பெரு வெடிப்புக் கோட்பாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பெருவெடிக் கொள்கை இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பெரு வெடிப்புக் கோட்பாட்டின்படி அண்டம் ஒரு மிக அதிக அடர்த்தி கொண்ட ஒரு தீப்பிழம்பாக ஆரம்பித்தது. இது காலப்போக்கில் விரிவடைந்து இன்றைய நிலையை அடைந்துள்ளது.

பெரு வெடிப்புக் கோட்பாடு (Big-Bang Theory) என்பது அண்டம் எவ்வாறு தோன்றியது என்பது பற்றி விளக்க முயலும் ஒரு கோட்பாடாகும். இதுவரை முன்வைக்கப்பட்ட அண்டத்தின் தோற்றம் பற்றிய கோட்பாடுகளில் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது இதுவே.[1]

அடிப்படைகள்[தொகு]

பெரு வெடிப்புக் கோட்பாடானது 20 ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் வெளியான இரண்டு முக்கிய கண்டுபிடிப்புக்களின் அடிப்படையில் உருவானது. ஒன்று ஐன்ஸ்டீனுடைய பொதுச் சார்புக் கோட்பாடு (General Theory of Relativity). மற்றது அண்டவியற் கொள்கை (Cosmological Principle). பொதுச் சார்புக் கோட்பாடு, அண்டவெளியில் உள்ள பொருட்களிடையே காணப்படும் ஈர்ப்புத் தோற்றப்பாடானது மேற்படி பொருட்களின் திணிவுகளினால் பாதிக்கப்பட்டு வெளியும் (space), காலமும் (time) திரிபடைந்த ஒரு நிலையே என்று கூறுகின்றது. அண்ட வெளியில் உள்ள பொருள்கள் வெளியில் ஒரே சீராகப் பரவியிருக்கின்றன என்பதை அடிப்படையாகக் கொண்டதே அண்டவியற் கொள்கை.

வரலாறும் கண்டறிந்த விதமும்[தொகு]

இந்த பெரு வெடிப்புக் கோட்பாடுக்கு பல முந்துக் கோட்பாடுகளும் உண்டு. கி. பி. 1912ஆம் ஆண்டில் வெசுட்டோ மெல்வின் சுலிப்பர் என்பவர் புவியில் இருந்து அனைத்து ஒண்முகில்களும் (இவை விண்மீன் பேரடைகள் அல்ல. விண்மீன் உருவாக்கத்துக்கான ஒளிவிடும் வளிம முகில்களே. அக்காலத்தில் நெபுலா என்பது விண்மீன் பேரடைகளையே குறித்தது. இப்போது இவை ஒண்முகில்கள் எனப்படுகின்றன.)தொலைவாக நகர்ந்து செல்கின்றன என்பதை டாப்ளர் விளைவு மூலம் அறிந்தார். ஆனால் இவர் நமது பால் வழியின் உள்ளே உள்ள ஒண்முகில்களுக்கு மட்டுமே இந்த நிலைமையைக் கண்டறிந்தார். அதன் பின் பத்து ஆண்டுகள் கழித்து கி. பி. 1922ஆம் ஆண்டில் உருசிய அண்டவியலாளரும் கணக்கியலாளரும் ஆன அலெக்சாந்தர் ஃபிரீடுமேன் அல்பர்ட் ஐன்ஸ்டீனின் பொதுச் சார்புக் கோட்பாட்டில் இருந்து பிரீடுமன் சமன்பாடு என்ற ஒன்றை உருவாக்கினார்.அதையும் நிலையான அண்டக் கொள்கையையும் வைத்து இந்த அண்டமே மொத்தமாக விரிவடையாமல் இருந்திருக்கும் என எடுத்துரைத்தார்.

அதன்பின் கி. பி. 1924ஆம் ஆண்டில் எட்வர்டு ஹபிள் விண்மீன் பேரடைகள் அனைத்தும் ஒன்றை விட்டு ஒன்று விலகியே செல்கின்றன எனக் கூறினார். கி. பி. 1927ஆம் ஆண்டில் பெல்ஜியம் நாட்டின் இயற்பியலாளரும் உரோமன் கத்தோலிக பாதிரியாரும் ஆன ஜியார்சசு லெமெட்ரே, ஃபிரெய்டு மென் சமன்பாட்டை தனியாகச் சமன்படுத்தி (முன் செய்தவர் ஜன்சுடீன் கோட்பாட்டில் இருந்து சமன் செய்தார்) விண்மீன் பேரடைகளுக்கு இடையே உள்ள அகச்சிவப்பு விலகல்களை கண்டறிந்து அனைத்து விண்மீன் பேரடைகளுமே ஒன்றைவிட்டு ஒன்று விலகுகின்றன என கண்டறிந்தார்.

