பேச்சு:அடோல்ஃப் ஃபிக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கண் விழியோடு ஒட்டியிருக்கும், விழிஅணை கண்ணாடிகள் அல்லது விழியணை வில்லைகள் என சொன்னால் பொருந்தும் என நினைக்கிறேன். அல்லது தொடுவில்லை என்றே சொல்லலாம். --C.R.Selvakumar 10:50, 10 ஜூலை 2006 (UTC)செல்வா

தொடு வில்லை என்பதே சுருக்கமாகவும் பொருத்தமாகவும் இருக்கிறது. --கோபி 12:17, 10 ஜூலை 2006 (UTC)

வினோத், அருள்கூர்ந்து நகர்த்தும் முன் கலந்துரையாடிப் பின்னர் நகர்த்துங்கள். Fa என்பதற்குச் சரியான பெயர்ப்பு பற்றி இங்கு உரையாடியிருக்கின்றோம். Faகரம் வகரத்தின் திரிபே (வகரத்தைப் போல கீழுதடே தொழிற்படுகின்றது. சற்று காற்றொலி கலந்த வகரம் தான் Faகரம் - நாம் தமிழில் ஒலிப்பதற்கு இது போதும்). பகரம் ஈரிதழ் அல்லது ஈருதடு (மேலுதடு, கீழுதடு இரண்டும்) தொழிற்படும் ஓர் ஒலி. Faகரத்திற்கு பகரத்தைத் திரித்துக் காட்டுதல் (ஃ மூலம்), தவறு. ஆய்த எழுத்தை வகரத்தோடோ அல்லது பகரத்தோடோ பயன்படுத்துவது மிகவும் கெடுதலான போக்கு. ஆய்த எழுத்தின் உண்மையான ஒலி சிதைகின்றது. தமிழ் ஒலிப்பொழுக்கம் மிக்க ஒலியாகையால், முறை பிறழ்து எழுதுதல் கூடாது. ஏனோ பலரும் இப்படி ஃப என்று எழுதுவதால், ஒரு சிறிதேனும் பொருத்தமாக இருக்கட்டுமே என ஃவ என்பதைப் பயன்படுத்துகிறேன். இதற்கு விக்கியில் ஒப்புதல் உண்டு. ஃப என்பதற்கு வழிமாற்றுகள் தரலாம். --செல்வா 13:58, 7 டிசம்பர் 2007 (UTC)

ஆம். இது குறித்து நடைபெற்ற உரையாடலை இங்கு பார்க்கலாம்.--Sivakumar \பேச்சு 14:02, 7 டிசம்பர் 2007 (UTC)

இருந்தாலும் அவை பொதுவழக்கில் இல்லையே. முன்னர் இருந்ததை எப்படி உச்சரிக்க வேண்டும் என்றே எனக்கு தெரியாமல் இருந்த காரணத்தினால் தான் அதை மாற்றினேன். கூடுமான வரையில் பொதுவழக்கில் உள்ளதை கையாளலாம் அல்லவா? .ஃவ எனபது நான் இதுகாறும் நான் பார்த்திராத எழுத்துக்கூட்டல். வினோத் 14:13, 7 டிசம்பர் 2007 (UTC)

நீங்கள் மட்டும் இதை இங்கு பயன்படுத்துவதால் பொதுவழக்கு மாறப்போவதில்லை. இது போன்ற வினோதமான பொதுவழக்குக்கு மாறான எழுத்துக்கூட்டல்கள், யாரும் அறிந்திராத Neologyகள் முதலியவற்றை பயன்படுத்துவதால் வாசகர்களிடமிருந்து நம்மை அந்நியப்படுத்திவிடும் வினோத் 14:23, 7 டிசம்பர் 2007 (UTC)

