பெல்லாரி கோட்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பெல்லாரி கோட்டை (ஆங்கிலம்:Bellary Fort ) "பல்லாரி குடா" அல்லது "கோட்டை மலை" என்று அழைக்கப்படும் சிறு குன்றின் மேல் கட்டப்பட்டது. இது இந்தியாவின் கருநாடக மாநிலத்தில் பெல்லாரி மாவட்டத்தில் உள்ள வரலாற்று நகரமான பெல்லாரியில் அமைந்துள்ளது. இது மேல் கோட்டை மற்றும் கீழ் கோட்டை என இரண்டு பகுதிகளாக கட்டப்பட்டது. மேல் கோட்டை விஜயநகர பேரரசின் நிலப்பிரபுவான அனுமப்ப நாயக்கரால் கட்டப்பட்டது. ஆனால் கீழ் கோட்டை 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஐதர் அலியால் கட்டப்பட்டது. [1]

ஒரு பிரெஞ்சு பொறியியலாளர் கீழ் கோட்டையின் கட்டிடக் கலைஞராகவும், கட்டமைப்பாளராகவும் இருந்தார். அவர் மேல் கோட்டையையும் புதுப்பித்தார். கோட்டைகள் கட்டி முடிந்தபின், கட்டப்பட்ட கோட்டைகள் 'கும்பாரா குடா' என்று அழைக்கப்படும் எதிரெதிர் மலையை விட குறைந்த உயரத்தில் இருப்பதால், இக்கோட்டை இராணுவ ரீதியாக குறைந்த போர்த்திறம் வாய்ந்ததாக உள்ளதை ஐதர் அலி கண்டறிந்தார். இந்த குறைபாட்டால் கோபமடை ஐதர் அலி கோட்டையின் கிழக்கு வாசலில் பிரெஞ்சு பொறியாளரை தூக்கிலிட உத்தரவிட்டார் என்று கூறப்படுகிறது. 1769 தேதியிட்ட பிரெஞ்சு பொறியாளரின் கல்லறை (அறியப்படாத பிரெஞ்சு பொறியியலாளர் என பொறிக்கப்பட்டுள்ளது) கோட்டையின் கிழக்கு வாசலில் அமைந்துள்ளது. மேலும், உள்ளூர் முஸ்லிம்களினால் பாதுகாக்கப்படுவதால், இது ஒரு முஸ்லீம் துறவியின் கல்லறை என்றும் கூறுகின்றனர்.[1] [2]

கோட்டைகள் பல வரலாற்று மற்றும் மத நினைவுச்சின்னங்களையும், சிறந்த கோபுரங்களையும் கொண்டுள்ளன. ஒரு கோட்டையானது பல பழங்கால தொட்டிகளுடன் மேல் கோட்டையில் இருந்தது, கிழக்கில் கீழ் கோட்டை ஆயுதக் கிடங்கைக் கொண்டிருந்தது.[3]

புராணக் கதை[தொகு]

கோட்டை அமைந்துள்ள நகரமான பெல்லாரிக்கு பல புராணக்கதைகள் உள்ளன.

ஒரு புராணக்கதை இந்த நகரத்தில் தெய்வங்களின் ராஜாவான இந்திரன் (இந்து சமயம்) பெயரிடப்பட்ட பகுதியில் வசித்த ராட்சசனை (அரக்கனை) ‘‘பல்லா’’ அழித்தார் என கூறுகிறது.[1]

மற்றொரு புராதன புராணக்கதை இந்த இடத்தை ராமாயண காவியத்தின் சில நிகழ்வுகளுடன் இணைக்கிறது. விஜயநகர பேரரசின் புகழ்பெற்ற தலைநகரான பெல்லாரியில் இருந்து 30 கிலோமீட்டர் (19 மைல்) தொலைவில் உள்ள அம்பிக்கு அருகிலுள்ள ஒரு இடத்தில் சீதையைத் தேடும் போது இராமர் சுக்கிரீவரையும் அனுமனையும் சந்தித்ததாகக் கூறப்படுகிறது.[4]