விண்மீன் பேரடைகளுக்கு இடையே உள்ள நகர்வுகளை ஆராயும் போது விலகல் குறிகள் ஒவ்வொரு விண்மீன் பேரடைகளுக்கும் மாறுபடும் என நினைத்தார். அதாவது பால் வழியில் இருந்து கணிக்கும் போது சில விண்மீன் பேரடைகள் பால் வழியை நெருங்கவும் சில விண்மீன் பேரடைகள் பால் வழியை விட்டு விலகவும் செய்யும் என எதிர்பார்த்தார். விண்மீன் பேரடைகளுக்கான நகர்வை கணிக்கும் போது அப்பேரடை பால் வழியை நெருங்கினால் வயலட்டு நிறமும் விலகினால் சிவப்பு நிறமும் ஆய்வுக்கருவியில் வரும். ஆனால் இவர் எதிர்பார்ததற்கு மாறாக அனைத்து விண்மீன் பேரடைகளையும் கணிக்கும் போது எல்லாப் பேரடைகளுமே கருவியில் சிவப்பு நிறத்தையே காட்டின. அதனால் கி. பி. 1931ஆம் ஆண்டில் ஜியார்சசு லெமெட்ரே இந்த அண்டமே உப்புகிறது என்னும் உப்பற் கோட்பாட்டை முன் வைத்தார்.

இதன் படி அண்டத்தில் ஒவ்வொரு பேரடையும் மற்ற பேரடையை விட்டு விலகுகிறது என்றால் அனைத்தும் ஒன்றாக இருந்த காலமும் இருந்திருக்கும். அந்த அனைத்துப் பொருட்களுமே ஒரு சிறு முட்டை போன்ற வடிவில் அடைந்திருக்கும். அதுவே ஆதி அண்ட முட்டை எனவும் அதுவே திடீரென வெடித்து பெருவெடிப்புக்கு காரணமானது என முடிவுக்கு வந்தார்.

பெரு வெடிப்பு[தொகு]

WMAP ஆல் எடுக்கப்பட்ட அண்ட நுண்ணலைப் பின்புலக் கதிர்வீச்சின் படிமம்

பெரு வெடிப்புக் கொள்கையின்படி அண்ட வெளியில் உள்ள பொருட்கள் அனைத்தும் 12 தொடக்கம் 14 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் மிக அதிகமான அடர்த்தியுடன் கூடிய, சிறிய அளவினதான தீப்பிழம்பாக இருந்திருக்கிறது. இன்று எங்களால் அறியப்படுகின்ற அண்டத்திலுள்ள பொருட்கள் அனைத்தும் சில மில்லி மீட்டர்கள் அளவுக்குள் அடங்கியிருந்திருக்கும் எனக் கணிப்பிடப்படுகின்றது. இத் தீப்பிழம்பானது இன்று அறியப்படாத ஏதோ ஒரு காரணத்தினால் மிக வேகமாக விரிவடையத் தொடங்கிற்று. இதுவே பெரு வெடிப்பு (Big-Bang) எனப்படுகின்றது. ஒவ்வொரு விநாடியும் பல மடங்காக இவ் விரிவாக்கம் நடந்ததாக அறிவியலாளர்கள் கூறுகின்றனர். இவ்வாறு விரிவடைந்தபோது வெப்பம் தணிந்த வளிமங்கள் ஆங்காங்கே விண்மீன் கூட்டங்களாக உருவாகியிருக்ககூடும் என அவர்கள் கூறுகிறார்கள். பல பில்லியன் ஆண்டுகள் கழிந்த பின்னும் அண்டம் இன்னும் விரிவடைந்து கொண்டே செல்வதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இன்றும் அண்டவெளி முழுதும் ஒரே சீராகப் பரவிக் காணப்படும் நுண்ணலைக் கதிர் வீச்சானது மேற்குறிப்பிட்ட பெரு வெடிப்பின்போது வெளியான கதிர் வீச்சின் எச்சங்களே என்று கருதப் படுகின்றது.

ஆரம்பத்துக்குப் பின்[தொகு]

பின் வரும் வரிசை பெருவெடிப்பு ஆரம்பமானதில் இருந்து அணுக்களும் மற்ற அண்டப் பொருட்களும் எக்காலத்தில் தோற்றம் பெற்றது என்பதை குறிப்பதாகும்.

  1. வெடித்த கணமே காலமும் வெளியும் தோன்றியது.
  2. இரண்டாம் நொடியில் ஈர்ப்பு விசை தோன்றியது.
  3. பிற்பாடு அணுத்துகள்களான குவார்க்குகள் தோன்றின.
  4. அணுத்துகள்கள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டதால் புரோட்டானும் நியூட்ரானும் தோன்றின.
  5. மூன்று நிமிடங்கள் கழித்து புரோட்டானும் நியூட்ரானும் தன்னுடைய வெப்பத்தை தணித்ததினால் இரண்டும் சேர்ந்து அணுக்கருவை மட்டுமே கொண்ட ஹைட்ரஜனும், ஹீலியமும், இலித்தியமும் உருவாகின.
  6. அதன் பிறகு ஐந்து இலட்சம் ஆண்டுகள் கழித்தே எலக்ட்ரான்கள் அணுக்கருக்களால் சிறை பிடிக்கப்பட்டன. அதனால் முறையே ஹைட்ரஜன், ஹீலியம், இலித்தியம் அணுக்கள் உருவாகின.
  7. பிற்பாடு முப்பது கோடி ஆண்டுகள் கழித்தே விண்மீன்களும், விண்மீன் பேரடைகளும் உருவாகின.
  8. இந்நிகழ்வுகளுக்கு எல்லாம் நடந்து முடிந்த பின்னரே சூரிய மண்டலமும் அதில் உள்ள கோள்களும் தோற்றம் பெற்றன. தற்காலத்தில் இருந்து இவை தோற்றம் பெற்று ஏறத்தாழ ஐநூறு கோடி ஆண்டுகள் ஆகியுள்ளது.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

மூல நூல்[தொகு]