதிகப்படுத்தும். காபனீரொட்சைட்டு (காபன் - ஈர் - ஒட்சைட்டு), காபனோரொட்சைட்டு (காபன் - ஓர் - ஒட்சைட்டு), முந்நைத்திரோ தொலுயீன் (மூ - நைத்திரோ - தொலுயீன் போன்ற பெயர்கள் கூடிய விளக்கம் கொண்டவை. காபன் என்பதைக் கரிமம் என்று சொல்லலாம் தான். ஆனால் காபனேட்டு என்பதை எப்படித் தமிழாக்குவது. இதற்குக் கரிமத்தோடு தொடர்புடைய சொல்லொன்று காணப்படாவிட்டால் கரிமமும், காபனேட்டும் தூர விலகித் தொடர்பு அற்றனபோல் ஆகிவிடும். எனவே, ஒரு வேதியியல் தனிமத்துக்கோ, சேர்மத்துக்கோ தமிழில் பெயரிட முயலும்போது தொடர்புடைய பிற சேர்மங்களை எவ்வாறு சொல்லப்போகிறோம் என்பதையும் சிந்திப்பது அவசியம். Mayooranathan 18:35, 13 மே 2007 (UTC)

வேதியியல் சொற்களை ஆங்கில மொழி வழி எழுதுவதே சிறந்தது என்பது என் கருத்து. இணையான தமிழ்ச் சொற்களையும் குறித்து வருவதில் தவறில்லை. வரவேற்கப்படவும் வேண்டும். தமிழில் பொதுத்தரம் வேண்டுவது நம் எல்லோருக்கும் நல்லது. (1) கார்பன் என்பதை காபன் என்று எழுதுவதும், ஆக்சைடு என்பதை ஓட்சைட்டு (ஓட்சைடு கூட இல்லை!!) என்று எழுதுவதும் பொதுத்தரம் பேணுவதற்குத்தடையானது. (2) எல்லா வேதியியல் சொற்களுக்கும் (இவை 58 மில்லியனுக்கும் மிகுந்தவை) தூய தமிழ்ப்பெயர்களை, குழப்பம் இல்லாமல் அமைக்க முடியும், ஆனால் அது தேவயானதா, நடைமுறைக்கு உகந்ததா என சிந்தித்தல் வேண்டும்.(3) di, bi, tri, mono, tetra, penta, hexa முதலான சொற்களைத்தமிழில் பெயர்த்து குறிக்கலாம் தான், ஆனால் அவைகளை அறிவியல் பொதுப்பயன்பாடு கருதி, kilo, mega, nano போன்ற சொற்கள் போல் கருதி தத்து எடுத்துக்கொள்வது நல்லது. trans, cis என்று இன்னும் பற்பல வேதியியல் முன்னொட்டு, பின்னொட்டுகள் உண்டு. இவைகளை தமிழில் விளக்கி, அப்படியே எடுத்தாள்வதுதான் நல்லது. இவைகளுக்குப்ம் பொருத்தமான தமிழ் ஆக்கங்களையும் குறித்து வருவதில் தவறில்லை. (4) Nitro, Toluene முதலிய சொற்களை நைட்ரோ, டொலுயீன் என்றோ நைத்திரோ, தொலுயீன் என்றோ அழைக்கலாம், ஆனால் அதே போல tri-nitro என்பதை டிரை-நைட்ரோ என்று அழைப்பதே சிறந்தது. முந்நைத்திரோ என்பது தேவை இல்லாத கலப்பு. டிரை என்பதை ட்ரை என்றுகூட சொல்லலாம். இடையே பிரிப்புக்கோடு (hyphen) இட்டு எழுதுவதும் பழக்கமாகக் கொள்ளலாம். carbon monoxide என்பதை கார்பன்-மோனோ-ஆக்சைடு என்று எழுதுவதே மேல். கூடவே கரிம-ஓர்-உயிவளிமம் என்றும் கூறி வரலாம். ஆக்ஸிஜன் என்பதை உயிர்வளி என்று கூறும் பொழுது, கரிம-ஓர்-உயிர்வளி-யம் என்றும் கூறலாம். சில வேதியியல் பொருட்கள் ஒரே எண்ணிக்கையில் சில தனிமங்களைக் கொண்டிருந்தாலும் வெவ்வேறு வகையில் பிணைப்புற்று வெவ்வேறு பண்புகள் கொண்டும் இருக்கும். எனவே தனிமங்களின் எண்ணிக்கையை மட்டும் அடிப்படையாகக் கொண்டு பெயர் சூட்டல் எல்லா இடங்களிலும் பொருந்தி வராது. எடுத்துக்காட்டாக நியோ-பென்ட்டேன் (neopentane), பென்ட்டேன் (pentane) ஆகிய இரண்டும் ஒரே தனிம வேதியியல் வாய்பாடு தான் கொண்டுள்ளன = c5H12. ஆனால் அவை வெவ்வேறு பண்புகள் கொண்டவை. நியோ-பென்ட்டேனின் கொதிநிலை 9.5 செல்சியஸ், ஆனால் பென்ட்டேனனின் கொதிநிலை 36.1 செல்சியஸ். எனவே பென்ட்டேனனை நீள் ஐங்கரிம-பன்னிரு-நீரதை என்றும், நியோ-பென்ட்டேனை சதுர ஐங்கரிம-பன்னிரு-நீரதை என்றும் குறித்து வரலாம். என்றாலும் பொது வழக்காக நியோ-பென்ட்டேன் என்றும் பென்ட்டேன் என்றும் குறிப்பதே நல்லது. (5) alkane, alkene, alkyne, sulfide, sulfate முதலான வேதியியல் வேறுபாடுகளுக்கு ஏற்றார்போல தமிழிலும் பின்னொட்டு மரபுகள் வளர்த்தெடுக்கலாம், ஆனால் அவை தேவைதானா என எண்ணுதல் வேண்டும். இவைகளுக்கு அழகாகவும் பொருத்தமாகவும் தமிழில் பின்னொட்டுகள் ஆக்க இயலும் என்பதில் எனக்கு எள்ளளவும் ஐயம் இல்லை. ஆனால் தேவை இல்லை என்பதே (பொது அறிவியல் பயன்பாடு கருதி) என் நிலைப்பாடு. --செல்வா 23:21, 13 மே 2007 (UTC)--செல்வா 23:35, 13 மே 2007 (UTC)

