பெரும்பதுமனார்
Appearance
பெரும்பதுமனார் சங்ககாலப் புலவர். இவரது பாடல்கள் நான்கு உள்ளன. அவை: குறுந்தொகை 7, நற்றிணை 2, 109, புறநானூறு 199. பதுமனார் என்று வேறொரு புலவரும் உள்ளார்.
பாடல்களில் வரும் செய்திகள்
[தொகு]ஆரியர் கயிறாடு பறை
[தொகு]- அவள் தன் தாய்வீட்டை விட்டுவிட்டு அவனோடு அவன் ஊருக்குச் செல்கிறாள். வழியில் கண்டவர்கள் பேசிக்கொள்கின்றனர்.
- அவன் காலில் கழல் இருக்கிறது. அவள் காலில் சிலம்பு ஒலிக்கிறது. அவர்கள் சொல்லும் வழியில் வாகைமரத்தின் வெண்மையான நெற்றுகள் ஒலிக்கின்றன.
- ஆரியர் ஒற்றைக் கயிற்றின்மேல் ஏறி ஆடி வித்தை காட்டும்போது அவர்களின் பறை ஒலிப்பதுபோல் வாகை நெற்றுகள் ஒலிக்கின்றன.
- செல்லும் இருவரில் அளியர்(கொடுத்துவைத்தவர்) யார்? - குறுந்தொகை 7
வை எயிற்று ஐயள்
[தொகு]- இவள் புன்முறுவலோடு முன்னே செல்கிறாள். இவன் பின்தொடர்கிறான். வழி காய்ந்துபோன ஈந்துமுள் காடு. வழியில் சென்றவரைக் கொன்று தின்ற நெய்த்தோர் வாயுடன் குட்டி-வல்லியம் தண்ணீருக்காக மரலைத் தொடரும் காடு. இந்த வழியில் இவளை அழைத்துக்கொண்டு செல்லும் இந்த இளையோன் உள்ளம் மின்னி இடித்து மலைமேல் விழும் இடியைக்காட்டிலும் கொடியது. - கண்ட வழிப்போக்கர்கள் இவ்வாறு பேசிக்கொள்கின்றனர். - நற்றிணை 2
உச்சிக் கட்டிய கூழை ஆ
[தொகு]- உச்சிப்பொழுது வெயிலில் கட்டிப்போட்டு வைத்திருக்கும் கூழைப்பசு போல அவர் பிரிந்து சென்றுள்ளபோது துடிக்கிறேன் எனத் தெரிந்துகொள் - தோழிக்குத் தலைவி தன் நிலையை விளக்குகிறாள்.
- கூழை ஆ = கன்று போடும் பசு. (கூழைப்படை = பின்படை)
- - நற்றிணை 109
பெருஞ்செய் ஆடவர்
[தொகு]- செயல் தனக்காகச் செய்யப்படும்.
- பெருஞ்செயல் பிறருக்காகச் செய்யப்படும். இது கொடை.
- பழுத்திருக்கும் ஆலமரத்தை நாடும் பறவைகள் நேற்று வந்து தின்றோமே என்று இன்று வராமல் இருப்பதில்லை. அது போலத்தான் இரவலரும். பெருஞ்செய் ஆடவரிடம் மீண்டும் செல்வர். - புறநானூறு 199