பெலவானி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெலவானி
கருநாடகாவின் தாவண்கரேவில் நடந்த பெலவானி பாணி மல்யுத்தப் போட்டி (2005).
வேறு பெயர்குஸ்தி
நோக்கம்மற்போர்
கட்டிப்பிடுத்து விளையாடுதல்
தோன்றிய நாடுஇந்தியத் துணைக்கண்டம்
Parenthoodகுஸ்தி பெலவானி
மல்ல யுத்தம்
வழிவந்த கலைபிடி மல்யுத்தம், சுட்டு மல்யுத்தம், நாட்டுப்புற மல்யுத்தம், சாதாரன வகை மல்யுத்தம், கலப்பு தற்காப்பு கலைகள்
ஒலிம்பிய
விளையாட்டு
சேர்க்கப்படவில்லை

பெலவானி (Pehlwani) [1] என்றும் குஸ்தி என்றும் அழைக்கப்படும் இது, இந்தியத் துணைக்கண்டத்தில் நடத்தப்படும் மல்யுத்தத்தின் ஒரு வடிவமாகும். இது இந்திய பாரம்பரியத்தில் மல்ல யுத்தம் என்பதிலிருந்து விரிவுபடுத்தப்பட்டது.[2] பெலவானி மற்றும் குஸ்தி என்ற சொற்கள் முறையே பாரசீகச் சொற்களான பலவானி (வீரம்) மற்றும் கோஷ்டி (மல்யுத்தம், இலக்கியம். கொலை) ஆகியவற்றிலிருந்து உருவாகின்றன. அதாவது வீர மல்யுத்தம் என்பதாகும். ஈரானிய வம்சாவளியைச் சேர்ந்த "பெலாவி" என்ற ஈரானிய வார்த்தையிலிருந்து இந்த வார்த்தை உருவாகியிருக்கலாம்.

இந்த விளையாட்டில் ஒரு வீரர் ஒரு பயில்வான் (நாயகனுக்கான பாரசீகச் சொல்) என்று குறிப்பிடப்படுகிறார். அதே நேரத்தில் ஆசிரியர்கள் உஸ்தாத் (ஆசிரியர் என்பதற்கான பாரசீகச் சொல்). பெலவான் பயிற்சியில் மிகவும் பிரபலமான பயிற்சியாளர்களில் ஒருவரான பெரிய காமா (குலாம் முகமது பக்ச் பட்) என்பவராவார். இவர் எல்லா காலத்திலும் சிறந்த மல்யுத்த வீரர்களில் ஒருவராக கருதப்படுகிறார். பேராசிரியர் இராமமூர்த்தி மற்றொரு உதாரணமாவார். இந்தியாவில் மட்டுமல்ல, உலகெங்கிலும் உள்ள நுட்பம் மற்றும் உடலமைப்பால் அறியப்பட்ட இந்திய மல்யுத்த வீரரான பிரம்மதேவ் மிசுரா மேலும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாவார். இவரைப்பற்றி "தி ரெஸ்ட்லர்ஸ் பாடி" என்ற மிகவும் பிரபலமான புத்தகம் வெளிவந்தது.[3] பெலவானி கலை பிடி மல்யுத்தத்தை பெரிதும் பாதித்தது. இது நாட்டுப்புற பாணி மல்யுத்தம், சாதாரண மல்யுத்தம், கலப்பு தற்காப்பு கலைகள் ஆகியவற்றை ஊக்கப்படுத்தியது.

வரலாறு[தொகு]

பண்டைய இந்திய மல்யுத்த வடிவம் மல்ல-யுத்தம் என்று அழைக்கப்படுகிறது. குறைந்தபட்சம் கிமு 5 ஆம் நூற்றாண்டிலிருந்து இது நடைமுறையில் உள்ளது.[4] 13ஆம் நூற்றாண்டின் மல்ல புராணத்தில் இதைப் பற்றி விவரிக்கப்பட்டுள்ளது. இது நவீன குஸ்தியின் முன்னோடியாகும்.[2]

