உள்ளடக்கத்துக்குச் செல்

பெர்னாவ் தெ குவெய்ரோசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பெர்னாவோ டி குவைறோஸ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பெர்னாவ் தெ குவெய்ரோசு
Fernão de Queyroz
பிறப்பு(1617-12-26)26 திசம்பர் 1617
அமரந்தே, போர்த்துக்கல்
இறப்புஏப்ரல் 10, 1688(1688-04-10) (அகவை 70)
போர்த்துகேய இந்தியா
பணியேசு சபை குருவானவர்

பெர்னாவ் தெ குவெய்ரோசு (Fernão de Queyroz, டிசம்பர் 26, 1617 - ஏப்ரல் 10, 1688) யேசு சபையைச் சேர்ந்த கத்தோலிக்கக் குருவானவரும், வரலாற்று எழுத்தாளரும் ஆவார். போர்த்துக்கலைச் சேர்ந்த இவர் தனது 18 ஆவது வயதில் 30 பேர் அடங்கிய யேசு சபைக் குழுவினருடன் இந்தியாவுக்கு வந்தார். இவருடைய மேலாண்மைத் திறன் காரணமாக படிப்படியாக உயர்ந்து இந்தியாவில் யேசு சபையினரின் மிக உயர்ந்த பதவியான "புரொவின்சல்" என்னும் பதவியை வகித்தார். இவர் பல நூல்களை எழுதியுள்ளார். இவர் எழுதிய நூல்களிற் சில வெளியிடுவதற்கு முன்பே ஒரு தீ விபத்தில் அழிந்துவிட்டன. எனினும் வெளிவந்த சில நூல்கள் இலங்கை, இந்தியா போன்ற சில நாடுகளின் வரலாற்றை, குறிப்பாகப் போர்த்துக்கேயர் கால வரலாற்றை அறிந்துகொள்வதில் முக்கியமான சான்றுகளை வழங்குகின்றன.

வரலாறு

[தொகு]

பெர்னாவ் தெ குவெய்ரோசு 1617 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் தேதி போர்த்துக்கலில் உள்ள அமரந்தே என்னும் இடத்தில் பிறந்தார். 1631 ஆம் ஆண்டில் கொயிம்பிரா என்னும் இடத்தில், யேசு சபையில் இணைந்துகொண்டார். சில காலத் தொடக்கநிலைக் கல்விக்குப் பின்னர் சமயப் பணிக்காக இந்தியா சென்ற யேசு சபைக் குழுவினருடன் இந்தியாவுக்குப் பயணமானார். 1635 ஆம் ஆண்டு ஏப்ரல் 12 ஆம் தேதி புதிய வைசுராயாகப் பதவி ஏற்பதற்காக லிசுபனில் இருந்து புறப்பட்ட பெட்ரோ த சில்வாவை ஏற்றிச் சென்ற கப்பலில் இக்குழுவினரும் பயணத்தைத் தொடங்கினர்.[1] குவெய்ரோசு கொச்சின் ஊடாக டிசம்பர் 8 ஆம் தேதி கோவாவைச் சென்றடைந்தார்.

கோவாவில் மெய்யியல், இறையியல் ஆகியவற்றைக் கற்றார். பின்னர் அங்கேயே இறையியல் பேராசிரியர் ஆனார். ஆனாலும், சபையின் பிற பொறுப்புக்களை ஏற்றுக்கொள்வதற்காக இப்பதவியை விடவேண்டியது ஆயிற்று. தியூவின் துணை வட்டகைக் குருவாகப் (Vice Rector) பதவி ஏற்றார். பின்னர் தனா கல்லூரி, பசீமிலும் வட்டகைக் குருவானார். பின்னர் மேதகர் (Provost) பதவிக்கு உயர்ந்தார். பின்னர் சிலகாலம் முக்கியமான பிரகாமின் கத்தோலிக்கச் சமூகத்தின் கோவிற்பற்றுக் குருவானவராகப் பணியாற்றினார். விரைவிலேயே, இந்தியாவில் யேசு சபையின் மிக உயர்ந்த பதவியான "புரொவின்சல்" பதவி அவருக்குக் கிடைத்தது. மூன்றாண்டுக் காலப் பதவியான இதை அவர் 1677 முதல் 1680 வரை வகித்தார். பதவியில் இருந்து விலகிய பின்னர் கோவாவிலேயே வசித்த அவர் சமயத்தொடர்பான பிற அலுவல்களிலும், எழுத்துத் துறையிலும் ஈடுபட்டிருந்தார். தொடர்ந்து 53 ஆண்டுகள் இந்தியாவில் வாழ்ந்த குவெய்ரோசு 1688 ஏப்ரல் 10ம் தேதி காலமானார்.

