பேச்சு:உணர்வொலிக் கிளவி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தலைப்பு சரியா எனப் பார்க்கவும். உரையை எளிமைப்படுத்தினால் நலம். -- சுந்தர் \பேச்சு 16:48, 2 ஜூன் 2008 (UTC)

தலைப்பு உணர்வொலிக் கிளவி எனலாம். தமிழில் இவ்வகை சொல்வளம் அதிகம். இரட்டைக் கிளவி, அடுக்குத் தொடர், இணைச்சொற்கள், மரபின இரட்டைச் சொற்கள் என பல உண்டு. ஆங்கில மொழி விக்கியில் கூறியிருப்பது இங்கு ஒரு பகுதிக்குத்தான் பொருந்தும். தமிழ் வழக்கு இன்னும் பரந்தது. தமிழில் நிங்கள் கொடுத்த எடுத்துக்காட்டையே கொள்வோம்:
  1. அவன் நெஞ்சம் பட பட என்று அடித்துக் கொண்டது.
இங்கே பட பட என்பது இன்னும் விரிவாகி வினைச்சொல், பெயர்ச்சொல் வடிவங்களும் கொள்ளும்! இது தமிழின் சிறப்பான உயிர்ப்பு காட்டுவது. நெஞ்சம் படபடத்தது என்று வினைச்சொல்லாகவும், இன்னும் படபடப்பு அடங்க வில்லை என்று பெயர்ச்சொல்லாகவும். மேலும் பெயரெச்ச, வினையெச்ச வடிவுகளிலும் வரும்! நெஞ்சம் படபடக்க அவனை நிமிர்ந்து பார்த்தாள். இதேபோல கடுகடுத்தான், கடுகடுப்பு, சுறுசுறுப்பு, கலகலப்பு என்று ஏராளமாக உண்டு. இரட்டைக் கிளவி என்பது வேறு அடுக்குத்தொடர் என்பது வேறு. இவை தவிர ஆங்கிலத்தில் echo words என்று அண்மையில் சொல்லும் மரபின இரட்டைச்சொற்களும் உண்டு. பாட்டு கீட்டு?, படிக்க கிடிக்க வேண்டாமா? என்று கி என்னும் முன்னொட்டு இட்டு (நெடில் குறில் என்பது முன் நிற்கும் சொல்லைப் பொறுத்தது ) இனமான பொருள்களையோ, வினைகளையோ குறிக்கப் பயன்படுவது. இதில் சிறப்பு எனவென்றால், இந்த இனம்சுட்டும் சொற்களிலும் பெயர்ச்சொல், வினைச்சொல், பெயரெச்சம், வினையெச்சம், உரிச்சொல் என்று எல்லா வகைச்சொற்களுக்கும் வருவது. தமிழ்போல் விரிவாக இல்லாவிட்டாலும் echo words என்பன வேறுசில (யூதர்களின் யிட்டி^ச் போன்ற) மொழிகளிலும் சிறிதளவு இருந்த போதிலும், இந்த echo words என்பது இந்திய துணைக்கண்ட வழக்கம் என்று அந்நிலப்பகுதியின் இடச்சிறப்பு மொழி இயல்புகளில் ஒன்றாக மொழியியல் அறிஞர்கள் கூறுவார்கள். தவிரவும், இரா. இளங்குமரன் தொகுத்துக் காட்டியிருப்பது போன்ற இணைமொழி, இணைச்சொல் வரிசை என்றும் தமிழில் ஒன்று உண்டு. அதாவது தட்டுமுட்டு, நில புலம், அக்கம் பக்கம் என்னும் சொற்களுக்கு இணைமொழி என்று பெயர்.