16 ஆம் நூற்றாண்டில், துருக்கிய-மங்கோலிய கலாச்சாரத்தைச் சேர்ந்த மத்திய ஆசிய முகலாயர்களால் வட இந்தியா கைப்பற்றப்பட்டது. ஈரானிய மற்றும் மங்கோலிய மல்யுத்தத்தின் செல்வாக்கின் மூலம், சிறுது காலத்திலேயே, உள்ளூர் மல்ல-யுத்தம் பாரசீக கோஷ்டியாக மாற்றப்பட்டது. சுவாரசியமாக, மல்ல-யுத்தத்தின் அம்சங்கள் அகத் (மல்யுத்த பயிற்சி கழகம்) கலாச்சாரத்தில் தப்பிப்பிழைத்தன: மாணவர்கள் சைவ உணவு உண்ண வேண்டும் என்றும், மேலும் பிரம்மச்சரியத்துடன் இருக்கவேண்டும் என்றும், சமையல்காரர்கள் இவர்களுக்கான வசதியை கவனித்துக்கொள்ள வேண்டும் போன்ற விதிகள் வகுக்கப்பட்டது.

முதல் முகலாயப் பேரரசரான பாபர் ஒரு மல்யுத்த வீரராக இருந்தார். மேலும் தனது ஒவ்வொரு கைகளிலும் ஒரு மனிதனை தூக்கிக் கொண்டு நீண்ட தூரம் மிக வேகமாக ஓடக்கூடியவர் என்றும் கூறப்படுகிறது. முகலாய கால மல்யுத்த வீரர்கள் சில நேரங்களில் தனது கைகளில் புலியின் நகம் போன்று இரும்பினாலான ஒரு கத்தியை அணிந்தனர். இது நக்கி கா குஸ்தி அல்லது "நக மல்யுத்தம்" என்று அழைக்கப்பட்டது.

இரண்டு மல்யுத்த வீரர்களின் போட்டி (1825).

17 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், இராமதாசர் நாட்டில் பயணம் செய்தார். அனுமானுக்கு மரியாதை செலுத்துவதற்காக இந்துக்களை உடல்பயிற்சியில் ஈடுபட ஊக்குவித்தார். மராட்டிய ஆட்சியாளர்கள் போட்டியில் வெற்றி பெருபவர்களுக்கு பெருமளவு பரிசுத் தொகையை வழங்கியதன் மூலம் குஸ்தியை ஆதரித்தனர். அந்த நேரத்தில் ஒவ்வொரு மராத்தா சிறுவனும் மல்யுத்தம் செய்தனர் என்றும் பெண்கள் கூட இதை கற்று வந்தனர் என்றும் கூறப்பட்டது. காலனித்துவ காலத்தில், உள்ளூர் இளவரசர்கள் போட்டிகளை நடத்துவதன் மூலம் குஸ்தியின் பிரபலத்தைத் தக்கவைத்துக் கொண்டனர். மல்யுத்தம் என்பது ராஜபுத்திரர்களின் விருப்பமான பார்வையிடும் விளையாட்டாக இருந்தது. மேலும் மிகுந்த ஆவலுடன் போட்டிகளை எதிர்நோக்கியதாகக் கூறப்பட்டது. ஒவ்வொரு ராஜ்புத் இளவரசனும் அல்லது தலைவரும் அவரது பொழுதுபோக்குக்காக போட்டியிட ஏராளமான மல்யுத்த வீரர்களைக் கொண்டிருந்தனர். மிகப் பெரிய மல்யுத்த மையங்களாக உத்தரபிரதேசமும் ,பஞ்சாப்பும் இருந்ததாக கூறப்பட்டது .

பேராக் ஆயுத காவல்துறையில் 1880-1890 ஆம் ஆண்டில், பெலவானி மல்யுத்தத்தை பயிற்சி பெற்ற சீக்கியர்கள்.

1909 ஆம் ஆண்டில், அப்துல் சபார் சௌதாகர் என்ற வங்காள வணிகர் உள்ளூர் இளைஞர்களை ஒன்றிணைத்து, மல்யுத்த போட்டியை நடத்துவதன் மூலம் வலிமையைக் காண்பித்து காலனித்துவவாதிகளுக்கு எதிரான பிரிட்டிசு எதிர்ப்பு போராட்டத்தில் அவர்களை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டிருந்தார். சபார்-எர் போலி கெலா என்று அழைக்கப்படும் இந்த போட்டி சுதந்திரம் மற்றும் அடுத்தடுத்த பகிர்வு மூலம் தொடர்கிறது. பாரம்பரிய செனாய், முரசு ஆகியவற்றை இசைப்பதோடு, ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படும் அறுவடைத் திருவிழாவான வைசாக்கி மேளாவுடன் (பெங்காலி புத்தாண்டு) இது இன்னும் வங்காளதேசத்தில் நடைபெறுகிறது. இது சிட்டகாங்கின் பழமையான மரபுகளில் இதுவும் ஒன்றாகும்.

