பெரியபுராண ஆராய்ச்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பெரியபுராண ஆராய்ச்சி நூல் இராசமாணிக்கனாரது நூல். [1]பெரியபுராணம் ஒரு பெரிய சரித்திர நூல் என்பதை நிறுவும் நூல். சேக்கிழாரது காலகட்டத்தையும், அவரது அமைச்சர் பணியைப் பயன்படுத்தி அவர் களப்பணிகள் பல செய்தே பெரியபுராணம் இயற்றினார் என்பதையும், அவர் கூறும் புவியியல் கூறுகள் கொண்டு அவர் செய்த களப்பணிகளை நிரூபித்தும், அப்பர், திருஞான சம்பந்தர் முதலானோர் திருக்கோயில்களை தரிசனம் செய்த வரிசையினை முறையாகச் சேக்கிழார் தருவதையும், இன்னமும் அதே வரிசைப்படி அத்திருத்தலங்கள் இருத்தலையும் கூறுகின்றார் ஆசிரியர். கல்வெட்டுகள் பல கொண்டு ஒவ்வோர் தகவலும் சேக்கிழாரால் எவ்வளவு ஆராயப்பட்டு சேர்க்கப்பட்டிருக்கக்கூடும் என்பதை உணர வைக்கும் நூலாக அமைத்துள்ளார்.

சேக்கிழார் தரும் தகவல்கள் கல்வெட்டுத்தகவல்களோடு ஒத்திருப்பதையும், சேக்கிழார் தாம் கண்ட, கேட்ட தகவல்களை அவ்வாறே பதியாமல் ஆராய்ந்து ஏற்புடையவற்றை மட்டும் சேர்த்தமையையும் அதனால் சிற்சில தகவல்களில் 9 மற்றும் 11 ஆம் திருமுறைச் செய்திகளுக்கும் பெரியபுராணத்துச் செய்திகளுக்கும் வேறுபாடுள்ளதையும் அதன் காரணங்கள் எவையாக இருக்கக்கூடும் என்ற ஆராய்ச்சியையும் நூலாசிரியர் தருகின்றார்.

சேக்கிழார் பெரியபுராணத்தை வலுவான ஆதாரங்கள் கொண்ட நம்பகத்தன்மை கொண்ட தகவல்களின் பதிவாக அமைத்தார் என்பதை ஆராய்ச்சிபூர்வமாகக் கூறும் நூலாக ஆசிரியர் இந்நூலை அமைத்துள்ளார்.

பெரியபுராண ஆராய்ச்சி குறித்து நூலாசிரியர் சொற்பொழிவாற்றியதைக் கேட்ட திரு.வி.க. பாராட்டிக்கூறியுள்ளதும் நூலில் தரப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]