பேச்சு:கட்டபொம்மன்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புதுக்கோட்டையார் பிடித்துக் கொடுத்து

24.9.1799 இல் புதுக்கோடை அரசர் விஜயரகுநாத தொண்டைமான் எழுதி ய கடிதம் 29.9.1799 இல் கலெக்டர் லூஷ’ங்டனுக்கு கிடைத்தது. கும்பெனியாரை வாழ்த்தித் துவங்கும் அந்த கடிதம் தரும் விபரம் இதோ. மலைகளிலும் குன்றுகளிலும் எல்லாப் பக்கமும் என்னுடைய படையினரை பகைவர்கள் மறைந்திருக்கும் இடத்தை கண்டுபிடிப்பதற்காக நிறுத்தி வைத்திருந்தேன். இறைவனின் கிருபையாலும், கம்பெனியாரின் செழிப்பினாலும், மற்றும் என்னுடைய நல் அதிர்ஷ்டத்தாலும், சிவகங்கை தாலூகாவிலுள்ள கலியாப்பூர் என்ற ஊரிலுள்ள காட்டிலே, கட்டபொம்மனும் அவனது தம்பி ஊமத்துரையும் மற்றும் அவர்களது உறவினர்கள் ஆக ஏழு பேர்களுடன் இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டு, நேற்று இரவு எனது படைகளை அனுப்பி அவர்களைச் சூழ்ந்து கொண்டு மிகுந்த எச்சரிக்கையுடனும், முயற்சியுடனும் அவர்கள் கைது செய்யப்பட்டனர். (சர்தார் திருக்களம்பூர் முத்துவைரவ அம்பலக்காரர் தலைமையில் சென்ற படை கட்டபொம்மனைப் பிடித்தது. இவரைப் புகழ்ந்து பாடிய கும்மிப்பாடலும் இருக்கிறது).

உயிரைவிடத் துணிந்த உத்தமன்

கலியாப்பூர் காட்டிலே கைது செய்யப்பட்டபோது தன்னைத் தானே கொன்று உயிரை மாய்த்துக் கொள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் முன் வந்தான். ஆனால் எனது படையினர் கட்டபொம்மனது கரங்களைக்கட்டி கைது செய்து கொண்டு வந்து விட்டார்கள். கட்டபொம்மனைப் பற்றி உங்களுக்கு மிகவும் நன்றாகத் தெரியும் அவரைப் பாதுகாப்பாக ஒரு நாள் வைத்துக் கொள்வது கூட மிகவும் கடினமான காரியமாகும். ன்று அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டதிலிருந்து கட்டபொம்மன் புதுக்கோட்டை அரசரின் ஆட்களால் பிடிக்கப்பட்டபோது உயிரை விட அங்கேயே முன் வந்த செய்தியையும், ஒரு நாள் கூட அவரைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்வது கடினம் என்ற கடிதவரிகளால், கட்டபொம்மனின் பேராற்றலையும் நாம் நன்கு உணர முடிகிறது. கட்டபொம்மன் கைதுசெய்யப்பட்ட போது அவர்களிடம் ஐந்து பட்டாக் கத்திகள், நான்கு பிச்சுவாக்கள், ஒரு கத்தி, ஒரு பாக்குவெட்டி ஆகியவையும் இருந்தன. கட்டபொம்மன் கைது செய்யப்பட்டதை அறிந்ததும் மேஜர் பானர்மென் உடனே கட்டபொம்மனையும் அவரைச் சேர்ந்தவர்களையும் தகுந்த பாதுகாப்புடன் மதுரையிலிருக்கும் கமாண்டிங் ஆபிசரிடம் ஒப்படைக்க கோரி 29.9.1799 இல் கயத்தாற்றிலிருந்து கொண்டு, ஜோசய்யாவெப் என்ற அரசுச் செயலாளருக்கு அவசரக் கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்திலேயே மேஜர் பானர்மென் தனது உள்ளக் கிடக்கையை வெளிப்படுத்தியுள்ளார். கும்பெனி அரசுக்கு எதிராக கலகம் விளைவிக்கும் பாளையக்காரர்களுக்கு மரண தண்டனை விதித்திட எனக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தை மேற்கொள்ள கட்டபொம்மு நாயக்கரை மதுரையிலிருந்து கயத்தாற்றிற்கு கொண்டுவர எனது ராணுவத்தினரின் ஒரு பிரிவை அங்கு அனுப்பி வைக்கிறேன். உங்களின் முந்தையப் பிரகடனப்படி கட்டபொம்மு நாயக்கர் அரசுக்கு எதிராகக் கலகம் விளைவித்தவர் என்று சூழ்நிலைகளினால் குறிப்பாக சுட்டிக்காட்டப்படுவதால் அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதை எனது கடமையாகவே கருதுகிறேன் என்று குறிப்பிட்டிருப்பதன் மூலம் கட்டபொம்மனை தூக்கிலே போடுவது என்று ஏற்கனவே பானர்மென் முடிவு செய்துவிட்டது புலனாகிறது.

கயத்தாற்றில் கட்டபொம்மன்

வெள்ளைக் கும்பெனிப் படையினரால் மதுரையிலிருந்து 5.10.1799 இல் வீர பாண்டிய கட்டபொம்மன் கயத்தாற்றிற்கு கொண்டு வரப்பட்டார்.

