உள்ளடக்கத்துக்குச் செல்

பெரிய மலை உள்ளான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பெரிய மலை உள்ளான்
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வரிசை:
குடும்பம்:
இசுகோலோபாசிடே
பேரினம்:
கல்லினாகோ
இனம்:
G. nemoricola
இருசொற் பெயரீடு
Gallinago nemoricola
Hodgson, 1836

பெரிய மலை உள்ளான் (Wood snipe) என்பது வட இந்தியா, நேபாளம், பூட்டான், தெற்கு சீனாவின் இமயமலைப் பகுதிகளில் இனப்பெருக்கம் செய்யும் ஒரு பறவை ஆகும். குளிர்காலத்தில், இது இமயமலையின் உயரம் குறைந்த பகுதிகளில் காணப்படுகிறது. வட வியட்நாமுக்கு சிறிய எண்ணிக்கையிலான பறவைகள் வலசை போகின்றன. இவை நடு இந்தியா, தென்னிந்தியா, இலங்கை, வங்காளதேசம், மியான்மர், வடக்கு தாய்லாந்து, லாவோஸ் ஆகிய நாடுகளில் அலைந்து திரிபவையாக உள்ளன.

விளக்கம்

[தொகு]

இந்த உள்ளான்கள் காடையை விடச் சற்றுப் பெரியதாக 28–32 சென்டிமீட்டர்கள் (11–13 அங்) நீளத்தில் இருக்கும். அலகும் விழிப்படலமும் பழுப்பு நிறத்தில் இருக்கும். கால்கள் ஈயநிறம் தோய்ந்த பச்சை நிறத்தில் இருக்கும். உடலின் மேற்பகுதி ஆழ்ந்த பழுப்பாகாகத் தெளிவற்ற கருப்பு, கருஞ்சிவப்பு, வெளிர்மஞ்சள் பட்டைகளுடன் காணப்படும். மார்பு சிவப்புக் கலந்த மஞ்சளாகப் பழுப்புப் பட்டைகளுடன் இருக்கும். உடலின் பிற அடிப்பகுதிகள் வெண்மையாக நெருக்கமான பழுப்புப் பட்டைகளுடன் விளங்கக் காணலாம். ஆணும் பெண்ணும் ஒன்று போன்ற தோற்றம் கொண்டவை.[2]

நடத்தை

[தொகு]

மலைகளைச் சார்ந்த புல்வெளிகளில் இவை தனித்தே காணப்படும். வௌவாலைப் போலவும் ஆந்தையைப் போலவும் மெல்லவே தத்தளித்தபடி மேலும் கீழுமாக வாழ்ந்தும் எழுந்தும் பறகக்கூடியன. இதைக் கொண்டு இவற்றை எளிதில் அடையாளம் காணலாம். புழு பூச்சிகளே இவற்றின் உணவாகும். பொடிக்கற்கள் வயிற்றில் காணப்படுவதுண்டு.[2]

இனப்பெருக்கம்

[தொகு]

இவை 3,000 மீட்டர்கள் (9,800 அடி) உயரமுள்ள அல்பைன் தூந்திரவெளிகளில் இனப்பெருக்கம் செய்கின்றன. குளிர்காலத்தில் தெற்கில் குறைந்த உயரமுள்ள மலைப் பகுதிகளுக்கு இடம் பெயரும்.

நிலை

[தொகு]

10,000க்கும் குறைவான எண்ணிக்கைக் கொண்ட இந்த பறவை இனம் அழிவாய்ப்பு இனம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது. இதன் முக்கிய அச்சுறுத்தல்களான வாழ்விட இழப்பு, வேட்டையாடப்படுதல் ஆகியவை உள்ளன. நேபாளத்தில் உள்ள லாங்டாங் மற்றும் சாகர்மாதா தேசியப் பூங்கா உட்பட சில பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் இவை பதிவு செய்யப்பட்டுள்ளன.

மேற்கோள்கள்

[தொகு]
  1. BirdLife International (2017). "Gallinago nemoricola". IUCN Red List of Threatened Species 2017: e.T22693082A117048348. doi:10.2305/IUCN.UK.2017-3.RLTS.T22693082A117048348.en. https://www.iucnredlist.org/species/22693082/117048348. பார்த்த நாள்: 12 November 2021. 
  2. 2.0 2.1 க. ரத்தினம், தென்னிந்தியப் பறவைகள். சென்னை: தமிழ்நாடு பாடநூல் நிறுவனம். 1973. pp. 162–163.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெரிய_மலை_உள்ளான்&oldid=3776415" இலிருந்து மீள்விக்கப்பட்டது