பெரியநெசலூர் ஊராட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெரியநெசலூர்
—  ஊராட்சி  —
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கடலூர்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் அ. அருண் தம்புராஜ், இ. ஆ. ப [3]
ஊராட்சித் தலைவர்
மக்களவைத் தொகுதி கடலூர்
மக்களவை உறுப்பினர்

டி. ஆர். வி. எஸ். ரமேஷ்

மக்கள் தொகை 3,333
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

பெரியநெசலூர் ஊராட்சி (Periyanesalur Gram Panchayat), தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் உள்ள நல்லூர் வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, விருத்தாசலம் சட்டமன்றத் தொகுதிக்கும் கடலூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 3333 ஆகும். இவர்களில் பெண்கள் 1723 பேரும் ஆண்கள் 1610 பேரும் உள்ளனர்.

அடிப்படை வசதிகள்[தொகு]

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]

அடிப்படை வசதிகள் எண்ணிக்கை
குடிநீர் இணைப்புகள் 564
சிறு மின்விசைக் குழாய்கள் 2
கைக்குழாய்கள் 21
மேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 7
தரைமட்ட நீர்தேக்கத் தொட்டிகள்
உள்ளாட்சிக் கட்டடங்கள் 18
உள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 4
ஊரணிகள் அல்லது குளங்கள் 5
விளையாட்டு மையங்கள் 2
சந்தைகள்
ஊராட்சி ஒன்றியச் சாலைகள் 26
ஊராட்சிச் சாலைகள் 9
பேருந்து நிலையங்கள்
சுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 4

சிற்றூர்கள்[தொகு]

இந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:

  1. விளம்பாவூர்
  2. விளம்பாவூர் காலனி
  3. பெரியநெசலூர்

பெயர் காரணம்[தொகு]

நெசவுதொழில் அதிகம் நடைபெற்றதாகவும், பெரிய நெசவலூர் பின்னர் பெரியநெசலூராக மருவியதாகவும் கூறப்படுகிறது. கிராமத்தின் மேற்கே அமைந்துள்ள பெரிய ஏரியின் கரை அருகே மிகவும் பிரசித்தி பெற்ற காவல் தெய்வமாக விளங்கும் சூலப்பிடாரி மங்கமுத்தாயி அம்மன் ஆலயத்தை கிராம மக்கள் 2015ஆம் ஆண்டு புதிதாக புனரமைத்தபோது, மீன்களும் கொடிகளும் பொறிக்கப்பட்ட கற்தூண்களும், சிவலிங்கமும் கிடைத்துள்ளன. எனவே, இந்த பகுதி பாண்டிய மன்னரின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதியாக கருதப்படுகிறது. கிராமத்தினர் சிவலிங்கத்தை பெரிய ஏரியின் கரையருகே தனியாக பிரதிஷ்டை செய்து வணங்கி வருகின்றனர்.