அங்கு திருநெல்வேலி பாளையக்காரர்கள் எல்லோரையும் வரவழைத்து ஒரு கூட்டத்தைக் கூட்டத் தயாரானார் மேஜர் பானர்மென். 16.10.1799 இல் மந்தமான பனி படர்ந்த வேளையில் கருமேகங்கள் சூழ்ந்து கொண்டிருந்த வேளையில் தென்பகுதியைச் சேர்ந்த பாளையக்காரர்கள், குறிப்பாக திருநெல்வேலி சீமையைச் சேர்ந்தவர்களும் நூற்றுக் கணக்கில் கூடியிருந்தனர். அவர்களுக்கு கௌரவமான இருக்கைகள் அளிக்கப்பட்டு, மற்றைய பாளையக்காரர்கள் அங்கு வரிசை வரிசையாக உட்கார்ந்திருந்தனர். சூரியன் உதயமாகி நாழிகை ஏழானது; சிறையிலிருந்த கட்டபொம்மனை படையினர் மிகுந்த பாதுகாப்புடன் அழைத்து வந்தனர். (வீரபாண்டிய கட்டபொம்மனை சிறை வைத்திருந்த அந்தக் கட்டிடம் இன்றும் கயத்தாற்றில் உள்ளது; இடிந்து பாழாகி வரும் அந்த வரலாற்றுச் சிறப்பிற்குரிய கட்டிடத்தை தமிழக அரசு பாதுகாத்து நினைவுச் சின்னமாக்கிட வேண்டும்). மேஜர் பானர்மென் அங்கு விசாரணையைத் துவங்க ஆரம்பித்தார். ராபர்ட் ட்யூரிங் (Robert Turing), ஜார்ஸ் ஹ“யஸ் (George Hughes), பிர்கட்டு (Pirkett), பிரௌன் (Brown) முதலிய தளகர்த்தனர் பானர் மென்னுடைய இருபக்கமும் அமர்ந்திருந்தனர். குதிரைப்படைகளும், காலாட்படையினரும் டர்னர் (Turner) டல்லாசு தலைமையில் அணிவகுத்து நின்று கொண்டிருந்தனர். 16.10.1799 காலை 10 மணிக்கு கயத்தாற்றில் விசாரணை துவங்கியது.

இராமலிங்க முதலியார்

தொண்டை மண்டிலம் திருமணம் என்ற ஊரில் பிறந்தவர் இராமலிங்கமுதலியார்; மேஜர் பானர்மெனுக்கு (துபாஷி) மொழி பெயர்ப்பாளராகப் பணியாற்றியவர். கும்பெனியாரின் அந்தரங்க நம்பிக்கைக்குரிய இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்துஸ்தான், பிரெஞ்சு, ஆங்கிலம் முதலிய மொழிகளை அறிந்தவர். இவரே அங்கு முதலில் சாட்சியமளித்தார். 5.9.1799 இல் கட்டபொம்மனை பாஞ்சாலங்குறிச்சி கோட்டைக்குள் சென்று அவர் சந்தித்துப் பேசிய விபரங்களை அங்கு எடுத்துச் சொன்னார். கட்டபொம்மன் சரணாகதி அடைய வேண்டும் என்று வற்புறுத்தியதையும் அதற்கு கட்டபொம்மன் மறுப்புத் தெரிவித்தது பற்றியும் குறிப்பிட்டார். இவ்வாறே துபாஷ் இராமலிங்க முதலியாருடன் சென்ற ஹவுல்தார் இபுராகீம்கானும், ஹரிக்கார்சாமி அய்யரும் சாட்சியமளித்தனர்.

கெடி வேட்டூர் நாயக்கர்

5.9.1799 இல் கோட்டைக்குள் கட்டபொம்மனுடன் இருந்த கட்டபொம்மனின் மாமனார் கெடி வேட்டூர் நாயக்கரும், அங்கு சாட்சியாக விசாரிக்கப்பட்டார். சாட்சிகளின் விசாரணை முடிந்ததும் கட்டபொம்மன் மீது கீழ்க்கண்ட குற்றச்சாட்டுக்கள் படிக்கப்பட்டது.

குற்றச்சாட்டுக்கள்

1. கும்பெனிக்குரிய கிஸ்தியை செலுத்தவில்லை. 2. கலெக்டர் லூஷிங்டன் விடுத்த உத்திரவுகளுக்கு சரியான பதில் தரவில்லை. தம்மை வந்து கண்டுபோகும்படி பலமுறை அவர் விரும்பி அழைத்தும் அந்த உத்திரவினை கட்டபொம்மன் உதாசினப்படுத்தினார். 3. கும்பெனியாரின் பொறுப்பிலுள்ள திருவைகுண்ட தானியக் கிடங்கை கொள்ளையடித்த தானாபதி பிள்ளையை பிரிட்டிஷ் அதிகாரிகளிடம் கட்டபொம்மன் ஒப்படைக்க மறுத்தார். 4. சிவகிரி பாளையத்தைத்தாக்கி அந்தப் பாளையத்திலுள்ள மக்களையும், விவசாயிகளையும் கட்டபொம்மன் கொடுமைப்படுத்தினார். 5. தனது இராணுவ நடவடிக்கைகளினால் தென் பிராந்திய பிரிட்டிஷ் ராணுவத்தைச் சேர்ந்த கும்பெனியின் படை அதிகாரிகள் பலருடைய கொலைக்கு கட்டபொம்மன் காரணமாக இருந்தார்.

பதில்கள்

கட்டபொம்மன் மீது சுமத்தப்பட்ட இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்லும்படி கட்டபொம்மனிடம் கேட்கப்பட்டது. அப்போது இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு சுருக்கமாக பதில் தந்தார் கட்டபொம்மன் அவரது பதில்கள் துபாஷிஇராமலிங்கமுதலியாரால் மொழிபெயர்க்கப்பட்டு பானர்மென்னுக்குச் சொல்லப்பட்டது.

கட்டபொம்மனின் முழக்கம்

1. நான் இது வரையில் யாருக்கும் கிஸ்தி செலுத்தியதில்லை பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரர் எவருக்கும், அவர் எவ்வளவு பெரியவராக இருந்தாலும், எப்பொழுதும் அவருக்கு கிஸ்தி செலுத்த வேண்டும் என்று நினைக்கவே இயலாது. ஆகவே நான் கிஸ்தி செலுத்த மறத்தேன். என்னுடைய நண்பர்களானாலும், பகைவர்களானாலும் யாரும் என்னை அவமரியாதை குற்றஞ்சுமத்திட முடியாது. கும்பெனி சர்க்காரின் அதிகாரிகள் தங்களுடைய கடமைகளின் நிமித்தம் என்னை வந்து பார்த்து, என்னோடு உரையாடி இருக்கிற பொழுதெல்லாம், அவர்கள் மிகுந்த மரியாதையுடன் நடத்தப்பட்டிருக்கிறார்கள். அவர்களை அழைத்துக் கேட்டால் இதனை அவர்களே உறுதிப்படுத்துவார்கள்.

