உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:அண்ணமார் சாமி கதை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பாமரர் பரிந்து போற்றும் படுகளத் திருவிழா[தொகு]

www.thinakural.com/New%20web%20site/ web/2005/June/10/Article-3.htm கலைமணி க. வேலாயுதம்

கிராமத்து வழிபாட்டு வடிவங்கள் இலக்கியத்தோடும் கலைகளோடும் இணைந்திருப்பது போலவே மத வழிபாட்டோடும் பிணைந்திருக்கிறது. வரலாற்று நிலவியலை மீட்டுருவாக்கம் செய்யும் இவ்வழிபாட்டு முறைகளில் பெண் தெய்வத்தின் ஆதிக்கம் அதீதமாகவே காணப்படுவதுடன், சமுதாய நோக்கில் பார்க்குமிடத்து கூட்டு வழிபாடாகவே அமைந்து இயற்கையில் ஏற்படும் பெருங்கேடுகளை தடுக்கும் அடிமன நம்பிக்கையை ஊட்டுகிறது. ஊர்திரண்ட உணர்வை வெளிப்படுத்தும் இவ்வழிபாடு வருடா வருடம் வந்து சேர்வதுடன், உழைக்குந் தொழிலாளர்களுக்கு ஓய்வையும் தருகிறது. ஒற்றுமை உணர்வின் வெளிப்பாடாக அமையும் இவ்வழிபாடு வாழ்வியலோடு ஒட்டியதொரு நிகழ்ச்சிபோக்கு மாத்திரமின்றி பண்பாட்டுக் கூறின் பக்குவமாகவும் பிரகாசிக்கின்றது.

நம்பிக்கையே இங்கு நடம் புரிவதனால், அழுகையும், தொழுகையும், விரதமும் வேண்டுதலும், நேர்த்தியும் நிவர்த்தியும் முன்னுரிமை பெறுகின்றது. அந்த வகையில் மலையக இந்திய வம்சாவளி மக்களின் பின் புலத்தை கலைபண்பாட்டு வழிபாட்டுத் தடங்களை கடந்த ஒன்றரை நூற்றாண்டுக்கு மேலாக பாதுகாத்து வரும் ஒரு பாமர பாட்டாளி சமூகத்தின் நம்பிக்கை எதிர்பார்ப்புகளை, வாழ்வியல் அம்சங்களை வேரோடும் வேரடி மண்ணோடும் எடுத்துக்காட்டும் ஏடறியா இயல்புகளை ஆழமும் அகலமுமாக்குவதிலும் அண்ணன்மார் கதை என்ற பொன்னர் சங்கர் கதை உந்து சக்தியாக விளங்குகிறது. நாடும் நாகரீகமும் பின்னிற்கும் கலைகளில் கூத்து கலை முதன்மை பெறுவதுடன், இந்தியாவே இதன் வேரிடமாக விளங்குகிறது எனலாம். அன்பின் அடையாளமாகக் காமன் கூத்தும், அறத்தின் அடையாளமாக அருச்சுனன் தபசும் இருப்பதுபோல், வீரத்தின் விளை நிலமாக விளங்குவதே பொன்னர் சங்கர் கதையாகும். இந்தக் கலைகள் பெருந்தோட்ட மக்களை பிரகாசிக்க வைத்துள்ளது என்பதிலும் பார்க்க, கோணற்படாத வாழ்வைக் கொண்டு நடாத்தவும், கட்டுக்கோப்புக்குள் கால் பதித்து வாழவும், ஊன் கலந்த உணர்வுகளை இந்திய வம்சாவழி என்ற இன அடையாளத்தை இறுக்கப்படுத்துவதிலும் மைல் கல்லாக விளங்குகிறது.

அறுபதில் அகவை[தொகு]

ஊவா மாகாண பதுளை மாவட்ட கொஸ்லாந்தை மீரியபெத்தையில் மண்வாசனை மாறாத நிலையில் கொண்டாடப்படும் அன்றேல் நடாத்தப்படும் பொன்னர் சங்கர் கதை அறுபதாண்டுகள் வரை நடந்து வைர விழா வாசலுக்கு வந்திருப்பதே ஒரு வரலாறாகும்.

"வருஷா...வருஷம்

வருகுதடி பொன்னர் சங்கர்

கொஸ்லாந்தை மீரிய பெத்தையில்

கூடுதடி கோடி சனம்...."

என்று கூறும் இப்பிரதேச மக்கள் ஆண்டுக்கொரு முறை அடையும் அனுபவமே புதிராகும். தேயிலை தேசத்தின் தியாக இயந்திரங்களான மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் உழைப்புக்கு உரமூட்டுவது போலவே, கலையோடு சேர்ந்த கடவுள் வழிபாட்டுக்கும் காத்திரம் படைக்க வல்லவர்கள் என்பதை மீரிய பெத்தை தோட்ட மக்கள் தமது அறுபதாண்டு `படுகள' நிகழ்வால் மெய்ப்பித்துள்ளனரெனலாம்.