ஆக்கங்கள்

[தொகு]

குவெய்ரோசு ஒரு சிறந்த அறிஞர். அத்துடன் இவர் யேசு சபையில் பெரிய பதவிகளை வகித்ததனால் சபையின் நடவடிக்கைகள் குறித்தும் பொதுவான நடப்புகள் குறித்தும் ஏராளமான தகவல்கள் அவருக்குக் கிடைக்கக்கூடியதாக இருந்தன. இவர் சிறப்பான எழுத்து வல்லமை பெற்றிருந்தமையால், பல்வேறு விடயங்கள் குறித்துப் பல நூல்களை இவர் எழுதினார். 1664 ஆம் ஆண்டில் இவர் தங்கியிருந்த யேசு சபைக் குருமடம் தீவிபத்தில் எரிந்து அழிந்த போது இவர் எழுதிப் பதிப்பிப்பதற்காக வைத்திருந்த நூல்கள் பலவும் எரிந்து சாம்பரானதாகத் தெரிகிறது. ஆனாலும், 17 ஆம் நூற்றாண்டில் புகழ் பெற்று விளங்கிய யேசு சபையைச் சேர்ந்த சகோதரர் பெட்ரோ த பாசுட்டோ (Pedro de Basto) என்பவரது வாழ்க்கை வரலாறு குறித்த நூல் மட்டும் உதவியாளர் ஒருவரால் காப்பாற்றப்பட்டுப் பின்னர் பதிப்பிக்கப்பட்டது. இந்த நூலைப் பதிப்பித்ததன் மூலம் இலங்கையில் போர்த்துக்கேயரின் ஆட்சி குறித்த நூல் ஒன்றை எழுதும் எண்ணம் ஏற்பட்டது. தொடர்ந்து இலங்கை மீதான உலகியல், ஆன்மீக வெற்றி (Conquista Temporal e Espiritual de Ceilao) குறித்த நூலை போர்த்துக்கேய மொழியில் எழுதினார். இந்நூல் 1671ல் தொடங்கி 1686ம் ஆண்டு வாக்கில் எழுதி முடிக்கப்பட்டது. இதன் பின்னர் குவெய்ரோசு அதிக காலம் வாழ்ந்திருக்கவில்லை. 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரை, அக்கறை இல்லததாலோ, வேண்டுமென்றோ இந்த நூலை வெளியிடுவதில் எவரும் அக்கறை காட்டவில்லை. கோவாவில் இருந்த போர்த்துக்கேய நிர்வாகச் சூழலுக்கு வெளியே இந்த நூல் பற்றி அரிதாகவே அறியப்பட்டிருந்தது.[2] எஸ். ஜி. பெரேரா என்பவர் The Temporal and Spiritual Conquest of Ceylon என்னும் தலைப்பில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். இது 1930ம் ஆண்டு கொழும்பில் வெளியிடப்பட்டது. குவெய்ரோசின் இந்த நூல் போர்த்துக்கேயர் கால இலங்கை வரலாற்றை எழுதுவதிலும், யாழ்ப்பாண அரசின் இறுதிக்கட்ட வரலாற்றை அறிவதிலும் முக்கிய சான்றுகளை அளிக்கிறது.

குறிப்புக்கள்

[தொகு]
  1. Perera, S. G. (Translator), Introduction in Queyroz, Fernao De, The Temporal and Spiritual Conquet of Ceylon, Asian Educational Services, New Delhi, 1992. p. 5.
  2. Županov, Ines G., Goan Brahmans in the Land of Promise: Missionaries, Spies and Gentiles in the 17th-18th century Sri Lanka, Portugal – Sri Lanka: 500 Years, ed. Jorge Flores, South China and Maritime Asia Series (Roderich Ptak and Thomas O. Hölmann, eds , Wiesbaden: Harrassowitz and the Calouste Gulbenkian Foundation, 2006, pp. 171-210

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெர்னாவ்_தெ_குவெய்ரோசு&oldid=2916290" இலிருந்து மீள்விக்கப்பட்டது