மிக சமீபத்திய காலங்களில், இந்தியாவில் பெரிய காமா (பிரித்தானிய இந்தியாவின் மற்றும் பின்னர் பாக்கித்தானின், பிரிவினைக்குப் பிறகு) மற்றும் கோபர் கோகோ போன்ற பிரபலமான மல்யுத்த வீரர்கள் இருந்தனர். 1962 ஆம் ஆண்டில் நடந்த நான்காம் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் (பின்னர் ஜகார்த்தா விளையாட்டுப் போட்டி என்று அழைக்கப்பட்டது) ஏழு மல்யுத்த வீரர்களும் பதக்கப் பட்டியலில் இடம் பெற்றனர், இவர்கள், சாதாரண மல்யுத்தம் மற்றும் கிரேக்க-உரோமன் மல்யுத்தத்தில் 12 பதக்கங்களை வென்றனர். யமேக்காவின் கிங்ஸ்டனில் நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டுக்கு அனுப்பப்பட்ட 8 மல்யுத்த வீரர்களும் நாட்டிற்கு பதக்கங்களைப் பெறுவதில் பெருமை பெற்றபோது இந்த செயல்திறன் மீண்டும் மீண்டும் காணப்பட்டது. 60களில், உலகின் முதல் எட்டு அல்லது ஒன்பது மல்யுத்த நாடுகளில் இந்தியாவும் இடம் பெற்றது. மேலும், 1967 ஆம் ஆண்டில் புதுதில்லியில் உலக மல்யுத்த போட்டியையும் நடத்தியது.

இப்போதெல்லாம் மல்யுத்தத்தில் போட்டியிடும் பயிவான்கள் யுடோ மற்றும் யயுற்சு ஆகியவற்றின் அம்சங்களில் ஈர்க்கபடுகிறார்கள்.கார்ல் கோட்ச் போன்ற முந்தைய காலத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற மல்யுத்த வீரர்கள் குஸ்தியைக் கற்றுக்கொள்வதற்கும் அவர்களின் திறமைகளை மேலும் மேம்படுத்துவதற்கும் இந்தியாவுக்கு சுற்றுப்பயணங்கள் மேற்கொண்டுள்ளனர். கார்ல் கோட்ச் இரண்டு கரலா கட்டை (தெற்காசிய மல்யுத்த வீரர்களால் கை மற்றும் தோள்பட்டை தசைகளை வலிமைப் படுத்த பயன்படுத்தப்படும் கனமான மரக் கட்டை) பரிசாக வழங்கப்பட்டது.

ஒரு பழைய இந்திய பயிவான் வாரணாசி அருகே இந்திய கரலா கட்டைகளுடன் உடற்பயிற்சி செய்கிறார்.

உணவு முறை[தொகு]

இந்து தத்துவத்தின் சாங்கியப் பள்ளியின் கூற்றுப்படி, மக்கள், செயல்பாடுகள் மற்றும் உணவுகள் உட்பட பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தையும் சத்துவ குணம் (அமைதியான / நல்ல குணம்), இராட்சத குணம் (உணர்ச்சிவசப்பட்ட / செயலில்), மற்றும் தாமச குணம் (மந்தமான / சோம்பலான) என்ற மூன்றையும் முக்குணங்களாக வரிசைப்படுத்தலாம்: .