வரலாற்றுத் தளம் முந்தியிருந்தாலும், வாழ்க்கைத்தரம் பிந்தியிருக்கக் காணப்படும் மலையகப் பெருந்தோட்ட மக்களிடையே, நம்பிக்கைச் சடங்குகள் இன்றும் இறவாமலே இருந்து வருகின்றன. பாரதத்திலிருந்து வியர்வை சிந்த வெறுங்கையோடு வந்தவர்களென விபரிக்கப்பட்டாலும், வாழ்க்கைச் சுமையோடும், வறுமைச் சுமையோடும் வந்தவர்கள் கூடவே தமது வேராகவும் விழுதாகவும் கலைப் பண்பாட்டு அம்சங்களை பிடி மண்ணாகவே அள்ளி வந்தனர். இவ்வாறு தென்னாட்டிலிருந்து தேடி வந்த தேயிலை தோட்டத்துக்குள் நுழைந்த பெருங்கதைகளுள் ஒன்றே பொன்னர் சங்கர் கதையாகும். பொன்னி வள நாட்டு மன்னனின் வீரத்தை விதந்துரைக்கும் இக்கதை வேனிற்காலமான மாசி மாத வளர்பிறையில் ஆரம்பமாகி ஒரு மாதம் ஓடிச் சென்று நிறைவுறுகின்றது.

குன்றுடையான் கதை, அண்ணன்மார் சுவாமிகள் கதை என்றெல்லாம் பெயர் பெறும் பொன்னர் சங்கர் கதை ஓர் இன மக்களின் இடப் பெயர்ச்சியையும், அவர்கள் கொங்கு நாட்டிற்கு வந்து ஆதிக்கம் பெற்ற விபரத்தையும் காட்டுகிறது. கொங்கு நாட்டு வேளாளரின் சமூகப் பண்பாடு, அவர்களின் வெள்ளை உள்ளம், உண்மைக்காக உயிர் கொடுக்கும் பண்பு என்பவைகளை அண்ணன்மார் கதை விளக்குவதுடன், பாட்டு வடிவிலமைந்த வீரப்பூர் பொன்னர் சங்கர் நூல் விளக்கம் தருகிறது. ஆர்.கருணையம்மாள் என்பவரின் நூலில் மாயலூர் செல்லாண்டியம்மனை மனக்கண்முன் நிறுத்தக் காணலாம். வரிபோட்டு வசூலித்து வரலாறு பாடும் இக்கதையின் உள்ளோட்டங்கள் இவ்வாறு உருண்டு போகக் காண்கிறோம்.

உண்மைக்காய் உயிரிழப்பு[தொகு]

பொன்னுடையான் என்ற குன்னுடையான் கவுண்டருக்கும், தாமரை கவுண்டச்சியாருக்கும் பிறந்தவர்களே பொன்னர். சங்கர் மற்றும் தங்கம், மூவரும் வரத்தால் பிறந்தவர்கள் என்பதோடு, வீரபாகு சாம்பானும் இவர்களுக்கு துணையாக இருந்துள்ளான். மேலும் ஐந்து வயது நிரம்பி விபரம் பெறும் வரை அண்ணன்மார் இருவரையம் காளி தேவியரே வளர்த்தாரெனவும் சுட்டப்படுகிறது. பாம்புக்கு பல்லில் விஷம், பங்காளிக்கு உடம்பெல்லாம் விஷம் என்பதுபோல் வேளாளர்கள் பங்காளிப் பகையை பரம்பரையாக கொண்டவர்கள் என்பர். இதனால் தாயார் தாமரை தான்பட்ட இன்னல்களையும் சபதங்களையும் நினைவுபடுத்தி பொன்னர் சங்கர் இருவரிடமும் கூற, அவர்கள் பங்காளிகளை பலிவாங்கி தாயை மகிழ்விக்கின்றனர். அத்துடன், பெற்றோரின் நிலபுலங்களை மீட்க சோழராஜனின் மேலை நாட்டை கைப்பற்றுவதாகவும் கதை கூறுகிறது. பொன்னரும் சங்கரும் போருக்கு செல்லும் வேளையிலேயே, தாயும் தந்தையும் இறந்து விடுகின்றனர். இவர்களது இறப்பிற்கு பின்னரேயே திருமணம் செய்வதுடன், தாயின் சபதத்துக்காக மனைவியரை சிறையிட்டதாகவும் கதைத் தொடர்கிறது. பொன்னரும் சங்கரும் சோழன் ஆதரவால் வளநாட்டுக்கு உரிமை பெற்ற காவலர்களாக இருக்கின்றனர். நங்காள் எனப்படும் தங்காள் கிளி கேட்க, தங்கைக்காக அவர்கள் அன்னக்கிளி கொண்டு வர வீரமலை காட்டுக்கு போவதை,

"நாகமலை தோகை மலை

நாலுபக்க வீரமலை[தொகு]

