பெருஞ்சோற்று நிலை
தமிழ் இலக்கணத்தில் பெருஞ்சோற்று நிலை என்பது புறப்பொருள் திணைகளுள் ஒன்றான வஞ்சித் திணையின் ஒரு துறை அல்லது உட்பிரிவு ஆகும். "பெருமை", "சோறு" என்னும் இரு சொற்களின் சேர்க்கையால் உருவானது "பெருஞ்சோறு" எனும் சொல். இவ்வீரர் தனக்கு வெற்றியை ஈட்டித்தருவர் என்று கருதும் மன்னன் அவர்களுக்கு சோறு அளித்தல் என்னும் பொருள் பற்றியது "பெருஞ்சோற்று" நிலை. இதனைப் பெருஞ்சோற்று வஞ்சி என்றும் குறிப்பிடுவர். [1]
இலக்கணம் தரும் விளக்கம்
[தொகு]புறநானூற்றுப் பாடல் ஒன்று இத் துறையைச் சேர்ந்ததாகக் காட்டப்பட்டுள்ளது. போருக்கு முன் வேந்தர்க்கு நல்கும் நறவம் என்னும் கள் வரிசை முறைப்படிப் போருக்குச் செல்லும் அனைவர்க்கும் வழங்கப்பட்டதாம். சிறு வீரன் ஒருவன் அதனை வாங்க மறுத்து, வாளை ஏந்திக்கொண்டு நின்றானாம். அவன் பெருஞ்சோறு வழங்கும் முறை போலப், போருக்குச் செல்வதில் தன் முறை வரும் வரையில் காத்திருக்கமாட்டானாம். முந்திக்கொண்டு செல்வானாம். [2]
- தொல்காப்பியம் இதனைப் 'பிண்டம் மேய பெருஞ்சோற்று நிலை' என்று குறிப்பிடுகிறது. [3]
- இதனை விளக்க, பகைவருடைய நாட்டை அழித்து நமக்கு வெற்றியை ஈட்டித்தருவர் இவ்வீரர் என மிக்க சோற்றை அவர்கள் பெறும்படி கொடுத்தது[4] என்னும் பொருள்படும் பின்வரும் பாடல் புறப்பொருள் வெண்பாமாலையில் வருகிறது.
- திருந்தார் தெம்முனை தெறுகுவர் இவரெனப்"
- பெருஞ்சோறு ஆடவர் பெறுமுறை வகுத்தன்று
- எடுத்துக்காட்டு
- இயவர் புகழ எறிமுரசு ஆர்ப்பக்
- குயவரி வேங்கை அனைய - வயவர்
- பெறுமுறையான் பிண்டம்கோள் ஏவினான் பேணார்
- இறும் முறையால் எண்ணி இறை
- - புறப்பொருள் வெண்பாமாலை 54.
பெருஞ்சோறு கொடுத்தவர்கள்
[தொகு]- உதியஞ் சேரலாதன் [5] [6]
- சேரன் செங்குட்டுவன் [7]
- சிபிச் சக்கரவர்ந்தி [8]
- முதுகுடிப் பெருமகன் (மூதில்) நீரில்லாத ஆற்றில் கிடக்கும் அம்பிப் பரிசில் போன்ற பெரிய மண்டைப் பானைகளில் பெருஞ்சோறு வழங்கினானாம். [9]
குறிப்பு
[தொகு]- ↑ பின்றாச் சிறப்பின் பெருஞ்சோற்று வஞ்சியும் (சிலப்பதிகாரம் காதை 25)
- ↑ விரிச்சியூர் நன்னாகனார் பாடல், புறநானூறு 292
- ↑ தொல்காப்பியம் புறத்திணையியல் 7
- ↑ இராமசுப்பிரமணியன், வ. த., 2009. பக். 93
- ↑ அலங்கு உளைப் புரவி ஐவரொடு சினைஇ,
நிலம் தலைக்கொண்ட பொலம் பூந் தும்பை
ஈர் ஐம்பதின்மரும் பொருது, களத்து ஒழிய,
பெருஞ் சோற்று மிகு பதம் வரையாது கொடுத்தோய்! (புறநானூறு 2) - ↑ ஓடாப் பூட்கை, ஒண் பொறிக் கழல் கால்,
பெருஞ் சமம் ததைந்த, செருப் புகல், மறவர்
உருமு நிலன் அதிர்க்கும் குரலொடு, கொளை புணர்ந்து,
பெருஞ் சோறு உகுத்தற்கு, எறியும்
கடுஞ் சின வேந்தே! நின் தழங்கு குரல் முரசே. (பதிற்றுப்பத்து 30) - ↑ ஓர் ஐவர் ஈர்-ஐம்பதின்மர் உடன்று எழுந்த
போரில், பெருஞ்சோறு போற்றாது தான் அளித்த
சேரன், பொறையன், மலையன், திறம் பாடி,
கார் செய் குழல் ஆட, ஆடாமோ ஊசல்;
கடம்பு எறிந்தவா பாடி, ஆடாமோ ஊசல். (சிலப்பதிகாரம் காதை 29) - ↑ பெருஞ்சோறு பயந்த திருந்து வேல் தடக்கை
திரு நிலைபெற்ற பெருநாள்-இருக்கை,
அறன் அறி செங்கோல், மற நெறி நெடு வாள்,
புறவு நிறை புக்கோன், (சிலப்பதிகாரம், கட்டுரை காதை) - ↑ அந்தோ! எந்தை அடையாப் பேர் இல்!
வண்டு படு நறவின் தண்டா மண்டையொடு
வரையாப் பெருஞ் சோற்று முரி வாய் முற்றம்,
வெற்று யாற்று அம்பியின் எற்று? அற்று ஆகக்
கண்டனென், மன்ற; (புறநானூறு 251)
உசாத்துணைகள்
[தொகு]- இராமசுப்பிரமணியன், வ. த., புறப்பொருள் வெண்பாமாலை, மீனாட்சி புத்தக நிலையம், மதுரை, 2009.
- கௌரீஸ்வரி, எஸ். (பதிப்பாசிரியர்), தொல்காப்பியம் பொருளதிகாரம் இளம்பூரணனார் உரை, சாரதா பதிப்பகம், சென்னை, 2005.