உள்ளடக்கத்துக்குச் செல்

பெருங்காப்பியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பெருங்காப்பியம் என்பது பொருள் தொடர்நிலையாய் அமையும் செய்யுள்களைக் கொண்ட இலக்கிய நூல்கள் ஆகும்.இது பாட்டுடைத் தலைவனின் முழுமையான வாழ்க்கை வரலாற்றுத் தொகுப்பாக இருக்கும். சிறுகாப்பியம் பாட்டுடைத் தலைவனின் ஒருசில வாழ்க்கைக் கூறுகளை மட்டுமே கூறும்.

பெருங்காப்பிய இலக்கணம்

[தொகு]
  • வாழ்த்து, வணக்கம் வருபொருள் உரைத்தல் என்பனவற்றுள் ஒன்றேனும் பலவேனும் முன் வர வேண்டும்.
  • அறம், பொருள், இன்பம், வீடு, என்ற நாற்பொருள் பயக்கும் நடையினை உடைத்தாக இருக்க வேண்டும்.
  • தன்னிகரில்லாத தலைவனைப் பெற்றிருக்க வேண்டும்.
  • மலை, கடல், நாடு, நகர், பருவம், சூரியோதயம், சந்திரோதயம் முதலிய வருணனைகளை உடைத்தாகியிருக்க வேண்டும்
  • மணம் புணர்தல், முடிகவித்தல், பூம்பொழில் நுகர்தல், புனல் விளையாடல் கள்ளுண்டு களித்தல், மக்களைப் பெறுதல், புலவியில் புலத்தல், கலவியில் களித்தல் முதலிய செய்கை சிறப்புகளின் வருணனைகளை பெற்றிருக்க வேண்டும்.
  • மந்திரம்(ஆலோசனை), தூது, செலவு (பயணம்) இகல், வென்றி என்ற ஐந்தும் சந்தி என்னும் நாடக உறுப்பே போலத் தொடர்ந்து கூறப்படுவதாக இருக்க வேண்டும்.
  • சருக்கம், இலம்பகம் , பரிச்சேதம் என்றவாறு பகுக்கப்படக் கூடியதாய் வேண்டும்.
  • எண்வகைச் சுவையும் பாவமும் பெற்று கேட்போரால் விரும்பப் படுவதாக இருக்க வேண்டும்

இவ்வாறு கற்று வல்ல சான்றோரால் புனையப்படுவது பெருங்காப்பியம் எனப்படும்.

இங்ஙனம் கூறப்பட்டவாறு அமைவதே பெருங்காப்பியத்தின் இலக்கணமாகும். மேலும் நாற்பொருள் பயக்கும் நடையில் குறைவின்றி வந்து ஏனைய வருணனைப் பகுதிகளில் சில குறைந்து வரினும் குற்றமில்லை என்பர்.

உசாத்துணை

[தொகு]

தா.ம. வெள்ளைவாரணம் ,'தண்டியலங்காரம், திருப்பனந்தாள் மட வெளியீடு. 1968

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெருங்காப்பியம்&oldid=3989278" இலிருந்து மீள்விக்கப்பட்டது