நெய், மல்யுத்த வீரர்கள் உட்கொள்ளும் உணவுகளில் சத்துவ குணம் மிக்க ஒன்று

ஒரு தீவிரமான செயல்பாடாக, மல்யுத்தம் இயல்பாகவே இராட்சதத் தன்மையைக் கொண்டுள்ளது. இது சத்துவ உணவுகளை உட்கொள்வதன் மூலம் பெலவானியை எதிர்க்கிறது. பாலும், நெய்யும் உணவுகளில் மிகவும் சத்துவ குணம் மிக்கது என்று கருதப்படுகின்றன, மேலும் பாதாம் பருப்புடன் சேர்ந்து, பெலவானி குராக் (பாரசீக சொல்) அல்லது உணவின் மூன்று புனிதங்களாக இருக்கின்றன. பெலவானிக்கு ஒரு பொதுவான சிற்றுண்டி சுண்டல் ஆகும், அவை முந்தைய நாள் இரவில் தண்ணீரில் ஊறவைத்து உப்பு, மிளகு மற்றும் எலுமிச்சை சேர்த்து பதப்படுத்தப்படுகின்றன; முளை கட்டிய கொண்டைக் கடலையும் சத்தானதாக கருதப்படுகிறது. இந்திய மல்யுத்த மாத இதழான "பாரதிய குஸ்தி"யின் பல்வேறு கட்டுரைகள் பின்வரும் பழங்களை உட்கொள்ள பரிந்துரைத்துள்ளன: ஆப்பிள், வில்வம், வாழைப்பழங்கள், அத்தி, மாதுளை, நெல்லிக்காய், எலுமிச்சை மற்றும் தர்ப்பூசணி. ஆரஞ்சு சாறு மற்றும் பச்சை காய்கறிகளும் அவற்றின் சத்துவ தன்மைக்கு பரிந்துரைக்கப்படுகின்றன. புரதச்சத்து அதிகம் இருப்பதால் பல ஒரு பெலவானி இறைச்சியை சாப்பிடுகிறார். புகழ்பெற்ற மல்யுத்த வீரர் தாரா சிங் ஒவ்வொரு நாளும் ஒரு பவுண்டுக்கு மேல் இறைச்சியை சாப்பிடுவார்.[5]

வெறுமனே, மல்யுத்த வீரர்கள் சட்னி மற்றும் ஊறுகாய் மற்றும் சாட் போன்ற புளிப்பு மற்றும் அதிகப்படியான மசாலா உணவுகளை தவிர்க்க வேண்டும். பூண்டு, சீரகம், கொத்தமல்லி, மஞ்சள் ஆகியவற்றைக் கொண்டு லேசான சுவையூட்டுதல் ஏற்றுக்கொள்ளத்தக்கது. மதுபானம், புகையிலை, தாம்பூலம் நுகர்வு கடுமையாக தடுக்கப்படுகிறது.[6]

பரத்பூரில் குஷ்டி

பட்டங்கள்[தொகு]

பெரிய காமா, முன்னாள் இருஸ்தம்-இ- சமானா

குஸ்தி வெற்றியாளர்களுக்கு வழங்கப்படும் அதிகாரப்பூர்வ பட்டங்கள் பின்வருமாறு. இருஸ்தம் என்ற தலைப்பு உண்மையில் சா நாமா என்ற காவியத்திலிருந்து காணப்படும் ஒரு ஈரானிய நாயகனின் பெயராகும்.

