உள்ளடக்கத்துக்குச் செல்

பெருந்தேவனார் (வீரசோழிய உரையாசிரியர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சங்ககாலப் பெருந்தேவனார், பாரதம் பாடிய பெருந்தேவனார், ஆகியோருக்குப் பின்னர் வாழ்ந்த பெருந்தேவனார் ஒருவர் வீரசோழியம் என்னும் இலக்கண நூலுக்கு விரிவுரை எழுதியுள்ளார். இவரது காலம் 12-ஆம் நூற்றாண்டு. இவர் தமது உரையில் வீரராசேந்திரன் (1063-1070) பற்றிய ஐந்து வெண்பாப் பாடல்களை மேற்கோளாகத் தந்துள்ளார்.

வீரசோழியம் என்ற நூலில் ஆசிரியர் புத்தமித்திரரின் மாணாக்கர் இந்தப் பெருந்தேவனார். இருவரும் பௌத்தர்கள்.

இந்த உரையின் இறுதியில் காணப்படும் பாடல் ஒன்று இந்த உரைநூலுக்குச் சிறப்புப் பாயிரம் போல அமைந்துள்ளது. பொன்பற்றிக் காவலன் பொன்பற்றி என்னும் ஊர் அறந்தாங்கி வட்டத்தில் பொன்பேத்தி என்னும் பெயருடன் இன்று வழங்கிவருகிறது. (புத்தமித்திரன்) வீரசோழியம் செய்தான். இந்த நூல் 181 காரிகை கட்டளைக்கலித்துறை கொண்டது. பெருந்தேவனார் இதற்குப் பொழிப்புரை செய்தார். – என்னும் செய்திகள் இந்தப் பாடலில் குறிப்பிடப்பட்டுள்ளன.

வீரசோழியம் ஐந்திலக்கணம் கூறும் நூல். இது தமிழ்நாட்டில் அதிகம் பயிலப்படவில்லை. ஆசிரியர் பௌத்தர் என்பதால் இலங்கை சிங்களவரால் பயிலப்பட்டு வந்ததாகத் தெரிகிறது.

உரை பற்றிய சில குறிப்புகள்

  • எழுத்துவர்த்தனம் என்னும் சித்திரக்கவி பாடல் ஒன்றை உரையில் மேற்கோளாகத் தருகிறது.
  • புத்தமித்திரரின் முன்னோர்களில் ஒருவனான சேந்தன் என்பவன் தொண்டைமானின் படைத்தலைவன், சிங்களத்து அரையன், வில்லவன் ஆகியோரை வென்ற செய்தியைக் குறிப்பிடும் கலிப்பா ஒன்று உரையில் உள்ளது.
  • சேந்தனைப் புகழும் வெண்பா ஒன்று உள்ளது.
  • நாகப்பட்டினம், தஞ்சாவூர், உறையூர் என்பன நாகை, தஞ்சை, உறந்தை எனக் கடைக்குறைந்து நின்றன என இவ்வுரை குறிப்பிடுகிறது.
  • தண்டியலங்காரம் நூலிலுள்ள மேற்கோள் பாடல்களும் இவரது உரையில் எடுத்தாளப்பட்டுள்ளன.

கருவிநூல்[தொகு]

  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினோராம் நூற்றாண்டு, பதிப்பு 2005

அடிக்குறிப்பு[தொகு]