Elinor Keane என்பவர் அண்மையில் ஒரு ஆய்வுரை எழுதியுள்ளார்: பார்க்கவும்:
Echo words in Tamil
Elinor Keane
Merton College, Oxford
D.Phil. Thesis, Trinity Term, 2001
:
http://users.ox.ac.uk/~sjoh0535/thesis.html
:
இவை பற்றி முத்தமிழ் மடலாடற்குழுவில் ஓராண்டுக்கு முன்பு எழுதினேன். பார்க்கவும்
--செல்வா 19:20, 2 ஜூன் 2008 (UTC)
அருமையான தகவல்கள், செல்வா. மெய்யாலுமே தமிழில் உணர்வொலிக் கிளவிகளைப் பற்றி எழுதும் பத்தியில் நாம் தமிழ் மரபுப்படி வகைப்படுத்தி எழுத வேண்டும். ஆங்கிலேயர் தங்களால் புரிந்து கொள்ளும் அளவிற்கு கண்டு தமிழைப் பற்றி எழுதியுள்ளனர். தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட நாம் இன்னும் சரியாக எழுத வேண்டும். -- சுந்தர் \பேச்சு 05:20, 3 ஜூன் 2008 (UTC)
இரட்டைக்கிளவியல்லாத ஒரு காட்டு இணைத்துள்ளேன். கியேனின் ஆய்வுக் கட்டுரையைப் படித்து தகுந்த கட்டுரைகளில் சேர்க்க முயல்வேன். இளங்குமரன் கண்டு சொல்லியதையும் கட்டுரைகளில் சேர்க்க வேண்டும். onomatopoeia என்பதைத் தமிழில் எப்படி குறிப்பிடுவது? -- சுந்தர் \பேச்சு 07:27, 3 ஜூன் 2008 (UTC)
உணர்வொலிக் கிளவி நன்றாக உள்ளது. உணர்வு கருத்தைக் காட்டிலும் பரந்ததா? அல்லது இவ்வகைக் கிளவிகள் கருத்தை உணரும் விதத்தைக் குறிக்கின்றனவா?
அவன் இதயத்தில் குறுகுறு என்று உணர்ந்தான்.
மேலேயுள்ளதைப் பார்த்தால் சரியாகத்தான் உள்ளது. உணர்வொலிக்கிளவி என்று மாற்றி விடுகிறேன். -- சுந்தர் \பேச்சு 07:34, 3 ஜூன் 2008 (UTC)

நன்றி, சுந்தர். onomatopoeia என்பதை ஒலிக்குறிப்புச் சொல் அல்லது ஒலிக்குறிப்புத் தொடர் எனலாம். ஒலியொப்புச் சொல் அல்லது ஒலியொப்புத் தொடர் என்றும் சொல்லலாம் என்று நினைக்கிறேன். நச், லபக், வெடுக், சடக், மடக் , கபக், விறுக், முதலான மெய்யொலி முடிவுச் சொற்கள் எல்லாம் ஒலிக்குறிப்பு வகைச் சொற்களே (இவை இரட்டையாக வர வேண்டுமென்பதில்லை, ஆனால் அப்படியும் வரும் சில நேரங்களிலே. லபக் லபக் என்று வாயில் போட்டு விழுங்கினான்.). நம்முள் ஏதோ ஒரு வகையிலே குறிப்பான ஓர் உணர்வை ஏற்படுத்துவதால் உணர்வொலிகள் என்று பரிந்துரைத்தேன். கருத்து என்பது ஒன்றைப் பற்றிய அறிவு உருவகம் அல்லவா? ஆகவே அது சற்று வேறானது. உணர்வு என்பது நேரடியான, நெருக்கமான "முதலறிவு". உணர்வின் உயிர்நடு : உள்--> உண்-->உணர்வு. உணர்வு கருத்தைக் காட்டிலும் பரந்ததா? கருத்துக்கு உணர்வே முதல் உள்ளீடு. கருத்து என்பது வழியறிவு, உணர்வு என்பது முதலறிவு. இரா இளங்குமரனின் இணைமொழி அகராதி என்னிடம் உள்ளது. அதனைப்பற்றியும் ஒரு கட்டுரை எழுத வேண்டும். இரா இளங்குமரனின் வாழ்க்கை வரலாறு, 700 பக்கங்களுக்கும் மேலானது, வெளி வந்துள்ளதாம். யாரேனும் அதிலிருந்து எடுத்து அவரைப்பற்றி எழுத வேண்டும். இன்று வாழ்பவர்களில் இவரைப்போல் தமிழறிவு கொண்டவர்கள் அரிதிலும் அரிது. நல்ல இனிமையான எளிய தமிழில், உள்ளம் ஆழம் எய்தும் விதமாக எழுதுபவர். மிகைப்படுத்திக் கூறாதவர். திருச்சிக்கருகில் திருவள்ளுவர் தவச்சாலை என்னும் தன் இல்லத்தில் வாழ்கிறார்.--செல்வா 12:59, 3 ஜூன் 2008 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:உணர்வொலிக்_கிளவி&oldid=751890" இலிருந்து மீள்விக்கப்பட்டது