நான் பணியாளன் அல்ல

திருநெல்வேலிக்கு வந்து கலெக்டர் அலுவலகத்திலே கலெக்டரைப் பார்ப்பதற்கு காத்திருக்க வேண்டும் என்ற உத்திரவினால் நான் மிகுந்த சினங் கொண்டேன். நான் கலெக்டரின் சொந்தப் பணியாளர் அல்ல. 2. காட்டிக் கொடுப்பது கூடிய காரியமல்ல 3. திருவைகுண்டத்தில் என்னுடைய மானேஜர் தானாபதி பிள்ளை செய்தது தவறுதான் என்பதை ஒப்புக் கொள்கிறேன். கும்பெனியாரின் தானியக் கிடங்கை கொள்ளையடித்தது சரியான காரியமல்ல. ஆனால் அந்த வேளையில் மிகுந்த வறட்சி நிலவியது. மழையும் பொய்த்துப் போயிற்று. யாருக்கும் ஒருவிதமான தானியங்களும் கிடைக்கவில்லை. ஆதலால் தானியக் கிடங்கைப் பலவந்தமாகத் திறந்து மக்களை அங்கிருக்கும் தானியங்களை எடுத்துச் செல்ல அவர் அனுமதித்திருப்பார் என்று நம்புகிறேன். என்னுடைய அனுமதி இல்லாமல் இந்தக் காரியத்தை செய்ததற்காக அவர் என்னிடம் மன்னிப்புக் கேட்டார் கம்பெனியாரால் தண்டிக்கப்பட்டு விடுவோம் என்று என்னுடைய பாதுகாப்பையும் நாடினார். நான் அவருக்குப் பாதுகாப்பு நல்கினேன். தன்னிடம் அடைக்கலம் புகுந்த ஒரு மனிதனை காட்டிக் கொடுப்பது கட்டபொம்மு நாயக்கரால் ஆகக்கூடிய காரியமல்ல. அதற்குப் பின்னும் கொள்ளையடிக்கப்பட்டதாகச் சொல்லப்பட்ட எழுநூறு கோட்டை தானியங்களுக்குரிய 3300 ரூபாயுடன் அபராதம் எழுநூறும் சேர்த்து நாலாயிரம் ரூபாயினைக் கொடுப்பதற்கு நான் முன் வந்தேன். ஆனால் கும்பெனியார்கள் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. 4. தங்களுடைய விவசாயிகள் மற்றும் குடிமக்களால் ஏற்படும் கலவரங்களை ஒடுக்க எனது உதவியை என்னுடைய சகோதரப் பாளையக்காரரான சிவகிரிப் பாளையக்காரர் உட்பட பலர் நாடியிருக்கிறார்கள். அவர்கள் அழைத்ததின் பேரில் அவர்களுக்கு உதவிட நான் சென்றிருக்கிறேன். கும்பெனி சர்க்கார் அவர்களுக்கு ஒருபோதும் உதவியதும் இல்லை. அவர்களைப் பற்றி கவலைப் பட்டதும் இல்லை. 5. எனதருமை பாஞ்சாலங்குறிச்சியை முதன் முதலாக தாக்க வந்தது கும்பெனியாரின் தளகர்த்தர்களாகிய நீங்களே. என் போன்ற பண்பும், சுயமரியாதையுமுள்ள ஒரு மனிதன் என்ன செய்வான் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்? சரண் அடைந்து விடுவானா? அல்லது உங்களது நிபந்தனைகளை ஏற்றுக்கொள்வானா?.... பின்னதாக எனது அருமைக் கோட்டை உங்களால் முற்றுகை இடப்பட்டு உங்களது பீரங்கிகள் எனது கோட்டைச் சுவர்களுக்கு நேராக குறிபார்த்து வைக்கப்பட்டிருந்த நேரத்தில், இத்தகைய சூழ்நிலைகளை திருச்சிராப்பள்ளியில் இருக்கும் கும்பெனியாரின் உயர் அதிகாரிகளை நேரில் சென்று சந்தித்து விரிவாக விளக்க வேண்டுமென்பதற்காக எனது விசுவாசமுள்ள உதவியாளர்களுடன் ரகசியப்பாதை வழியாக தப்பிச் சென்றேன். ஆனால் நான் எனது மக்களை நிர்கதியாக கைவிட்டு விட்டு ஓடிவிட்டதாக கேவலமான வதந்தியைப் பரப்பினீர்கள். என்னை உயிருடன் பிடிப்பதற்காக என் தலைக்கு ஒரு விலையை நிர்ணயித்தீர்கள் நான் காட்டிக் கொடுக்கப்பட்டு பிடிபடுவதற்கு உதவிட புதுக்கோட்டை தொண்டைமான், எட்டயபுரம் பாளையக்காரர்கள் மற்றவர்களுக்கு அந்த ஆசை காட்டுதல் போதுமானதாக இருந்தது.

எதிரியே நீதிபதியா?

இதற்கிடையில் பாஞ்சாலங்குறிச்சியில் கிடைத்தது அத்தனையும் கொள்ளையிட்டீர்கள். கொள்ளையிட்ட அந்தக் கும்பலுக்கு நீங்களே தலைமை தாங்கிச் சென்றீர்கள். அப்படிப்பட்ட நீங்களே இன்று என்மீது குற்றஞ் சுமத்துபவராகவும் ஆகி இருக்கிறீர்கள். (இரு தரப்பினர் போரிட்டபோது, ஒரு தரப்பிற்கு தலைமை தாங்கிய ஒருவரே (பானர்மென்) மற்றொரு தரப்பை (கட்டபொம்மனை) விசாரிக்கும் நீதிபதியாக இருந்த விந்தைச் செயல், யுத்த கால வரலாற்றில் நடைபெற்றிராத ஒரு சம்பவமாகும்) என்னை வாதாடச் சொல்கிறீர்கள்? இதில் வாதாட என்ன இருக்கிறது? இது தான் தலைவிதி; நான் இதனை ஒத்துக் கொள்கிறேன். நீங்கள் இஷ்டப்படுவது போல் என்னை என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள் என்றார் கட்டபொம்மன்.

சதி ஆலோசனை

தலைமை தாங்கிய பானர்மென் வீரபாண்டிய கட்டபொம்மனைப் பார்த்து மேலும் ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா? என்று திரும்பவும் கேட்டபோது, மௌனம் சாதித்தார் கட்டபொம்மன். விசாரணை நடத்திய அந்தக்குழு சிறிது களைப்போடு, அவர்களுடைய குறிப்புக்களைத் திருப்பிப் பார்த்துக் கொண்டது, அவர்களுக்குள் சிறிது ஆலோசனையும் செய்தது.

