உள்ளடக்கத்துக்குச் செல்

பெருவிலங்குகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புவியின் மிகப்பெரிய விலங்கான ஆப்பிரிக்கப் புதர் யானை

நிலப்பரப்பு விலங்கியல் துறையில், பெருவிலங்குகள் என்பது ஒரு குறிப்பிட்ட பகுதி, வாழ்விடம் அல்லது புவியியல் காலகட்டத்தில் காணப்படும், அல்லது முன்னொரு காலத்தில் காணப்பட்டு பின்னர் அழிந்துபோன, பெரிய அல்லது மாபெரும் விலங்குகளைக் குறிக்கும் சொல்லாகும். இதன் அறிவியல் சொல்லான "மெகாஃபெளனா" (megafauna) என்ற பதம் "பெரிய" என்று பொருள்படும் கிரேக்க மொழியின் மெகாஸ் (μέγας) என்ற சொல்லையும் "விலங்கு ஜீவன்" என்று பொருள்படும் புதிய இலத்தீன் மொழியின் ஃபெளனா என்ற சொல்லையும் இணைத்துப் பெறப்பட்ட கூட்டுச் சொல்லாகும். அறிவியலாளர்களால் பொதுவாகப் பெருவிலங்குகள் என்பது 46 கிலோகிராம்கள் (100 பவுண்டுகள்)[1][2][3] அல்லது அதைவிடக் கூடுதலான (அதாவது ஒரு சராசரி மனிதனுக்குச் சமமான அல்லது அவனைவிடப் பெரிய) எடை கொண்ட விலங்குகள் என்றும் வேறுசில அறிவியலாளர்களால் ஒரு டன் அல்லது 1,000 கிலோகிராம்கள் (2,205 பவுண்டுகள்)[1][4][5] அல்லது அதைவிடக் கூடுதலான (அதாவது, ஒரு எருதை ஒத்த அல்லது அதைவிடப் பெரிய) எடை கொண்ட விலங்குகள் என்றும் கருதப்படுகின்றது. இவற்றில் முந்தைய கருத்து வர்ச்சீனிய தூவால் மான், தொம்சன் சிறுமான், சிவப்பு கங்காரு போன்ற பொதுவாக மிகப் பெரியதாகக் கருதப்படாத பல விலங்கினங்களைக் கொண்டதாகும். இவை பொதுவாக தங்களது வாழ்விடப் பகுதியில் எஞ்சியிருக்கும் சில பெரிய விலங்குகளாகும். நடைமுறையில் இச்சொல் மனிதனை விடப் பெரிதாகவும் மனிதனால் பழக்கப்படுத்தப்படாததாகவும் உள்ள நிலவாழ் பாலூட்டிகளைக் குறிக்கும் சொல்லாகவே கல்வித்துறையிலும் பொதுவழக்கிலும் பெரிதும் காணப்படுகிறது. அறிவியல் உலகில் இச்சொல் குறிப்பாக ப்ளீஸ்டோசீன் பெருவிலங்குகளைக் குறிக்கிறது. இவை பெரும்பாலும் இவற்றின் தற்கால சந்ததிகளைவிட உருவத்தில் பெரிதாகவும் இவற்றில் பல கடைப்பனி யுகத்தின் முன்னுதாரண விலங்குகளாகக் கருதப்படுகின்றன. மாமூத் போன்றவற்றை உள்ளடக்கிய இவ்விலங்கினங்கள் கடந்த நாற்பதாயிரம் ஆண்டுகளில் வடக்கு யூரேசியா, வட மற்றும் தென் அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்களில் பெரிய அளவில் அழிந்துவிட்டன.[6]