வரலாற்று ரீதியாக இணைக்கப்பட்ட புராணக்கதை பெல்லாரி என்பது பழைய கன்னட வார்த்தையான “வல்லரி” மற்றும் “வல்லபுரி” ஆகியவற்றிலிருந்து பெறப்பட்ட பெயர் என்று கூறுகிறது. தலக்காட்டின் மேலைக் கங்கர் வம்சத்தின் ஆட்சிக் காலத்திலிருந்த ஒரு கல்வெட்டு, சிந்தா விசாயாவின் பிரதேசத்திற்கு ஆதாரமளிக்கிறது. இது இன்று பெல்லாரி மற்றும் தார்வாட் மாவட்டங்களைக் கொண்டுள்ளது. போசளப் பேரரசு காலத்தில், "பெல்லாரியா நரேடு" வம்சம் குந்தலா தேசம் என்று அழைக்கப்பட்டபோது பெல்லாரி மீது இறையாண்மையைக் கொண்டிருந்தது. இதுவே பின்னர் 'வல்லாரி-வல்லபுரி' என்ற பெயரில் அறியப்பட்டது. [1]

நிலவியல்[தொகு]

கோட்டையும் நகரமும் இரண்டு முக்கிய மற்றும் பெரிய பாறைகள் கொண்ட கிரானைட் மலைகளைச் சுற்றி அமைந்துள்ளன. நகரின் அனைத்து பகுதிகளிலிருந்தும் காணும் வகையில் உள்ள பல்லாரி குடா மற்றும் கும்பாரா குடா இரண்டு மலைகள் நகரத்தில் ஆதிக்கம் ஓங்கியிருக்கும் பின்னணியை வழங்குகின்றன. இந்த இரண்டு மலைகள் தவிர, காட் குடா ( தற்போதைய நகராட்சி ஜூனியர் கல்லூரிக்கு அருகில்), ஈஸ்வர குட்டா (அனாதி இலிங்கேஸ்வரர் கோயிலுக்கு பின்னால்), கோட்டை பகுதியில் உள்ள செயின்ட் ஜான்ஸ் உயர்நிலைப்பள்ளியை ஒட்டியுள்ள ஒரு மலை மற்றும் பெல்லாரி மத்திய சிறைக்கு அருகில் மற்றொரு மலை போன்ற சிறிய மலைகள் உள்ளன. இன்றைய பெல்லாரி நகரமாக விளங்கும் சமவெளிகளின் கோட்டையை இந்த கோட்டை கொண்டுள்ளது.[3] சமவெளிகளுக்கு மேலே திடீரென மிகப் பெரிய மலை வடிவில் உயரும் பெல்லாரி கோட்டையிலும் அதைச் சுற்றியுள்ள நிலப்பரப்பிலும் கிரானைட் பாறைகள் உள்ளன.

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 "Sloth Bear Foundation". Slothbearfoundation.org/. Archived from the original on 11 October 2008. பார்க்கப்பட்ட நாள் 2009-09-08.
  2. Lewis, Barry. "Bellary District Graves". Tomb at the East Fort Gate, Bellary. Archived from the original on 2012-12-12. பார்க்கப்பட்ட நாள் 2009-09-09.
  3. 3.0 3.1 "View of the N. and E. faces of the citadel at Bellary; Hindus worshipping at a shrine in the foreground". On Line Gallery of British Library. பார்க்கப்பட்ட நாள் 2009-09-08.
  4. "Bellary District – A Profile". National Informatics Centre. Archived from the original on 3 May 2009. பார்க்கப்பட்ட நாள் 2009-09-09.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெல்லாரி_கோட்டை&oldid=3792491" இலிருந்து மீள்விக்கப்பட்டது