திட்டமிட்டபடி தூக்கு

அப்போது மதிய நேரமாயிற்று, மாலையின் நிழல்கள் சென்னைக்குச் செல்லும் அந்த நெடுஞ்சாலையின் மீது படியத் துவங்கியது. காவலுக்கு நின்ற வீரர்களின் குதிரைகள் திமிர ஆரம்பித்தன; சலசலத்தன. கரிய மேகங்கள் வானத்தில் மெல்ல நகர்ந்து கொண்டிருந்தன. கட்டபொம்மனின் பதிலுக்குப் பின்னர் தலை நரைத்து ஓய்ந்து போன உருவமாக மேஜர் பானர்மென் நிசப்த நிலையில் தோற்றமளித்தார். பின் ஏற்கனவே திட்டமிட்டபடி கட்டபொம்மனுக்கு தூக்கின் மூலம் மரண தண்டனை விதித்திட வேண்டுமென்ற தீர்ப்பினை எழுதி, அத்துடன் இந்தத் தண்டனை இன்றைய தினத்திற்குள் நிறைவேற்றப்பட வேண்டு என்றும் குறிப்பிட்டார். உடனிருந்த மற்ற வெள்ளை அதிகாரிகள் அங்கிருந்து எழுந்து சென்றார்கள். பின் ஏற்கனவே திட்டமிட்டபடி கட்டபொம்மனுக்கு தூக்கின் மூலம் மரண தண்டனை விதித்திட வேண்டுமென்ற தீர்ப்பினை எழுதி, அத்துடன் இந்தத் தண்டனை இன்றைய தினத்திற்குள் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார். உடனிருந்த மற்ற வெள்ளை அதிகாரிகள் அங்கிருந்து எழுந்து சென்றார்கள்.உடனடியாக கும்பெனிப் படையினரும், கும்பெனியின் விசுவாச ஊழியர்களும் கட்டபொம்மனை பொறுப்பேற்றுக் கொண்டார்கள். திட்டமிட்டபடி தூக்குத் தண்டனையை நிறைவேற்றிடத் தயாரானர்கள்.

கட்டைப் புளியமரத்தில

ஏற்கனவே தூக்குமரமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த கட்டை புளிய மரத்தடிக்கு கட்டபொம்மனை அழைத்துச் சென்றார்கள்.ஒரு படை வீரன் மரத்தின் மீது ஏறினான். ஒரு கிளையிலிருந்து ஒரு கயிற்றைக் கட்டி அந்த முடிச்சை கீழே தொங்க விட்டான். மற்றொரு வீரன் ஒரு சிறிய ஏணிப்படியை அந்த தொங்கும் கயிற்றுக்கு அருகில் தள்ளி வைத்தான். தற்காலிகமாகச் செய்யப்பட்ட அந்த ஏணியின் ஐந்து படிகளில் கட்டபொம்மன் ஏறிச் சென்றார். நினைவுகளில் தன்னை மறந்தவராக, தொண்டையை கனைத்துக் கொண்டு தன்னைச் சுற்றிலுமிருந்த கூட்டத்தை கடைசியாகப் பார்வையிட்டார் கட்டபொம்மன். அதன் பின் அந்த தூக்கு முடிச்சைக் கையிலெடுத்து தனது கழுத்தை அதற்குள் தானே செலுத்திக் கொண்டார். வெள்ளைக்காரர்களுடன் சுதேசி வீரர்களும் கட்டபொம்மனைச் சுற்றி பேச்சற்ற நிசப்தமாக நின்று கொண்டிருந்தனர்.

ஓ! முருகக் கடவுளே

கட்டபொம்மன் இறுதியாக மிகுந்த சப்தமிட்டு ஓ! முருகக் கடவுளே என்று திருச்செந்தூரின் முருகனை நோக்கிக் கூறிவிட்டு, தன் கீழுள்ள படியைத் தானே உதைத்துத் தள்ளினார். கழுத்து நெறிக்கப்பட்டு, கயிறு கழுத்தைச் சுற்றி இறுகியது. இரண்டு மனி நேரம் தொங்கிய உடல் இரண்டு மணிநேரம் எல்லோரும் பார்க்கும் வண்ணம், கட்டபொம்மனது உடல் அந்த மரத்தில் தொங்கியது. முந்தைய இரவில் கட்டபொம்மனுடன் சிறையிலிருந்த தம்பி ஊமத்துரையும், அவரது சொந்தப் பணியாளரும் கட்டபொம்மனின் இறுதிக்கிரியைகள் செய்வதற்காக அழைத்து வரப்பட்டார்கள். அருகிலிருந்த இடிந்து போன ஒரு கோயிலுக்குப் பக்கத்தில் காய்ந்து போன மரக்கிளையில் ஒரு பெரிய நெருப்பு உண்டாக்கப்பட்டது.

முப்பத்தொன்பது வயதில் மாப்புகழ்

39 வயது நிரம்பிய தங்களது தலைவனுக்காகக் காத்துக் கொண்டிருந்த அந்தக் கூட்டத்திலிருந்த ஆண்களும், பெண்களும் அழுது கொண்டிருந்தார்கள். சுற்றியிருந்த கூட்டத்தினர் தலைவணங்க நின்று கொண்டிருக்க கட்டபொம்மனது உயிரற்ற உடல் எரியூட்டப்பட்டது.

வீரமங்கை ஆர்க்ஜோன்

பதினைந்தாம் நூற்றாண்டில் வெள்ளையரை எதிர்த்து வீரப்போர் புரிந்த பிரெஞ்சு தேச வீர மங்கை ஆர்க் ஜோனை மக்கள் அறிய பொது இடத்தில் உயிரோடு தீ வைத்துக் கொளுத்திய வெள்ளையர், கயத்தாற்றில் கட்டபொம்மனது உடலுக்கும் வெள்ளையர்கள் கொள்ளி வைத்தனர். அன்று மூண்ட தீ, நூற்றி ஐம்பது ஆண்டுகள் கழித்து அவர்களை அழிக்கும் ஊழித்தீயாக சுதந்திரத் தீபமாக ஜொலிக்கப் போகிறது என்பதனை அப்போது இறைவனைத் தவிர எவர் தான் அறிந்திருக்க முடியும்?.

