பேகம் சாபர் அலி
பேகம் சாபர் அலி | |
|---|---|
| பிறப்பு | 1901 ஸ்ரீநகர், காசுமீர், சம்மு, பிரிட்டிஷ் இந்தியா |
| இறப்பு | 1999 அமெரிக்க ஐக்கிய நாடுகள் |
| பணி | கல்வியாளர், பெண்கள் விடுதலைப் போராளி |
| அறியப்படுவது | பெண்கள் விடுதலை, காஷ்மீரின் முதல் மெட்ரிகுலேட் பெண்மணி |
| பெற்றோர் | கான் பகதூர் ஆகா சையத் உசேன் தாக்கூர் |
| வாழ்க்கைத் துணை | ஆகா சாபர் அலி கிசில்பாசு |
| பிள்ளைகள் | ஆகா நசீர் அலி, அகா சவுகத் அலி, ஆகா அசரப் அலி |
| உறவினர்கள் | அகா சாகித் அலி (பேரன்), சையத் அகமது ஆகா (சகோதரர்) |
| விருதுகள் | பத்மசிறீ |
பேகம் சாபர் அலி (Begum Zaffar Ali) (இயற்பெயர்: சாகிப்சாதி சையதா பாத்திமா) [1] இந்தியப் பெண்கள் உரிமை ஆர்வலரும், ஜம்மு காஷ்மீர் இராச்சியத்தின் முதல் பெண் பள்ளி இறுதித் தேர்ச்சி பெற்றவரும் ஆவார். பின்னர் இவர் காசுமீரில் பள்ளிக் கல்வி ஆய்வாளராக உயர்ந்தார்.[2] இவர் கல்வியாளர், பெண்கள் விடுதலை இயக்கச் செயற்பாட்டாளர், கல்வித் துறையின் துணை இயக்குநர், பின்னர் சம்மு காசுமீர் மாநில சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றினார்.[3] இந்தியா முழுவதும் செயல்பட்ட அனைத்திந்திய மகளிர் மாநாட்டின் நடவடிக்கைகளில் ஈடுபட்டு, இந்தியப் பிரிவினைக்கு முன்பு அதன் செயலாளராகவும் இருந்தார். பின்னர் காசுமீரில் முகமது அலி சின்னா, இவரது சகோதரி பாத்திமா சின்னாவை சந்தித்தது இவரது வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது. அவர்களுடன் ஏற்பட்ட நெருக்கத்திற்குப் பிறகு, அனைத்திந்திய மகளிர் மாநாட்டிலிருந்து விலகி, இந்திய விடுதலைக்கு முந்தைய காலத்தில் பெண்கள் விடுதலை இயக்கங்களில் முழுமையாக ஈடுபட்டார்.[4]
வாழ்க்கை வரலாறு
[தொகு]1901 ஆம் ஆண்டு, மன்னர் அரி சிங் ஆட்சிக் காலத்தில் உள்துறை, நீதித்துறை அமைச்சராக இருந்த கான் பகதூர் ஆகா சையது உசைன் தாக்கூருக்கு மகளாகப் பிறந்தார்.[5] 1925 ஆம் ஆண்டு, பெண்கள் மிசன் உயர்நிலைப் பள்ளியில் (தற்போதைய மாலின்சன் பெண்கள் பள்ளி) ஆசிரியராகப் பணியைத் தொடங்கினார். பெண்களின் உரிமைகளில் உறுதியான நம்பிக்கை கொண்டிருந்த இவர், காசுமீர் பள்ளத்தாக்கு முழுவதும் வீடு வீடாகச் சென்று பெண்கள் கல்வியின் அவசியத்தை எடுத்துரைத்தார். கல்வியின் மூலம் பெண்களை முன்னேற்ற வேண்டும் என்ற இவரது முயற்சிகள் பல பெண்களைத் தங்கள் மகள்களைப் பள்ளிக்கு அனுப்பத் தூண்டின. பொதுக் கூட்டங்களில் இவர் ஆற்றிய உரைகள் பெரும் வரவேற்பைப் பெற்றன. இவர், இந்தியாவின் காசுமீர் பகுதியில் குடியேறிய ஆப்கானிய உயர்குடியினத்தைச் சேர்ந்த ஆகா சாபர் அலி கிசில்பாசை திருமணம் செய்து கொண்டார்.[6] இவர்களுக்கு மூன்று மகன்கள் பிறந்தனர். மூத்த மகன் ஆகா நசீர் அலி, இந்திய ஆட்சிப் பணியில் இணைந்து 1977 ஆம் ஆண்டு இந்திய அரசின் தொழிலாளர் செயலாளராக ஓய்வு பெற்றார். இரண்டாவது மகன் ஆகா சவுக்கத் அலி, 1947 ஆம் ஆண்டு இந்தியப் பிரிவினையின்போது பாகித்தான் அரசுப் பணியில் சேர்ந்தார். இளைய மகன் ஆகா அசுரப் அலி, கல்வியாளராக இருந்து சம்மு,காசுமீரின் உயர்கல்வி ஆணையராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார். காசுமீரி அமெரிக்கக் கவிஞரான இவரது பேரன் ஆகா சாகித் அலி எழுதிய தி வெயில்டு சூயிட் என்ற கவிதைத் தொகுப்பில், பேகம் சாபர் அலியை நினைவுகூரும் ஒரு கவிதையும் இடம்பெற்றுள்ளது.[7] 1987 ஆம் ஆண்டு, இந்திய அரசு இவருக்கு நாட்டின் நான்காவது உயரிய குடிமக்கள் விருதான பத்மசிறீ விருதை வழங்கியது.[8] பின்னர், தூர்தர்சன் தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில், அரசின் மக்களாட்சிக்கு முரணான கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த விருதைத் திருப்பி அளிப்பதாக அறிவித்தார். 1990களில் இவர் அமெரிக்காவுக்குச் சென்று, தனது மகன் ஆகா சௌகத் அலியுடன் வசித்தார். அங்கேயே 1999 ஆம் ஆண்டு காலமானார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Kandahar's Qizilbash". 30 November 2017.
- ↑ "Kandahar's Qizilbash". 2017-11-30.
- ↑ "Seven Influential Kashmiri Women". The Parallel Post. 22 March 2015. Archived from the original on 26 September 2015. Retrieved 19 August 2015.
- ↑ › History
- ↑ [libasapp.pakkapapita.com/?p=5452]
- ↑ "Agha Family of Srinagar Kashmir".
- ↑ Shahid Ali Agha (2009). The Veiled Suite: The Collected Poems. Penguin Books India. p. 393. ISBN 9780393068047.
- ↑ "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2015. Archived from the original (PDF) on 15 October 2015. Retrieved 21 July 2015.