செல்வா, விளக்கத்துக்கு நன்றி. //di, bi, tri, mono, tetra, penta, hexa முதலான சொற்களைத்தமிழில் பெயர்த்து குறிக்கலாம் தான், ஆனால் அவைகளை அறிவியல் பொதுப்பயன்பாடு கருதி, kilo, mega, nano போன்ற சொற்கள் போல் கருதி தத்து எடுத்துக்கொள்வது நல்லது// என்று கூறியிருக்கிறீர்கள். அது எப்படி di/tri போன்றவற்றுடன் kilo/mega போன்றவறை ஒப்பிடுகிறீர்கள்? மயூரநாதன் குறிப்பிட்டது போல di/mono/tri போன்றவை பொதுவான ஆங்கிலச் சொற்கள். இவற்றை அப்படியே கையாளவேண்டும் என்பதை எந்த விதத்தில் நியாயப்படுத்துவீர்கள்? அவற்றுக்கிணையான (குழந்தைக்கும் விளங்கக்கூடிய) எளிய தமிழ்ச் சொற்கள் இருக்கின்றனவே.--Kanags 08:38, 14 மே 2007 (UTC)
di, tri, tetra, penta ஆகியவும், kilo, mega, nano போன்ற எண்ணுப்பெயர்கள்தாம் (nano முதலானவை கீழ்வாய் எண்கள் முன்னொட்டு, mega முதலானவை மேல்வாய் எண்கள் முன்னொட்டு, di, tri, tetra முதலானவை சிறிய மேல்வாய் எண்களின் முன்னொட்டு.). ஒரு கலைச்சொல்லில் ஒரு சிறு பகுதிமட்டும் தமிழ்ப்படுத்தி வழங்குவதால் பயன் இல்லை. கார்பன்-டை-ஆக்சைடு என்பது கூட்டாக ஒரு கலைச்சொல்லாக எண்ணப்படுவது. பொது வழக்கத்திற்கு ஏற்றது. கூடவே தமிழில் கரிம-ஈருயிர்வளி என்றும் வழங்குவதை நான் மிகவும் வரவேற்கிறேன். கரிமக்காடி வளிமம் என்றோ கரியமில வளிமம் என்றோ கூறியும் வரலாம். ஆனால் பொதுச்சொல்லாக கார்பன்-டை-ஆக்சைடு என்று இருப்பதே நல்லது. இதனை கார்பன் ஈராக்சைடு என்றோ, கரிம ஈராக்சைடு என்றோ சொல்வதும் தவிர்க்கப்படவேண்டியவை. காபன், ஒட்சைட்டு என்று அழைப்பது வேறு செய்தி, பிரிதொரு கருத்துப்பிணக்கு. பொதுத்தரம் பேண வேண்டியது மிகவும் தேவையான ஒன்று என்பதை நாம் எல்லோரும் உணர வேண்டும். --செல்வா 13:57, 14 மே 2007 (UTC)
மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் இது பற்றி உரையாடி இருந்தாலும் இது குறித்து ஒரு முடிவுக்கு வந்த மாதிரி தெரியவில்லையே. கார்பன்-டை-ஆக்சைடு என்றே பாவிக்கலாம் என்பதே எனது கருத்தும். நிச்சயமாக காபனீரொட்சைட்டு என்பது எனக்குப் புரியவில்லை. Carbon-ஐக் கார்பன் என்றே எழுதலாமே ஏன் காபன் என்று ரகர மெய்யை விழுங்க வேண்டும்? ஒருவேளை இலங்கையில் அவ்வாறான பயன்பாடு இருக்கலாம். ஆனால், கார்பன், கார்பனேட்டு என்று உச்சரிப்புக்கு அருகிலேயே எழுதினால் புரிந்துகொள்வது எளிதாக இருக்கும். --இரா.செல்வராசு 02:00, 6 ஜூன் 2010 (UTC)

அடிப்படை வேதியியல் பாடங்கள்[தொகு]

10ஆம் வகுப்புக்கான அடிப்படை வேதியியல் பாடங்கள் தமிழில் உள்ளன. கேரளக் கல்வித்துறை வெளியீடுகள் அருமையாக தமிழில் வெளியிட்டுள்ள பாடங்களைப் பாருங்கள் இங்கே --செல்வா 04:01, 14 மே 2007 (UTC)