இம்மாமன்னன் வராலாற்றைப் படித்தால் நல்உள்ளங்களின் மனம் கணக்கத்தான் செய்யும் தன்னாட்டிற்காக தன்னுயிற் ஈன்ற ஈடில்லா இவன் புகழ் ஓங்குக. மக்கள் மத்தியில் இவன் புகழ் பரப்பிய கலைத்தாயின் மூத்த மகன் தியாகி சின்னையா மன்றாயரின் நடுமகன் நடிகர் திலத்தின் புகழும் சேர்ந்தோங்குக.

தொகுப்பு : இரத்தினவேல மேற்கொண்டார்

பக்கவகை[தொகு]

வீரபாண்டிய கட்டபொம்மன் ஒரு பாண்டியன் அல்ல. சரியான பக்கவகைக்கு இது மாற்ரப்படவேண்டும். ஆனால் இக்கட்டுரையை எந்தப் பக்கவகையில் சேர்ப்பதென்று எனக்குத் தெரியவில்லை. மேலே காணப்படும் கட்டுரையின்படி இவர் நாயக்கர் வம்சத்தைச் சேர்ந்தவராக இருக்கக்கூடும். இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்கள் பக்கவகையிலும் சேர்த்துக்கொள்ளலாம். Mayooranathan 14:06, 4 மே 2006 (UTC)[பதிலளி]

நான் பகுப்பு:குறுநில மன்னர்கள் என்ற பக்கவகையுள் இட்டுள்ளேன். விடுதலைப் போராட்ட வீரர்கள் என்ற பகுப்பு பொருத்தமாயிராது. அவர் இந்தியா விடுதலை இயக்கத்தில் இருக்கவில்லை, ஆங்கிலேயரின் கிழக்கிந்துய நிறுவனத்தின் ஆதிக்கத்தை மட்டுமே எதிர்த்தார். -- Sundar \பேச்சு 06:51, 5 மே 2006 (UTC).[பதிலளி]

// கட்ட பொம்மன் பாண்டியன் என்று எங்குமே சொந்தம் கொண்டாட வில்லை. இவர்களை தமிழக விடுதலை போராட்ட வீரர்கள் என்ற தலைப்பில் சேர்க்கலாம். இந்தியாவில் விடுதலைப் போராட்டம் தொடங்குவர்தற்கு அரைநூற்றாண்டு முன்பே இங்கே விடுதலைப் போரினை தொடங்கியவர்கள் தமிழகத்தின் வீரஞ்செறிந்த மன்னர்கள். ///

மிகை நவிற்சி[தொகு]

கட்டுரையில் "கயத்தாற்றில் தூக்கில் வீரமரணத்தைத் தழுவிக் கொண்டார்". இப்படி ஏன் செண்டிமெண்டலாக, புனைத்து எழுத வேண்டும்???. "தூக்கிலிடப்பட்டர்" என எழுதினால் போதாதா? தூக்கிலிடப்படுபவர்கள் நிச்சயமாக மரணம் தான் அடைவர். அதனால் "மரணம் அடைந்தார்" என கூட எழுதவேண்டாம். --161.12.7.4 10:42, 6 டிசம்பர் 2006 (UTC)--விஜயராகவன் 10:44, 6 டிசம்பர் 2006 (UTC)

விஜய், நீங்கள் பல கட்டுரைகளையும் படித்துப் பார்த்து கருத்து தெரிவித்து வருவது குறித்து மகிழ்ச்சி. இது போன்ற சிறு குறைகளை பேச்சுப் பக்கத்தில் குறிப்பிடத்தேவையில்லை. நேரடியாக கட்டுரைப் பக்கத்திலேயே நீங்கள் மாற்றங்களை செய்து தொகுத்தல் சுருக்கத்தில் தெரியப்படுத்தி விடுங்கள். தற்போதைக்கு, நீங்கள் சுட்டிக்காட்டியகுறையை நான் சரி செய்கிறேன். நன்றி--Ravidreams 16:28, 6 டிசம்பர் 2006 (UTC).

ஈரிடங்களில் "வெள்ளையர்" களை "ஆங்கிலேயர்" ஆக் மாற்றினேன். நபர்களை தோல் நிரத்தினாலேயே குறிப்பிடும் பழக்கத்தை தவிற்க்க.--விஜயராகவன் 17:32, 6 டிசம்பர் 2006 (UTC)

வெள்ளையன் என்று குறிப்பிடும் வழக்கம் நம் வரலாற்று நூல்களில் உள்ளது தான். நீங்கள் குறிப்பிடும் மாற்றம் நன்று.--Ravidreams 17:51, 6 டிசம்பர் 2006 (UTC)


ரவி குறிப்பிட்டது போல கட்டுரைகளை குறை சொல்லி பேச்சு பக்கத்தில் இடக்கூடாது அதற்கு மாற்றாக ஏதாவது கட்டுரையில் பங்களிக்கவேண்டும் அல்லது சரியானத் தகவலை இடவேண்டும் மேற்கோள்களுடன். கட்டுரையாளர் அவருக்கு கிடைக்கும் தகவலை வைத்து உள்ளிடுகின்றார். அந்த மேற்கோளகள் சரியில்லையென்றால் விவாதம் வரலாம். அல்லது மாற்றி இடலாம். குறை சொல்லி வேண்டுமென்றே இட்டார்கள் என்று குறிப்பிடுகின்றார்கள். இது தவிர்க்கப்படவேண்டும். பொம்மு நாயக்கர் எனப்படும் வீரபாண்டிய கட்டபொம்மன் ஆந்திராவை சேர்ந்த பெல்லாரியில் இருந்து (அவர் மூதாதையர்) வந்தவர்கள். நாயக்கர் வம்சுத்து மன்னர் எடுத்து வளர்த்தார். அந்த வம்சத்து மூன்றாம் தலைமுறை அல்லது இரண்டாம் தலைமுறை மன்னர்தான் பாண்டிய கட்டபொம்மு நாயக்கர். இதன் மேற்கோள்கள் நூலகத்தில் உள்ளன. வந்தவுடன் உள்ளிடுகின்றேன். பிறருக்கு கிடைத்தால் உள்ளிடலாம். எட்டப்பர், பொம்மு நாயக்கர் சர்ச்சைகளும் உள்ளிடலாம் தனிப்பகுதியாக. குங்குமத்தில் இந்த சர்ச்சைகள் வந்துள்ளன. தொலைக்காட்சியிலும் வந்துள்ளன. பல இடங்களில் பொம்மு நாயக்கரை குற்றம் சொல்வது போல் தான் இருக்கும். இவைகளை உள்ளிட்டால் நமது தகவற் களஞ்சியம் சுவையாக இருக்கும். இது அனைவருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.--செல்வம் தமிழ் 04:38, 24 ஜூன் 2009 (UTC)