வீரமலை நடுவினிலே.... எனத் தொடரும் பாடல்கள் புலப்படுத்துவதுடன், காட்டில் சங்கர் அறுபதடி வேங்கையை வெட்டுகிறார். இதனால் தலையூர் காளி கோபமுற்று கூத்தாளை நாட்டைத் தாக்கி குப்பாயியை சிறையெடுத்துப் போகிறாள். பொன்னரும் சங்கரும் சாம்பானும் வேடுபடையோடு மோதி இறக்கின்றனர். அரண்மனையில் தனியாய் வசித்தத் தங்காள் அன்னியர்களை அழைக்க, அவர்கள் மறுத்து பட்டணம் போய் விடுகின்றனர். அரண்மனையில் தனியாக தங்காள் ஒப்பாரி வைத்து அழுகிறாள். உயிர் பிச்சை கேட்டு புலம்பும் அவள் படுகளம் போய் புலம்புகிறாள். பொன்னர் சங்கர் இறந்ததே படுகளம் எனப்படுகிறது. அதன் பின் தண்ணீர் எடுத்தெளித்து பிரம்பால் தட்டுமாறு கூற, தங்காள் அவ்வாறே செய்ய இறந்தவர்கள் உயிர்பெற்று அமரராகின்றனர். இதனால் தான் `கொங்குமலிந்தால் எங்குமலியும்' என்ற பழமொழி கொண்ட அந்த நாட்டின் முழுதும் பரவியுள்ள கதைப்பாடல் வரிகளில்,

" ஒக்கப் பிறக்கணுமா - அண்ணா

ஒரு முலைப் பால் உண்கணுமா

கூடப் பிறக்கணுமா? அண்ணா

கூட்டுப்பால் உண்கணுமா என்ற சகோதரப் புலம்பல் தொடர்வதை காண்கிறோம். இதன் அடியொட்டிய அத்தனை விடயங்களும் இன்றும் மீரியபெத்தை படுகளத்தில் மறுவடிவமாக்கப்படுகிறது.

நேர்த்தியும் நிவர்த்தியும்[தொகு]

மீரியபெத்தை ஆலயத்தை நம்பி நாட்டின் நாலாபுறமிருந்தும் வரும் அடியார்கள் பல வேண்டுதல்களை வேள்விகளாக வைக்கின்றனர். தோட்டத் தொழிலாளர்களாக இருப்பவர்கள் குடிக்கு அடிமையானவர்கள், குழப்பம் இழைப்பவர்கள் என்றெல்லாம் முத்திரை குத்தும் பலரின் முகத்திரையை கிழிப்பதில் கொஸ்லாந்தை மீரியபெத்தை தோட்ட மக்கள் பலே கெட்டிக்காரர்கள். பெரியகாண்டி அம்மன் பேரில் (தங்காள்) பெருவிழாவும் கதை படிப்பும் ஆரம்பமானதும் மது, மாமிசம் மறைந்து விடுகிறது. அந்திபட்டதும் அண்ணன்மார் கதை கேட்கவேண்டுமென்ற ஆவலில் பெரியோர் முதல் சிறியோர் வரை அமைதியாக ஆலயத்தில் கூடுகின்றனர். வருத்தம் வந்தால் கூட வைத்தியத்தை விட ஆலயத்தின் விபூதி, தீர்த்தத்தை விரும்பிப் பெறுகின்றனர். எவரேனும் ஒரு பொருளை தவறவிட்டால் கூட அதை கோவில் பூசகர் மூலம் மீட்டுக்கொடுக்கும் நல்ல பண்பும் பக்தியும் காணப்படுகின்றதென்றால், மக்களை காக்கும் மகாமுனி என்ற தெய்வத்தின் மீது அவர்கள் கொண்ட தீராத பற்றே அதற்கு காரணமாகும். படுகளம் வந்த பலர் விட்டுச் சென்றுள்ள விலாசங்கள் தேசமுழுவதுக்கும் இத்திருவிழா தெரிந்துள்ளதை மெய்ப்பிக்கிறது என உணரலாம்.

ஆற்றங்கரையோரம் அமைதியான சூழல், ஆயிரமாயிரமாய் அணி திரண்டாலும் அன்னதான ஆகார வசதிகள், ஏழை செல்வந்தன் என்று பேதமின்றி வந்து வழிபடும் இவ்வாலயத்தில் படுகளத் திருவிழாவை ஆரம்பித்து வைத்த பெருமை கருப்பண்ணபிள்ளை நல்லுசாமி கவுண்டரையே சாரும்.

பெயர்[தொகு]

இக்கதை பல இடங்களில் பலவிதமான பெயர்களால் அழைக்கப்படுகிறது. குன்னுடையான் கதை, பொன்னர்-சங்கர் கதை என்பனவும் மற்ற பெயர்கள். வேறு பெயர்கள் என்னவென்று தெரியவில்லை.--குறும்பன் (பேச்சு) 17:08, 10 ஏப்ரல் 2013 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:அண்ணமார்_சாமி_கதை&oldid=2031866" இலிருந்து மீள்விக்கப்பட்டது