தமிழ் மொழி ஒலிப்பொழுக்கம் உள்ள மொழி (phonetic language). ஆங்கிலத்தைப் போல இடத்துக்கு இடம் முறையின்றி ஒலிப்பு மாறும் மொழியல்ல. ஃப என்று எழுதினால், தமிழில் Hpa என்றுதான் ஒலிக்க வேண்டும். ஃவ என்று எழுதினால் Hva என்றுதான் ஒலிக்க வேண்டும். பின்னது Faகரத்திற்கு நெருக்கமானது. பொதுவழக்கில் உள்ளதைக் கையாளலாம் என்னும் உங்கள் எண்ணத்தை மதிக்கின்றேன், ஆனால் பல தவறான வழக்குகள் உள்ளன. முயலலாம் என்பதை "முயற்சிக்கலாம்" என்று தவறாக எழுதுகிறார்கள் (பின்னர் வளர்ச்சிக்கலாம், தளர்ச்சிக்க்லாம் என்பார்களோ?!), மேலும் பற்பல தவறான பொருந்தாத வடிவங்கள் உள்ளன. கலைக்களஞ்சியம் என்பது எது சரியென்று தேர்ந்து துணிந்து செய்ய வேண்டும். ஆய்த எழுத்தை விட்டுவிட்டுப் படித்தாலும், சற்றேறக்குறைய சரியான ஒலிப்பே வரும். விக் Fick இரண்டிற்கும் சிறு வேறுபாடுதான். காற்றொலி வகரம் முதல் எழுத்து. எனவே ஃவிக் என்று எழுதுவது தவறல்ல, மாற்ற வேண்டாம் என்பது என் வேண்டுகோள். ஃபிக் என்பதர்கு வழிமாற்று தரலாம். நான் முன்னமே கூறியது போல, ஆய்த எழுத்தைப் பயன்படுத்துவதே த்வறு.

ரகுமான் என்பதற்கு மாறாக ரஃகுமான், ரகீம் என்பதற்கு மாறாக ரஃகீம், என்றும் H ஒலி வருமிடங்களில் ஆய்த எழுத்தைப் பயன்படுத்துவது முறை என்பது என் கருத்து. காப்பி என்னும் பெயர் Kahve, Kahva என்னும் சொற்கள் அராபிய துருக்கி மொழிகளில் இருந்து வந்தன. அங்கு கஃவே என்று எழுதுவது பொருந்தும், ஆனால், இப்படி ஆய்த எழுத்தைச் சிதைப்பதால், இயல்பொலி வரும் இடங்களில் குழப்பம் வரும். aqba (இயல்பொலியாக அஃபா என்று வரும் ஆனால் aFFa என்று படிப்பது தவறு... விரித்தால் நீளும்... புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.--செல்வா 14:47, 7 டிசம்பர் 2007 (UTC)

ஃ எனபது 'ஹ'கரத்தை குறிக்க பயன்படுத்துவது தவறு அது ஃவ'ஆக இருப்பினும் 'ஃப'ஆக இருப்பினும். எனக்கு தெரிந்து ஃ என்பது பழங்காலத்தில் Glottal Stopஐ குறிக்க பயன்பட்டிருக்க வேண்டும்(அதானால் தான் ஆய்தம் என்றும் தனித்து வர முடியாது. என் கருத்து தவறாக இருப்பின் திருத்தவும்.). ஏனோ அது திரிந்து தற்சமயம் 'அக்கு' என ஆகிவிட்டது. இரண்டுமே தவறான பயன்பாடாக இருக்கும்போது, பொதுப்பயன்பாட்டையே பின்ப்பற்றலாமே, புதிதாக இன்னொரு தவறான பயன்பாட்டை ஏன் உருவாக்க வேண்டும் என்பதே எனது வாதம் வினோத் 15:10, 7 டிசம்பர் 2007 (UTC)

ஆய்தம், அடித்தொண்டை ஒலிதான், ஆனால் அதற்கு நெருக்கமான ஒலி H தான். H ஐ விட அடித்தொண்டை ஒலி ஆய்தம். அது திரியவும் இல்லை அக்கும் ஆகவில்லை. தமிழில் ஆய்த எழுத்து கொண்ட பல சொற்கள் உள்ளன. அவற்றை எப்படிப் பலுக்க வேண்டும் (ஒலிக்க வேண்டும்) என்பதைப் பலரும் அறிவர். கீழ்க்காணும் சொற்களைப் பாருங்கள்: கீழ்க்காணும் சொற்கள் கழக அகராதியில் இருந்து பெற்றவை. சில குறிப்புகள் என்னுடைய நேரடிப் பட்டறிவால் உணர்ந்தவை (இப்பொருளும் அகராதில் கொடுக்கப்பட்டுள்ளது என் பட்டறிவை வலுப்படுத்துகின்றது)