// கயத்தாற்றில் தூக்கில் வீரமரணத்தைத் தழுவிக் கொண்டார் எந்பது ஒன்றும் செண்டிமென்ட் இல்லை. பானர்மேந் தன் கைப்பட எழுதிய குறிப்புகளில் கட்டபொம்மனின் இறுதி நிமிடங்களை விவரிக்கின்றார். சிங்கம் போந்று நடந்து போய் (விடுதலைப் போரின் வீர மரபுகள் புத்தகத்தில் மருது ஓவியர் இதனை அழகாக வரைந்து இருப்பார்) தானே தூக்கு மாட்டிக் கொண்டு வீரமரணம் எய்தவந் கட்டபொம்மன். அவர் தூக்கிலிடப்படவில்லை, தானே தூக்கு கயிற்றை மாட்டி தூக்கிட்டுக் கொண்டார்///

மேலும் தெரிந்து கொள்ள:[தொகு]

“கட்டபொம்மனின் ஒரு தவறான சரித்திரம் நாட்டிலே பரவி வீரவரலாறு ஆயிற்று” என்று எழுதினார் அறிஞர் தமிழ்வாணன். “பானர்மேன்னிடம் அகப்பட்டுத் தொல்லைகளுக்கு ஆளாகாமல், லூசிங்க்டனிடம் சராணாகதி அடைய எண்ணினார் கட்டபொம்மு” என்கிறார் தி.நா.சுப்ரமணியம் தமது நூலின் பக். 165 ல். இதனை “கோலார்பட்டியிலிருந்து தப்பியோடிய கட்டபொம்மன் எப்படியும் திருச்சி அடைந்துவிட எண்ணினான். அங்குள்ள கும்பினி அதிகாரிகளிடம் சராணாகதி அடைந்து உயிர் பிச்சைக் கேட்பதே கட்டபொம்மனது நோக்கம்” என்று எடுத்துக்காடியுள்ள பகுதியால் அறியலாம். இந்தக் கருத்தை கட்டபொம்மன் புகழ்பாடிய ஜெகவீரபாண்டியனாரும் மறுக்காமல் உறுதி செய்து தமது நூலின் பக்.297 ல் வெளியிட்டுள்ளார். ஆனால் வரலாற்று அறிஞர் ம.போ.சி. “கசாப்புக்கடைக்காரனிடம் அடைக்கலம் புகும் ஆடு போன்று, தொண்டைமானிடம் அடைக்கலம் புகுந்தான் கட்டபொம்மன்.” என்று கூறுகிறார். இதற்கு என்ன காரணமோ தெரியவில்லை. நேரிடையாக மோதி தோற்று, பின் படைபெருக்க வேண்டி, சின்ன மறவர் நாட்டுச் சிங்கங்கள் மருதுபாண்டியரிடம் தஞ்சமானான் ஊமைத்துரை, அவர்களிடம் உதவி வேண்டினான், அவன் வீரன். ஊமைத்துரை போன்று உதவி வேண்டியா கட்டபொம்மன் புதுக்கோட்டை முட்புதர் அடர்ந்த காடுகளின் தஞ்சமானான்? இது தான் விருப்பு வெறுப்பற்ற வரலாற்று ஆராய்ச்சியின் கண்ணோட்டமா? ம.போ.சி சிந்திக்கவில்லை போலும்! வரலாற்று உண்மைகளை எல்லாம் மறைத்துவிட்டு “பிடித்துக் கொடுத்தான் என்பதற்கும், காட்டிக் கொடுத்தான் என்பதற்கும்” வேறுபாடுகள் அறியாது புரியாது புரிந்து கொள்ளச் சக்தியும் இல்லாது தவறாக வரலாற்றினை தீட்டியுள்ளார் என்று நாம் அவரை குறை முடியாது! அவருடைய இயல்பு அது என்றால் யார் என்ன சொல்ல? வீரமரணமா? “பாஞ்சாலங்குறிச்சியை விட்டு வெளியேறாது அக்கோட்டையைக் காப்பாற்றும் புனிதப் போரிலே, வீரமரணம் எய்தாமல் போனேனே” என்று சொல்லி தூக்கு கையிற்றை தானே எடுத்துக் கழுத்தில் மாட்டிக் கொண்டானாம். இதை ம.போ.சியே தனது நூலில் எடுத்துக்காட்டியுள்ளார். வணங்காமுடி: வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு தன்மானி என்றும், பகைவர்களாலும் போற்றத்தக்க மாவீரன் என்றும், தலைகுனியாத வணங்காமுடி என்றும் வீரப்பட்டயம் சூட்டிட ஏதேனும் உள்நோக்கம் இருந்து தான் ஆக வேண்டும் ம.போ.சிக்கு. தான் எடுத்தக் கொண்ட வலுவில்லாத கருத்தை நிலைநாட்ட ம.போ.சி எடுத்துக் கொண்ட முயற்சியும், செயலும் அறிஞர் பெருமக்கள் அறிவர். வந்தான் பானர்மேன்: பாஞ்சை சென்ற ஒரு குறுகிய எல்லைக்கு உள்ளாக இருந்து கொண்டு, சூழ்நிலையால் தன்னை தானே அரசன் என்றும் வீரபாண்டியன் என்ற பட்டம் சூட்டிக்கொண்டான் கட்டபொம்ம நாயக்கன். தமது தம்பியின் திருமணத்திற்காகவும், அமைச்சர் சுப்பிரமணியப் பிள்ளையின் மகன் திருமணத்திற்காகவும் கும்பினியாரின் நெற்களஞ்சியத்தைக் கொள்ளையடித்தார்கள். காவலாரக இருந்த பாண்டித்தேவனையும் கொலை செய்துவிட்டுத் தப்பிவிட்டார்கள. இதனால் கும்பினித்தளபதி பனார்மேன் கட்டபொம்மன் மீது குற்றம் சாட்டி, விசாரணை செய்ய வேண்டி டேவிசன் மூலம் ஆணை அனுப்பினான். பானர்மேன் மிகக் கொடூரமானவன், எதற்கும் அஞ்சாதவன். ஆனால் நீதிமான்! அவன் கையில் அகப்பட்டால் மீளமுடியாது என்பதை அறிந்து திருச்சிக்கு சென்று மேல் அதிகாரிகளை சந்திக்க எண்ணியிருந்தான் கட்டபொம்மன். இந்நிலையில் பானர்மேன் படை நடத்தி, தீவிரத் தாக்குதலுக்குப் பிறகு, பஞ்சை கோட்டையை கைப்பற்றி , கட்டபொம்மனை தேடினான். ஆனால், கட்டபொம்மன் இரவோடு இரவாக தப்பி சென்றுவிட்டான். கோலார்பட்டியில் தஞ்சமானான். இதை ஒற்றர் மூலமாக அறிந்தான் தளபதி பானர்மென். படையை நடத்தினான். கோலார்பட்டியை நோக்கிப் படை