சான்றுகள்:- பெரியநெசலூர் கொற்றவை என்னும் துர்கை அம்மன் பெரியநெசலூர் கிராமத்தில் உள்ள மங்கமுத்தாயி அம்மன் கோயிலின் உள்ளே மேற்குப் புறத்தில் இந்தக் கொற்றவை (துர்கை) தனி மேடையில் உள்ளது. ஆரம்ப காலத்தில் இது கருவறைக்குள் இருந்திருக்க கூடும். இக்கொற்றவை கி.பி 9 ஆம் நூற்றாண்டை சேர்ந்ததாக கருதலாம். பல்லவர்கள் கலைப்பாணியை பின்பற்றி மலையமான்களால் செய்யப்பட்டுள்ளது. பல்லவர்கள் வலு இழந்த 9 ஆம் நூற்றாண்டில் மலையமான்கள் இப்பகுதியை ஆட்சி செய்ததை இதன் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. இக்கொற்றவையின் உயரம் 102 செ.மீ, அகலம் 88 செ.மீ, தடிமன் 12 செ.மீ ஆகும். ஒரு பலகைக்கல்லில் புடைப்புச்சிற்பமாக வெட்டப்பட்டுள்ளது. எருமைத்தலையின் மீது சமபங்க நிலையில் நின்றபடி உள்ளார். தலையில் கரண்ட மகுடம், காதுகளில் பத்தரகுண்டலம், கழுத்தில் சரபளி, சவடியுடன் புலிப்பல்லால் இணைக்கப்பட்ட தாலியை அணிந்துள்ளார். மார்புக்கச்சை பட்டையுடன் உள்ளது. மார்பில் சன்னவீரம் உள்ளது. இந்த சன்னவீரம் என்பது போர் கடவுள்கள், போர் வீரர்கள் மட்டும் அணியும் வீரச்சங்கிலியாகும். வலதுபுற மேல்பகுதியில் சூலமும் கிளியும், இடது புறம் கொற்றவையின் வாகனமான மானும் சிங்கமும் உள்ளது. மானும் சிங்கமும் அருகருகே ஒரே பக்கத்தில் காட்டப்பட்டிருப்பது தமிழகத்தில் இதுவே முதன்முறையாகும். எட்டுக்கரங்களுடன் உள்ளார். வலது பின்புறகரங்களில் எறிநிலைச்சக்கரம், வாள், பாம்பு காணப்படுகிறது. கையில் பாம்புடன் ஒரு கொற்றவை என்னும் துர்கை அம்மன் கண்டறியப்படுவது தமிழகத்தில் இதுவே முதன் முறையாகும். முன்கரம் அபய முத்திரையில் உள்ளது. இடது பின் கரங்களில் சங்கு, வில், கேடயமும் முன்கரம் கடியஸ்த நிலையிலும் உள்ளது. யானைத்தோலை போர்த்தி இடுப்பில் புலித்தோலால் ஆன மேகலையை அணிந்துள்ளார். முழு ஆடை உள்ளது. இடப்புற காலில் சிலம்பும், வலப்புற காலில் கழலும் அணிந்துள்ளார். கொற்றவையின் காலுக்கு அருகே நவகண்டம் கொடுத்துக்கொள்ளும் வீரன் உள்ளான். நவகண்டம் என்பது தன்னுடைய நாடு போரில் வெற்றி பெற ஒரு வீரன் தன் உடலில் உள்ள ஒன்பது பாகங்களின் சதையை அரிந்து கொற்றவைக்கு படையல் இட்டு தன் தலையை தானே வெட்டி பலி கொடுத்துக்கொள்வதாகும். இடப்புறம் கொற்றவையை வணங்கிய நிலையில் ஒரு அடியவர் உள்ளார்.கல்வெட்டு எருமைத் தலையின் வலதுபுறம் 6 வரிகளில் சிதைந்த நிலையில் ஒரு கல்வெட்டு உள்ளது. ஸ்ரீ முக்குல மலையமான் சாதன் என கல்வெட்டு வாசகம் உள்ளது. முக்குல மலையமான் வம்சத்தை நேர்ந்த சாதன் என்பவன் இந்த கொற்றவையை செய்து வைத்திருப்பதை இந்தக் கல்வெட்டு மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. மலையமான்கள் சங்ககாலத்தில் இருந்தே திருக்கோயிலூரை தலைநகராகக் கொண்டு ஆட்சிபுரிந்து வந்துள்ளனர். சிலகாலம் சுதந்திரமாகவும் சிலகாலம் பல்லவர், சோழர், பாண்டியர்களின் கீழ் குறுநில மன்னர்களாகவும் ஆட்சி புரிந்து வந்துள்ளனர். பல்லவர்களின் கீழ் குறுநில மன்னர்களாக இருந்தபோது அவர்கள் பாணியில் அமைந்த கொற்றவை இதுவாகும். சிவன் கோயில் கல்வெட்டு மங்கமுத்தாயி அம்மன் கோயில் அருகே ஏரிக்கரையின் கீழ் ஓர் சிவன் கோயில் இருந்து அழிந்து போய் உள்ளது. ஆங்காங்கே சிதறிக்கிடக்கும் துண்டு கற்கள், தூண்களில் சில கல்வெட்டுகள் உள்ளன. ஒரு துண்டு கல்லில் திரிபுனசக்கரவத்திகள் மது கருவூரும் பாண்டியன் முடித்தலையும் குலோத்துங்க சோழ தேவற்கு என உள்ளது. இது சோழமன்னர் மூன்றாம் குலோத்துங்கசோழரின் மெய்கீர்த்தியாகும். இதன் மூலம் 12 ஆம் நூற்றாண்டில் இந்த ஊர் சோழர்களின் ஆட்சி நிலவியது உறுதியாகிறது. இங்குள்ள ஓர் உடைந்து போன தூணில் 13 ஆம் நூற்றாண்டை சேர்ந்த பாண்டியரின் கல்வெட்டு 13 வரிகளில் காணப்படுகிறது. கல்வெட்டின் நடுவே பாண்டியரின் அரசு சின்னமான இரட்டை மீன் நடுவே செண்டு புடைப்பாக பொறிக்கப்பட்டுள்ளது. பாண்டியத்தேவர் என்பவர் தானமாக கொடுத்த திருநாமத்துகாணி நிலத்தை முதலீடாக கொண்டு இராசாக்கள் மண்டபம் என்ற ஒரு மண்டபத்தை கட்டிக்கொடுத்ததை இக்கல்வெட்டு சொல்கிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. "தமிழக ஊராட்சிகளின் பட்டியல்" (PDF). tnrd.gov.in. தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  5. "நல்லூர் வட்டார வரைபடம்". tnmaps.tn.nic.in. தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  6. 6.0 6.1 "தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்" (PDF). tnrd.gov.in. தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  7. "தமிழக சிற்றூர்களின் பட்டியல்" (PDF). tnrd.gov.in. தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெரியநெசலூர்_ஊராட்சி&oldid=3580241" இலிருந்து மீள்விக்கப்பட்டது