அஃது, இஃது, உஃது, எஃகு, அஃகல் (குறைதல், நுணுகல்), அஃகுல்லி (எங்கள் வீட்டில் செய்யும் உக்காரி என்னும் சிற்றுண்டி), அஃறிணை, அஃதை (திக்கற்றவர், இன்று அகதி என்பதுதான்), அஃகுள் (அக்குள்- கை தோளில் சேரும் இடத்தில் கையின் அடிப்புறம்), அஃபோதம் (நிலாமுகிப் புள் என்னும் பரவை. இதனை சகோரம் என்றும் சொல்வர்), அஃகேனம் (மூன்று புள்ளிகளால் குறிக்கப்படும் ஆய்த எழுத்து). எஃகம் ( = கூர்மை, ஆயுதம், வேல், எறிபடை, வாள், சூலம்), எஃகு (உருக்கு, மனவொடுக்கம், எதிர்த்தாக்கு, எட்டு, உதைத்தேறு, கைக் குழந்தைகளை எஃகு என்று கூறி ஊக்குவிப்பது இன்றும் எங்கள் வீடுகளில் உண்டு, எஃகுதல் என்பது வினை), எஃகுதல் என்றால் நீளுதல் என்றும் பொருள். எஃகுறுதல் என்றால் (இளகி) அறுக்கப்படுதல், எஃகுதலலென்றால் நெகிழ்தல் என்னும் பொருளும் உண்டு (எஃகுறுதல் = அறுக்கபடுதல் என்னும் பொருளும் இதன் வழி வருவதே). எஃகுபடுதல் = இளகின நிலையை அடைதல். எஃகுக்கோல் = பஞ்சுகொட்டும் வில். எஃகுச்செவி = நுனித்தறியுஞ்செவி (இறுகின செவி அல்ல, நெகிழ்ந்து நுட்பமாய்க் கேட்கும் செவி). ஒஃகல், ஒஃகுதல் = ஒதுங்குதல், பின் வாங்குதல். கஃகான் = ககரம், கஃசு = காற்பலம், கஃறு என்பது நிலத்தை உணர்த்தும் குறிப்பு மொழி, கஃறெனல் = கறுத்து விளங்குதல், கறுப்பாகுதல். சஃகுல்லி = மோட்சம், ஒரு வகை சிற்றுண்டி. , பஃறி = மரக்கலம், இரேவதி என்னும் நாள்மீன், பஃறியா = நெய்தல் நிலமாக்கள், பஃறுளி = ஓர் ஆறு, மஃகான் = மகரம், வெஃகல் = ஆவல் பெருக்கம், மிகுவிருப்பம், வெஃகாமை = வேண்டாமை.

மேலுள்ள எல்லாச் சொற்களிலும் ஆய்தம் அடித்தொண்டை ஒலிதான். H அல்ல. ஆனால், ஆய்த எழுத்திற்கு நெருக்கமான ஒலிப்பு H தான் (நேரான ஒலிப்பு அல்ல, நெருக்கமான ஒலிப்பு). --செல்வா 17:09, 7 டிசம்பர் 2007 (UTC)

நான் அறிந்த வரை எவரும் ஆய்தத்தை ஒழுங்காக உச்சரித்தது இல்லை. எனது பள்ளியிலும் ஃ வருமிடத்து அதை g என்றே அனைவருமே உச்சரிப்பர்(எ.டு) அஃது,(agdhu) போன்றவை. அதை அடித்தொண்டையிலிருந்து உச்சரித்து நான் இது வரை யாரிடத்திலும் கேட்டதில்லை. என்னுடைய அனுபவத்தில்(20 வயதில் அப்படியென்ன அனுபவம் என்று கேட்காதீர்கள் :-) )ஃஐ எல்லாரும் g என்றே உச்சரித்துள்ளனர், அதனால் தான் அதன் உண்மையான ஒலி திரிந்து விட்டதோ என எண்ணினேன். தவறுக்கு மன்னிக்கவும்வினோத் 17:29, 7 டிசம்பர் 2007 (UTC)