வருகிறது என்பதை அறிந்த கட்டபொம்மன் வடக்கு நோக்கி ஓட்டமெடுத்தான். திருச்சிக்குத் தான் போவான் என்று வழி நெடுகிலும் காவால் போட்டான் பானர்மேன். ஆனால் சிவகங்கை ஆளியூர் பகுதியை அடைந்து, திருச்சி செல்லாமல் இடையில் புதுக்கோட்டை மன்னர் ஆட்சிக்குட்பட்ட திருக்களம்பூர் அருகேயுள்ள முட்புதர்கள் அடர்ந்த காட்டிற்கும் மேற்கே உள்ள கலியபுரம் என்னும் சிறு கிராமத்தில் பதுங்கிக் கொண்டான். இதையறிந்த பானர்மேன் தமது மேலதிகாரியான கலெக்டர் லூசிங்க்டன்’னிடம் தெரிவித்தான். லூசிங்க்டன் தன்னுடைய ஆட்சிக்குட்பட்ட புதுக்கோட்டை தொண்டைமான் அவர்களுக்கு ஒரு ஓலை அனுப்பினான்.”வீரபாண்டிய கட்டபொம்மன் தப்பி வந்து உன்னுடைய எல்லைப் பகுதியில் தங்கி இருக்கிறான். அவனைத் தேடி கண்டுபிடித்து கும்பினிப் படையினரிடம் ஒப்படைக்கவேண்டும்” என்பது ஓலையின் வாசகம்.அம்பலக்காரர் கும்மி: வெள்ளையரின் நட்புக்கு உரித்தாக இருந்து வந்த தொண்டைமான் தமது படைத்தளபதி முத்துவீர பைரவ அம்பலக்காரார் மூலமாக படை அனுப்பித் தேடச் செய்தார். அம்பலக்கரரின் தீவிர முயற்சியால் திருக்களம்பூர்க்காடு, கலியபுரம் கிராமத்தில் பதுக்கி இருந்த கட்டபொம்மனை பாய்ந்து சென்று கைது செய்தனர். அவனுடன் இருந்த ஆறு பேர்களையும் கைது செய்தனர். 23.09.1799 ல் வெள்ளைத் தளபதிகளிடம் ஒப்படைத்தனர். கைது செய்யும் போது அவர்களிடம் ஒரு பெரிய போராட்டமே நடந்திருக்கிறது. இதனை ‘அம்பலக்காரர் கும்மி’ என்று நாட்டுப் பாடல் மூலம் அறியலாம். Under Instruction of Mr.Lousington, Collector of Tinnevelly, The Kattabomman Captured by Thondaman in Sathirapathi Forest on 23/09/1799. (History of Tennevelly – By B.Coldwell P.112) இந்த வரலாறு உண்மையை ம.போ.சி அவர்கள் மறைத்துள்ளார். “புதுக்கோட்டை மன்னன் விஜயரகுநாத தொண்டைமான் கட்டபொம்மனின் அருமை நண்பன், ஆம்; ஆங்கிலேயனை கட்டபொம்மன் பகைப்பதற்கு முன் அந்த நிலை நீடிப்பதாக நம்பி மாவீரன் கட்டபொம்மன் புதுக்கோட்டையானின் நட்பை நாடி அவனிடம் சென்றான். கசாப்புக்கடைக்காரனிடம் அடைக்கலம் புகும் ஆடு போன்று, தொண்டைமானிடம் அடைக்கலம் புகுந்தான் கட்டபொம்மன்.” “நயமாகப் பேசி விருந்துபச்சாரங்கள் நடத்தி, இரண்டு நாட்கள் தங்க வைத்தான். பின் மாடியில் தூங்கும் போது கைது செய்யப்பட்டான் கட்டபொம்மன். காட்டிக் கொடுத்தான் தொண்டைமான்”என்று ம.போ.சி. அவர்கள் தமது நூலின் பகுதி ௧, பக்.52 ல் குறிப்பிட்டுள்ளார். வரலாற்று வல்லுநர் என்று பாராட்டுப் பெற்ற ம.போ.சி அவர்கள் எவ்வளவு வன்மையான வார்த்தைகளைப் பயன்படுத்தியுள்ளார். தொண்டைமானும், கட்டபொம்மனும் அருமை நண்பர்கள் என்று வரலாற்றுக்கு செய்தியையும் கூறுகிறார். இது வரலாற்று அறிஞர்களால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. “மக்களே நான் வேண்டாமென நினைக்கத் தொடக்கி விட்ட பின்னர் எனக்கெதற்கு ஆட்சியையும் அந்தஸ்தும்” எனக் கூறியவர் புதுக்கோட்டை இளமன்னர். சமஸ்தானக் கணக்குப்படி இருப்புத் தொகை கருவூலத்தில் இருக்கிறது, அந்தத் தொகையை ஒப்படைக்கிறேன் என்று கூறி 1948 ம் ஆண்டு பிப்ரவரி முதல் நாள் சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்களிடம் சென்று புதுக்கோட்டை சமஸ்தானத்தை ஒப்படைத்தவர் மன்னர் இராஜகோபால தொண்டமான் அவர்களேயாவர். புதுக்கோட்டை சென்னையுடன் இணைக்கப்பட்டது என்பதை வரலாறு பக்.159 ல் அறிஞர் சஞ்சீவி அவர்கள் குறிப்பிட்டுள்ளார். இந்தியக் கண்டத்திலேயே எவருக்கும் ஏற்படாத துணிவு புதுக்கோட்டை மன்னர் தொண்டைமான் அவர்களுக்குத் தான் ஏற்பட்டது. தமிழத்தின் மானம் காத்த வீரப்பரம்பரையினர் புதுக்கோட்டை மன்னர்கள். அப்படிப்பட்ட அவர்களா காட்டிக் கொடுத்த பரம்பரை…? இது தான் அரசியலுக்கு அப்பாற்பட்ட சரித்திர ஆராய்ச்சி என்றால், அப்படிப்பட்ட ஆராய்ச்சி திறன் நாட்டில் வேருடன் அழிக்கபடத்தக்க ஒன்றாகும் என்பது சரி. மக்கள் கருத்தும் அதுவாகத் தான் இருக்கும். (இனிமேல் எவனாவது தொண்டைமான் காட்டிக் கொடுத்தார் என்று சொன்னால் அவன் நாவை கட்டி விடலாம். சரி தானே!) எனவே, தொண்டைமான் அவர்கள் காட்டிக் கொடுத்தாரா? கட்டபொம்மனை பிடித்துக் கொடுத்தாரா? உண்மை நிகழ்ச்சிகளை எடுத்துக் கட்டியுள்ளோம். தீர்ப்பு வழங்க வேண்டியது மக்கள் கடமை.