 • "இருஸ்தம்-இ-ஹிந்த் ": இந்தியாவின் வெற்றியாளர்களான பஞ்சாபின் தாரா சிங், அரியானாவைச் சேர்ந்த கிரிசன்குமார், முகமது பூட்டா பயில்வான், இமாம் பக்ச் பயில்வான், அமீதா பயில்வான், விஷ்ணுபந்த் நாக்ரலே, தாது சௌக்லே, மகாராட்டிராவின் அரிச்சந்திர பிராஜ்தார் (இந்தியச் சிங்கம்) ஆகியோர் இந்தப்பட்டத்தை பெற்றார்கள்.[7], உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த மங்கல ராய் மற்றும் பயில்வான் சம்சேர் சிங் (பஞ்சாப் காவல்துறை) ஆகியோர் கடந்த காலத்தில் இருஸ்தம்-இ-ஹிந்த் பட்டத்தை வைத்திருந்தனர். விஷ்ணுபந்த் நாக்ரலே இந்த பட்டத்தை பெற்ற முதல் மல்யுத்த வீரர் ஆவார்.
 • இருஸ்தம்-இ-பாக்கித்தான் : (இருஸ்தம்-ஐ-பாக்கித்தான் என்றும் உச்சரிக்கப்படுகிறது.) பாக்கித்தானின் வெற்றியாளர்களுக்கு வழங்கப்படும் பட்டம்.
 • இருஸ்தம்-இ-பஞ்சாப் : பாக்கித்தானின் பஞ்சாப் வெற்றியாளர்களுக்கு வழங்கப்படும் பட்டம்.
 • " மகாராட்டிர கேசரி ": மகாராட்ஷ்டிராவின் சிங்கம். மகாராட்டிர கேசரி என்பது இந்திய பாணி மல்யுத்த வெற்றியாளர்களுக்கு வழங்கப்படும் பட்டமாகும். நரசிங் யாதவ் இப்பட்டத்தை மூன்று முறை வென்றவர்.[8]
 • " இருஸ்தம்-இ-பஞ்சாப் " : (இருஸ்தம்-ஐ-பஞ்சாப் என்றும் உச்சரிக்கப்படுகிறது) இந்தியாவின் பஞ்சாப் வெற்றியாளர்களுக்கு வழங்கப்படும் பட்டம். பயில்வான் சம்சேர் (பஞ்சாப் காவல்துறை) பயில்வான் சல்விந்தர் சிங் சிண்டா ஆறு முறை இப்பட்டத்தை பெற்றவர்கள்.
 • " இருஸ்தம்-இ-சமானா ": உலக வெற்றியாளர். 1910 இல் ஸ்டானிஸ்லாஸ் ஸிபிஸ்கோவை தோற்கடித்தபோது பெரிய காமா இப்பட்டத்தை பெற்றார்.
 • " பாரத்-கேசரி" : இந்தியில் சிறந்த அதிக உடல் எடை கொண்ட மல்யுத்த வீரர். சமீபத்திய வெற்றியாளர்களில் சந்திர பிரகாசு மிசுரா (காமா பயில்வான்),[9][10] கிருட்டிண குமார் (1986), இராஜீவ் தோமர் (இரயில்வே), பயில்வான் சம்சேர் சிங் (பஞ்சாப் காவல் துறை) மற்றும் பல்விந்தர் சிங் சீமா (பஞ்சாப் காவல் துறை).
 • " இந்த் கேசரி ": 1969 ஆம் ஆண்டின் வெற்றியாளர் இஹிந்த் கேசரி அஹரிச்சந்திர பிராஜ்தார் (மகாராட்டிரா) [11] (இந்திய சிங்கம்); 2013 வெற்றியாளர் அமோல் பாரத்தே (மகாராட்டிரா);[12] 2015 ஆம் ஆண்டின் வெற்றியாளர் சுனில் சலுங்கே (மகாராட்டிரா) [13]

மேலும் காண்க[தொகு]

குறிப்புகள்[தொகு]

 1. "Pehlwani".
 2. 2.0 2.1 Alter, Joseph S. (May 1992a). "The "sannyasi" and the Indian Wrestler: The Anatomy of a Relationship". American Ethnologist 19 (2): 317–336. doi:10.1525/ae.1992.19.2.02a00070. பன்னாட்டுத் தர தொடர் எண்:0094-0496. 
 3. "The Wrestler's Body". publishing.cdlib.org. பார்க்கப்பட்ட நாள் 2021-01-21.
 4. Alter, Joseph S. (May 1992). "the sannyasi and the Indian wrestler: the anatomy of a relationship". American Ethnologist 19 (2): 317–336. doi:10.1525/ae.1992.19.2.02a00070. பன்னாட்டுத் தர தொடர் எண்:0094-0496. https://archive.org/details/sim_american-ethnologist_1992-05_19_2/page/317. 
 5. Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.
 6. {{cite book}}: Empty citation (help)
 7. "Olympian wrestler 'Lion of India' Harishchandra Birajdar passes away". dna. 14 September 2011.
 8. "Narsing is 'Maharashtra Kesari' for record third time | Sakal Times". Sakaaltimes.com. பார்க்கப்பட்ட நாள் 10 January 2016.
 9. "गामा पहलवान ने किया देश का नाम रोशन". Dainik Jagran (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2020-09-27.
 10. "Bharat Kesari GAMA Pahalwan and Mishra family, Gorakhpur ,Uttar Pradesh". www.facebook.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-09-27.
 11. "Wrestler Harishchandra Birajdar dies at 73 – Indian Express". Archive.indianexpress.com. 15 September 2011. பார்க்கப்பட்ட நாள் 10 January 2016.
 12. "Pune boy Barate is Hind Kesari | Sakal Times". Sakaaltimes.com. பார்க்கப்பட்ட நாள் 10 January 2016.
 13. क्रीडा (2 February 2015). "सुनील साळुंखे 'हिंद केसरी'". Loksatta.com. பார்க்கப்பட்ட நாள் 10 January 2016.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெலவானி&oldid=3617872" இலிருந்து மீள்விக்கப்பட்டது