வினோத், விக்கியில் மன்னிப்பு என்ற சொல்லே தடை. உங்களுடைய அனுபவத்தை நீங்கள் பகிர்ந்துகொள்கிறீர்கள், நான் என் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்கிறேன். அவ்வளவுதான். இதில் மன்னிக்க என்ன உள்ளது. தற்காலத்தில் பலரும் ழகரம், ளகரம் முதலானவற்றையும் ஒழுங்காக பலுக்குவதில்லை (ஒலிப்பதில்லை). பள்ளிகளிலே ஆசிரியர்கள் திருத்தமாகச் சொல்லித்தர வேண்டும். அப்படிச் செய்யாததால், நம் மொழியே எப்படிக் கெடுகின்றது என்று தமிழக, இலங்கை அரசுகளும் பிற தமிழ்வளர்க்கும் நிறுவனங்களும் உணருதல் வேண்டும். ஆவன செய்தல் வேண்டும். நீங்கள் ஏற்கனவே திருத்தமாக புரிந்து கொண்டு இருப்பதால், நீங்கள் உங்கள் நண்பர்களுக்கும், சுற்றம் சூழ்ந்திருப்பவர்களுக்கும் எடுத்துரையுங்கள். இதழ்களிலும் எழுதுங்கள். உங்களைப் போன்ற இளைஞர்கள் இது போன்ற கருத்துக்களைக் கூறுவது சிறப்பு என்று நான் நம்புகின்றேன். --செல்வா 19:32, 7 டிசம்பர் 2007 (UTC)

வினோத், உங்களுக்கு ஆய்த எழுத்து g ஒலிப்பில் கற்றுத்தரப்பட்டிருப்பது வியப்பளிக்கிறது. நான் திருச்சி, கோவை, புதுகை பகுதிகளில் பயின்றிருக்கிறேன். h க்கு நெருங்கிய ஒலிப்பில் தான் சொல்லிக் கொடுத்தார்கள். எஃகு என்பதை g ஒலி சேர்த்தால் eggu ஆகிறதே :) --ரவி 20:22, 7 டிசம்பர் 2007 (UTC)

அதற்கு நான் என்ன செய்ய, எனது பள்ளியில் உச்சரித்ததை கூறினேன். ந,ன,ண,ல,ள வேறுபாட்டையே பலர் சரியாக உச்சரிக்காத போது அரிதாக பயன்படும் ஆய்த எழுத்தை தவறாக உச்சரிப்பதில் வியப்பொன்றும் இல்லை. நல்லவேளையாக ஓரளவுக்கு ர,ற கர வேறுபாடு எல்லோராலும் உணரப்படுகிறது(தெலுங்கில் 'ற(ఱ)'கரத்துக்கு வரி வடிவம் இருந்தாலும், தற்சமயம் பெரும்பாண்மையோரால் அது ரகரத்தைப் போலவே உச்சரிக்கப்படுவது வருத்தத்திற்குரியது.)

பின் குறிப்பு: பலுக்குதல் என்ற சொல்லை தமிழில் இங்கு தான் என் வாழ்க்கையில் முதன்முறையாக கேட்கிறேன். பெரும்பாலும் உச்சரித்தல் என்ற சொல்லைத்தான் பயன்படுத்துவர். எங்கள் தெலுங்கில், పలుకు(paluku - பலுகு) என்ற உச்சரிப்பை குறிக்கும் சொல் ஒன்று உள்ளது, அதை வைத்து தான் இதன் பொருள் உச்சரிப்பு என யூகித்தேன். இதுப்போன்ற சொற்களை எங்கிருந்து பிடிக்கின்றீர்கள் :-) , ஒரு வேளை இலங்கை வழக்கோ? வினோத் 08:05, 8 டிசம்பர் 2007 (UTC)