// தமிழகத்தில் பொதுவாக ராஜ ராஜ சோழன் காலத்திற்கு பின்பு பேர்ரசு அரசு வடிவம் நிலை பெற்றது. அதாவது, குறுநில மன்னர்கள் (ஒன்று அல்லது இரண்டு ஊர்கள்) பேரரசுக்கு கப்பம் கட்டுவர். பேரரசின் பதவிக்காக சேர, சோழ, பாண்டிய மன்னர்களுக்காக சண்டை நடக்கும். நீண்ட காலத்திற்கு முகலாயர் வந்த பின்பும் இதே நிலை நீடித்தது. இந்த நிலையைதான் காரல் மார்க்ஸ் தனது இந்தியா பற்றிய கட்டுரைகளில் "நீண்ட நெடிய மெள�ந அமைதி என்று குறிப்பிட்டார். முகலாயர்களை வெற்றிக் கொண்ட தெலுங்கு மன்னர்கள் தங்கள் நிலையினை வலுவாக்க தமிழகம் முழுவதையும் பாளையப்பட்டுக்களாக பிரித்து தங்கள் வம்சத்தின்ரை நியமித்தனர். அந்த வழியில் கட்ட பொம்மன் முன்னோர்கள் பாஞ்சாலங்குறிச்சியை ஆளும் வாய்ப்பு பெற்றநர். இதுதான் உண்மை. ஆங்கிலேயர்கள் முகலாயர்களிடம் இருந்து (ஆற்காட்டு நவாப்) ஆட்சி உரிமையை பெற்ற பின்பு, கட்டபொம்மன் இந்த நீண்ட நெடிய பழக்கத்தின் காரணமாக வரி கட்டினார். ஆநால் வெள்ளையர்கள் ரயத்துவாரி என்று அதாவது விளைச்சல் குறைந்த போதும் மக்களை கசக்கி பிழிந்து வரி கட்ட வேண்டும் என்று சொன்ன போது, அதனை எதிர்த்து மக்கள் பக்கம் நின்றான். ஜாக்சன் துரை அவ்வாறு வரி கேட்டு கொடுமை படுத்திய போது அதனை அப்போதைய கலெக்டரிடம் கொண்டு போய் ஜாக்சன் மாற்றப்பட்டார். ஆநால் பானர்மேந் அதே முறையிநை கையாண்ட போது, ஆங்கிலேயருக்கு எதிராக திப்பு சுல்தான் தலைமையில் கூட்டணி அமைத்து போரிட்டனர். ஆநால் ஆயுதங்கள் இருந்தாலும் (ஒவ்வொரு படைவீரனும் ஒரு துப்பாக்கி, வாள், குதிரை பராமரிக்க வேண்டும்), புதிய போர் முறைகள் (கிரமாம முறையில் படை நடத்தல் - ஆங்கிலேய படங்களில் இதை பார்க்கலாம்) தெரியாதலால் தோல்வியுற்றனர். ஆநால், வெள்ளையினரின் காலை நக்கி, வெள்ளையர்களுக்கு ஏவல் நாயாக பணியாற்றி வரி வாங்கி கொடுத்தவர் புதுக்கோட்டை மற்றும் எட்டையப்புரம் மன்னர்கள். ஆநால், மேலே எழுதியுள்ள கட்டுரையாளர் உண்மைக்கு புறம்பாக கட்டபொம்மன் மீது அவதூறு இழைக்கின்றார். - அறிவுடைநம்பி

// ///வெள்ளையினரின் காலை நக்கி, வெள்ளையர்களுக்கு ஏவல் நாயாக பணியாற்றி வரி வாங்கி கொடுத்தவர் புதுக்கோட்டை மற்றும் எட்டையப்புரம் மன்னர்கள்.///திரு அறிவுடை நம்பி சொல்வது சரி என்று வைத்துக் கொண்டால் 72 பாளையங்களும் 18 மறவர் பாளையங்கள் தவிர்த்து மீதம் இருந்த 54 பாளையக்காரர்கள் யாருக்கு அடிமையாய் இருந்தனர்?

உங்களின் உணர்வுப்படி கேட்க வேண்டுமென்றால் "வெள்ளையினரின் காலை நக்கி, வெள்ளையர்களுக்கு ஏவல் நாயாக பணியாற்றி வரி வாங்கி கொடுத்தவர்களில் எத்தனை தெலுங்கு கன்னட பாளையக்கார்கள் அடங்குவர்?" - இது எதிர் கேள்வி. எமது இயல்பு இதுவல்ல. - தனியன்

பயண தூரம் சரியா?[தொகு]

கோவில்பட்டிக்கும், எட்டயபுரத்துக்குமிடையில் பத்து கிலோமீட்டருக்குள்தான் இருக்கும் என நினைக்கிறேன். கோவில்பட்டியிலிருந்து எட்டயபுரம் எவ்வளவு கி.மீ? --தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 15:17, 10 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]

இதை இப்போதுதான் பார்க்கிறேன். இரண்டுக்கும் இடையே 15 கி.மீ. தொலைவு, தேனி.எம்.சுப்பிரமணி. -- சுந்தர் \பேச்சு 08:20, 26 சூலை 2012 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கட்டபொம்மன்&oldid=2487436" இலிருந்து மீள்விக்கப்பட்டது