மெளரிசியோ ஆன்டன் வரைந்த வடக்கு ஸ்பெயினின் பின் ப்ளீஸ்டோசீன் காலப் பெருவிலங்குகள்

தற்காலத்தில் வாழும் விலங்குகளில் பெருவிலங்குகள் என்ற சொல் யானைகள், ஒட்டகச்சிவிங்கிகள், நீர்யானைகள், காண்டாமிருகங்கள், பெரிய மாட்டினங்கள் போன்ற நிலவாழ் பாலூட்டிகளைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது. இவ்வைந்து பெரிய தாவரவுண்ணி பாலூட்டிகளில், மாட்டினங்கள் மட்டுமே ஆப்பிரிக்கா மற்றும் தெற்காசியாவிற்கு வெளியே தற்போது காணப்படுகின்றன. முன்னர் மிகவும் பரந்த அளவில் காணப்பட்டிருந்தன மற்ற நான்கும் காலப்போக்கில் எண்ணிக்கையில் தொடர்ந்து சுருங்கிக் கொண்டே வந்து தற்போது அவற்றின் வாழிட வரம்புகள் மிகவும் சுருங்கிவிட்ட நிலையில் உள்ளன. காட்டுக் குதிரைகள் பெருவிலங்குகளின் மற்றொரு எடுத்துக்காட்டு ஆகும். ஆனால் இவற்றின் தற்போதைய வாழிட வரம்புகள் பெரும்பாலும் பழைய உலகப் பகுதிகளுக்குள், அதிலும் குறிப்பாக ஆப்பிரிக்க மற்றும் ஆசியப் பகுதிகளுக்குள், சுருங்கிவிட்டன. பெருவிலங்கு இனங்களை அவற்றின் உணவு வகையின் அடிப்படையில் வகைப்படுத்த இயலும்: பெருதாவரவுண்ணிகள் (எ.கா. யானைகள்), பெருவூனுண்ணிகள் (எ.கா. சிங்கங்கள்), மற்றும், மிகவும் அரிதாக, பெருவனைத்துண்ணிகள் (எ.கா. கரடிகள்). பெருவிலங்குகள் பாலூட்டிகள், பறவைகள், ஊர்வன, நீர்நில வாழ்வன, மீன், முதுகெலும்பிலிகள் என அவற்றின் விலங்கு இன வரிசையின் அடிப்படையிலும் வகைப்படுத்தப்படுகின்றன.

ராட்சத நீர்வாழ் இனங்கள் (குறிப்பாக திமிங்கலங்கள்); பெரியவகை மறிமான்கள், மான்கள், குதிரைகள், கால்நடைகள் உள்ளிட்ட நிலத்தில் வாழும் பெரிய காட்டு அல்லது வளர்ப்பு விலங்குகள்; இவற்றோடு டைனோசர்கள் உள்ளிட்ட அழிந்துபோன ராட்சத ஊர்வன வகைகளையும் குறிக்கப் "பெருவிலங்கு" என்ற சொல் பொதுவாகப் பயன்படுகிறது.

மிகவும் அரிதாகவே பெருவிலங்கு என்ற சொல் முதுகெலும்பிலிகளைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும் எப்போதாவது இச்சொல் தென்னை நண்டுகள், ஜப்பானிய சிலந்தி நண்டுகள், இன்றைய தனது சந்ததியினரை விட பெரிதாக இருந்து அழிந்துபோன முதுகெலும்பிலிகள் (எ.கா. கார்போனிஃபெரஸ் காலகட்டத்தின் 1 மீ (3 அடி) நீள தட்டாரப்பூச்சிகள்) ஆகியவற்றைக் குறிக்கவும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

இவற்றையும் பார்க்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 Stuart, A. J. (November 1991). "Mammalian extinctions in the Late Pleistocene of northern Eurasia and North America". Biological Reviews 66 (4): 453–562. doi:10.1111/j.1469-185X.1991.tb01149.x. பப்மெட்:1801948. https://archive.org/details/sim_biological-reviews_1991-11_66_4/page/453. 
  2. Martin, P. S. (1984). "Prehistoric overkill: The global model". In Martin, P. S.; Klein, R. G. (eds.). Quaternary Extinctions: A Prehistoric Revolution. University of Arizona Press. pp. 354–403. ISBN 978-0-8165-1100-6. கணினி நூலகம் 258362030.
  3. Martin, P. S.; Steadman, D. W. (1999-06-30). "Prehistoric extinctions on islands and continents". In MacPhee, R. D. E (ed.). Extinctions in near time: causes, contexts and consequences. Advances in Vertebrate Paleobiology. Vol. 2. New York: Kluwer/Plenum. pp. 17–56. ISBN 978-0-306-46092-0. கணினி நூலகம் 41368299. Retrieved 2011-08-23. see page 17
  4. "The Great American Biotic Interchange". Megafauna: Giant Beasts of Pleistocene South America. Indiana University Press, Bloomington, Indiana. 2013. p. 150. ISBN 978-0-253-00230-3. {{cite book}}: Unknown parameter |authors= ignored (help)
  5. "Historical Determinants of Mammal Species in Africa". African Biodiversity: Molecules, Organisms, Ecosystems. Springer. 2005. p. 294. ISBN 978-0387243153. {{cite book}}: Unknown parameter |authors= ignored (help)
  6. Ice Age Animals. Illinois State Museum
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெருவிலங்குகள்&oldid=3582873" இலிருந்து மீள்விக்கப்பட்டது